குடும்பத்தை சொந்தம் கொண்டாடுபவராக தந்தைமார் இருக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

குடும்பத்தை சொந்தம் கொண்டாடுபவராக தந்தைமார் இருக்க வேண்டும்

இன்று தந்தையர் தினம்

தந்தையர் தினம் அன்னையர் தினம் என்பவற்றை பெருந்தோட்டப் பகுதியில் அறிமுகப்படுத்தி அவற்றை நமது சூழலுக்கேற்ற வகையில் கொண்டாடும் வழக்கத்தை பிரிடோ ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வுகளை பிரிடோ பணித்தளங்களில் மக்களாகவே கொண்டாடும் அளவிற்கு மாறியுள்ளன. இம்முறை 'தாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் தந்தையர் தினத்தை கொண்டாட பிரிடோ தீர்மானித்துள்ளது.

இறைவனை தந்தையாக பார்க்கும் கலாசாரம் எல்லா சமூகங்களிலும் காணப்படுகிறது. இதனால் தந்தையை அப்பா, அப்பன் என்றெல்லாம் அழைக்கிறோம். இறைவனை குறிக்கவும் எல்லா மதங்களும் இந்த பதங்களையே பயன்படுத்துகின்றன. அந்த வகையில் தந்தை என்பவர் உயிரை உருவாக்குபவர், தாங்குபவர், பாதுகாப்பவர், போஷிப்பவர், வழிநடத்துபவர், திருத்துபவர் என பல்வேறு அர்த்தங்களை கொண்டதாகும். இறைவனை போலவே ஒவ்வொரு குடும்பத்திலும் தந்தை குடும்பத்தை அன்பு செய்து, பாதுகாத்து போஷித்து வழிநடத்தி குடும்பத்தை முன்னேற்றுகிறார்.

ஆனால் சமூகமானது குடும்பத்தில் அன்னையருக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. அன்னையர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்னையைப் போலவே தந்தையும் அன்னைக்கு இணையாக குடும்பத்திற்காக தியாகங்களை செய்கிறார். குடும்பம் முன்னேற வேண்டும், பிள்ளைகள் தன்னை விட உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என கனவு காண்கிறார். தன்னலம் பாராது உழைக்கிறார் என்ற கருத்து வலியுறுத்தப்படுவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை இடுப்பில் தூக்கிவைத்திருப்பது தனது இதயத்துக்கு அருகில் பிள்ளையை வைத்து அன்பு செய்வதன் அடையாளம் என கூறப்படும் அதேவேளை, தந்தை தனது பிள்ளையை தோளில் தூக்கி சுமப்பதற்கு காரணம் அவர் தனது மூளையின் அருகில் பிள்ளையை தூக்கிவைத்து பிள்ளை தன்னைவிட கல்வியில், அறிவில், சமூக அந்தஸ்தில், பொருளாதாரத்தில் உயர்ந்தவராக, உயர்ந்தவளாக இருக்க வேண்டும் என அர்த்தம் கூறப்படுகிறது.

அனேகமான இடங்களில் தந்தைமார் உயிராபத்துகளுக்கு மத்தியில் தமது குடும்ப நலனுக்காக உயிரைப் பணயம் வைத்து உழைக்கிறார்கள். தமது குடும்பத்திற்காக அவர்கள் செய்யும் தியாகம் தாய் செய்யும் தியாகத்தை போலவே பெரியது. இதைப்போலவே இவ்வாறு ஆபத்து இல்லாவிட்டாலும் கூட எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் தந்தையர் தமது குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். ஆனால் அன்னையைப் போல தந்தையை சமூகம் கெளரவப்படுத்துவதில்லை.

ஒரு குடும்பத்தின் இரண்டு தூண்களாக இருப்பவர்கள் அன்னையும் தந்தையுமாவர். இருவருக்கும் வெவ்வேறு பொறுப்புக்களும், கடமைகளும் இருப்பினும் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே குடும்பத்தை பாதுகாக்கவும் முன்னேற்றவும் முடியும். பிள்ளைகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்க்க முடியும்.

