புது டில்லியின் கோழி முட்டை அம்மிக் கல்லையும் உடைக்குமாம்! | தினகரன் வாரமஞ்சரி

புது டில்லியின் கோழி முட்டை அம்மிக் கல்லையும் உடைக்குமாம்!

மூன்று முறை தமிழக முதல்வராக பணியாற்றியவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் அவரால் ஒரு சுதந்திரமாக, சுயமாக முடிவுகள் எடுக்கக்கூடிய, நீண்டகாலமாக பதவியில் இருக்கக் கூடிய முதல்வராக விளங்க முடியாமற் போனது. ஏனெனில் முதல் இரண்டு தடவைகளும் அம்மா பதவியில் இல்லாவிட்டாலும் சர்வ வல்லமையுடன் இருந்தார். மூன்றாவது தடவை, பன்னீரை இயக்குபவராக சர்வ வல்லமை கொண்ட ‘தியாகத் தலைவி’ சின்னம்மா பின்னால் இருந்தார். எனவே, வாய்ப்புகள் வந்த போதும் வாய்ப்பற்ற முதல்வராகவே அவர் பதவியில் இருக்க வேண்டியிருந்தது. இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற நிலையில்தான் அவர் பதவியை விட்டு விலகி, அம்மாவின் ஆன்மாவுடன் பேசப் போனார். அங்கு ‘ஆணை’ கிடைத்ததும், தர்மயுத்தத்துக்கு தயாரானார்.

தர்மயுத்தத்தைத் தொடர்ந்தால் வீதி மட்டுமே சொந்தமாகும் என்ற நிலையில்தான், அனுபவித்து பழகிய உடலும் மனசும் அனுபவிக்கவே துடிக்கும் என்பதுபோல, நரேந்திரமோடியின் புண்ணியத்தில், அப்போதுதான் சின்னம்மாவின் தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தார் பன்னீர் செல்வம். துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளைப் பெற்றார். தர்மயுத்தத்தை மூலைக்கு கடாசினார். ஆனாலும், எடப்பாடியை எப்படிக் கவிழ்த்து நாற்காலியைப் பிடிக்கலாம் என்ற சிந்தனையிலேயே பன்னீரும் அவர் குழுவினரும் இருப்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னெச்சரிக்கையுடன்தான் முதல்வராக தன் பணிகளை ஆற்றி வருகிறார். பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!

ஜெயலலிதா இந்த ஆட்சியை வலிமையான அரசாகவே அமைத்திருக்கிறார். ஆனால் அவரின் மறைவின் பின்னர், எதிர்பார்த்தபடியே கட்சி பிளவுண்டது உண்மையானாலும் மத்திய அரசின் ஆதரவுடன் மட்டுமே இந்த ஆட்சி நீடித்து வருகிறது என்பது பகிரங்க இரகசியம். மக்கள் விரும்பாத ஒரு ஆட்சி மத்திய அரசின் தயவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்கி வருவது, யார் எரிச்சலையும் விட பன்னீர்செல்வத்தின் எரிச்சலைத்தான் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஏனெனில், சரியான வாய்ப்புவரும்போது, எதிர்த் தரப்புகளுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்பது ஓ. பன்னீர்செல்வத்தின் திட்டம். தான் முதல்வராக இல்லாத ஒரு ஆட்சி இருந்தால் என்ன போனால் என்ன என்ற ரீதியாக அவர் எண்ணலாம்.

இவ் வகையில் எடப்பாடி அரசுக்குக் குடைச்சல் கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பாக இருந்ததே, 18 சட்டமன்ற உறுப்பினர் தகுதிநீக்கம் செய்தமைக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கு. இவ் வழக்கு கடந்த ஒன்பது மாதங்களாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது.

தீர்ப்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சாதகமாக வரக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என்பதே பரவலான எதிர்பார்ப்பாக இருக்க, விஷயம் தெரிந்த அரசியல் பார்வையாளர்கள் மட்டும், தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்த்தனர். ஏனெனில் எடப்பாடி அரசு, தீர்ப்பு வந்தால் என்ன செய்வது? என்று கவலைப்பட மாதிரித் தெரியவில்லை. அவசர ஆய்வுக் கூட்டம் கூட்டி நிலமைகளை ஆராயவும் இல்லை. எடப்பாடி தன் பாட்டில் இருந்தார். மேலும், மத்திய பா.ஜ.க அரசு, தமிழக ஆட்சி மேலும் ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் எனக் கருதுகிறது. ஏனெனில் அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தல். பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் வந்ததும் தமிழக அரசைக் கலைத்துவிட்டு மாநிலத் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தி விடலாம் என பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. ஆனால் எடப்பாடியால் 2021 வரை ஆட்சி செய்ய முடியும். தமிழக அரசைக் கலைத்துவிட்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தமிழகத் தேர்தலை சந்திப்பதே பா.ஜ.கவின் திட்டம். ஆனால் ஏற்கனவே மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் எடப்பாடி அரசுக்கு மக்கள் விரும்பி வாக்களிப்பார்களா என்ற கேள்வி இருந்தாலும் எடப்பாடிக்கு வேறு வழி கிடையாது. இவ்வளவு காலமாக தனியாக பாழ் கிணற்றில் விழுந்து கொண்டிருந்த தமிழக பா.ஜ.க., அடுத்த சட்ட மன்றத் தேர்தலில் அ.தி.மு.கவையும் இழுத்துக் கொண்டு கிணற்றில் குதிக்க முயல்கிறது என்று இதை எதிர்க்கட்சிகள் கிண்டல் அடிக்கவும் செய்கின்றன.

