பாதாள குழு சென்ற கார்மீது அதிரடிப்படை சரமாரிச் சூடு! | தினகரன் வாரமஞ்சரி

பாதாள குழு சென்ற கார்மீது அதிரடிப்படை சரமாரிச் சூடு!

கண்டி மடவளையில் பதற்றம்

கே.அசோக்குமார், எம்.ஏ.அமீனுல்லா

 

கண்டி – மடவளை திகன வீதியில் நேற்று (9) நண்பகல் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதாகவும் அறியவருகிறது. போதைவஸ்து மற்றும் பாதாள உலகைச் சேர்ந்தவர்கள் பயணித்த காரை விரட்டிச்சென்ற பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீது காரிலிருந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்

மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர்களை கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுகையில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒரு கைத்துப்பாக்கியொன்றினையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். காரில் வந்துள்ளதாகக் கூறும் இருவர் தப்பித்துச் சென்றுள்ளதாக அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த விசாரணைகளை வத்துகாமம் பொலிஸார் மேற்கொண்டுவரும் அதேவேளை, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பொது மக்கள் எனப் பெரும் கூட்டமொன்றையும் காணக்கூடியதாகவிருந்தது.

விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் அங்கொட லொக்கா என்றழைக்கப்படும் பாதாள உலக தாதாவின் பிரதான சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பலொன்று நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தெல்தெனிய வீதியில் மடவள பிரதேசத்தில் வீதித்தடைகளை ஏற்படுத்தி விசேட அதிரடிப்படையின் வாகனங்களைச் சோதனையிட்டனர்.

நேற்று (9) சுமார் 12.15 மணியளவில் வந்த காரொன்றை நிறுத்த முற்பட்டபோது காருக்குள்ளிருந்த இருவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் திருப்பித் தாக்கியதால் இருவர் காயமடைந்தனர். அவர்களை கட்டுகஸ்தோட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்ற போது அவர்கள் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்த இருவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிழந்தவர்களில் ஒருவர் 'பலிலால்' என்றழைக்கப்படும் 30வயதுடைய ருமல்ஷ இரேஷ மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்கொடை லொக்காவின் சகா என்பதுடன், போதைப் பொருள் கடத்தல், கப்பம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு எதிராக கடத்தல், கொள்ளை, கப்பம் பெறல், கொலை ஆகிய குற்றங்கள் தொடர்பாக சுமார் 15 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றையவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஜனா என்று அழைக்கப்படும் பொல்வத்தகே உபாலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிராகவும் கொள்ளை, கொலை தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

அங்கொடை லொக்காவுக்கா கப்பம் பெறும் நடவடிக்ைகயில் இவர் ஈடுபட்டு வந்தவர் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி இரண்டையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வதற்காக கடந்த ஐந்து மாதங்களாகப் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்புகள், திடீர்ச் சோதனைகளின்போது இதுவரை 14 ரீ56 ரக துப்பாக்கிகளும் 21 கைத்துப்பாக்கிகளும் 16 கல்கட்டாஸ் துப்பாக்கிகளும் வேறு வகையான 284 துப்பாக்கிகளும் பல்வேறு ரக துப்பாக்கித் தோட்டாக்கள் 7375ஐயும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

 

Comments