அமெரிக்காவில் சிவில் யுத்தகாலத்தில் ஒரு குடும்பத்தில் அன்னை எதிர்பாராமல் இறந்தபோது

பல சிரமங்களுக்கு மத்தியில் நான்கு பெண், ஒரு ஆண் என ஐந்து பிள்ளைகளையும் தாயில்லாத குறை தெரியாமல் ஆளாக்கி வளர்த்துவிட்ட தந்தையை கெளரவிப்பதற்காக அத்தந்தையின் பிள்ளைகளால் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. தந்தையர் தினம் இவ்வாறே ஆரம்பமானதாக சொல்லப்பட்டது. அன்றும் இன்றும் தந்தையர் தாயைப்போலவே தங்கள் குடும்பத்திற்காக உழைப்பது உட்பட பல தியாகங்களைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான தாய்மார் தமது பிள்ளைகள் மத்தியில் தந்தையை அதிகாரம் செலுத்துபவராக, பயப்பட வேண்டியவராக, கண்டிப்பானவராகவே காட்டுகின்றனர். தந்தைமாரும் இந்தச் சூழலுக்கேற்றவாறு தம்மை அவ்வாறு காட்டிக்கொள்வதே நல்லதென நினைக்கிறார்கள். அப்படியே நடந்து கொள்கிறார்கள். இதனால் தந்தையை அன்பின் உருவமாக, தியாகத்தின் உருவமாக பிள்ளைகளால் பார்க்க முடிவதில்லை.

இவ்வாறு சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பெற்றோரை விசேடமாக தந்தையை மதிக்கும் சரியான விழுமியங்கள் கொடுக்கப்படாமையால் பிள்ளைகள் மத்தியில் தந்தையை பற்றிய ஒரு எதிர்மறையான மனநிலை உருவாக்கப்படுகிறது. பொதுவாக எல்லா இடங்களிலும் விசேடமாக பெருந்தோட்ட பகுதிகளில் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்த பின்னர் தாய் தந்தையரை மதிப்பதில்லை என்றும் விசேடமாக தந்தையரின் வழிகாட்டலை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் குறை கூறப்படுகிறது. பல தந்தைமார் தங்கள் பிள்ளைகள் குறித்து மனமுடைந்த நிலையிலேயே இருக்கின்றனர். குடும்பத்தில் தந்தையரை பிள்ளைகள் மதிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பெற்றோரை மதிக்கும் விசேடமாக தந்தையை மதிக்கும் சரியான விழுமியங்கள் கொடுக்கப்படாமையே ஆகும்.

இதேவேளையில் தந்தையின் முக்கியமான பண்பு சொந்தம் கொண்டாடுதலாக (ownership) இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்தியலாகும். ஒரு தந்தை தனது குடும்பத்தை சொந்தம் கொண்டாடுபவராக இருக்க வேண்டும். அவ்வாறு சொந்தம் கொண்டாடுதலை ஆகக்குறைந்தது மூன்று முக்கியமான வகைகளில் அவர் வெளிக்காட்ட வேண்டும். அன்புசெய்தல், பாதுகாத்தல், முன்னேற்றுதல் அல்லது அபிவிருத்தியடையச் செய்தல் என்பன முக்கிய வழிமுறைகளாகும். ஒரு தந்தை தனது குடும்பத்தை சொந்தம் கொண்டாடும்போது அவர் குடும்பத்தை அன்பு செய்கிறார். அதனால் குடும்பத்திற்காக உழைக்கிறார், கஷ்டங்களை அனுவிக்கிறார், தாங்குகிறார் விட்டுக்கொடுக்கிறார்.

அடுத்ததாக குடும்பத்தை சொந்தம் கொண்டாடுவதால் குடும்பத்தை பாதுகாக்கிறார். குடும்ப கெளரவத்தை பெரிதாக நினைக்கிறார். குடும்ப அங்கத்தவர்களை பாதுகாக்கிறார்.

