"வீட்டுச் சாப்பாடா, கடைச்சாப்பாடா? | தினகரன் வாரமஞ்சரி

"வீட்டுச் சாப்பாடா, கடைச்சாப்பாடா?

தூர இடங்களுக்குப் பயணம் போகும்போது, வழியில் சாப்பாட்டுக்கடைகளைத் தேடிக் களைத்துப்போவம். அநேகமானோர் பஸ் நிறுத்தும் கடைகளில் நிற்கமாட்டார்கள். ஏனென்றால், அங்கு பஸ் ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும்தான் நல்ல உணவு கொடுப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் போகும்போது இரவிலை ஓர் இடத்திலை பஸ்ஸை நிறுத்துவாங்கள். வரிசையில் சாப்பாட்டுக்கடைதான். எல்லாக்கடையிலையும் சாப்பாட்டைத்தவிர எல்லாம் அழகாக இருக்கும். அலங்கார மின்விளக்குகள் எல்லாத்தையும்விட அழகு!

இப்பிடியான கடைகளைத் தவிர்த்துச் சற்று முன்னோக்கிச் சென்றால், வீடுகளையே உணவகங்களாக வைத்திருப்பார்கள். அறுசுவையான உணவை வீட்டாரே பரிமாறுவார்கள். வீட்டில் சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி கிடைக்கும். இஃது அநேகமாக புத்தளம் அனுராதபுரம் வீதிகளில் காணப்படும். கொழும்பிலும் சில இடங்களிலும் இந்த வீட்டுச் சாப்பாட்டுத் திருப்தியை, உணவில் அல்லாமல் அறிவிப்புப் பலகையில் தருவார்கள்.

'வாருங்கள், வீட்டில் சாப்பிட்டமாதிரி உணர்வீர்கள்' என்ற அறிவிப்பைப் பார்த்துச் சென்றால், உள்ளே வீடும் இருக்காது; அந்தச் சாப்பாடும் கிடைக்காது. இதுதான் நிலைமை!

ஒரு காலத்தில் பொம்பிலி கருவாடு என்றால், அப்பிடி ஒரு விருப்பம். கொஞ்சம் மணக்கும் என்றாலும் சாப்பிடும்போது சுவைக்கும்! இப்போது அதனைக் கைவிட்டுப் பல வருடங்கள். கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்றே நினைவில்லை! ஏன் தெரியுமா?

ஒரு நாள் அந்தக் கருவாட்டைச் சமைப்பதற்கு முன்னர் நன்றாகக் கழுவித்தூய்மைப்படுத்தும்போது அதைப் பிரித்துப்பார்த்தால், உள்ளே சிறு சிறு புழுக்கள்! அன்றுவிட்டதுதான் பொம்பிலி!

இப்போது ரின்மீனையும் விட்டுவிட வேண்டும் போல் இருக்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின்மீன்களில் புழுக்கள் கண்டறியப்பட்டதையடுத்து 108 கொள்கலன்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 68இல் சோதனை நடத்தப்படுகிறதாம். மேலும், நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விநியோகிக்கப்பட்ட ரின்மீன்களில் புழுக்கள் இருக்கின்றனவா? என்று அறியவும் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்தப் புழுக்களைச் சாப்பிட்டாலும் பிரச்சினையில்லை என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ​வேண்டுமானால் புழுக்களைச் சமைத்துச் சாப்பிடட்டும், எங்களுக்கு இயலுமா? என்று கேட்கிறார் நண்பர்.

பொதுவாக நன்றாகப் பழுத்துக் கனிந்த பழங்களில் புழுக்கள் இருப்பது; உருவாகுவது சகஜம். அவற்றைத் தெரியாமல் சாப்பிட்டாலும் பிரச்சினையில்லை என்பார்கள். தெரியாமல் உண்பது வேறு; புழுக்களைக் கண்டு கண்டு அந்தப் பதார்த்தத்தைச் சாப்பிட மனம் வருமா? கதலி வாழைப்பழம் நன்றாகக் கனிந்துவிட்டால், அதில் நிச்சயம் புழு உருவாகும். அதே போன்று தக்காளி நன்றாகக் கனிந்துவிட்டால், அதில் புழு உண்டாகும். கொழும்பில் ஒரு தனியார் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட பகலுணவிலேயே புழு காணப்பட்டிருக்கிறது. புழுவைக் கண்ட நோயாளி அந்த உணவைத் திருப்பியனுப்பியிருக்கிறார். இது வெளியில் வராத சம்பவம்! இப்பிடி எத்தனை, எத்தனை?

தொழில்களுக்கெல்லாம் முதன்மையான தொழில் எஃதென்று ஒரு சகியிடம் கேட்டேன். அவள், ஆசிரிய தொழில் என்றாள். இருக்கலாம்! ஆனால், மேன்மையான முதன்தையான தொழில் என்றால், அது விவசாயத்தொழில்தான். விவசாயம் செய்பவன்தான் மேலானவன் என்கிறது சமூகம்; சங்கம்.

எத்தொழில் புரியினும் மற்றவருக்கு அன்னமிடும் தொழிலைச் செய்யும் விவசாயிதான் சமூகத்தில் உயர்ந்து நிற்கிறான். இதில் எந்தவிதமான தர்க்கத்திற்கும் இடமில்லை. அந்தத் தொழிலுக்கும் கடை வைத்து உணவு வழங்குவதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இந்த உயர்ந்த தொழில்புரிபவர்கள். பணத்தை மட்டும் குறிக்ேகாளாகக் கொண்டு செயற்படுவது நியாயமா?

இன்று எந்த உணவகத்திலும் விடுதியிலும் உணவை ஒழுங்காக வழங்குவது கிடையாது. ஏதோ ஒரு வகையில் உணவு என்ற பெயரில் எதையெதையெல்லாமோ வழங்கிவிட்டுப் பணத்தைக் கறப்பதுதான் கடைக்காரர்களின் நோக்கமாக இருக்கிறது. வயிற்றுப் பசிக்கு வாய்க்கு உருசியாகச் சாப்பிடுவதற்குப் பெரும்பாலும் கடைகளே இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. மத்தியான வேளைகளில் அலுவலக உத்தியோகத்தர்கள் படுகின்றபாடு பெரும்பாடாக இருக்கும். உணவகங்களை (சிற்றுண்டிச்சாலைகள்)க்ெகாண்டுள்ள பெரிய அலுவலகங்களிலும் உணவு தரமாக வழங்கப்படுவதில்லை. அவர்களுக்குச் சலுகைகள் பலவற்றை நிறுவனம் வழங்கினாலும், எப்படி இலாபத்தை ஈட்டுவது என்பதில்தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான அலுவலகங்களில், ஊழியர்களுக்கு உணவுக்கான கொடுப்பனவை நிறுவனம் வழங்குவதால், அந்தச்சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்படும் உணவு பற்றி ஊழியர்கள் பிரஸ்தாபிப்பது கிடையாது. ஓசியில் சாப்பிடுபவர்களுக்குக் கேள்வி வேறா? என்று கேட்பார்கள் என்ற அச்சத்தில் எவரும் கேள்வி கேட்பதில்லை. அதனால், புண்ணாக்ைகச் சமைத்துக்ெகாடுத்தாலும் சாப்பிடத் தயாராக இருக்கிறார்கள் என்பார் நண்பர். இஃது ஊழியர்களின் தலையெழுத்து என்பது அவரின் கருத்து. பகல் உணவைக் கடையில் எடுப்பதென்றால், இப்போது 150 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை வேண்டும். சிற்றுண்டிச்சாலையில் 80 ரூபாய்.. ஆனால், தரத்தைப்பற்றிச் சிந்தித்துக்ெகாள்ளுங்கள். கூடுதல் விலை கொடுத்து வாங்கும் உணவும் சிற்றுண்டிச் சாலைக்கு நிகராகவேனும் இருக்காது.

சரி, பழங்களைப்பற்றிய கதை என்னவாயிற்று?

அதைப்பற்றி ஏன் கேட்கிறீர்கள்? புறக்ேகாட்டையில் உள்ள சாதாரண கடைகளில் பழங்கள் வாங்கினால், எமது கண்களுக்கு முன்னால் நல்ல பழங்களைத் தேடிப் போட்டுவிட்டுப் பணம் கொடுத்ததும், நம் கைக்குக் கிடைப்பதோ அழுகிய பழங்கள் என்ற கதையைப் பலர் வைத்திருக்கிறார்கள். சாதாரண கடைகளைத் தவிர, வேறு சுப்பர் மார்க்கட்டுகளில் பழங்களைக் கொள்வனவு செய்வதாயிருந்தால், ஸ்ரிக்கரைப் பார்த்து வாங்கட்டாம். நான்கில் தொடங்கும் நான்கு இலக்கம், எட்டில் தொடங்கும் ஐந்து இலக்கம், ஒன்பதில் தொடங்கும் ஐந்து இலக்கம் என்று வகைப்படுத்தி இலக்கமிடப்பட்டு ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். எங்குப் பழம் வாங்குவது என்றாலும் இந்த ஸ்ரிக்கர் பற்றி அறிந்துகொண்டு வாங்க வேண்டும். ஒன்பதில் தொடங்கும் ஐந்து இலக்கத்தைக் கொண்ட ஸ்ரிக்கரைக் கொண்ட பழங்கள் தரமானவை என்று கூறுகிறார்கள். அவைதான் இரசாயனக் கலப்பு இல்லாத பழங்கள்!

Comments