அனைவரும் உணர வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

அனைவரும் உணர வேண்டும்

சிரேஷ்ட பேராசிரியர்

இரா. சிவச்சந்திரன் விசேட பேட்டி

வாக்காளர் பதிவு என்பது முக்கியமான ஜனநாயகக் கடமை என்பதை அரசாங்க அதிபர், கிராமசேவகர்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நன்குணர வேண்டும் என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான இரா.சிவச்சந்திரன்.

தற்போது வாக்காளர் பதிவு நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வாக்காளர் பதிவின் முக்கியத்துவம், தமிழர் பிரதேசங்களில் வாக்காளர் பதிவில் போதியளவு அக்கறை செலுத்தப்படாமைக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவ்வாரத் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வழங்கியுள்ள விசேட பேட்டியின் முழுமையான விபரம் வருமாறு,

 

கேள்வி:- வாக்காளர் பதிவின் முக்கியத்துவம் தொடர்பில் கூறுவீர்களா?

பதில்:- முன்பொரு காலத்தில் பொதுமக்களே நேரடியாகச் சென்று தமது கையை உயர்த்தித் தமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்வார். ஆனால், தற்போது சனத்தொகைப் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வாறானதொரு தெரிவு சாத்தியமில்லை. இதனால் தான் தேர்தல் முறைமை மூலம் நாம் எமக்கான பிரதித்துவத்தைத் தெரிவு செய்கின்றோம்.

வருடம் தோறும் யூன், யூலை மாதங்களில் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பதிவுகள் அந்தந்த மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் ஊடாக சமூக மட்டத்திலுள்ள கிராம சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாராளுமன்றத் தேர்தல் தொகுதி, மாகாணசபைத் தேர்தல் தொகுதி, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதி ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. இந்த மூன்று தேர்தல் தொகுதிகளிலும் இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாக்காளர் பதிவு முக்கியமானது.

வெளிநாடுகள் செல்வதற்கு விசா எடுப்பதற்கும், பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கும், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாக்காளர் பதிவு மிக முக்கியமானது.

நாங்கள் இலங்கைப் பிரஜைகளாகக் காணப்பட்டாலும் இந்த இடத்தில் நானிருக்கின்றேன் என்பதனை உறுதி செய்வது எங்களுடைய வாக்காளர் இடாப்புத் தான்.

குறிப்பாக வெளிநாடு செல்லும் ஒருவர் தானொரு குற்றவாளியல்ல என்பதை நிரூபிக்கும் முக்கிய ஆவணமாகவும் வாக்காளர் இடாப்பே உள்ளது.

கேள்வி:- இலங்கையில் குறிப்பாகத் தமிழர் பிரதேசங்களில் வாக்காளர் பதிவில் அதிக ஆர்வம் செலுத்தப்படுவதில்லை எனப் பொதுவானதொரு கருத்துள்ளது. பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தாது தான் காரணமா?

பதில்:- இலங்கையிலுள்ள மூவின மக்களில் சிங்கள மக்கள் வருடம் தோறும் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள்.

இதற்கு கிராம சேவகர்களின் ஊக்குவிப்பே காரணம். முஸ்லீம்களுக்குத் தனியான பிரதேசம் இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் செல்வாக்கை அரசியலில் செலுத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதில் கவனமாகவுள்ளனர்.

கடந்த- 30 வருடப் போராட்ட வரலாறு தமிழர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்கின்ற போக்கைக் குறைத்திருக்கின்றது.

இந்தப் போராட்ட காலத்தில் வடக்கு- கிழக்கில் தமிழ்மக்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதை முழுமையாகவே நிறுத்தி விட்டார்கள்.

கடந்த பத்து வருட காலமாகத் தான் வட- கிழக்கில் வாக்காளர் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் வாக்காளர் பதிவுகள் தொடர்பில் தமிழர் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளர்கள் போதிய அக்கறை செலுத்துவதில்லை.

நிர்வாக மட்டங்கள் இலங்கையில் முறையானதாகக் காணப்பட்டாலும் அவை சரியாக இயங்குவதில்லை.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் தங்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வது குறைவாகவுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களே கிராமசேவையாளர்களாகக் காணப்படுவதால் அவர்கள் தமிழ்மக்கள் தொடர்பான வாக்காளர் பதிவுகளில் அக்கறை செலுத்துவதில்லை.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலும் வாக்காளர் பதிவுகளில் கிராம சேவகர்கள் தங்களுடைய கடமையைச் சரிவரச் செய்யாத நிலையே தொடர்கின்றது.

