தொலைபேசியும் தொல்லைப்பேசியும்! | தினகரன் வாரமஞ்சரி

தொலைபேசியும் தொல்லைப்பேசியும்!

முன்பெல்லாம் வீட்டிலை 'லேண்ட் போன்' (தொலைபேசி) இருக்கிறதெண்டால், அவங்க பெரிய ஆள். இப்ப சிறியவங்களுக்கும் போன் கையிலை வந்திட்டுது. அதாவது கைப்பேசி. இதை அலைபேசி என்று சொல்வதுதான் சரி. தொலைவில் இருந்து கம்பி வடத்திலை வாறது தொலைபேசி, அலை மூலம் வருவது அலைபேசி! சரிதானே?

இந்த அலைபேசி இப்பவெல்லாம் இருந்தாலும் பிரச்சினை, இல்லாட்டிலும் பிரச்சினை. அநேகமானவங்களுக்குக் கை உடைஞ்ச மாதிரி என்று சொல்வாங்க. யாருக்கும் கோல் எடுக்க வேண்டும் என்பதைவிடவும் யாராவது கோல் எடுப்பார்கள், ஏதாவது தகவல் வரும் என்பதற்காகத் தமது போன் எந்நேரமும் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆக, நாம் போன் பாவிப்பது நமக்காக அன்றி மற்றவர்கள் நம்மைத் தொடர்புகொள்வதற்கு வசதியாக என்று வைத்துக்ெகாள்வோமே!

சிலபேர் தங்களுடைய இலக்கம் இதுதான் என்று எழுதிக்ெகாடுப்பார்கள்; அல்லது விசிற்றிங் கார்டைக் கொடுப்பார்கள். கோல் எடுத்தால் பதில் பேசமாட்டார்கள்; அல்லது போன் வேலை செய்யாது. கேட்டால், நான் பார்க்கல, எடுத்தீங்களா? உங்க நம்பர் வரலையே என்று சொல்வார்கள். ஒருவருடைய பொறுப்பான நடத்தையை, தொலைபேசிக்குப் பதில் அளிப்பதிலிருந்தே கணித்துவிட முடியும்.

பொறுப்பு வாய்ந்த பணியில் உள்ள ஒருவருக்கு நாம் பொழுதுபோக்கிற்காகவா அழைப்பை எடுப்போம்? அழைத்த நேரத்தில் பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தால், அவர் போனை பார்க்கின்றபோது, மிஸ்ட் கோலைப் பார்த்துவிட்டு அழைக்க வேண்டும் அல்லவா! எல்லா மிஸ்ட் கோல்களுக்கும் அழைக்க வேண்டியதில்லை. தன்னுடைய தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கும் நபர் முக்கியவரென்றால், திருப்பியழைத்துக் கதைப்பதுதானே ஒரு பொறுப்பான நபருக்கு அழகு? என்று என்னைக் கேட்கிறார் நண்பர்.

ஏன், என்ன பிரச்சினை? என்று கேட்டால், ஓர் ஆபத்திற்குக் கோல் எடுத்தால், பதில் அளிக்கமாட்டார்கள். கோல் எடுத்த பல மணி நேரத்திற்குப் பின்னர் (அரைநாள் சென்றதன் பிறகு) நீங்கள் கோல் எடுத்தீர்களா? என்று கேட்கிறார். அப்போது அந்த அழைப்பு நமக்குத் தேவையா? என்று என்னைத் திருப்பிக் கேட்கிறார்.

எனக்கும் இப்படி நடந்திருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தினை பொரளையிலிருந்து காலி வீதிக்குக் கொண்டுபோனபோது, நண்பர் ஒருவர் காலை வேளையில் அழைத்தார். அந்த அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? என்று கேட்டார். முகவரி எனக்கும் தெரியாது. பார்த்துச் சொல்கிறேன், என்று சொல்லிவிட்டு, ஒரு நண்பருக்கு அழைத்தேன். அவர் செய்தியோடு புளங்குபவர். காலை 8 மணியிருக்கும் பதில் வரவில்லை. பின்னர் வேறு ஒரு நண்பருக்கு அழைத்து முகவரியைச் சரியாகத் தெரிந்துகொண்டு அந்த நண்பருக்குக் கொடுத்துவிட்டேன். பிறகு முற்பகல் 11.30 அளவில் நான் கோல் எடுத்த நண்பர் என்னை அழைத்தார். நான் கேட்ட முதல் கேள்வி, இப்போதுதான் போனைப் பார்த்தீர்களா? இப்போது உங்கள் அழைப்பு எனக்குத் தேவையில்லை என்று துண்டித்துவிட்டேன். ஒரு பொறுப்பானவராக இருந்திருந்தால், ஒன்று குறுஞ்செய்தியையாவது அனுப்பியிருக்கலாம்.

சரி, இது நண்பர்கள், தெரிந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது கோபப்பட்டுக்ெகாள்கிறோம். பதில் அளிக்கவில்லை என்பது நமது பிரச்சினை. பதில் அளித்தும் நம்மை தொடர்பில் வைத்துக்ெகாண்டு நேரத்தை வீணடிப்பவர்களை என்ன செய்வது? அஃது ஆர்? வேறு யார், அரச உத்தியோகத்தர்கள்தான்.

தொலைபேசி கடுந்தொல்லைப்பேசியாகிப்போய்விட்டது என்றது இவர்களுக்காகத்தான். ஓர் அரச அலுவலகத்தில் நமது அலுவலைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு அழைப்பை எடுத்தால், இவர் அவருக்கு மாற்ற; அவர் உவருக்கு மாற்ற; இப்படி எல்லோரும் தொடர்பினை மாற்றிக்ெகாண்டிருக்கிறார்களே தவிர விடயம் நடந்தபாடில்லை.

அரச அலுவலகங்களில் பொது மக்கள் தமது அலுவலை நிறைவேற்றிக்ெகாள்வதற்காகவென்று அவசர தொலைபேசி இலக்கங்களை வழங்கியிருக்கிறார்கள். உதாரணமாக 119 என்ற அவசர பொலிஸ் சேவைக்கு அழைத்தால், உடனே பதில் அளித்துச் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து நடவடிக்ைக எடுப்பார்கள். அதுபோல் வழங்கப்பட்டுள்ள ஏனைய அரச சில நிறுவனங்களின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தால், உரிய பதில் வழங்கப்படுவதில்லை.

அழைப்பவரின் தொடர்பினை வேறு வேறு உத்தியோகத்தர்களுக்கு மாற்றுகிறார்களே தவிர உரிய தீர்வை வழங்குகிறார்கள் இல்லை. அழைப்பவருக்குத் தொலைபேசி கட்டணம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் கொடுமை அண்மையிலை ஒரு நண்பருக்கு நடந்திருக்கு. அவர் நுகர்வோர் அதிகார சபைக்கு ஓர் அவசரத்திற்குக் கோல் எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஓர் அறிவிப்பே திரும்பத் திரும்ப, வடிவேலுவின் பஞ்சாயத்து மாதிரி ஒலித்துக்ெகாண்டிருந்துள்ளது. இப்படி பல அலுவலகங்கள். அவற்றில் பணியாற்றுவதற்குப் பலரைச் சம்பளம் கொடுத்து அரசாங்கம் நியமித்திருந்தும் பயனில்லை என்றால் எப்படி?

Comments