வைரவர் மலை நரபலியை நிறுத்திய கண்டி மன்னர் | தினகரன் வாரமஞ்சரி

வைரவர் மலை நரபலியை நிறுத்திய கண்டி மன்னர்

(​சென்றவார தொடர்)

ஆங்கிலேயரின் கைதியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், கப்பல் தலைவன் வில்லியம் கிரென்வில்லின் மேல்தள அறைக்கு வரும்போதெல்லாம் பொன்னிற கரைகொண்ட வெள்ளை வேட்டியை அணிந்து காணப்பட்டான். கிரென்வில் தனது குறிப்பில் இதனை முஸ்லிம் வேட்டியென குறிப்பிட்டுள்ளான். எனினும் அதை திராவிட கலாசாரத்தின் அடையாளமாகவே கருதலாம். அணிந்திருந்த மேலாடை முழங்காலளவு உயரம் கொண்டதாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரென்வில்லின் குறிப்பின் பிரகாரம், மன்னன் கொழும்பில் இருந்து புறப்படும் போதும் மதராஸ் கரையேறிய போதும் மாத்திரமே வித்தியாசமான உடையுடன் காணப்பட்டானாம்.

‘செங்கடகல புர’ வெனவும் ‘சிங்ஹலே’ எனவும் சிங்கள மக்கள் பெருமை கொண்ட இராசதானியாகிய கண்டி இராச்சியத்தின் அரியணையில் அமர்ந்து அளப்பரிய பௌத்த சமய, சிங்கள மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காகவும் கண்டி மாநகரம் உட்பட தமது இராசதானியை அழகாபுரியாக பரிணமிக்கச் செய்வதிலும் ஸ்ரீவிஜய இராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன், இராஜாதி இராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆகிய நாயக்கர் வம்சத்து மன்னர்கள் ஆற்றிய பணிகள் வேறெந்த மன்னராலும் மேற்கொள்ளப்படாத பெரும்பணிகளாகும்.

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக படை நடத்தியவன் எனவும் கண்டி மண்ணிலிருந்து வெள்ளையரை விரட்டியடித்தான் என்பதும் வரலாறு. எனினும் மண்ணாசை காரணமாக கண்டி குடிமக்கள் மத்தியில் பேரினவாதத்தை விதைத்து நாயக்கர்களை வெளியேற்ற முயற்சித்தவர்கள். ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் மூர்க்கத் தனமானவன் மற்றும் மதுவுக்கு அடிமையாகி தவறான தீர்ப்புகளை வழங்கியவனெனவும் செய்திகள் பரப்பப் பட்டன. எனினும், தனது நீதி விசாரணை மன்றத்தின் முடிவுக்கமைவாகவே இராஜசிங்கனின் தீர்ப்புகள் அமைந்திருந்ததாகவும் பல வரலாற்றாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இரக்க சுபாவம் கொண்டவனாக இம்மன்னன் விளங்கியதாகவும், கூறப்படுகின்றது.

கண்டி இராசதானியில் வருடாந்தம் நிகழ்ந்து வந்த நரபலி பூஜையின் காரணமாக ஆண்டுதோறும் ஓர் அழகிய இளம்பெண்ணின் உயிர் பலிகொள்ளப்பட்டு வந்துள்ளது. இக்கொடுமையான நரபலிக்கு முற்றுப்புள்ளி வைத்து பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளித்தவன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனே என்ற உண்மை குறித்து கண்டி இராசதானி பற்றிய படைப்புகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

மகாவம்சம் முதற்கொண்டு முரண்பாடான தகவல்களை வழங்கியுள்ள வரலாற்று நூல்கள் கூட, கண்டி நரபலி பூஜை தொடர்பாக எழுதும்போது இக்கொடும் பலியை நிறுத்துவதுற்கான அரச கட்டளையைப் பிறப்பித்தவன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனே என்பதில் முரண்படவில்லை.

கண்டியின் பூர்வீக பிரபுக்கள் பரம்பரையொன்றின் வழித்தோன்றலும் பல்வேறு வரலாற்றுக் கதைகள், கவிதைகள் எனப் படைத்துள்ளவருமான திஸ்ஸ மாலகம, தமது ‘கண்டி இராசதானியின் இலைமறை வீரர்கள்’ என்னும் சிங்கள நூலில் மேற்படி நரபலியின் முடிவு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

‘கண்டி இராச்சியத்தின் ஆரம்பகாலம் முதல் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் தென்னிந்தியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையே மணந்து கொண்டனர். இதன் காரணமாக தென்னிந்திய உறவுகளும், மத, கலாசார, பழக்க வழக்கங்களும் அரச அனுசரணையுடன் இங்கு வியாபிக்கலாயின. இதன் காரணமாக இந்திய யாக பூஜைகள், சாந்தி கருமங்கள், பலி பூஜைகள் என்பனவும் மத்திய மலை நாட்டில் பௌத்த மதத்தைக் கடைப்பிடித்த மக்கள் மத்தியில் வேரூன்றின. இதனால் இந்தியாவும் இலங்கையும் கலாசார மத அனுட்டானங்களில் ஒற்றுமை பாவத்தை கொண்டிருந்தன.

