‘ஈதுல் பித்ர்’ | தினகரன் வாரமஞ்சரி

‘ஈதுல் பித்ர்’

றமழானை தொடர்ந்து வருகின்ற ஈதுல் பித்ர் தொடர்பாக அல்-குர்ஆன் குறிப்பிடும் போது “நீங்கள் றமழானில் நோன்பிருக்கும் காலத்தை பூரணப்படுத்தி, உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியமைக்காக அவனை பெருமைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் நன்றி செலுத்தியோராவீர்கள்” என ஸுரா பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் குறிப்பிடுகின்றது. இதே கருத்தை ஈதுல் அழ்ஹாவில் உழ்ஹியா கொடுப்பது சம்பந்தமாக பேசிவிட்டு ஸுரா ஹஜ்ஜின் 37வது வசனத்திலும் அல்-குர்ஆன் ஈதுல் அழ்ஹாவுடன் தொடர்பு படுத்தி விளக்குகிறது.

இவை இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது, இவ்விரு பெருநாள் கொண்டாட்டங்களும் ஒரு முஸ்லிமுடைய அடிப்படைப் பணியுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளமையைக் காண்கிறோம். இவ்வுலகில் ஒரு முஸ்லிமினுடைய அடிப்படைப் பணி மனித, பிரபஞ்ச நலனுக்காக இறை வழிகாட்டலில் உழைப்பதாகும். “நீங்கள் மனித சமூகத்துக்காக அனுப்பப்பட்ட சிறந்த சமூகமாக உள்ளீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்று, நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையைத் தடுக்கின்றீர்கள்” (ஆலஇம்ரான் :110) இங்கு நன்மைகள் என்பது எமக்கும் பிரபஞ்சத்துக்கும் எம்மைப் படைத்தவனுக்கும் நலவாக அமைகின்ற அனைத்தையும் குறிக்கும். எமக்கும் பிரபஞ்சத்துக்கும் அதனைப் படைத்தவனுக்கும் தீங்காக அமைகின்ற அனைத்தும் தீமையாகும். இந்தப் பணியை செய்கின்ற ஒருவராகத்தான் ஒரு முஸ்லிம் இந்தப் பிரபஞ்சத்தில் செயலாற்ற வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

இந்த வகையில் பார்க்கும் போது இஸ்லாத்தின் இரு பெரும் கடமைகளுடன் தொடர்பாகவே இந்த இரு பெருநாட்களும் அமையப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம். ஒன்று நோன்பு மற்றயது ஹஜ். இவை இரண்டினதும் உள்ளடக்கத்தை பார்க்கின்ற போது அவை இவ்வுலகில் நிகழ்ந்த இரு பெரும் விடயங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று அல்-குர்ஆன் உட்பட உலகிற்கு அனைத்து வேதங்களும் ஸுஹுபுகளும் இறங்கிய காலப்பகுதி. மற்றயது அந்த வேதத்தை இவ்வுலகில் சுமந்து அதற்காய் முன்னணியில் நின்ற இறைத் தூதர்களது தியாக வாழ்வை நினைவுபடுத்தும் வகையில் நினைவு கூறப்டும் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகளுடன் தொடர்பு படுகிறது.

இந்த தொடர்புகள் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கின்றன. அதுதான் ஒரு முஸ்லிம் எத்தகைய சூழ்நிலையிலும் அவனது அடிப்படை பணியை விட்டும் தூரப்பட்டு வாழ முடியாது. அது அவனது கொண்டாட்டங்களாயினும் சரியே. அந்த வகையில் இவ்விரு பெருநாட்களும் நேர்வழி கிடைக்கப் பெற்றமையையும் அதற்காக தியாகம் செய்து உழைத்த இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டமையையும் கொண்டாடும் தினங்கள். எனவேதான் அல்லாஹ் இவ்விரு தினங்களிலும் “நேர்வழி கிடைத்தமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துங்கள்” என அல்-குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

உண்மையில் நேர்வழி கிடைத்தல், அதற்காக உழைத்தல் என்பது இந்த பிரபஞ்ச நலனுக்காகவும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைவரதும் அனைத்தினதும் நலனுக்காகவும் உழைத்தல் என்றுதான் இஸ்லாம் கருதுகின்றது. அந்தவகையில் இவ்விரு பெருநாட்களும் முஸ்லிம் சமூகத்துடன் மாத்திரம் சுருங்கிய கொண்டாடங்களாக அல்லாமல் இந்த உலகின் சுபீட்சத்திற்கான உழைப்பை நினைவு கூறும் தினங்களாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த செய்தியை நாம் இந்த உலகிற்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

இந்தப் பின்னணியில் ஈதுல் பித்ரை அணுகும் போது அது அழகான ஒரு செய்தியை எமக்குத் தருகின்றது. ஈதுல் பித்ர் றமழானைப் பூர்த்தி செய்ததைத் தொடரந்து வருகின்ற கொண்டாட்டம். றமழானைப் பற்றி அல்-குர்ஆன் குறிப்பிடும் போது “றமழான் மாதம் அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும்.

அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காகவும், நேர்வழியையும் தெளிவையும் விளக்குவதற்காகவும் இறக்கப்பட்டது. எனவே, யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோனபிருக்கட்டும்” (அல்-பகரா:185) என நேர்வழிகாட்டலை வழங்குவதற்காக குர்ஆன் இறங்கிய மாதம் என்கிறது. அதே வசனத்தின் இறுதி இந்த மாதத்தை முடிக்கும் போது நேர்வழி பெற்றமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துமாறு சொல்கிறது.

ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் போது இந்தக் கருத்து மறக்கப்படக் கூடாது. றமழானின் அடிப்படைக் கடமை நோன்பாகும். அது ஒரு முஸ்லிமிடம் இஸ்லாம் எதிர்பார்க்கும் பணியை நிறைவேற்றுகின்ற பக்குவத்தை ஏற்படுத்த விரும்புகின்றது. நோன்பிருப்பதன் ஊடாக தனது ஆசாபாசங்கள், உணர்வுகள், தேவைகளை கட்டுப்படுத்தி வாழப் பழகுகின்ற ஒரு முஸ்லிம் குறைந்த அளவில் அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்யாதவனாக மாற வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அதுதான் ஒருவர் முஸ்லிம் என்பதற்கான குறைந்த பட்ச அடையாளம் என்பதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் “முஸ்லிம் என்பவர் தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யாதவனாவான்”. தன்னுடன் பிரச்சினைப்பட வருபவனுடன் தான் நோன்பாளி எனக் கூறி விலகி நிற்றல், மோசமான வார்த்தை பேசாதிருத்தல், பொய் பேசாதிருத்தல் என நோன்பின் போது தவிர்ந்திருக்கப் பயிற்றப்பட்ட அந்த வழிகாட்டல்கள் இதனையே எமக்கு உணர்த்துகின்றன.

அடுத்து, ஒரு முஸ்லிம் உயர்ந்த அளவில் தனக்கு விரும்புவதையே அடுத்த மனிதனுக்கும் விரும்புகின்ற, அடுத்தவரகளின் உணர்வுகளை, பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற மனோ நிலையும், உணர்வும் வளரப் பெற்றவராக றமழானின் பயிற்சியினூடாக மாற வேண்டும். “நீங்கள் உங்களுக்கு விரும்புவதை உங்களது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவர்களாகமாட்டீர்கள்”. இது ஒருவர் தான் ஒரு முஸ்லிம் என்பதற்கான உயர்ந்தபட்ச அடையாளமாகும். நோன்பினூடாகவும் றமழானின் ஏனைய வணக்கங்கள், பயிற்சிகள் ஊடாகவும் இந்த நிலையை ஒரு முஸ்லிம் அடையப் பெறுகின்றார்.

ஹதீஸ்கள் றமழானில் நோன்பை விடுத்து, நபியவர்கள் செய்த விஷேடமான நான்கு விடயங்கள் குறித்துப் பேசுகிறது. ஒன்று அல்-குர்ஆனை ஜிப்ரஈல் (அலை) உடன் இருந்து படித்தது. மற்றயது வீசும் காற்றை விட வேகமாக ஸதகா செய்தது. அடுத்தது இஃதிகாப் மற்றும் ஸகாதுல் பித்ர் என்பன. இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் நபியவர்கள் ஏன் வீசும் காற்றை விட வேகமாக ஸதகா செய்தார்கள் என்பதை விளக்கும் போது “அல்-குர்ஆன் உருவாக்க விரும்பும் முதன்மையான பண்பாக அது உள்ளது” என்பார்.

