தொழிற்சங்க மேம்பாட்டுக்காக சர்வதேச மட்டத்திலும் சேவையாற்றிய தேசிகர் இராமானுஜம் | தினகரன் வாரமஞ்சரி

தொழிற்சங்க மேம்பாட்டுக்காக சர்வதேச மட்டத்திலும் சேவையாற்றிய தேசிகர் இராமானுஜம்

எஸ்.பி. அந்தோனிமுத்து   

 

தலைவர் செளமிய இளைஞர் மன்றம்

 

தொழிற்சங்க மேம்பாட்டுக்காக சர்வதேச மட்டத்திலும் சேவையாற்றிய தேசிகர் இராமானுஜம் இலங்கையின் ஆரம்பகால தொழிற்சங்கத் தலைவர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் தேசிகர் இராமானுஜத்தின் 50ஆவது சிரார்த்த தினம் கடந்த நான்காம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.

 

தேசிகர் இராமானுஜம் தென்னிந்தியா இராமநாதபுரத்தில் 1907 ஜுலை 17ஆம் திகதி பிறந்தார். தனது உயர்கல்வியைப் பூர்த்திசெய்த பின்னர் பத்திரிகைத்துறையில் கால்பதித்தார். 1920களின் பிற்பகுதியில் தேர்ச்சிமிக்க எழுத்தாளராகப் பிரகாசித்துக்கொண்டிருந்த இராமானுஜம் இலங்கைக்கு வந்து 'தேசபக்தன்' எனும் பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியபீடத்தில் இணைந்துகொண்டார்.

1943இல் கண்டி தர்மராஜா கல்லூரியில் ஆசிரியராகப் பதவியேற்றார். அன்னாரின் ஆங்கிலப் புலமை காரணமாக, கண்டியில் உள்ள நீதிமன்றங்களில் தமிழில் அளிக்கப்பட்ட சாட்சியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொள்வதில் தமக்கு உதவுமாறு அன்னாருக்கு நீதிமன்றங்கள் அழைப்பு விடுத்தன. இக்காலப்பகுதியில் ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் குறிப்பாக, கண்டி மாநகர சபையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த இன்னல்களை அவதானித்த, அன்னார் மஹயாவ மற்றும் அஸ்கிரிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் வசித்துவந்த இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு “போஸ் சங்கம்“ என அழைக்கப்படும் சங்கமொன்றை அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

இக்காலப்பகுதியில், பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென பிரித்தானிய பெருந்தோட்டக் கம்பனிகளால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவென மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய பல தொழிற்சங்கங்கள் உருவாகின.

கடந்த 1937இல், இந்தியத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஸ்ரீஜவகர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். நாவலப்பிட்டியைச் சேர்ந்த ச. இராஜலிங்கம், பதுளையைச் சேர்ந்த சுப்பையா போன்ற தலைவர்களும் தமது தொழிற்சங்கங்களை வழிநடாத்திக் கொண்டிருந்த வேறு சிலரும் நேருவைச் சந்தித்து தொழிலாளர்கள் அனுபவித்துவரும் இன்னல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

நேருவின் அலோசனையின் பிரகாரம், தனித்தனியாக செயற்பட்டுவந்த தமது தொழிற்சங்கங்களைக் கலைத்து, இந்தியத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவென தேசிய தொழிற்சங்கமொன்றை உருவாக்க தலைவர்கள் தீர்மானித்தனர். இதன்படியே, இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றம்பெற்று அது பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களாக இராமானுஜம், இராஜலிங்கம், சுப்பையா மற்றும் வேறுசிலரும் செயற்பட்டு வந்தனர்.

1943இல் அஸ்கிரிய வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கண்டி மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இராமானுஜம் 1946இல் கண்டி பிரதி மாநகர முதல்வராகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இந்திய வம்சாவளிப் பிரஜையாக விளங்கினார்.

இந்தக்காலப்பகுதியில் அஸ்கிரிய பீடத்தின் அஸ்கிரிய மகா விஹாரைக்கான குழாய்நீர் விநியோகத்திற்கு பொறுப்பாக இருந்தார். அஸ்கிரிய வட்டார மக்களுக்காக மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கருதி, தொடர்ச்சியாக 13 வருடங்கள் சேவையாற்றிய இராமானுஜத்துக்கு ஆதரவு வழங்குமாறு மகாநாயக்க தேரர் அஸ்கிரிய வட்டார மக்களிடம் வலியுறுத்திக் கேட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

1947 ஒகஸ்ட் 23கும் 1947 செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் அளுத்நுவர தொகுதியில் (தற்போதைய மஹியங்கனைத்தொகுதி) சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கிய இராமானுஜம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஏனைய மூவரையும் தோற்கடித்து, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 46.6 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

1437 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1947இல் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஏழு இலங்கை இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.

 

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இணைச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்டார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்தக்கூட்டங்கள் பலவற்றில் அவர் தொழிலாளர்களின் பிரதிநிதியாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

மேற்படி அமர்வுகளில் அன்னாரின் பங்களிப்புகள் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோருடன் நெருங்கிய நட்பு பேணி வந்ததன் காரணமாக கடந்த 1961இல் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இராமானுஜத்துக்கு நியமன பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை வழங்க முன்வந்தார். ஆயினும், இ.தொ.கா தலைவராக விளங்கிய செளமியமூர்த்தி தொண்டமானுக்காக அந்த உறுப்பினர் பதவி வாய்ப்பை விட்டுத்தந்தார்.

தொழிற்சங்க இயக்கத்திற்கான அன்னாரின் பங்களிப்பையும் சர்வதேச தொழில் அமைப்பு (ILO) கூட்டங்களிலும் அன்னார் நிலைநாட்டிய சாதனைகளையும் கருத்திற்கொண்டு 1962இல் சுதந்திர தொழிற்சங்கங்களின் சர்வதேச கூட்டுறவு ஒன்றியம் (ICFTU) மொரிஷியஸில் உள்ள கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய பதவியை இராமானுஜத்துக்கு வழங்கிக் கெளரவித்தது. அதனையடுத்து எத்தியோப்பிய சக்கரவர்த்தி ஹைலிசலாசியின் ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்கங்களைத் தாபிக்கும் பொருட்டு அன்னார் எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்பட்டார்.

1965இல் சுதந்திர தொழிற்சங்கங்களின் சர்வதேசக் கூட்டுறவு ஒன்றியம் இராமானுஜத்தை சிங்கப்பூரின் விசேட பிரதிநிதியாக நியமித்தது. சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சர்வதேச ரீதியாக தொழிற்சங்கமொன்றாக மிளிர்வதற்கு வழிசமைக்கும் வகையில், அதன் யாப்பை திருத்தியமைப்பதே அவரின் முக்கிய பணியாக அமைந்தது. அதன் பின்னர் அன்னார் தென்கிழக்காசியாவின் பிராந்தியப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1968இல் சுதந்திர தொழிற்சங்கங்களின் சர்வதேசக் கூட்டுறவு ஒன்றியம் இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஆசியப் பிராந்தியப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் 1968 ஜுன் 4ஆம் திகதியன்று அன்னார் காலமானார்.

இவ்வாறாக தொழிற்சங்க இயக்கம் மற்றும் சர்வதேச மட்டத்தில் தொழிலாளர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் அரும்பெரும் சேவையாற்றிய எளிய மனிதரை பெருந்தோட்ட சமூகம் என்றென்றும் நினைவுகூரும்.

Comments