கிழக்குத் திசையில் உடவத்தை வனமும் கீழ் திசையில் பகிரவ கந்த் என்னும் வைரவர் மலையும் இயற்கை அரண்களாகவும், சிறந்த சுவாத்திய வளமாகவும் கண்டிக்கு அமைந்தன. இன்று சாந்த சொரூபியாக கௌதம புத்தபகவானின் அழகிய சிலை பல மைல்தூரத்திற்கு தெரியும் வண்ணம் எழுந்தருளியுள்ள பைரவர் மலை, அன்று அடர்ந்த காட்டுப் பிரதேசமாக இருந்தது. இம்மலையுச்சியில் காணப்படும் சமவெளியில் ‘அஹஸ் பொக்குன’ (ஆகாய தடாகம்) என்னும் இயற்கை நீர்நிலையொன்றும் காணப்பட்டது.

சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாகிய ‘பகிரவயா’ (வைரவர்) என்னும் தெய்வம் குடியிருந்த கோவில் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும் இத்தெய்வம் உயிர்ப்பலி எடுக்கும் அவதாரமாக கருதப்பட்டதாகவும் திஸ்ஸ மாலகம கூறுகிறார். இவ் வைரவர் கோவில் அமைந்தமையினால் வைரவர் மலையென தொன்று தொட்டு இம்மலை அழைக்கப்பட்டு வருகின்றது.

தமது இராசதானியில் ஏற்படும் வறட்சி, பஞ்சம், மகாமாரி முதலான தொற்றுவியாதிகள் என்பன கலைந்து மாதம் மும்தாரி பொழிந்து நெல்லும் வயலும் சிறக்கவும் வைரவர் கடவுளை வேண்டி யாகங்களை நடத்தி இரத்த பலியினால் வைரவர் மனம் குளிரவைப்பதும் வருடாந்த சம்பிரதாயங்களாகின.

வைரவர் மலையுச்சியிலிருந்து எவரும் எதிர்பார்த்திராத ஓர் இராப்பொழுதில் செவிப்பறைகளைக் கிழிக்கும் வண்ணம் எழும் பயங்கர ஊ சத்தம், மக்களைக் சிலிகொள்ளச் செய்யும். இதன் பின்னர் ஒரு வார காலத்தில் வரும் அமாவாசை தினத்தில் வைரவருக்கு பூஜையும் கன்னியொருத்தியை பலி கொடுப்பதும் நிகழ்வது வழக்கம். இப் பூஜை மற்றும் பலிகொடுத்தலுக்கான முன்னறிவிப்பாகவே மலையுச்சியிலிருந்து ஒலி எடுப்பப்படும்.

பயங்கரமாக எழும் அந்த ஓசையைத் தொடர்ந்து அந்த வருட வைரவருக்கான பலியாக தெரிவுசெய்யப்பட்டவள் பதினாறு வயது நிரம்பிய பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றம் கொண்ட வெலிகல ரன்மெனிக்கா என்னும் கன்னிப் பெண்ணாகும். அப்பாவித் தனமான குணாதிசயங்களைக் கொண்ட இவ்வழகி எதிர்கால கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு தாம் விரும்பும் இளைஞன் பற்றிய சிந்தனை வயப்பட்டவளாயிருந்தாள். இவளது மனம் கவர்ந்த இளைஞன் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ஓர் ஊழியனாகும். இவனால் செய்யப்பட்டதாகத் கூறப்பட்ட ஒரு சிறு குற்றத்திற்குத் தண்டனையாக அரண்மனை வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கட்டுகஸ்தோட்டைக்கு அப்பால் உள்ள ‘பத்தம்மக’ பிரதேசத்திற்குக் ஊர்க் கடத்தப்பட்டான்.

தற்போது அரச விதைநெல் மற்றும் விதைக் களஞ்சியம் அமைந்துள்ள ‘பத்திகே’ எனப்படும் இடமே அவன் பணிபுரிந்த இடமாகும். ரன்மெனிக்கா இம்முறை நரபலிக்கு தெரிவாகியுள்ளமை இராசதானியெங்கும் காட்டுத் தீயாக பரவியது. தொலைவிடத்தில் குடியமர்த்தப்பட்டிருந்த இளைஞனும் இந் தகவல் அறிந்தான் உயிரைப் பணயம் வைத்தாவது ரன்மெனிக்காவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக திடசங்கற்பம் பூண்டான்.

