மெயிலா? ஸ்னெயிலா? | தினகரன் வாரமஞ்சரி

மெயிலா? ஸ்னெயிலா?

தமிழ்க் கவி
பேசுகின்றார்

பக்கத்து வீட்டு சின்னையாக் கிழவன் அம்மாவிட்ட வந்து கேக்குது,

பிள்ளை உவள் சின்னவள ஒருக்கா அனுப்பிறியே சேனாதிக்கு ஒரு கடுதாசி போட வேணும்

அதுக்கென்னண்ணை கூட்டிக்கொண்டு போங்கோ. நான் அவரோட கூடிக்கொண்டு அடிவளவுக்கு கிடந்த அவயட வீட்ட போனன் . ஒரு பக்கீஸ் பெட்டிய கவிட்டு வச்சிட்டு அதில ஒரு புத்தகத்தை வச்சு கடையில வாங்கின கடிதம் எழுதிற தாளில பென்சிலால எழுத தொடங்குறன்.

என்றும் என்மேல் பட்சம் மறவாத மகன் சேனாதி அறிவது நாங்கள் இங்கு சுகமாக உள்ளோம் உனது சுகத்துக்கும் கடவுள் கிருபை புரிவாராக, மேலும் நீ ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக கடிதம் போட்டிருந்தாய் உனக்கு நான் முதலே பெண்பார்த்த ஒழுங்காக்கியிருக்கிறன். உன்ர எண்ணத்துக்கு நீ முடிக்கிற தானால் இனி என்னை அப்பு என்று கூப்பிட வேண்டாம். உனக்கு தாய்தேப்பன மதிக்க முடியாட்டி விடு எனக்கொரு பிள்ளை பிறக்கேல்லயென்று நினைத்துக் கொள்கிறேன். நீ நல்லாவே இருக்க மாட்டாய் இத்துடன் முடிக்கிறேன்

என்றும் பட்சம் மறவாத

அன்பு அப்பா சின்னையா

என்பலப்பில மேல்விலாசம் எழுதி கடிதத்தை உள்ளுக்க வச்சு சந்தியில நிக்கிற தவால் பெட்டிக்கை போட்டிட்டு உள்ளுக்கு களங் எண்டு விழுகிற சத்தம் கேட்டுதோ எண்டதை உறுதி செய்து கொண்டு வந்து சின்னையாண்ணைக்கு சொல்ல வேணும்.

மெய்யேப்பு நான் தவால் பெட்டிக்க போட்ட கடுதாசி மன்னாரில இருக்கிற சேனாதியண்ணைக்கு எப்பிடிப்போகும் அப்பு விபரிக்கிறார்.

இலங்கையின் எந்த மூலைக்கும் இரண்டு தினங்களுக்குள் கடிதமும், இரண்டு மணித்தியாலத்துக்குள் தந்தியும் கிடைத்துவிடும். இப்போது உள்ளதுபோல எந்த நவீன வசதிகளும் இல்லாத கரிக்கோச்சிகளின் மூலமே இந்த அதிசயத்தை அன்றைய தபால் சேவை நடாத்தியது. தமிழர்களுக்கு அதுவும் வடக்கு மாகாண தமிழருக்கு தபால் எழுதப்பட்ட ஒருமாதம் கழித்தே கிடைத்ததும், அப்படியும் கிடைக்காமலே போனதும் வரலாறு. இந்த தபால் தொடர்புகளை யுத்தம் மடக்கி வைத்திருந்தது வெளியிலிருந்து வடபகுதித்தமிழருக்கு தபாற் பொதிகளே கிடைக்காது. அவை வவுனியா தபாற் கந்தோரில் மலையளவு குவிந்து கிடந்தது ஒரு காலம். வன்னியிலோ யாழ்ப்பாணத்திலோ தபாற் பெட்டியில் போடப்படும் கடிதங்கள் பெட்டியுடன் கிடந்தே அழிந்து போனது.

உண்மையிலேயே வன்னிக்கு வெளியே செல்வோர் போராளிகளின் எல்லைக்குள் தம்மை பதிவு செய்து சோதனைகள் முடிந்தபின் சுமார் ஒன்றரை இரண்டு மைல் துாரத்தை நடந்து கடந்து இராணுவ சோதனைச்சாவடியை அடைவர். அங்கும் இவா்களும் இவர்களது பொதிகளும் சோதனையிடப்பட்டபின்தான் நகருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். நாளாந்தும் சுமார் ஐநூறு அல்லது அதற்கு சற்று கிட்டிய தொகையினரே அவ்வாறு நகருக்குள் செல்ல முடிந்தது.

