போதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை | தினகரன் வாரமஞ்சரி

போதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை

ஏறாவூர் நகர சபையை பொறுப்பேற்கும் போது இருபது இலட்சம் ரூபா கடனுடன்தான் பொறுப்பேற்றோம். எங்களுடைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏறாவூர் நகர சபையில் நிதியில்லாமல் இருப்பது எங்களுக்கு கவலையளிக்கிறது என்கிறார் ஏறாவூர் நகர சபை தவிசாளர் ஐ.ஏ.வாசித். நேர்காணலின் முழு விபரம் வருமாறு

கேள்வி: ஏறாவூர் நகர சபையினால் எதிர் காலத்தில் மேற் கொள்ள வுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றி குறிப்பிட முடியுமா?

பதில்: நாங்கள் பல் வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். அதில் முக்கிய வேலைத்திட்டங்களாக முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் டினால் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு முடிவுறாமல் இருக்கின்ற வேலைத்திட்டங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் நகர சபைக்கு அருகாமையிலிருக்கின்ற கலாசார மண்டபத்தின் நிர்மாண வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது. அத்தோடு ஏறாவூர் பொதுச் சந்தையை நிர்மாணித்து வருகின்றோம். அதன் இரண்டாம் கட்ட வேலைக்காக முன்னாள் முதலமைச்சரின் முயற்சியினால் 40 மில்லியன் ரூபா வந்துள்ளது. அந்த வேலைத்திட்டத்தினையும் மேற் கொள்ளவுள்ளோம்.

ஏறாவூர் வாவியின் அருகில் அமைந்துள்ள சுற்றுலா மையமொன்று அமைக்கப்பட்டு அதன் நிர்மாண வேலைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதை முடிக்க வேண்டியுள்ளது.

வடிகான்கள் , கழிவுத்திட்டங்கள் போன்ற திட்டங்களையும் மேற் கொள்ள தீர்மானித்துள்ளோம்.

கேள்வி: பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானாவோடும் இணைந்தும் உங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பீர்களா?

பதில்: ஏறாவூர் நகரத்தில் யார் அபிவிருத்தியினை மேற்கொண்டாலும் நாங்கள் அதற்கு தடையாக இருக்க மாட்டோம். எமது மாவட்டத்தினை பொறுத்த வரைக்கும் இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் பிரதியமைச்சராக எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் இருக்கின்றார்கள்.

எங்களுடைய மண்ணைச் சேர்ந்த அலிசாஹீர் மௌலானா பிரதியமைச்சராக இருக்கின்றார். அதே போன்று வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வரும் போது முழுமையான ஆதரவையும் அனுமதியையும் நகர சபை வழங்கும். ஆனால் முறையாக அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற் கொள்ள வேண்டும்.

கேள்வி: திண்மக்கழிவகற்றல் அதன் முகாமைத்துவம் தொடர்பில் நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்ன?

பதில்: அது தான் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. கொத்தணி அடிப்படையில் கொடுவாமடுவிலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு குப்பைகளை ஏற்றி அனுப்பிக் கொண்டிருக்கின்றோம். இதை ஏற்றுவதற்காக நாளொன்றுக்கு 30000 ரூபா பணத்தினை செலவு செய்கின்றோம்.

அதில் உக்கும் உக்கா குப்பைகளாக தரம் பிரித்து நாங்கள் அங்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.அது எங்களுக்கு ஒரு மேலதிகமான செலவாக இருக்கின்றது.

குப்பைகளை கொட்டுவதற்கு அதனை மீள் சுழற்சி செய்வதற்கு அரச காணியொன்றை எமது பிரதேசத்தில் தேடிக் கொண்டிருக்கின்றோம். எமது ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் கடந்த கூட்டத்திலும் நான் இதை கூறியுள்ளேன்.

கேள்வி: உங்களது சபையில் மூன்று தமிழ் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள் அவர்களுடனான உறவு எப்படி இருக்கின்றது?

பதில்: எமது சபையில் மூன்று தமிழ் சகோதர உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் ஆலோசனைகள் மற்றும் அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து வருகிறோம்.

உதாரணமாக அவர்கள் சார்ந்த தமிழ்ப்பிரதேசங்களில் தெருக்களுக்கு மின் குமிழ்களை போட்டு ஒளி ஏற்படுத்துமாறு கேட்ட போது அவர்களின் பிரதேசங்களில் இருந்து அந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தோம். அதே போன்று அவர்களின் இந்து ஆலயங்களில் நடைபெறுகின்ற விஷேட வைபவங்களுக்கு தேவையான குடி நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம்.

