பிரமுகர் அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

பிரமுகர் அரசியல்

இது படைத்துறை அதிகாரிகள் கோலோச்சுகிற காலம் போலிருக்கு.

கடந்த வாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள (Civil security department) அதிகாரி கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு (Colonel Rathnapriya Bhandu) வுக்கு கிளிநொச்சியில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றியோர் திரண்டு, உருக்கமான முறையில் பிரியாவிடை செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி எல்லாத் திசைகளையும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

போர் நடைபெற்ற பிரதேசமொன்றில் – குறிப்பாகப் புலிகளின் நிர்வாக மைய நகரமான கிளிநொச்சியில், போரினால் பாதிக்கப்பட்டோரிடத்திலிருந்து படை அதிகாரி ஒருவருக்கு இப்படியொரு உருக்கமான பிரிவுபசாரமா? என்ற கேள்வி எல்லாத் தரப்புகளிடத்திலும் எழுந்திருக்கிறது. உள் நாட்டில் மட்டுமல்ல, தமிழ்த் தரப்பு, சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள் எனப் பல இடங்களிலும்தான்.

அரசாங்கத்துக்கே இது ஆச்சரியமானதொரு நிகழ்வு.

போருக்குப் பிறகு வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த எந்த அரச தலைவருக்கும் எந்தவொரு அரச பிரதிநிதிகளுக்கும் இப்படியொரு உருக்கமான வரவேற்போ மதிப்பளித்தலோ வழங்கப்பட்டதில்லை.

ரட்ணப்பிரியவுக்கு வழங்கப்பட்ட உருக்கம், போர்க் குற்றச்சாட்டுகளால் வளையமிடப்பட்டிருக்கும் அரசாங்கத்துக்கு இனிப்பான சேதியைக் கொடுத்திருக்கிறது.

இதனால், நாட்டின் தலைவர்களும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் ரட்ணப்பிரிய பண்டுவுக்குப் பாராட்டையும் வாழ்த்துகளையும் அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.

அரசியல் தரப்புகள், படை வட்டாரங்கள், கிராமங்கள் வரையில் எல்லா இடங்களிலும் ரட்ணப்பிரிய பண்டுவைப் பற்றிய பேச்சுகளே நடக்கின்றன.

ரட்ணப்பிரிய பிறந்த மாத்தளைக்கே பலர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நாட்களில் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் ரட்ணப்பிரிய பண்டு பெரிய ஹீரோ (Mass Hero).

கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி ஒரு படை அதிகாரி புகழடைந்திருக்கிறார். அதுவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டவர் என்று.

யுத்த காலத்தில் படையினரின் செல்வாக்கு உயர்ந்திருப்பது இயல்பு. ஒவ்வொரு வெற்றியும் ஒவ்வொரு கிரீடங்களை வழங்கும். ஒவ்வொரு பீடங்களில் அவர்கள் உயர்ந்து செல்வார்கள்.

யுத்தம் முடிந்த பிறகு அப்படி இருப்பது குறைவு. யுத்த முடிவுக்குப் பிறகு யுத்தக் குற்றச்சாட்டுகள், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், தீர்வு, நிவாரணமளித்தல் மற்றும் இழப்பீட்டை வழங்குவதில் உள்ள சிக்கல்கள், காணாமலாக்கப்பட்டோரின் விவகாரங்கள் என ஏராளம் நெருக்கடிகள் படையின் மீதும் அரசின் மீதும் குவிந்திருக்கும்.

இப்போதும் இதுதான் நிலைமை. இதை வெற்றி கொள்வதற்கே அரசாங்கமும் படைத்தரப்பும் பாடாய்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எழுப்பப்டுகின்ற கேள்விகளுக்கும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கும் பதிலளிப்பதற்கு விழி பிதுங்கி, தொண்டை வறள வறள திக்குமுக்காடும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இப்பொழுது ஒரு ஆசுவாசம் கிடைத்திருக்கிறது.

அவர்கள் அடுத்த தடவை கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு கழுத்து நிறைந்த மாலையோடு நிற்கும் படத்தையும் கண்ணீர் வடிய ரட்ணப்பிரியவைச் சுற்றி நிற்கும் தமிழர்களின் காட்சியையும் பெரிய திரையில் காண்பிப்பார்கள். சிலவேளை ஜெனீவாவுக்குப் படையெடுத்துச் செல்லும் தமிழ் முக்கியஸ்தர்களுக்கும் புற அரங்கில் இந்தக் காட்சியைக் காண்பிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யக்கூடும்.

மட்டுமல்ல, ரட்ணப்பிரிய பண்டுவே ஜெனீவாவுக்கும் நியூயோர்க்கிற்கும் செல்லலாம். அதோடு அடுத்த தேர்தல்களில் ரட்ணப்பிரிய பண்டுவைக் களமிறக்குவதற்கு தெற்கிலே பல கட்சிகள் போட்டியிடவும் கூடும்.

முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தேர்தலில் – அரசியலில் களமிறக்கப்படவில்லையா? அதைப்போல ரட்ணப்பிரிய பண்டுவுக்கும் அரசியல் களம் திறக்கப்பட வாய்ப்புண்டு.

அப்படி ரட்ணப்பிரிய பண்டு களமிறக்கப்பட்டால் நிச்சயமாக அவருடைய மடியில் வெற்றிக் கனிதான்.

யுத்த முடிவுக்குப்பிறகு படை அதிகாரிகள் மெல்ல மெல்ல அரசியல் அரங்கிற்கு வரக்கூடிய சாத்தியங்களே அதிகமாகத் தெரிகின்றன.

ஏற்கனவே அனுருத்த ரத்வத்த பாதுகாப்புத்துறைபிரதி அமைச்சராக இருந்திருக்கிறார்.

கோத்தபாய ராஜபக் ஷ நேரடியாக அரசியலுக்குள் நுழைந்திருக்காது விட்டாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக – மிக உச்சமான அதிகாரச் செல்வோக்கோடிருந்தார்.

யுத்த முடிவுக்குப் பிறகு சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகு இப்பொழுது பிரதான அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்புப் பலமாக – பரவலாக உள்ளது.

“நந்திக்கடலுக்கான பாதை (Road To Nandikadal) என்ற புத்தகத்தை எழுதிய மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும் அரசியல் களத்தில் இறக்கப்படலாம் என்று தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சும் எதிர்பார்ப்பும் உண்டு.

ஆகவே, இலங்கை அரசியல் களம் என்பது படைத்தரப்பினரின் அதிகரித்த பிரசன்னத்தைக் கொண்டதாக மாறி வருகிறதா? அல்லது அப்படி மாறப்போகிறதா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆளும் தரப்புகளின் அரசியலுக்குச் சமகாலத்தில் பிரபலமடைந்திருக்கும் முகங்கள் முக்கியம். விளையாட்டு வீரர்கள், படை அதிகாரிகள் அல்லது படைத்தளபதிகள், மதத் தலைவர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் என யாரெல்லாம் புகழடைந்திருக்கிறார்களோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

இவர்களுடைய அரசியல் அறிவு, அரசியற் பங்களிப்பு, அரசியல் அனுபவம் போன்றவை பற்றியெல்லாம் யாரும் கவனத்திற் கொள்ளுவதில்லை. சனங்களிடம் பெற்றிருக்கும் பேரும் புகழுமே இவர்களுக்கான முதலீடு.

எதெல்லாம் சாத்தியமாக உள்ளதோ அதையெல்லாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல் சாணக்கியம் எனக் கருதப்படுகிறது. இங்கே அறம், தர்மம், நீதி, நியாயம் என்பதைப்பற்றி எல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. வெற்றியை மட்டுமே குறியாகக் கொள்ளுமிடத்தில் எப்போதும் அறத்தையும் விடத் தந்திரோபாயங்களைப் பற்றியே சிந்திக்கப்படுவதுண்டு.

இலங்கை அரசியல் என்பது பெரும்பாலும் அறம் நிராகரிக்கப்பட்டதொரு களமே. எனவே எதற்கும் கூச்சப்படத் தேவையில்லை. யாருக்கும் வெட்கமில்லை.

ஆகவே சிங்களத் தரப்பின் அரசியலில் இப்பொழுது படை அதிகாரிகள், தளபதிகள், மதகுருக்கள் (பௌத்த பிக்குகள்) அதிகமாகப் பிரசன்னமாகி வருகின்றனர். இது இலங்கை இன்று முன்னெடுக்க முனைகிற நல்லிணக்கச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமானதல்ல. எதிர்கால இலங்கையின் அமைதிக்கும் ஏற்றதல்ல.

இவ்வாறு கூறுவதன் மூலம் இந்தப் பத்தியாளரோ இந்தப் பத்தியோ எவரதும் அரசியல் உரிமையை நிராகரிக்கவில்லை. அவசியமுள்ளவர்கள் என்பது வேறு. அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைக் கொண்டவர்கள் என்பது வேறு என்பதுவே இங்கே விவாதிக்கப்படுகிறது, கவனப்படுத்தப்படுகிறது.

படை அதிகாரிகளும் மதகுருக்களும் அரசியலில் முதன்மைப்படுத்தப்படும்போது, அவர்கள் தமது துறை நிலைப்பட்டு, தமது அனுபவ நிலைப்பட்டே சிந்திக்க முற்படுகிறார்கள். அந்த அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்க வேணும் என்று கோருகிறார்கள்.

இது அமைதியையும் தீர்வையும் அதற்கான நல்லிணக்கத்தையும் நாடி நிற்கிற நாட்டுக்குப் பொருத்தமானதல்ல.

