சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததாகி விடக்கூடாது! | தினகரன் வாரமஞ்சரி

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததாகி விடக்கூடாது!

ஆவன செய்யுமா ஒக்டோபர் மாத கூட்டு ஒப்பந்தம்?

பன். பாலா

சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பார்கள். மலையக அரசியல் கட்சிகளின் நிலையும் கூட இன்று அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் பெருந்தோட்ட மக்களின் சம்பள சமாச்சாரம் தான். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதியே கடைசியாக கைச்சாத்திடப்பட்டது கூட்டு ஒப்பந்தம். இவ்வருடம் அக்டோபர் 18 வரும்போது அது காலாவாதியாகி போகும். ஏனெனில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி அதன் ஆயுட்காலம் இரண்டு வருடங்கள் மட்டுமே.

ஒவ்வொரு வருடமும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு சர்ச்சையுடன்தான் நடக்கும். கடைசியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தம் ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக இழுபறிக்குள்ளாகியிருந்தது. இதற்கு கம்பனி தரப்பின் கடும்போக்கே காரணமென சொல்லப்படுகிறது. உண்மையில் அது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அந்தஸ்து பெற்றுள்ள தொழிற்சங்கங்களின் பலவீனத்தின் வெளிப்பாடேயாகும். இக்கால தாமதத்துக்கான சம்பள நிலுவையை சட்டப்படி பெற்றுத்தர யாருக்குமே திராணியில்லை.

1992 ஆம் ஆண்டு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் மலையக தொழிற்சங்கங்கள் சில ஒப்பந்தமொன்றில் ஈடுபட்டன. அதுவே தோட்ட மக்களின் சம்பள விடயம், நலன்சார் நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தமாகும். உண்மையில் யதார்த்த ரீதியில் இதுவொரு நல்ல சங்கதிதான். இந்த நடைமுறை பல நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது. நமது நாட்டிலும் கூட சில தனியார் வங்கி நிறுவனங்களில் இது வெற்றிகரமாக செயற்படுகிறது. இதன்மூலம் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ப சம்பள நிர்ணயம், சேமநலன்கள், சலுகைகள் என்று நிறைய அம்சங்களை அடைய முடிகின்றது. எனவே பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு இக்கூட்டு ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாக அமையுமென எதிர்பார்ப்புகள் எழுந்தன.

ஆனால் நடந்தது என்ன?

இ.தொ.கா., இ.தே.தோ.தொ.சங்கம் இரண்டும் அன்று கூடுதலான அங்கத்தவர்களை கொண்டிருந்தன. இவையே கைச்சாத்திடும் வாய்ப்பைப் பெற்றன. 40 சதவீதமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகள் மட்டுமே கைச்சாத்திடலாம் என்ற கட்டுப்பாடே இதற்குக் காரணம். இதனால் குறைந்த எண்ணிக்கை கொண்ட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பினை ஏற்படுத்தின. அமரர் எஸ். நடேசன் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடிந்தது. ஆக இம்மூன்று அமைப்புகளுமே தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வரையறை செய்யும் வரம்பெற்றுள்ளன. இதுவரை அதுவே நடந்தும் வருகின்றது. ஆனால் நலன்கள்தான் வந்தபாடில்லை.

இந்த ஒப்பந்தம் மலையக மக்களின் வாழ்வியலில் குறைந்தபட்சம் திருப்தியையாவது ஏற்படுத்தியிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. உதவாத ஒப்பந்தத்தை ஓரத்தில் வைத்துவிட்டு மக்கள் வீதிக்கு இறங்கவேண்டி நேர்ந்துள்ளது. வாரக் கணக்கில் வேலை நிறுத்தங்கள், சட்டப்படி வேலைசெய்யும் இயக்கங்கள், சத்தியாக்கிரகங்கள் என்று தொழிலாளர்கள் போராடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களும் கூட போராட்டங்களுக்கு அறைகூவல் விடுப்பதேயாகும். தம்மை ஏமாற்றவே இந்த நாடகங்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலே தமது காலம், சிரமம் அனைத்தையுமே வீணாக்கிக் கொண்டமையே கடந்தகால அனுபவங்கள்.