வீதி அபிவிருத்திக்கான வேலைக்கான திட்ட முன் மொழிவுகளையும் கேட்டுள்ளோம். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் சுமூகமான உறவு இருந்து வருகின்றது.

கேள்வி: நீங்கள் தவிசாளராக பொறுப்பேற்றதன் பின்னர் நீங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன?

பதில்: நாங்கள் பல் வேறு சவால்களை எதிர் கொள்கின்றோம். நிதியில்லாத பிரச்சினை காணப்படுகின்றது.

சில கட்டங்களில் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாதளவு கூட நிதிப்பிரச்சினை ஏற்படுகின்றது.

எங்களுடைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதியில்லாமல் இருப்பது எங்களுக்குக் கவலையான விடயமாகும்.

டெங்கும் ஒரு பெரிய சவாலாகும். எமது ஏறாவூர் நகர சபை பிரதேசத்தை பொறுத்த வரைக்கும் டெங்கு ஒரு பிரச்சினையாகும். இந்த டெங்கை ஒழிப்பதற்கு சுகாதார அலுவலகத்திற்கு நிறைய உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றோம்.

புகை வீசுவதற்கு உதவிகள், மனித வளங்கள் புகை வீசுவதற்கான இயந்திரங்கள் போன்ற உதவிகளையும் வழங்கி வருகின்றோம்.

இவ்வாறு பல் வேறு சவால்களை நாங்கள் எதிர் கொண்டே வருகின்றோம்.

கேள்வி: தவிசாளரான உங்களுக்க ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?

பதில்: கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது எங்களுக்கு கணிசமான ஆதரவு கிடைத்து நாங்கள் ஆட்சியமைத்தோம். அதில் எமது பிரதி தவிசாளர் எம்.எல்.றெளபாசும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அணியிலிருந்து அவரும் அவரது சக உறுப்பினரையும் சேர்த்துக் கொண்டு ஆதரவு வழங்கினார்.

சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் கிராம உத்தியோகத்தர் றசீட்டும் ஆதரவு வழங்கினார். அதே பொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஆதரவு வழங்கினார்கள். இவ்வாறு 9 உறுப்பினர்கள் எமக்கு ஆதரவு வழங்கியதையடுத்து நாம் ஆட்சியமைத்தோம்.

இதன் போது எமக்கு ஆதரவு தராத உறுப்பினர்கள் இருவர் தற்போது ஆதரவு வழங்கி வருவார்கள். இதுவும் எமக்கு மகிழ்ச்சியான விடயமாக இருக்கின்றது.

கேள்வி: பெரும்பான்மையான முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட உங்களது சபையில் இஸ்லாமிய கலாசார விழுமியங்களை ஏற்படுத்துவதில் ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பீர்களா?

பதில்: நாங்கள் இஸ்லாமிய கலாசார விழுமியங்களை பாதுகாத்து வருகின்றோம் இதற்கு இங்குள்ள தமிழ் உறுப்பினர்களிடமிருந்து எந்த தடையும் கிடையாது.

எமது மாதார்ந்த அமர்வுகளைக் கூட இஸ்லாமிய கலாசார விழுமியத்துடன்தான் ஆரம்பிப்போம்.

கடந்த விஷேட அமர்வின் போது சகோதர தமிழ் உறுப்பினர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்க நாங்கள் முற்பட்ட போது அந்த தமிழ் உறுப்பினர்கள் எங்களுக்கு சிற்றுண்டி வேண்டாம் நாங்களும் இன்று நோன்புதான் எனக் கூறி எமக்கு ஒத்துழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெருநாள் நிகழ்வுகளை கூட இஸ்லாமிய கலாசார விழுமியங்களை பேணி ஆண் பெண் கலப்பில்லாமல் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம்.

கேள்வி: உங்கள் சபையில் மேலதிகமான ஊழியர்கள் உள்ளனரா?

பதில்: இந்த சபையை நாங்கள் பொறுப்பேற்கும் போது இருபது இலட்சம் ரூபா கடனுடன்தான் பொறுப்பேற்றோம்.

பழைய கொடுப்பனவுகள் இருந்தன. அவைகளை நாங்கள் நிவர்த்தி செய்து வருகின்றோம்.