இவர்கள் நடந்து கடக்கும் பாதை புதர் மண்டியிருக்கும். ஏராளமான கடதாசிகள் கிழித்து கிழித்து எறியப்பட்டதால் அந்தப்பகுதி முழுதுமே துண்டுக்காகிதங்களால் நிரம்பியிருக்கும். அவை அனைத்தும் சாதாரணக் குப்பைகள் இல்லை. அவை தமது உறவினருக்கு அன்பைக் கொட்டி எழுதிய கடிதங்களாகும் துயரங்களை மரணச் செய்திகளை தாங்கியவையுமிருக்கும். அத்தியாவசிய தேவைகளுக்கான ஆவணங்களாகவும் இருக்கும். இலங்கையின் பல பாகங்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளுக்குமான தாபால்களாகும் இவை ஏன் இப்படி கிழித்தெறியப்பட்டுள்ளன. யாரால் கிழித்தெறியப்பட்டுள்ளன.?

இவை நகரத்துக்கு போகவே முடியாதவர்கள் எழுதி நகருக்குள் செல்பவரிடம் கொடுத்து அவற்றை நகரிலுள்ள தபாற் பெட்டிகளில் போடுமாறு கொடுத்து விடுவர். அவர்களோ முகத்துக்கு அஞ்சி அவற்றை மறுக்காமல் பெற்றுக்கொண்டு வந்தாலும் அவை தம்மை பிரச்சனைக்குள் மாட்டிவிடலாம் என்ற அச்சத்தில் வழியில் கிழித்தெறியப்பட்டவையாகும். தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவுமில்லை. எனினும் தபால்கள் உள்ளே வந்தன. வராமலில்லை. அவற்றை விநியோகிப்பவர் சுதந்திரமாக எல்லாக்கிராமங்களுக்கும் செல்ல முடியாது. வழியில் போராளிகளால் அவன் உளவாளி என விசாரணைக்குட்படுத்தப்படலாம். அதனால் யாரும் எல்லா இடங்களுக்கும் போக முடியாத நிலை. அங்கேயே வாழ்ந்த மக்கள் கூட புதிதாக ஒரு ஊருக்கு செல்லும்போது பலவித விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த கடிதக்கதை முடிந்து தொலைத் தொடர்புகள் இயங்கவே ஆரம்பிக்கும் வரை போனில் பேசுவதற்காக பல ஆயிரம் ரூபாக்கள்வரை செலவு செய்து இரண்டு நாட்களாவது பாஸ் பெற அலைந்து, வவுனியா நகருக்கு பலர் பயணித்தனர்.

எல்லாம் சரி இப்ப என்ன கொள்ளை வந்தது தபால்கள் நத்தை வேகத்தில் பயணிப்பதற்கு பலதடவைகள் எனக்கு அவசியமான கூட்டங்களுக்கான அழைப்புகள் அனுப்பப்பட்டன. நல்ல வேளையாக ஓழுங்கமைப்பாளர்கள் முதல்நாள் தொலைபேசியில் நினைவூட்டுவதற்காக எடுப்பார்கள். வேடிக்கை என்னவென்றால் எனக்கு அதுதான் முதல் அறிவிப்பாக இருக்கும். நான் கூட்டம் முடித்த நான்காம் நாள் கடிதத்தை பெற்றுக் கொள்வேன். சில கடிதங்கள் அனுப்பபட்டதற்கான சான்று அவர்களிடம் இருக்கும். ஆனால் கடிதம் வருவதில்லை. எனக்கு மட்டுந்தான் இப்படியா ? என்றால் இல்லை அண்மையில் எங்கள் கிராமத்தில் முக்கியமான ஒரு வேலைக்கான நேர்காணல் விடயம் அறிந்து அறிவிப்பு வராது போனாலும் பரவாயில்லை இன்று நேர்காணல் என்று பத்திரிகை வானொலி எல்லாம் சொல்லியிருக்கிறது என அறிந்து கொண்டு, அவர் முதல்நாளிரவு கொழும்புக்கு பயணமானார். நேர்காணலிலும் கலந்து கொண்டார் அவர் திரும்பி வீட்டுக்கு வந்தபோது அவருக்குப்பின்னாலேயே கடிதம் வந்தது. மெயிலா?ஸ்னெயிலா? தபாற் சேவை இன்னும்கூட முக்கியமான நிலையில்தான் உள்ளது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்.

Comments