மக்களுக்கு சார்பானதாக அமையாத இக்கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவோ அல்லது திருத்தங்களையாவது செய்யவோ இச்சங்கங்கள் தயாரில்லை. எனவேதான் எதைச் செய்தாலும் எதிர்ப்புகாட்ட ஆளில்லை என்ற ரீதியில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் செயற்பட்டு வருகின்றது. கடந்த ஒப்பந்தத்தின்போது எதிர்பார்க்கப்பட்ட நியாயமான சம்பள உயர்வு கிடைக்காமை நல்ல உதாரணம். இச்சம்பள அதிகரிப்பு உரிய பரிகாரம் ஆகாது என்று அரசு சார்பிலான அமைப்புகள் இடைக்கால கொடுப்பனவு என்றதொரு துடுப்பைக் கையில் கொடுத்தது. 2500 ரூபா வழங்கப்பட்டது. நாளடைவில் அதுவும் நிறுத்தப்பட்டது. தவிர வழங்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவுத் தொகை பெருந்தோட்ட மக்களின் சம்பள பணத்திலிருந்து மீளவும் பெறப்பட்டது. இது அன்றைய அரசு ஆடிய அவசர நாடகம் என்று சமூக ஆர்வலர்கள் குறைகாண்கிறார்கள்.

எனவே கூட்டு ஒப்பந்தம் தோட்ட மக்களை ஏமாற்றும் ஒப்பந்தம் என்று எதிர்ப்பலை எழுந்தன. கம்பனி தரப்பு நிர்ணயம் செய்த சம்பள விகிதம் தோட்ட மக்களை கபடமாக முடக்கிப் போடும் வலை என்பதை புத்திஜீவிகள் உணர்ந்தார்கள். மக்கள் தொழிற்சங்க செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா கூட ஒப்பந்தத்துக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை எழுந்தது.

இதில் விசேடம் என்னவென்றால் கையெழுத்திட்டுள்ள சகல அமைப்புகளும் இவ்வழக்குக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதேயாகும். இதன்மூலம் மீண்டுமொரு முறை கம்பனி தரப்பைக் காப்பாற்றும் கைங்கரியம் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களாலோ அல்லது தமது வாக்கினால் வசதி வாய்ப்புகளை வசீகரித்துக் கொள்ளும் அரசியல் அமைப்புகளாலோ தமது சம்பளப் பிரச்சினைக்குச் சரியான தீர்வினை பெற்றுத்தர முடியாது என உணர்ந்து கொண்ட நிலையில் தொழிலாளர் சமூகம் வாய்மூடியிருந்தது.

ஆனால் அண்மையில் நடந்து முடிந்த மே தின மேடைகள் சகட்டுமேனிக்கு மீண்டும் சம்பள விவகாரத்தை சபைப் படுத்தியுள்ளது. இங்கு பேசிய இ.தொ.கா. பொதுச் செயலாளரும் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது வாழ்க்கைச் செலவு புள்ளிக்கேற்ப சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். அமைச்சர் திகாம்பரம் தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி நியாயமான சம்பள உயர்வை வாங்கித் தருவதாக தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி என்பன கூட்டு ஒப்பந்தத்தில் இன்னும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனவே போராட்டம் பற்றி மட்டும் பேசும் நிலை தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு.

2015 நவம்பர் 27ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புச் சம்பந்தமாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குமிடையே பேச்சு வார்த்தையொன்று இடம்பெற்றதும் அது தோல்வியடைந்ததும் ஞாபகம் வருகின்றது. உண்மையில் இக்கூட்டு ஒப்பந்தம் சம்பளம் நிர்ணயம் செய்வதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. பெரும் ஆளணி வளத்தைக் கொண்டிருப்பது பெருந்தோட்ட பயிர்ச்செய்கை. இதில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள விடயம் மறைமுகத தன்மையைக் கொண்டிருப்பது சரியானது அல்ல என்பதே அவதானிகளின் பதிவு.