இவை இரண்டும் நாட்டிற்கு ஒரு வகையில் தேவையானவையாக இருக்கலாம். ஆனால், அதற்காக இவற்றில் உள்ளவர்கள் அரசியல் தீர்மானகரமான சக்திகளாக வரக்கூடாது. அப்படி வந்தால் நாடு மெல்ல மெல்ல ஜனநாயகத்தன்மையை இழந்து போகும்.

இப்போதுள்ள பிரச்சினையே ஜனநாயக வரட்சிதான்.

இதை எப்படி மேம்படுத்தலாம் என்றே பொறுப்பான சக்திகள் சிந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இதற்கு எதிர்மாறாக நிலவரங்கள் அமைந்தால் அதன் விளைவும் எதிர்மாறாகவே இருக்கும்.

ஆனால், என்னதான் நாம் சொன்னாலும் இத்தகைய பிரமுகர் தெரிவுகளையே இன்றைய இலங்கை அரசியல் கட்சிகள் தமது முதல் நிலையாகக் கொள்கின்றன.

உதாரணம், சரத் பொன்சேகா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விவிக்கினேஸ்வரன்.

இந்த இரண்டுபேரும் எத்தகைய அரசியல் பாரம்பரியத்தையும் அரசியல் பங்களிப்பையும் கொண்டவர்களல்ல.

இருவருக்கும் இருந்த புகழ் அடையாளமே – பிரமுகர் அந்தஸ்தே – ஏனைய அரசியற் பங்களிப்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இவர்களை முன்னிலைப்படுத்தியது.

ரணில் உள்ளிட்ட நீண்ட அரசியல் பங்களிப்பாளர்களை விடவும் சரத் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜனாதிபதி வேட்பாளராக்கப்பட்டதும் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், சி.வீ.கே சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரைப் பின் தள்ளி விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டதும் இங்கே கவனம் கொள்ளப்பட வேண்டியது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ      போட்டியிட்டு வெற்றியடைந்தால்...?

அதைத் தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் எல்லாம் படையினரின் பிரசன்னம் அதிகரித்தே இருக்கும்.

இது போரின் பிரதிபலிப்பன்றி வேறில்லை. அதாவது யுத்த வெற்றி, அதன் நாயகர்களை அரசியல் தலைவர்களாக்குகிறது.

மாறாக இங்கே – தமிழ்த்தரப்பிலோ - யுத்தத் தோல்வி யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகளை ஒட்டாண்டிகளாக்குகிறது. யுத்தத்தில் – போராட்டத்தில் பங்களித்த மக்களை நிர்க்கதிக்குள்ளாக்குகிறது.

அங்கே (தெற்கில்) யுத்த வீரர்கள், வெற்றியின் நாயகர்களாக – வெற்றியின் பங்காளிகளாகக் கருதப்பட்டு அரசியலில் முதல்நிலைப் பாத்திரம் வழங்கப்படுகிறது.

இதற்காக அங்கே பெரும் விட்டுக்கொடுப்புகள் செய்யப்படுகின்றன. (ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல ரணில் உள்ளிட்ட தலைவர்கள் சரத்துக்காக விட்டுக்கொடுத்தனர். அதைப்போல கோத்தபாயவுக்கும் ஏனையவர்கள் விட்டுக்கொடுக்கும் சாத்தியமே உள்ளது).

இங்கோ போராடியவர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள். சந்தேகிக்கப்படுகிறார்கள். அவமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில்தான் கேர்ணல் ரட்ணப்பிரிய போன்றோருக்கான மதிப்பு தமிழ்ச் சனத்திடமே கிடைக்கிறது. அரசாங்கத் தரப்புக் கட்சிகளின் (ஐ,தே.க, சு.க போன்றவை) வடக்குக் கிழக்கில் செல்வாக்கு மெல்ல மெல்ல உயர்ந்து வருவதற்கான காரணமும் இதுவே.

பிரமுகர் அரசியல் என்பது எப்போதும் தவறானது, தகுதியற்றது.

மக்கள் விரோமானது என்பதே இதன் வெளிப்பாடாகும்.

சிங்களத் தலைவர்கள் என்னதான் விட்டுக் கொடுப்புகளைச் செய்து பிரபலங்களை தமது வெற்றிக்கான பீடங்களாக்கினாலும் நாட்டின் பிரச்சினைகளை அவர்களால் ஒரு போதுமே தீர்க்க முடியாது. வேண்டுமானால் தற்காலிக அதிகாரத்தைச் சுவைக்கலாம். நிரந்தர அமைதியை அல்ல.

இதையிட்டு இந்த நாட்டின் அமைதியைப் பற்றியும் நிரந்தர சமாதானத்தைப் பற்றியும் இனங்களுக்கிடையிலான சமத்துவத்தைப் பற்றியும் விடுதலை அரசியலைப்பற்றியும் சிந்திப்போர் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

கருணாகரன்

Comments