எனினும் ஆட்சி நீடிப்புக்கு மத்திய அரசே உதவி வருவதால், பா.ஜ.க எதைச் சொன்னாலும் கேட்க வேண்டிய நிலையில் எடப்பாடி உள்ளார்.

இப்படியான பின்னணியில் வைத்து, 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பைப் பார்க்கும்போது, இத் தீர்ப்பு அரசியல் பின்னணி கொண்டதா என்ற சந்தேகம் எழுவதாக சென்னை அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இவ் வழக்கை விசாரித்த இருவரில் ஒருவர் மூத்த நீதியரசர் எஸ்.எஸ். சுந்தர், சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லாது எனத் தீர்ப்பளித்துள்ளார். சபாநாயகரின் நடவடிக்கை விபரீதமானது, உள் நோக்கம் கொண்டது. இயற்கை நீதிக்கு மாறுபட்டது என்றெல்லாம் அவர் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரான இந்திரா பெனர்ஜி, சபாநாயகரின் அதிகாரத்தில் குறுக்கிடு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்பது போல ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இவ் விவகாரத்தில் ஒரு தீர்ப்பு வழங்குவது நன்றாக இருக்காது என்று அவர் கருதுவது போலவே தெரிகிறது.

எனவே, இரண்டு நீதியரசர்களும் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருப்பதால் இத்தீர்ப்பு ஸ்தம்பித்துப் போயுள்ளது. இதையடுத்து தலைமை நீதியரசர், இவ் வழக்கு விசாரணை மூன்றாவது நீதியரசரின் பார்வைக்கும் அவரது இறுதி முடிவுக்கும் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் என்ன தெரியவந்துள்ளது என்றால், சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவு மேலும் சில மாதங்களுக்குத் தொடரும் என்பதும் மேலும் ஆறுமாதம் முதல் ஒருவருட காலம்வரை எடப்பாடியின் அரசுக்கு ஆபத்து இல்லை என்பதுதான். அதாவது, மத்திய பா.ஜ.க ஆட்சி என்ன விரும்புகிறதோ, அது நீதிமன்றத் தீர்ப்பாக வந்திருக்கிறது. பா.ஜ.க அரசுக்கும், எடப்பாடியின் அரசுக்கும் உகந்த தீர்ப்பாகவும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் பெருவாரியான தமிழக வாக்காளர்களுக்கும் பாதகமான தீர்ப்பாகவும் இது அமைந்துள்ளது.

இந்த எம்.எல்.ஏ.மார் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்?

இப் 18பேரும் அ.தி.மு.க தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள். சின்னம்மா மற்றும் தினகரனின் ஆலோசனைப்படியே, பன்னீர் செல்வத்துக்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார்கள். ஆனால் எடப்பாடி, அதிகாரம் கைக்கு வந்ததும் மன்னார்க்குடி குடும்பத்தைக் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் அ.தி.மு.க பொதுக் குழுவைக் காட்டி, சசிகலாவையும் தினகரனையும் பதவி நீக்கம் செய்ததோடு, பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி, எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஒருங்கிணைப்பாளர்களாக பதவி ஏற்றுக் கொண்டார்கள். இது தொடர்பான வழக்கிலும் அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க தொடர்பான வழக்குகளில் அந்தக் கட்சிக்கும், அரசுக்கும் சாதகமாகவே தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தாம் முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டதும், தினகரனும் அவர் சார்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக ஆளுநரைச் சந்தித்தனர். தமக்கு இந்த அரசில் நம்பிக்கை இல்லை என்றும் எனவே தமிழக முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். பின்னர் கூடிய தமிழக சட்ட மன்றம் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொண்டது. ஏனெனில் இந்தப் 18 பேரும் அரசுக்கு எதிராக திரும்பிய நிலையில், எடப்பாடி அரசு தன் பெரும்பான்மையை இழந்துவிட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி தி.மு.க ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தால், அரசாங்கம் கவிழ்ந்துவிடுவது நிச்சயம். ஆகவே, இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றிவிடுவதற்கு, அவர்கள் கவர்னரை சந்தித்ததை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால் நகர்வு கச்சிதமாக அமையும் என்பது எடப்பாடியின் அரசியல் கணக்காக இருந்தது.

