மனைவி அமையவதெல்லாம் | தினகரன் வாரமஞ்சரி

மனைவி அமையவதெல்லாம்

சாய்ந்தமருதூர் கேயெம்மே அஸீஸ்

அருள் கொஞ்சும் புனித ரமழான் ஆரம்பமான நாளில் இருந்து ஊரெல்லாம் ஒரே மகிழ்ச்சி. பாசி படர்ந்த பள்ளிவாசல்கள், தூசு துடைத்து, பெயின்ற் அடித்து, பகட்டாக மின்னிக்கொண்டிருந்தன. பருவம் எய்திய இளம் கன்னியின் அழகிய திருமுகம்போல. சீசனுக்கு சிறகடித்த கார்த்திகைப் பூச்சிகளாய், அங்குமிங்கும் பக்தர்கூட்டம் பள்ளியில் நிரம்பிவழிய என்றும் போல் அன்றும் அந்த ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாமும், சங்கைக்குரிய மௌலவியுமாகிய ஆதம்பாவா ஹஸரத் அவர்கள், முன்கூட்டியே நிருவாகத்தினரால் வழங்கப்பட்ட “மனைவி அமைவதெல்லாம்” எனும் தொனிப்பொருளில் மெய்சிலிர்க்க உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; தனக்கே உரித்தான பாணியில் அடுக்கு மொழி சார்ந்த அழகிய செந்தமிழில்.

சற்று கரகரப்பாக கட்டிப்போய் இருந்த தொண்டையை ஒருவாறு கனைத்துக் கொண்டு சரிப்படுத்தியதன் பின்; அங்கிருந்தோர் அனைவரையும் அன்போடு சலாம் கூறி விழித்தவராக, சிம்மக்குரல் சிறகடிக்கத் தொடங்கியது.

“கண்ணியமான சகோதரர்களே, வாழ்க்கை என்பது கடலோரத்தில் நிறுத்தப்பட்ட கப்பலைப் போன்றது. அதில் ஏறப்புகு முன் அது ஓட்டை அற்றதா? அல்லது துருப்பிடித்ததா? என்று ஆழமாக அலசி ஆராய்ந்ததன் பின் ஏற வேண்டும். இல்லை எனில் அனைவரும் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டியதுதான்” என்ற உணர்வுபூர்வமான தத்துவத்தை மேலும் எல்லோரும் இலகுவில் புரிந்து கொள்வதற்காக, வாழ்க்கை என்கின்ற பரந்துபட்ட ஆழியில்; அலைமோதும் துன்ப துயரங்களை எதிர்த்து நின்று போராடி; கரைசேர உதவும் கப்பல் என்னும் மனைவி ஆனவள் ஓட்டை உடைசல் இல்லாத கலாசார விழுமியங்களை கண்ணே போல் காக்கும் நல்ல பெண்ணாக அமைந்தால் மட்டுமே அது சேரவிருக்கும் இலட்சியப் பயணம் சரியான பாதையில் சிறப்பாக அமையும். இதற்கு எதிர்மாற்றமாக பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு புதைகுழிக்குள் வீழ்வோமேயானால்,

“முதற்கோணின் முற்றும் கோணும் என்பதற்கொப்ப, அதில் பிறக்கின்ற குழந்தைகளோடு பயணிக்கும் கப்பல் மூலமாக அத்தனை பேரும் சத்தியமாக நடுக்கடலில் தத்தளிக்க வேண்டிய நிலைதான் உருவாகும் என்பதோடு நின்றுவிடாமல் எட்டாவது நரகத்தை விலை கொடுத்து வீட்டிற்குள் கட்டிப்போட்ட செயலுக்கு ஒப்பாகும் என்ற கருத்தை முன்மொழிந்தபோது சிலரது நயனங்களில் இருந்து முத்து முத்தாகச் சிதறிய விழி நீர்த் திவலைகள் தரையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.

இந்த ஈரத்தை சாரமாக்கிக் கொண்ட ஹஸரத் அவர்கள், அதன்மேல் தொடர்ந்தும் வெள்ளோட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள், மிகை தட்டிய வெப்பிசாரத்தின் மத்தியில்,

