உதைபந்தாட்டத் திருவிழா இவ்வாரம் கோலாகலமாக ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

உதைபந்தாட்டத் திருவிழா இவ்வாரம் கோலாகலமாக ஆரம்பம்

உலகம் முழுவதும் எதிர்பார்த்துக்காத்திருந்த 21வது பிபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இவ்வாரம் ரஷ்யாவில் ஆரம்பமாகின்றது. உலகம் பூராவும் தெரிவு செய்யப்பட்ட 32 அணிகள் 11 ரஷ்ய நகரங்களிலுள்ள 12 மைதானங்களில் ஒரு மாதகாலமாக நடைபெறவுள்ள இத்தொடரில் இறுதிப் போட்டியுடன் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரில் மொத்தப் பரிசுத்தொகையாக இலங்கை நாணய மதிப்பின்பிரகாரம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபா வழங்கப்படவுள்ளன. இது கடந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு வழங்கிய பரிசுத் தொகையை விட சற்று அதிகமாகும். சம்பியன் கிண்ணம் வெல்லும் அணி 628 கோடி ரூபாவை அள்ளிச் செல்லவுள்ளது.

இவ்வருட உலகக் கிண்ணத் தொடரில் ஐரோப்பிய வலயத்திலிருந்து ரஷ்யா, பிரான்ஸ் போர்த்துக்கல், ஜேர்மனி, சர்பியா, போலாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, குரோசியா, சுவீடன், டென்மார்க், மெக்ஸிகோ, கொஸ்டாரிகா, பனாமா, ஆகிய 17 நாடுகளும், ஆசிய அவுஸ்திரேலியப் பிராந்தியத்திலிருந்து ஈரான், தென் கொரியா, ஜப்பான், சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா ஆபிரிக்கப் பிராந்திய நாடுகளான டுனீசியா, நைஜீரியா, மொரோக்கோ, செனகல், எகிப்து, தென் அமெரிக்க நாடுகளான பிரேஸில், உருகுவே, ஆர்ஜன்டீனா கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளும் இம்முறை உலகக் கிண்ணத்தில் மோதவுள்ளன.

மொத்தம் 211 நாடுகளில’ இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 32 நாடுகளும் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலுமுள்ள அணிகள் அப்பிரிவிலுள்ள மற்றைய அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும் எனவே முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் மோத வேண்டும். அதனடிப்படையில் முதல் சுற்றில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த எட்டுப் பிரிவுகளிலும் இருந்து ஒவ்வொரு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகும்.

இரண்டாவது சுற்றான வெளியேற்றல் சுற்றில் முதற் சுற்றில் தெரிவாகிய 16 அணிகளுக்கிடையில் எட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகளும் காலிறுதியில் மோதி அதில் வெற்றி பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும். அரையிறுதியில் வெற்றிபெறும் அணிகள் ஜுலை 15ம் திகதி மொஸ்கோ நகரின் லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இதுவரை நடைபெற்றுள்ள எல்லா உலகக் கிண்ணத் தொடர்களிலும் கலந்துகொண்டுள்ள ஒரே நாடு பிரேசிலாகும் அதிக தடவை கிண்ணத்தைக் கைப்பற்றிய நாடாகவும் பிரேசிலே பதிவாகியுள்ளது. அவ்வணி 5 தடவைகள் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஜேர்மனியும், இம்முறை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகாத இத்தாலியும் நான்கு முறையும். ஆர்ஜன்டீனா இரு முறையும் கிண்ணம் வென்றுள்ளன. இம்முறையும் இம்மூன்று அணிகளில் ஒன்றே கிண்ணத்தை வெல்லக் கூடிய அணிகளாக அநேக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறன.

 

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஐஸ்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐஸ்லாந்து இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்குகொள்ளும் (334.252) குறைந்த சனத்தொகையைக் கொண்ட நாடாகும்.

21வது உலகக் கிண்ணத் தொடரில் உலகின் உதைபந்து ஜாம்பவான்களான ஆர்ஜன்டீனாவின் லயனல் மெஸ்ஸி பிரேசிலின் நெய்மார், போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்தின் மொகம்மட் சலாஹ் மீது கோடிக்கணக்கான உலக உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி ஐ. எஸ். ஐ. எஸ். பயங்கரவாதத்துக்கு எதிராக சிரியாவுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிகளுக்கும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் உதைபந்தாட்ட மைதானங்களிலும், உல்லாச விடுதிகளிலும், ஹோட்டல்களிலும், பொதுப் போக்குவரத்திலும் அதியுச்ச பாதுகாப்பு வழங்கவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக லயனல் மெஸ்சிக்கும் ரொனால்டோவுக்கும் கடந்த சில மாதங்களாக ஐ. எஸ். ஐ. எஸ். எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments