காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; 73 வயது முதியவர் ஸ்தலத்தில் பலி | தினகரன் வாரமஞ்சரி

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; 73 வயது முதியவர் ஸ்தலத்தில் பலி

புதிய காத்தான்குடி, வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்

 

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் வெள்ளிக்கிழமை (8) நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் எனும் முதியவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளர்.

கடையின் உரிமையாளரான முதியவர் பல வருடகாலமாக இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றார் எனத் தெரிய வருகின்றது.

இச் சம்பவத்தையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டதுடன் களுவாஞ்சிகுடிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அங்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டார்.

பொலிஸ் தடயவியல் அதிகாரிகள் அங்கு விசாரணைகளில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தையடுத்து அந்தப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

அந்தப் பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமெராக்கள் பொலிசாரினால் சோதனை செய்யப்பட்டதுடன் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் மற்றும் ஜேக்கட் அணிந்த இருவர் அங்கு வந்து செல்வது தெரியவந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Comments