“பணமாம் பணம் என்னடா பணம் மலத்தின் மீது தேன் வழிந்தால்; அதை லபக்கென்று வழித்து நாக்கில் சுவை பார்ப்பதா? இவ்வாறு தான் அநேகமானோர் வெளியில் சொல்ல முடியா வேக்காட்டுடன் தனக்குள் தானாகவே செத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னருமை இளம் சிங்கங்களே; முறுக்கேறிய வாலிபர்களே! என்றே விழித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் அநியாயமாக அழிந்துபோவீர்கள். ஆயிரம் காலத்துப் பயிர் என்று அழகியல் வாழ்க்கை அற்ப, சொற்ப, அழிந்து போகும் ஆதனத்திற்காக ஆடு, மாடுகள் போல் உன்னை கல்யாண சந்தையில் தரகர்களால் ஏலம் இடப்படுகிறதே. வெட்கம் இல்லை, ரோசம் இல்லை, சுணை இல்லை.... சிக்.... ஒரு கணம் உன்னைப் பற்றி, உமக்குப் பிறக்கப் போகும் எதிர்கால குழந்தைகளைப் பற்றி... நீ... ஆழமமாக சிந்தித்துப் பார்த்தாயா? சிந்தியடா... மகனே... நன்கு சிந்தி... சிந்திக்க நல்ல அவகாசம் இருக்கிறது. சிந்தி... என்னும் போதே... தனக்குத் தானா இது சொல்லப்படுகிறதென்பதை போராட்டத்தின் மத்தியில் புகைந்து கொண்டிருந்த தீ; சாஜஹானின் கண்களில் இருந்து நீராகி... தாரை தாரையாக வழிய, அதனையும் மீறி எழுந்த, 'அல்லாஹ்' என்ற அபயக்குரல் ஊடாக நெஞ்சை அழுத்திப் பிடித்ததை அவதானித்த பக்கத்தில் இருந்த சிலர்; அவனை அவசரம், அவசரமாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஆட்டா ஒன்றில் ஏற்றிச் சென்றனர். அங்கு, அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சாஜஹானை நல்ல முறையில் பரிசோதித்துப் பார்த்த டொக்டர் இல்முதீன் இது அளவுக்குதிகமாக சிந்தித்ததன் மூலம் ஏற்பட்ட ‘பிரெஸ்ஸர்’ மன அழுத்தம் என்று சில மாத்திரைகளை வழங்கிவிட்டு ஆழமாக சிந்திப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது என்ற ஆலோசனை கூறிய அவர்; அடுத்த வாட்டில் இருக்கும் சில நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக செல்ல பக்கத்தில் சாஜஹானுக்குத் துணையாக நின்ற தனது உயிருக்குயிரான நண்பனும் ஒன்றாக ஓ யெல் வரை ஒரே வகுப்பில் கல்விகற்ற ‘கிளாஸ்மேற்’ தாஸீமும் ‘டிஸ்சாஜ்’ பண்ணி வாட்டில் இருந்து வெளியே வந்தபோது தாஸீம் கேட்டான் என்னடா மச்சான் உனக்கு என்ன நடந்தது. ஆதம்பாவா ஹஸறாத்ர பயான கேட்ட உடன ஆன, புவி அடிச்ச மாதரி அலறினாயே.

ஏணேட நீண்ட காலமாக மறச்சி வெச்சிக்கிட்டு சொல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம அவதிப்படுவது உன் முகத்தப் பாத்தாலே எனக்கு விழங்குது. ஊஹும்... சொல்லுடா சொல்லு... அப்படி என்ன தலபோற பிரச்சினை... சொல்லு என நண்பன் என்ற முறையில் கெஞ்சுவது போல் கேட்டான். ஆத்மீகத்தை அடியொற்றி வாழும் தங்கமான குணம் படைத்த சாஜஹான், மாவடிப்பள்ளி மத்ரஸா ஒன்றில் மார்க்கக் கல்வி பயிலும் தனது பாசத்திற்குரிய இரண்டு ஆண் குழந்தைகளின் எதிர்கால நன்மை கருதி தான் எரிந்து சாம்பலானாலும் பரவால்ல என்று தன்னுள் வைராக்கியம் எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்காக புயலேடு போராடிக் கொண்டிருந்தான்.

மீண்டும் தாஸிம், சத்தியமாக நான் ஆரிடமும் சொல்லமாட்டன், பயப்புடாம சொல்லுடா... என்று உரிமையோடு அவனை நச்சரித்த போது; விம்மல், விசும்பலோடுதன் சோகத்தை அவனோடு பகிர்கையில்; மச்சான்... என்ர வாழ்க்கையில எனக்குக் கிடைத்த முதல் அடி, இல்லை இடி.... எனது மனைவிதான். இப்படி ஒரு புழிச்ச சாம்பார் எந்த ஒரு ஆணுக்குமே கிடைக்கக் கூடாதென்றுதான் முதல்ல இறைவன பிரார்த்தித்துக் கொள்றன், எனக் கூறிவிட்டு நான் இப்ப ஆரோட வாழ்ந்துக்கிட்டிருக்கன் எண்டு ஒனக்கு தெரியுமா? எது மனித உருவில் நடமாடும் பயங்கர கொள்ளிவாய்ப் பசாசு. ஒன்றுமே மண்டைக்குள் ஏறாத வெகுளி. மேற்கொண்டு பேச முடியாமல் விக்கித்து நின்ற அவனை ஆரத் தழுவிய ஆப்த நண்பன் தாஸிம்... அப்புடீன்ரா... என்ரா இன்னும் அவளோட வாழ்ந்துக் கிட்டிரிக்காய்....? சாப்புட ஏலாதத வீசி எறிவது தான் முற. உட்டுப் போட்டு வேற ஒண்ட கட்டிக்கிறதுதானே.