எனவே, ஒரு கட்சியில் இருந்தபடியே அக்கட்சி கொறடாவின் அனுமதியின்றி அரசுக்கு எதிரான ஒரு நகர்வை ஆளுநரிடம் மேற்கொண்டதாக ஒரு குற்றச்சாட்டை வடிவமைத்து சபாநாயகரிடம் பிரேரணையாக விடப்பட்டது. எடப்பாடிக்கு விசுவாசமான சபாநாயகரும் அதற்கு தயாராகவே இருந்தார். எனவே சபாநாயகர் தன் அதிகாரத்தைப் பாவித்து 18 தினகரன் சார்பு சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார். இது தொடர்பான வழக்கே ஒன்பது மாதங்களாக விசாரிக்கப்பட்டு தற்போது எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பும் வந்துள்ளது.

எடப்பாடியின் தீவிர எதிர்ப்பாளரும் தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பவருமான தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்த வாரம் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்தபோது சில கருத்துக்களைச் சொன்னார்.

தனக்கு இத் தீர்ப்பு அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தந்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தான் நம்பிக்கை இழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அவர், இது தொடர்பாக ஒரு முடிவைத் தான் நாளை எடுக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சட்ட சபைக்குள் நுழைய முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தான், தானே முன்வந்து பதவி துறக்கவிருப்பதாகவும், அப்போது ஏற்படும் வெற்றிடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ. ஒருவரை தெரிவு செய்து கொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதி காலியானதும் ஆறுமாத காலத்துக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படும்போது தினகரனின் அம்மா மக்கள் தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று புதிய சட்ட மன்ற உறுப்பினராக செல்வதே அவர் நோக்கமாகத் தெரிகிறது. ஏனைய 17 உறுப்பினர்களும் இந்த வழிமுறையை பின்பற்றுவார்களா, தெரியவில்லை.

இதே சமயம், தான் தலையிட விரும்பவில்லை என்று தீர்ப்பு வழங்கி ஒதுங்கிக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் இந்திரா பெனர்ஜிக்கு டில்லி உச்ச நீதிமன்ற நீதியரசராகும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வழக்கில் எடப்பாடி அரசுக்கு எதிராக தீர்ப்பு சொல்வதன் மூலம் அந்த வாய்ப்பை இழக்க விரும்பாதனாலேயே தன் தீர்ப்பை அவ்வாறு அமைத்திருக்க வேண்டும் என்ற ஒரு செய்தி சென்னை நீதிமன்ற வளாகங்களில் அடிபடுகிறது. ஏனெனில் ஏற்கனவே டில்லி உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெறுவதற்கு ஜோசப் என்ற நீதியரசருக்கு வாய்ப்பு கிடைத்தது. உச்ச நீதியரசராகத் தெரிவு செய்து அவரை சிபாரிசுடன் உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு மனு அனுப்பும் கொலிஜியம் என்ற நீதியரசர்களைக் கொண்ட குழு, ஜோசப்பின் பெயரைத் தெரிவு செய்திருந்தது. ஆனால் டில்லி சட்ட அமைச்சகம் அந்தத் தெரிவை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் மறு தெரிவுக்காக கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்துவிட்டது. ஏனெனில் மேகாலயா மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பான வழக்கில் நீதியரசர் ஜோசப் பா.ஜ.கவுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி இருந்தார். இவ்வாறு, ஒரு நீதியரசரின் தகுதிகளை மீறி அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவானவரா எதிரானவரா எனப்பார்த்து பதவி உயர்வு வழங்கும் அளவுக்கும், தீர்ப்புகளில் தலையீடு செய்யும் அளவுக்கும் பா.ஜ.க. அரசு, நீதித்துறையில் நுழைந்து அதிகாரம் செய்வதால், இவ்வாறான ஒரு முடிவுக்கு நீதியரசர் இந்திரா பெனர்ஜி வந்திருக்கலாம் என்ற ஒரு வாதமும் உள்ளது.

இனி, மூன்றாவது நீதியரசரைத் தெரிவு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க மூன்று மாதங்கள் எடுக்கும். அவர், எழுத்து மூல ஆவணங்களைப் பார்வையிடுவாரா அல்லது நேர் விசாரணைகளை மேற்கொள்வாரா என்று தெரியவில்லை. தெரிவு செய்யப்படும் அந்த மூன்றாவது நீதியரசர் பா.ஜ.க விசுவாசியா அல்லது ‘மேலிடம்’ சொல்வதைச் செய்யக் கூடியவரா என்பதும் முக்கியம். எனவே தீர்ப்பு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் எடுக்கலாம்.

சரி, பழையபடி முதல் பந்திக்கே வருவோம். மூன்று முறை முதல்வர் பதவி வகித்தும் சுதந்திரமாக இயங்கும் நீடித்து நிலைத்த முதல்வர் என்ற பெயர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கிடைக்கவில்லை. எங்கோ ஒரு மூலையில் கிடந்த எடப்பாடி, தடைகளை எல்லாம் தாண்டி முதல்வராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஈ.பி.எஸ்ஸா, ஓ.பி.எஸ்ஸா என்றால் நரேந்திரமோடியின் முதல் தெரிவு எடப்பாடி அல்ல. ஆனால், முதல்வராக எடப்பாடி நீடித்துக் கொண்டிருப்பதை எடப்பாடி மந்திரம் என்பதா மோடி மந்திரம் என்பதா?

அருள் சத்தியநாதன்

[email protected]

Comments