அமாவாசை உதயமாகியது. பெறுமதி வாய்ந்த பட்டுப்புடவைகளினாலும் தங்கம் பொன் ஆரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டாள் யுவதி ரன் மெனிக்கா. அலங்கார ஊர்வலமொன்றின் மூலம் கண்டி நகரவீதிகளில் அழைத்துவரப்பட்ட ரன்மெனிக்கா புரோகிதர்கள் சகிதம் வைரவர் மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வைரவர் கோவில் மூலஸ்தானத்தில் பெருந்தொகையான பலகாரங்களும், பழவகைகளும், வைரவருக்காக படைக்கப்பட்டிருந்தன. பூஜைகளை புரோகிதர்கள் உச்சஸ்தாயில் மேற்கொண்டனர். கடவுளுக்கு படைக்கப்பட்ட அனைத்து படையல்களையும், வழிபாடுகளையும் நள்ளிரவில் நிகழவிருக்கும் கன்னிகா தானத்தையும் ஏற்று கண்டி இராச்சியத்தில் சகல துன்பங்கள் தொல்லைகள் அனைத்தையும் போக்கி மக்களும் மன்னரும் சேமமாக நல்வாழ்வு வாழ வேண்டுமென வேண்டினர்.

நெய்வேத்தியங்களைப் படைத்தும் ஹோமம் வளர்த்தும் பூஜைகள் நிறைவுற்றன. அலங்கார சொரூபியாகக் காட்சியளிக்கும் ரன்மெனிக்காவை ஆகாய தடாகத்தின் அருகில் உள்ள ‘முகரைவீங்கி’ (ருக் அத்தன) மரத்தோடு சேர்த்துக் கட்டினர் பூசாரிகள். இவ்வளவு நேரமாக கிழக்கில் தோன்றி மேற்குவரை சஞ்சரித்த களைப்பில் சூரியனும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான். இருளை காரிருளாக்கியது அமாவாசை இருட்டு. வாள்கொண்டு வெட்டி எடுக்கத் தோன்றுமளவுக்கு அவ்விருள் கனத்து காணப்பட்டது. பைரவர் கோவிலில் சூழ்ந்திருந்த கூட்டம் கலைந்து சென்றது. காரிருளும் ரன்மெனிக்காவும் அந்த அடர்ந்த காட்டுக்குள் தனித்து விடப்பட்டனர். ஆந்தைகளும் கோட்டான்களும் ஊளையிட்டன. பயத்தினால் வெடவெடத்துப்போன அப்பாவிப் பெண் அபயக்குரல் எழுப்பினாள். கதறியழுதாள் சில விநாடிகளில் அரண்மனை வளாகத்திலிருந்து எழுப்பப்பட்ட முரசொலி கண்டி மாநகரை உலுக்கியது. இது “தஹனம் பெரய” எனப் பெயர் கொண்ட தடையுத்தரவு பிறப்பிக்கும் அறிவித்தலாகும். இம் முரசொலிக்குப் பின்னர் எவரும் வீடுகளிலிருந்து வெளியில் வருவது தடைசெய்யப்பட்டுவிடும்.

காரிருளும் தடையுத்தரவும் கண்டியை மயான அமைதிக்குள்ளாக்கியிருந்த வேளையில் துனுவில இளைஞன் மாத்திரம் கூராயுதமொன்றைக் கையிலெடுத்தவனாக மகாவலிநதியைக் கடந்து ‘கொஹோ தொட்ட்’ என்னும் இடத்தில் கரையேறி வைரவர் மலையை நோக்கி காட்டுக்குள் கற்களிலும் புதர்களிலும் குண்டுகுழிகளிலும் கால்பதித்து ஏறிக்கொண்டிருந்தான்.

நள்ளிரவு நெருங்கியிருந்தது. காட்டு மிருகங்களினதும் இராப் பறவையினங்களின் கூச்சல்களும், மலையுச்சியில் வீசும் கணத்த காற்றின் குளிரும் அவளை பீதிக்குள்ளாக்கியது. இன்னும் சற்று நேரத்தில் தனக்கேற்படப்போகும் முடிவையும் எண்ணி பயத்தினால் நிலை குலைந்த ரன்மெனிக்கா நிர்க்கதியாய் புலம்பினாள்.

மலையுச்சியை அடைந்துவிட்ட போது வைரவர் கோவில் வளாகத்திலிருந்து எழும் ‘ஊ’ சத்தம் அவனது செவிகளைச் செவிடாக்கியது. அந்த ஒலி, வைரவர் தமக்குப் படைக்கப்பட்ட நரபலியை ஏற்றக்கொள்வதற்கு ஆயத்தமாவமதாகவும் அப்பெண்ணை நெருங்கிவிட்டதாகவும் அறிவிக்கும் முதல் ஓசையாகும். கண்டி நகரவாசிகளும், அரசர்முதல் அனைவரும் வைரவர் தமக்களிக்கப்பட்ட படையலை ஏற்றுக் கொள்ளப் போவதை அதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

(தொடர் 27ஆம் பக்கம்)

-சி.கே. முருகேசு

Comments