அத்தியாவசிய சேவையாக அறிவித்தாலும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் | தினகரன் வாரமஞ்சரி

அத்தியாவசிய சேவையாக அறிவித்தாலும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும்

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப் போவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தமக்குத் தீர்வு வழங்கப்படும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தபால் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணியின் பேச்சாளர் கே.எம். சிந்தக்க பண்டார நேற்று தெரிவித்தார்.

தபால் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் அவை எதுவும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க ஏதுவாக அமையாததாலேயே தீவிர போராட்டத்தில் நாம் ஈடுபட்டோம்.

தபால் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் தபால் சேவைகள் அமைச்சரின் கையெழுத்துடனான அமைச்சரவை பத்திரம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

எமது தொழிற்கங்கம் முன் வைத்த பிரச்சினைக்கான தீர்வை 2 வாரங்களுக்குள் தருவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும் அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாமல் வெறும் அரசியல் வாக்குறுதியாகிவிட்டது.

அதன் பின்னர் தற்போது முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 01 ஆம் திகதியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டோம். 5 நிமிடங்களே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிலும் இருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு இன்றுடன் அந்த இரண்டு வாரமும் நிறைவடைந்துள்ளது. எனவே தபால் நிர்வாகத்தினராலும் அரசியல் அதிகாரங்களாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறோம் என்பதை வருத்தத்துடனாவது கூற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இப்போது வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தையூடாக கடமைக்கு திரும்புமாறு தபால்மா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 7 தினங்கள் கடந்துவிட்ட நிலையில் எம்மை பேச்சுவார்த்தைக்கு வருமாறு எவரும் அழைக்கவில்லை. அதிலும் மேலும் ஒரு மாத காலத்துள் தீர்வு வழங்குவதாக தபால் மாஅதிபர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இவை எதனையும் நாம் நம்பத் தயாரில்லை. தபால் மாஅதிபர் தபால் சேவைகள் அமைச்சர், அமைச்சின் செயலாளர் அனைவருமே எம்மை ஏமாற்றுவதாகவே எண்ணுகிறோம். இனியும் நாம் ஏமாறத்தயாரில்லை. இதுதான் தீர்வு, என எமது பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் வரை எமது வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிடப்போவதில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் நட்டமடைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இனியும் இவ்வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் நட்டமடையும் தொகை மேலும் அகிகரிக்கலாம். எனவே தபால் திணைக்கள நிர்வாகமும் அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் என்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்ணணியின் பேச்சாளர் கே.எம. சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக் கிழமை அல்லது நாளை திங்கட் கிழமையாவது தபால் ஊழியர்கள் எவரும் வேலைக்கு வரவில்லையென்றால் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி தபால் சேவையை அத்தியாவிசய சேவையாக பிரகடனப்படுத்தப் போவதாக அமைச்சு அறிவித்துள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என அவரிடம் கேட்டபோது;

தபால் சேவை என்பதே அத்தியாவசிய சேவைதான். இருந்தாலும் அரசு அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தினாலும் எமது முடிவில் மாற்றமில்லை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Comments