கிளிநொச்சியில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்ற போதும் இந்திய வம்சாவழித் தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியத் தமிழர்கள் ஓரிடத்தில் அல்லாமல் ஆங்காங்கே பரவி வாழ்ந்து வருகின்றமையால் அவர்களுக்கான சரியான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழல் காணப்படுகின்றது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தி அவர்களுக்கான பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

வாக்காளர்கள் பதிவு சரியாக முன்னெடுக்கப்படாமையால் வாக்காளர் அடிப்படையில் கணிப்பீடுகள் செய்யும் போது சிலவேளைகளில் எமது விகிதாசாரம் குறையும்.

தமிழர்கள் அதிகமானவர்கள் காணப்பட்டாலும் வாக்காளர் விகிதாசாரம் குறைவதால் நாங்கள் எங்களுக்குரிய பிரதிநிதியை அனுப்ப முடியாத நிலை கூட உருவாகும்.யாழ்ப்பாணத்தில் 90 வீதமான தமிழர்கள் வாழ்வதால் இதனால் பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் கிழக்கு மாகாணத்தின் நிலை மிகவும் மோசமானதாகவுள்ளது

எங்களுடைய அரசியல்வாதிகளும், இங்கு இயங்கி வரும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களும் ஏனைய விடயங்களில் செலுத்துகின்ற அக்கறை போன்று வாக்காளர் பதிவு தொடர்பான விடயத்தில் அக்கறை கொள்வதில்லை. தற்போது இந்த வருடத்துக்கான வாக்காளர் பதிவு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை எமது அரசியல் தலைமைகளும், அரசியல்வாதிகளும் வாக்காளர் பதிவுக்கான எந்தவொரு அழைப்புக்களையும் விடுக்காதது கடும் கண்டனத்துக்குரியது.

கேள்வி:- தமிழ்மக்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரிவர நிறைவேற்றுகிறார்கள் எனக் கருதுகின்றீர்களா?

பதில்:- எங்களுடைய மக்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது தாம் தெரிவு செய்யும் பிரதிநிதி படித்தவரா? பிரதேச அபிவிருத்தியில் ஆர்வமுள்ளவரா? எனச் சீர்தூக்கிப் பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு அவர்களுடைய போலித்தனமான சுலோகங்களுக்கு ஆட்பட்டு வாக்களிக்கிறார்கள். இதனால், திறமை வாய்ந்த பலரும் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவுள்ள மாவை சேனாதிராஜா அடிக்கடி தான் சிறைக்குச் சென்ற விடயத்தைக் கூறி வருகிறார். தமிழர்கள் எத்தனை பேர் சிறைகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் அவர் சிறை சென்று மீண்டும் திரும்பி வந்தமை முக்கியமானதா? அல்லது தியாகமா? என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

எங்கள் வாக்குகளில் தெரிவாகும் பிரதிநிதி தான் தெரிவாகும் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகக் காணப்பட வேண்டும். ஆனால், எங்கள் அரசியல் வாதிகளின் அரசியல் போக்கு அல்லது சித்தாந்தம் அவ்வாறு காணப்படவில்லை.

என்னைப் பொறுத்தவரை எமது மக்கள் அரசியல் வாதிகளுக்கு மாலைகள் போட வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு அரசியல்வாதிகள் தான் மாலைகள் போட வேண்டும்.

கேள்வி:- வாக்காளர் பதிவு தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பதில்:- வாக்காளர் பதிவு என்பது முக்கியமான ஜனநாயகக் கடமை எனபதை அரசாங்க அதிபர், கிராமசேவகர்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நன்குணர வேண்டும். ஆனால், இதுவரை அவ்வாறு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தங்களுடைய எதிர்கால அரசியல் வாக்காளர்களான பொதுமக்களின் வாக்குகளில் தான் அடங்கியுள்ளது என்பதை உணராமல் அரசியல்வாதிகள் தங்களையே மறந்து போய் நிற்பது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

வாக்காளர் பதிவு தொடர்பில் போதிய விழிப்புணர்வுகள் சமூக மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

ஊடகங்களில் வாக்காளர் பதிவு தொடர்பான அறிக்கைகள் வெளியிட்டும், கருத்தரங்குகள், ஊர்வலங்கள் மற்றும் விழிப்புணர்வு நாடகங்களை ஆற்றுகைகள் செய்தும் எமது மக்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான பண்பை நாம் வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானது.

நேர்காணல்:-

செல்வநாயகம் ரவிசாந்-

Comments