வருமான வரிகளை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். எமது ஊழியர்களில் அதிகமான ஊழியர்கள் சுகாதார தொழிலாளியாக வேலை செய்கின்றார்கள். அவர்களை ஒரு போது இடை நிறுத்த முடியாது. கடமையில் அமர்த்தியே ஆகவேண்டும். அவர்களை நிறுத்தினால் ஊரே நாறி விடும்.

72 ஊழியர்கள் தறிகாலிக ஊழியர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு நிரந்தர நியமனத்தை எதிர்ப்பார்திருக்கின்றார்கள் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வரும் போது அவர்களை நிரந்தரமாக்க நாங்கள் அவர்களுக்கு சிபரிசு செய்வோம்.

இந்த தற்காலிக ஊழியர்கள் எவரையும் நாங்கள் இடை நிறுத்த மாட்டோம்.

கேள்வி: இங்குள்ள சிவில் சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு எவ்வாறுள்ளது.?

பதில்: இங்குள்ள ஜம் இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாயல் சம்மேளனம் போன்ற சிவில் சமூக அமைப்புக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்புக்களையும் ஒத்தாசையையும் வழங்கி வருகின்றன.

பள்ளிவாயல் ஆலயங்கள் பொது நிறுவனங்களுக்கு எமது சேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றோம் அவர்களுக்கும் எமக்கும் சுமூகமான உறவு இருந்து வருகின்றது.

கேள்வி: ஏறாவூரின் கல்வி அபிவிருத்திக்கும் வறுமையொழிப்புக்கும் எவ்வாறான பங்களிப்புக்களை வழங்குவீர்கள்.?

பதில்: இந்த ஏறாவூரில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான விதவைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உலர் பொதிகளை முன்னாள் முதலமைச்சரின் உதவியுடன் வழங்கினோம்.

அப்போது முன்னாள் முதலமைச்சர் கூறினார்

விதவைக்குடும்பங்களில் கல்வி கற்கின்ற பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியைக் கொண்டு அவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அம் மாணவர்களை

அடையாளப்படுத்தும் நடவடிக்கையை எமது சபை மேற் கொள்ளும்.

இப்பிரசேத்திலுள்ள சில நிறுவனங்களும் கல்விக்காக உதவி வருகின்றார்கள். நாங்களும் தேவையான உதவிகளை வழங்குவோம்.

கேள்வி: தவிசாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வந்தீர்கள் அங்கு ஏதாவது திட்ட முன் மொழிவுகளை முன் வைத்தீர்களா?

பதில்: முன்னாள் முதலமைச்சருடன்தான் சென்றிருந்தோம். ஏறாவூரில் மிகவும் தரமான சேவையை நோக்கமாக கொண்ட ஒரு தனியார் மருத்துவ மனையை அமைக்கவும் ஒரு நவீனமான மாடு அறுக்கும் மடுவத்தினை நிர்மாணிப்பதற்கான திட்ட முன் மொழிவுகளை அங்குள்ள தனவந்தர்களிடம் வழங்கியுள்ளோம்.

கேள்வி: மேலதிகமாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: நாங்கள் மாத்திரம் தான் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றார்கள்.

பிரதியமைசசராக நியமிக்கப்பட்டுள்ள எமதூரைச் சேர்ந்த அலிசாஹீர் மௌலானா அவர்களுக்கு கிடைத்துள்ள பிரதியமைச்சுப்பதவியை பயன் படுத்தி நிறைய சேவைகளை அவர்கள் இந்த ஊருக்கு செய்ய வேண்டும்.

அவரின் அமைச்சிலே நிறைய நிதியிருக்கின்றது எதிர்காலத்தில் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றன. அந்த காலப்பகுதிக்குள் அவர் நிறைய சேவைகளை செய்ய வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் இந்த ஏறாவூருக்கு நிறைய சேவைகளை குறுகிய காலத்திற்குள் செய்துள்ளார்.

சந்தை, வீதி அபிவிருத்தி, நகர சபை கட்டிடம், சுற்றுலா மையம், சிறுவர் பூங்கா என இவ்வாறு பல்வேறு அபிவிருத்தி முன்னாள் முதலமைச்சர் செய்துள்ளார். அவருடைய ஆட்சிக்காலத்தில் இந்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நிறைய சேவைகளை செய்துள்ளார்.

அதே போன்று பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானாவும் அரசியல் வேறுபாடின்றி மக்களுக்கு நிறைய சேவைகளை செய்ய வேண்டும்.

நாங்கள் எமது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு அரசியல் வேறுபாடின்றி முடிந்தளவு சேவைகளை செய்வோம் என்றார்.

 

 

 

Comments