டென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

டென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா

டென்மார்க்கில் தமிழர்கள் அதிகம் வாழும் கேர்னிங் நகரில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழா மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்களை பெற்றுள்ளது.

பல்கலை திலகம் ராஜா குணசீலனின் வரவேற்புரையுடனும், பாடல் அரசு பாத்தியின் வணக்கப்பாடலுடனும் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

அமைதி வணக்கம், உருவப்பட திரை நீக்கத்தைத் தொடர்ந்து நூலை வெளியிட்டு வைத்தார் டென்மார்க்கில் வாழும் இலக்கிய கர்த்தாவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை அரசின் எழுத்துக்கான விருது பெற்றவருமான தர்மா தர்மகுலசிங்கம் நூலை வெளியிட்டு வைக்க வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார்.

வெளியீட்டுரையில் தமிழில் இது புதியதோர் முயற்சி என்று தர்மா தர்மகுலசிங்கம் கூறினார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்றே அதிமாக எழுதப்படும் சூழலில் இருந்து வேறுபட்டு இராஜதந்திர நூல்களை எழுதும் காலத்திற்குள் நமது படைப்பிலக்கியத்தை நகர்த்தியிருக்கிறார்.

சர்வதேச அரசியல் விவகார இராஜதந்திர நூல்களை எழுதும் வழியில் இது முன்னோட்டமான முதற் தமிழ் நூல் என்ற சிறப்பைப் பெறுகிறது. ரியூப் தமிழ் நிறுவனம் இதை வெளியிட்டு வைத்திருந்தது.

எழுத்து நடை, எடுத்துச் சொன்ன முறை, எளிமைப்படுத்திய தமிழ், பாமர மக்களும் சர்வதேச விவகாரத்தை புரியும்படியாக ஒரு விடயத்தை எப்படிச் சொல்லலாம் என்பதை நன்கு உய்த்துணர்ந்து கடின உழைப்பின் பின்னதாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தனது வெளியீட்டுரையில் குறிப்பிட்ட அவர் இது சிங்கள மொழியில் வெளிவரவேண்டும் என்று தனது ஆவலையும் வெளிப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து 'ஹிலரி கிளின்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா' என்ற கி.செ.துரை எழுதிய சர்வதேச அரசியல் விவகார முதல் தமிழ் இராஜதந்திர நூலின் வெளியீட்டு விழா முற்றிலும் வித்தியாசமான வெளியீட்டரங்காக மலர்ந்தது.

இதில் சிற்பம்சமாக ஒன்பது பெண்கள் கொண்ட அணி நூல் விமர்சனத்தை தனியாக நடத்தியது வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.

அத்தருணம் ஐரோப்பாவில் தான் கண்ட நூல் வெளியீட்டு விழாக்களில் இந்த அரங்கு மிகவும் காத்திரமான அரங்காக உள்ளதாக பிரபல புகைப்படப்பிடிப்பாளர் முரளிதாஸ் நடராஜா தெரிவித்தார்.

பெண்கள் அனைவரும் புத்தகத்தை முழுமையாக படித்து பேசியது ஒரு சிறப்பம்சம் அதிலும் ஒருவர் பேசிய விடயத்தையே இன்னொருவரும் பேசாமல் அனைவரும் தத்தமது கல்வி நெறிக்கேற்ப வித்தியாசமாகப் பேசினார்கள்.

நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா தலைமைதாங்க திருமதி லலிதா சிவகுமார், திருமதி சுதா வாமதேவன், திருமதி ஷகிலா சச்சிதானந்தம், திருமதி ரூபா குருஸ், திருமதி கௌரி விஜயன், திருமதி தர்சிகா சிறீராஜன், திருமதி பவானி செல்லத்துரை ஆகியோர் உரையாற்றினர்.

ஒரு நூலை வேறு வேறுபட்ட கோணங்களில் நோக்கியதானது ஒரு புதிய பரிமாணமாகும் என்று பெண்கள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா தனது உரையில் கூறினார்.

இந்த நூலை வெளியீட்டுக்காக சென்னை எடுத்துச் சென்ற வேளையில் திருச்சி பெரம்பலூர் சாலையில் அதை வெளியீடு செய்தவரும், நிறைவுரை எழுதியவருமான செல்வா பாண்டியரும், சுரேஸ் பாண்டியரும் சாலை விபத்தில் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருடைய புகைப்படங்களையும் திரை நீக்கஞ்செய்து சுடரேற்றி மாண்பு கொடுத்தனர் வேலுப்பிள்ளை மனோகரன் தம்பதியர்.

அத்தருணம் உயர்கல்வி கற்று சாதனை படைத்த நான்கு இளம் பெண்கள் பொன்னாடை அணிவித்து மாண்பேற்றப்பட்டனர். கல்வித்துறையிலும், வைத்தியத்துறையிலும் சாதனை படைத்த நான்கு இளம் பெண்களும், பெற்றோரும் தமது உள்ளத்து உணர்வுகளை அரங்கில் வெளிப்படுத்தினர்.

Comments