உண்மையில் இது ஆச்சரியமான விடயமல்ல. இறை வேதம் இரண்டு விடயங்களை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஒன்று இறைத் தொடர்பு மற்றயது மனித நலன். இறை வேதத்துடன் ஆழ்ந்து தொடர்பு படுகின்ற ஒருவர் அல்லாஹ்வுடனும் மனித உலகுடனும் தொடர்பாகின்றார். தனது வாழ்வு அல்லாஹ்வுக்காக மனித நலன் காக்க செலவிடப்பட வேண்டும் என உணர்கிறார். இதன் வெளிப்பாட்டைத்தான் நபியவர்களிடம் நாம் காண்கிறோம். ஸகாதுல் பித்ர் கூட இவற்றுடன் தொடர்பானதாகவே அமைந்துள்ளது. றமழானில் இரவு வணக்கம் நபியவர்களைப் பொருத்தவரை ஏனைய நாட்களை விட்டும் விஷேடமாக அமையவில்லை என ஆயிஷா(றழி) குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின் இரவு வணக்கம் அல்-குர்ஆனை கற்பதற்கும் அதனடியாக அல்லாஹ்வை நெருங்குவதற்கானதுமான சாதனமாகவே நபியவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது.

இங்குதான் இபாதத்களை, அதன் நோக்கங்களை சரியாக புரிந்து நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு ஏற்படுகிறது.

இபாதத்கள் வெறுமனே மறுமை நன்மை என்ற ஒன்றை மாத்திரம் நோக்காகக் கொள்ளவில்லை. அவை வாழ்விற்கு உயர்ந்த பொருளை அளித்து அதனை உயர் இலக்குகளை நோக்கி வழிப்படுத்துவதை நோக்காகக் கொண்டமைந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவாசமாக இபாதத்கள், அதற்கான மறுமை நன்மைகள், அதன் எண்ணிக்கைகள் குறித்துப் பேசப்படும் அளவு அவற்றின் நோக்கங்கள், தாற்பரியங்கள் குறித்துப் பேசப்படுவதில்லை.

இறைத் தூது கிடைத்தமையை நினைவு கூர்ந்து கொண்டாடுவதுதான் றமழானும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் என்ற விளக்கம் எம்மிடம் இருக்குமாயின் எமது உள்ளங்களில் அதற்கு ஒரு பெறுமானம் ஏற்படும். றமழானும், பெருநாள் தினமும் அல்-குர்ஆன் இறங்கியமையை கொண்டாடும் தினம் என்பதால் அல்-குர்ஆன் இறங்கிய நோக்கங்களுள் பிரதானமானதான மனித நலன் காத்தல் என்ற பணியால் இந் நாட்களை நாம் அழகுபடுத்துவோம்.

அப்போது இந்த நாட்கள் குறிப்பாக எம்மைச் சூழ வாழும் சகோதர சமூகத்தினருக்கு விருப்பத்துக்குரிய நாட்களாக, அவர்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்ற, கொண்டாடப்படுகின்ற நாட்களாக மாறும். உண்மையில் நத்தார் பண்டிகை அனைவருக்கும் அருள் சுமந்து வரும், உதவி கொண்டுவரும் நாட்களாக இன, மத பேதங்களுக்கப்பால் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால் அதனைப் பார்க்கிலும் அவ்வாறு பார்க்கப்படுவதற்கான பொருள் பொதிந்த நாட்களாக இருக்கும் எமது றமழானையும் பெருநாட்களையும் நாம் எம்முடன் மாத்திரம் சுருக்கிவிட்டோம்.

எனவே, தான் ஒரு தூதை சுமந்த சமூகத்தின் பிரதிநிதி என்ற உணர்வுடன் இந்த பெருநாள் கொண்டாட்டங்கள் அமைந்திருக்குமாயின் தான் மகிழ்ந்திருத்தல் என்ற சுயநலம் சார்ந்த எல்லையைத் தாண்டி அடுத்த மனிதனை மகிழ்வித்தல் என்ற எல்லையை நோக்கி இந்த நாட்களின் செயற்பாடுகள் வியாபிக்கும். இறை வேதமும் அதன் போதனைகளும் அதற்கான உழைப்பும்தான் இந்த உலகிற்கு மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரவல்லது என்ற உயர்ந்த செய்தியை இந் நாட்கள் கொடுக்கும்.

மானிட சுபீட்சத்துக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ள இறை வேதத்தை மனித சமூகம் பெற்றமையை கொண்டாடும் சர்வதேச தினமாக எமது ஈதுல் பித்ர் அப்போது பரிணமிக்கும். அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்ளட்டும்.

 

அஷ்-ஷெய்க் எம்.என்.இக்ராம்(நளீமி)   
 B.A, PGD in Ed, M.Ed. (Reading)  

Comments