தவிர, கூட்டு ஒப்பந்த முறைமையை செயலிழக்கச் செய்யும் சில முன்னகர்வுகளில் திட்டமிட்டு கம்பனி தரப்பு கைவரிசைக் காட்டி வருகின்றது. அதில் ஒன்றுதான் வெளியார் உற்பத்தி முறைமை. இதனை தன்னிச்சையாகவே கம்பனி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் தொழிற்சங்கங்களை அது எவ்வளவு தூரம் கணக்கில் எடுக்கின்றது என்பது புரியும்.

இன்று விலைவாசி உயர்வு மலையக மக்களைப் பாடாய்ப்படுத்துகின்றது. அதைச் சமாளிக்கக்கூடிய அளவில் வேதனம் இல்லை. வாழ்வாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் காடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதனால் வேலை வாய்ப்புகள் அருகி வருகின்றன. இது மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். அரசியல் ரீதியிலான மீளாய்வுகளுக்கு உந்துதல் தரவும் வேண்டும்.

எதிரவரும் காலங்களில் தேர்தல்களுக்கு வாய்ப்புண்டு. இந்த வருடம் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறலாம். தற்போது மலையக அரசியல் கட்சிகளின் நிலைமை சமபல தன்மையைக் கொண்டிருக்கின்றது. எனவே கட்சிகளிடையே போட்டி நடவடிக்கைகளைத் தாராளமாகவே எதிர்பார்க்கலாம். 2020க்குள் 50,000 வீடுகளை நிர்மாணித்துக் காட்டுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி சூளுரைத்துள்ளது. எனவே மலையகம் ஒரு சூடு பிடிக்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்தை காணப்போகின்றது. இந்தச் சூழலில் தான் மக்கள் மனசுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டு புகைச்சலை பெருமூச்சாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் சம்பள அதிகரிப்பு விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சகல தரப்புமே தாமாகவே முன்வந்து தமுக்கடித்திருப்பதால் கமுக்கமாகவேணும் காரியம் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படவே செய்கின்றது.

அக்டோபர் மாதம் புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது முக்கியம். ஏனெனில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான நிலுவையை கம்பனி தரப்பு ஒருபோதும் கையளிக்கப் போவது இல்லை. பேச்சுவார்த்தைக்குப் போவதற்கு முன்பே கையெழுத்திடும் தகைமைபெற்ற மலையக தரப்புகள் குறிபிட்டதொரு நியாயமான தொகைக்கு இணக்கம் கண்டு ஒரே குரலில் கோரிக்கையை முன்வைக்கவேண்டும். அதேநேரம் அதற்குப் பக்கபலமாக அரசாங்கத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்படும் விதத்தில் காய்நகர்த்தியாக வேண்டிய தேவை அரசு சார்ந்த மலையக கட்சிகளுக்கு இருக்கவே செய்கின்றது.

தமது கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தும் சந்தர்ப்பவாத அணுகுமுறையை ஒதுக்கிவிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்கவேண்டிய நாகரிகமான அரசியலுக்கு தற்போது சந்தர்ப்பம் வந்துள்ளது. அதை எப்படி பயன்படுத்தப் போகின்றன இந்த மலையக அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் என்பதைப் பொறுத்தே ஊதிய உயர்வு, நலன்புரி காரியங்களுக்கான நகர்வு என்பன நடைமுறைசாத்தியமாகப் போகின்றன. வாய்ப்பை நழுவவிட்டாலோ கைகழுவ முற்பட்டாலோ நாம் ஆரம்பத்திலேயே கூறியதுபோல சும்மாக் கிடந்த சங்கை எடுத்து ஊதிக்கெடுத்த ஆண்டியின் கதையாகவே அமையும் என்பதே உண்மை.

Comments