மூன்றாவதாக ஒரு தந்தை தனது குடும்பத்தை சொந்தம் கொண்டாடும்போது குடும்பத்தை முன்னேற்றுகிறார். குடும்ப முன்னேற்றத்திற்காக பிள்ளைகளின் எதிர்கால அபிவிருத்திக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். தனது சொந்த நலன்களுக்கு பதிலாக குடும்ப நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இதன் விளைவாக தனது குடும்பத்தை சொந்தம் கொண்டாடும் ஒரு தந்தை எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொறுப்புள்ளவராக நடந்து கொள்கிறார், குடும்பம் முன்னேறுகிறது.

இதற்கு மாறாக ஒரு தந்தை தனது குடும்பத்திற்கு சொந்தம் கொண்டாடாமல் விட்டால் என்ன நடக்கும்? அவருடன் சொந்தம் கொண்டாடும் ஒருவரிடம் இருக்க வேண்டிய இந்த மூன்று பண்புகளைக் காணமுடியாது. தனது குடும்பத்தை சொந்தம் கொண்டாடாதவர் குடும்பத்தை அன்பு செய்ய மாட்டார். தனது உழைப்பை மதுவில் செலவிடுவார்.

குடும்பத்திற்காக தியாகங்கள் செய்ய முன்வரமாட்டார். சொந்த நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். அடுத்ததாக தனது குடும்பத்தை பாதுகாக்கும் பண்பு அவரிடம் இருக்காது. குடும்ப கெளரவத்தை பற்றி கவலைப்படமாட்டார். தவறான உறவுகளை வளர்த்துக் கொள்வார். பிள்ளைகளயும், குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்வமும் அக்கறையும் அவரிடம் இருக்காது. குடும்பம் படிப்படியாக ஒரு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும். மூன்றாவதாக குடும்பத்தை சொந்தம் கொண்டாடுபவரிடம் தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் இருக்காது. குடும்ப முன்னேற்றம் என்பது வெறும் கல்வி, பொருள், சொத்துக்களினால் மட்டும் கணக்கிடும் முன்னேற்றமல்ல. அது ஒருவர் ஒருவரை கௌரவம் செய்து, ஒருவர் ஒருவரை தாங்கி ஒத்துழைத்து அனைவரும் ஒரு குடும்பமாக முன்னோக்கி செல்வதாகும்.

இந்த பண்புகள் இல்லாதபோது குடும்பம் முன்னேறுவதற்கு பதிலாக தேய்வடையும். அழிவுகளை எதிர்நோக்கும். தனது குடும்பத்தை சொந்தம் கொண்டாடாத ஒருவர் நிச்சயமாக பொறுப்பற்ற தந்தையாகவே இருப்பார். இன்றைய சமூகத்தில் இவ்வாறான நிலையை பல இடங்களில் நாம் காண்கிறோம். பிள்ளைகள் தங்களை சொந்தம் கொண்டாடி கெளரவப்படுத்தும் விதமாக தந்தையர், நடந்து கொள்ளாதபோது பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும் என தந்தைமார் எப்படி எதிர்பாாக்க முடியும்?

தங்கள் குடும்பங்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து வெளிநாடு சென்று சொல்லமுடியாத அளவு துன்பங்களை சுமந்து உழைக்கும் பெண்களின் குடும்பங்களில் பெரும்பாலானவை சீரழிவிற்கு உள்ளாகியிருக்கின்றமைக்கு காரணம் அந்த குடும்பங்களில் உள்ள தந்தைமாரிடம் இந்த சொந்தம் கொண்டாடும் பண்பு இல்லாமல் அவர்கள் பொறுப்பற்று நடந்து கொள்ளுவதேயாகும்.

இதனை கருத்தில் கொண்டு இன்று (17) கொண்டாடப்படவுள்ள தந்தையர் தினத்தை பெருந்தோட்டப் பகுதி தந்தையர் மத்தியில் தங்கள் குடும்பத்தை சொந்தம் கொண்டாடும் பண்பை மேம்படுத்தி அவர்களை மேலும் பொறுப்புள்ளவர்களாக ஆக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரிடோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விசேடமாக தாய்மார் வெளிநாடு சென்றுள்ள குடும்பங்களில் தந்தைமார் தாய், தந்தை ஆகிய இருவரின் இரட்டை பொறுப்புக்களை ஏற்பவர்களாக தந்தையர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது.

Comments