அமெரிக்காவின் பலம்! | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவின் பலம்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ‘சர்வதேச விருந்தினர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைசார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டமும் மெரீடியன் நிலையம் போன்ற தன்னார்வ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவற்றுக்கான ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களே மேற்கொள்கின்றன. புலனாய்வு ஊடகத்துறை தொடர்பான எமது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சந்திக்கவேண்டிய நபர்கள், எமது பயணங்கள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் மெரீடியன் நிறுவனமே மேற்கொண்டிருந்தது.

அமெரிக்காவில் நாம் செல்லவிருக்கும் ஏனைய மாநிலங்கள், அந்தந்த மாநிலங்களில் இருக்கக் கூடிய முக்கியமான விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்களை நான்சியும், மத்யூவும் எம்மிடம் வழங்கினார்கள். அன்று மதிய போசன விருந்தின் பின்னர் அமெரிக்காவின் கூட்டாட்சிமுறை தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. கப்பிட்டல் கொம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அக்ரம் எலியஸ் அமெரிக்கா பற்றி விரிவான விளக்கத்தை தந்தார்.

ஐம்பது மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து ஐக்கிய அமெரிக்காவாக பரிணமிப்பதையும் தனித்தனி மாநிலங்களாக இருந்தாலும் கூட்டாட்சி அரசியலமைப்பின் ஊடாக அந்த மாநிலங்கள் ஒரு நாடாக ஒருங்கிணைந்து இருப்பதை எடுத்துச் சொன்னார்.

கி.மு 1500 இல் கொலம்பஸின் வருகையுடன் அமெரிக்காவின் வரலாறு ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் பிரித்தானியாவின் காலனி நாடாகவே இருந்தது. 1600களில் ஐரோப்பிய குடியேற்றங்கள் அதிகரித்திருந்த நிலையில், பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கான கிளர்ச்சிகள் ஆங்காங்கே சிறிது சிறிதாக உருவாகின. ஆரம்பத்தில் சிறிதாக உருவான கிளர்ச்சிகள் 1775ஆம் ஆண்டு முழுமையான போராக உருவெடுத்தது. 1776ல் இந்தக் குடியேற்றங்கள் தங்களை பெரிய பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து விடுதலை பெற்ற தனிநாடாக அறிவித்தன. தோமஸ் ஜெபர்சன் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமெரிக்க ஐக்கிய இராச்சியம் உருவானது.

ஜோர்ஜ் வொஷிங்டனின் தலைமையின் கீழ் பிரான்ஸின் உதவியுடன் புரட்சிகர யுத்தத்தில் வெற்றிபெற்று சுதந்திர நாடாக அமெரிக்கா அறிவிக்கப்பட்டது. 1783ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் பின்னர் 13 மாநிலங்கள் கூட்டரசின் கீழ் ஒன்றுபட்டிருந்தபோதும் அது வலுவற்றதாகக் காணப்பட்டது. எனவே 1789ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுக்கான அடிப்படையாக அமைந்தது.

அமெரிக்க புரட்சி யுத்தத்துக்கு தலைமைதாங்கிய ஜோர்ஜ் வொஷிங்டனே ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியானார்.

அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கிலிருந்து பிலிடெல்பியாவுக்கு மாறியது. இறுதியாக 1800இல் வொஷிங்டன் தலைநகரானது. அமெரிக்காவின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் முதலாவது திருத்தமாக உரிமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜோர்ஜ் வொஷிங்டன் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்ட பலமான தேசிய அரசாங்கத்தை அமெரிக்க மக்கள் எந்தவித கேள்வியும் இன்றி ஏற்றுக் கொண்டனர். அவருடைய ஆட்சிக்காலத்திலேயே திறைசேரி, அமெரிக்க வங்கி என பல நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. திறைசேரி செயலாளராக அலெக்சாண்டர் ஹமில்டன் நியமிக்கப்பட்டார். அவரே பெடரலிஸ்ட் கட்சியை உருவாக்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது எதிர்க்கட்சியிலிருந்த தோமஸ் ஜெபர்சன் மற்றும் ஜேம்ஸ் மெடிசன் ஆகியோரே குடியரசுக் கட்சியை உருவாக்கினர்.

அமெரிக்கப் புரட்சி யுத்தத்தின் பின்னர் படிப்படியாக கறுப்பின அடிமைத்தனம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பெரும் எண்ணிக்கையான கறுப்பின அடிமைகள் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமான செயற்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். 1860ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் ஆபிரகாம் லிங்கன் வெற்றி பெற்றார். இது உடனடியாக அடிமைத்தனத்தை பேணிய 11 மாநிலங்களும் பிரிந்து 1861இல் தனியாக ஒரு கூட்டமைப்பை உருவாக காரணமாக அமைந்தது. இதனையடுத்து அமெரிக்க உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. குருதிதோய்ந்த நான்கு வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1863 முதல் 1877ஆம் ஆண்டு வரையான அமெரிக்க மறுசீரமைப்பு ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதுடன் விடுதலை பெற்றவர்களுக்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டது. இப்படியான வரலாற்றைக் கொண்டதே ஐக்கிய அமெரிக்கா.

ஐக்கிய அமெரிக்காவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனியொரு தேசத்துக்கான மொத்த அம்சங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. மாநிலங்களின் தலைவர்களாக ஆளுநர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்குத் தனித்தனியான அரசியலமைப்பு, வரிக் கட்டமைப்பு, தனித்தனியான சட்டம், தனியான உச்சநீதிமன்றம், தனியான பொலிஸ் என தனித்துவமான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு மாநிலத்தில் சட்டரீதியாக இருக்கக் கூடிய ஒரு விஷயம், மற்றொரு மாநிலத்தில் சட்டவிரோதமாகக் கருதப்படலாம். உதாரணமாக கொலராடோ மாநிலத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு சட்டரீதியானது. ஆனால் ஏனைய மாநிலங்களில் அது சட்டவிரோதமானது. அதேபோல பல மாநிலங்களில் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் சில மாநிலங்களில் அது இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

அமெரிக்க அரசியல் கட்டமைப்பானது நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பவற்றால் கட்டுப்பட்டிருக்கின்றன.

(19 ஆம் பக்கம் பார்க்க)

 

Comments