எப்புடிரா மச்சான் என்ர பிள்ளைகள தனிமையில இந்தப் பேய்க்கிட்ட உட்டுட்டுப் போனா அதுகள்ள எதிர்காலம் என்னாகும்? அதுமட்டுமா? நான் தலாக் சொன்னத்துக்கப்புறம் இன்னொரு அப்பாவி எதுவுமே விளங்காம இந்தக் காளியிடம் வந்து விழுந்திற்றா பாவம் இல்லியா...? அதனால சோதனய, வேதனைய, விதிய பொருந்திக்கிட்டு இவளோட வாழ்றதத் தவிர வேறு வழி இல்ல. சோகத்தின் எல்லையே தாண்டியிருந்த இருவருமே ஆரத் தழுவி கண்ணீரில் கரைந்து திக்குமுக்காடி நின்றவேளை, எதிர்பாராத விதமாக இருவருக்குமே நன்கு பரிச்சயமான சுலைமான், கலாசார உடை அணிந்த தனது மனைவி றிஹானாவோடு வருவதைப் பார்த்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து சமாளித்தவாறே நீண்ட சலாத்தோடு வரவேற்ற பின், 'என்ன நீண்ட காலத்துக்குப் பிறகு இங்காலப் பக்கம்? பிள்ள குட்டிகள், மனைவி, வாழ்க்க எல்லாம் நல்லாப் போகுது தானே' என தாஸிம் வினவ; கடைக்கண்ணால் றிஹானாவை கொஞ்சம் நோட்டமிட்ட போது தூக்கிவாரிப் போட்டது. சாஜஹானுக்கு. அவளும் நாணத்தால் அப்படியே அசையாது நின்று கொண்டாள்.

நண்பன் கேட்ட கேள்விக்கு சுலைமான் அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். வாழ்க்கயில எந்தக் குறைச்சலும் இல்ல, நல்ல சுமூத்தாகப் போய்க்கொண்டிருக்கு. பிள்ளைகள் ஆணொன்று, பெண்ணொன்று படிக்கிறாங்க. மனைவிய பத்தி சொல்லப் போனா. எப்படி சொல்றெண்டு எனக்கே புரியல்ல. அவ ஒரு பத்தரமாத்து பசும்பொன். பட்டை தீட்டிய வைரம் உலகத்திலேயே என் கண்முன்னே எனக்குக் கிடைச்ச உயர்ந்த சொர்க்கம். இதைவிட எனக்கு வேறென்னதான் வேணும்', என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சாஜஹானின் தலை சுற்றிக் கொண்டிருந்தது.

ஐந்து கண்டங்களையும் தன் மண்டைக்குள் போட்டு உருட்டி எடுத்தவாறு நேரம் இரவு பத்து மணியானதை கைக்காடிகாரம் கோடிட்டுக் காட்டியதை நினைவுபடுத்திய சாஜஹான் தன் நண்பன் தாஸிம் இடம் இருந்து பிரியும் வேளை அவன் காதுக்குள் மெல்ல குசுகுசுத்துக் கொண்டான்...

“நாம் ஏற்கனவே பார்த்தோமே, நண்பன் சுலைமானின் மனைவி அவ ஆரெண்டு தெரியுமா? முதல்ல எனக்காகக் கல்யாணம் கேட்டுவந்து, பெண் பார்த்து அன்னா இன்னா என்று இரிக்கேக்க ஏதோ விதி வசத்தால குழம்பி சொர்க்கம் நழுவிப்போக நொந்து பயனென்ன என்றவாறே பயத்தால் நடு நடுங்கியவாறு தனது இல்லமான நரக லோகமாகிய நரிக்கூட்டிற்குள்... அவன் மெல்லப் பதுங்கிக் கொள்கிறான். நரியின் ஊளைச்சத்தம் பஞ்சடைத்த காதுகளையும் பதம் பார்த்துக்கொள்ள பலிக்களத்திற்கு இடப்பட்டு கழுத்தறுத்தான் கோழிக்குஞ்சு போல் சாஜஹான் தூங்க ஆரம்பித்த போது அவன உள்மனம் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது.

“மனைவி அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று...

Comments