கொழும்புக்கு வேலைக்கு சென்றவன் இறந்துவிட்டான் என்பதை நம்பவே முடியவில்லை | தினகரன் வாரமஞ்சரி

கொழும்புக்கு வேலைக்கு சென்றவன் இறந்துவிட்டான் என்பதை நம்பவே முடியவில்லை

நமது நிருபர்

 

நண்பர்களுடன் கொழும்புக்குச் சென்று வேலை செய்து விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றவன் இறந்துவிட்டான் என்ற செய்தி நம்பமுடியாமலேயே இருக்கிறது. இன்னமும் அவன் இந்த வீட்டுக்குள் இருப்பது போன்றே இருக்கிறது என தாமரைக் கோபுரத்தினுள் இறந்த நிதர்ஷனின் அத்தை பிரியந்தினி தெரிவித்தார்.

படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளுடன் மிகவும் அன்பாக  இருப்பவன். அம்மாவுக்கு சமையல் செய்து கொடுப்பான். பாத்திரம் கழுவிக் கொடுப்பான்.

அனைத்து உதவிகளும் செய்வான். பெரிய கனவுகளுடன் வாழ்ந்தவன் இன்று எங்களிடம் இல்லை எனத் தனது தழுதழுத்த குரலில் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி அக்கராயன்குளத்திலுள்ள கோணேஸ்வரன் – மாலதி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக பிறந்தவர்தான் நிதர்ஷன். அக்கராயன் குளம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் நிதர்ஷனுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, தாய் ஆசிரியை.

17 வருடங்கள் வெறும் 1500 ரூபாய் கொடுப்பனவுக்காக தொண்டர் ஆசிரியராக பணியாற்றியவர் 2017ஆம் ஆண்டிலேயே அவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலயத்தில் கற்பிற்கும் அவர் பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்த மூத்த புதல்வன் தான் நிதர்ஷன்.

தனுஷிகா 16 வயது தங்கை, தனுஷன் 13 வயது தம்பி, நிதர்ஷனா 11 வயது தங்கை, அப்பா கோணேஸ்வரன் வீட்டிலேயே பேக்கரி நடத்துபவர். நிறைய சம்பாதிக்க வேண்டும், மாடி வீடு கட்டவேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தவன். பரீட்சைக்கு படிக்க எனக்கு ஒரு மாதம் போதும் அதுவரை நான் கொழும்புக்குச் சென்று வேலை செய்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டுத் தான் சென்றான்.

கொழும்பு போகின்றேன் என்று சொன்னானே தவிர எங்கே போகிறேன்.

எந்த இடத்தில் வேலை செய்யப் போகிறேன் என்பது எமக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது. நாங்கள் கேள்விப்பட்ட விடயம் பொய்யாகி விடக் கூடாதா? எனக் கூறியவாறு அழுதார் நிதர்ஷனின் அத்தை பிரியந்தினி.

கிளிநொச்சி அக்கராயன் குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்ஷன் (வயது 19) கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கோபுர நிர்மாணப் பணி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடந்த முதலாவது விபத்து என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோபுரத்தின் 145 மீற்றர் சுரங்கக் குழிக்கள் இவர் விழுந்துள்ளார். மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதர்ஷனின் நண்பர்களே பொறுப்பேற்று இன்று கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்கின்றனர்.

 

Comments