2018 உலகக் கிண்ணம்: ஜேர்மன் அணியின் முன்னோட்டம் | தினகரன் வாரமஞ்சரி

2018 உலகக் கிண்ணம்: ஜேர்மன் அணியின் முன்னோட்டம்

கடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

வலுவான ஆட்டத்திறன் மற்றும் ரஷ்யாவில் உலகக் கிண்ணத்தை இழக்கும் அளவுக்கு பலவீனங்கள் எதுவும் தெரியாத நிலையில் ஜெர்மன் தனது உலக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வரலாற்றை மீண்டும் திருப்பி எழுத அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இரண்டாவது உலகப் போருடன் தொடர்புபட்ட நிகழ்வுகளான 1950 இல் ஜெர்மன் கால்பந்து அணி அரசியல் காரணங்களால் மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி மற்றும் சார்லாந்து என்று பிளவுபட்டது.

2014 இல் உலகக் கிண்ணத்தை வென்ற அணி

எவ்வாறாயினும் இந்த பிளவுக்கு முன்னர் உண்மையான ஜெர்மனி அணி 1934இல் முதல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்று 3ஆவது இடத்தை பெற்றது. பிரிவினைக்கு பின்னர் இந்த மூன்று ஜெர்மனி அணிகளும் பிரேசிலில் நடந்த 1950 உலகக் கிண்ணத்தில் ஆடுவதற்கு தடை செய்யப்பட்டன. அந்த நாடு பிரிக்கப்பட்ட தேசமாக இருந்ததோடு அது தொடர்ந்தும் நேச நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்ததே இதற்கு காரணமாகும்.

இந்த மூன்று அணிகளும் பிஃபாவின் அங்கீகாரத்தை வென்று 1954 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. இதில் இறுதிப் போட்டியில் ஹங்கேரியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு ஜெர்மனி உலகக் கிண்ணத்தை வென்றது.

மேற்கு ஜெர்மனி 1974 மற்றும் 1990 இலும் உலகக் கிண்ணத்தை வென்றதோடு 1966, 1982 மற்றும் 1986 இல் இரண்டாம் இடத்தை ப்பிடித்தது. எவ்வாறாயினும் அடுத்த இரண்டு ஜெர்மனி அணிகளும் உலகக் கிண்ணத்தில் அதிக தாக்கம் செலுத்த தவறின.

1994 உலகக் கிண்ணத்தில் ஜெர்மனி அணியின் பிளவு முடிவுக்கு வந்ததோடு ஒன்றுபட்ட அணியாக அந்த தொடரில் பங்கேற்றது. 2002 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரேசிலிடம் தோற்ற ஜெர்மனி, இரண்டாவது இடத்தை பிடித்தது. மாரியோ கோட்சே 113 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் 2014 இல் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி உலக சம்பியனானது.

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

பிரேசிலில் 2014 உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஜெர்மனி அணி அவர்கள் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் தனி ஆட்சி புரிந்தார்கள். 2016 யூரோ கிண்ணத்திற்கு தகுதி பெற்ற பின்னர் அந்த அணி குழுநிலை போட்டிகளில் தோல்வியுறாத அணியாக, காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் (6-5) முறையில் இத்தாலியை வென்றபோதும் போட்டியை நடத்தும் பிரான்சிடம் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று துரதிஷ்டவசமாக வெளியேறியது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ஜெர்மனி சான் மரினோவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் 7-0 மற்றும் 8-0 என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 2017 பிஃபா கொன்படரேசன் கிண்ணத்தில் ஒரு அனுபவமற்ற அணியுடன் களமிறங்கிய ஜெர்மனி இறுதிப் போட்டியில் சிலியை 1-0 என வென்றது உட்பட தோல்வியுறாத அணியாக அந்த கிண்ணத்தை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் செக் குடியரசை 2-1, நோர்வேயை 6-0 அசர்பைஜானை 5-1 என வென்று ரஷ்யா செல்வதற்கு தகுதியை பெற்றுக் கொண்டது. இதில் வடக்கு அயர்லாந்துடனான முக்கிய போட்டியில் ஜெர்மனி 3-1 என உறுதியான வெற்றியை பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினுக்கு எதிரான நட்புறவுப் போட்டியை 1-1 என சமநிலை செய்த ஜெர்மனி பிரேசிலுடனான ஆட்டத்தில் 1-0 என தோல்வியை சந்தித்தது.

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி ,

ஜோச்சி லோ

ஜெர்மனியின் முன்னாள் கால்பந்து வீரரான ஜோச்சி லோ ஜெர்மனி தேசிய அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ளார். அணியில் பெறுப்பை ஏற்கும் முன்னர் அவர் பல அணிகளுக்கும் முகாமையாளராக செயற்பட்ட அனுபவம் பெற்றவராவார்.

1994 ஆம் ஆண்டு தனது பயிற்சியாளர் பணியை ஆரம்பித்த அவர் எப்.சி. வின்டர்துர் மற்றும் வீ.எப்.பி. ஸ்டுட்கார்ட் போன்ற ஜெர்மனியின் பல அணிகளுக்கும் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து துருக்கியின் பெர்னர்பாஹ்ஸ் மற்றும் அதனஸ்போர் கால்பந்து கழகங்களுக்கு முகாமையாளராக செயற்பட்டார்.

2004 இல் அப்போதைய ஜெர்மனி தேசிய அணியின் முகாமையாளராக இருந்த ஜுர்கன் கிளிஸ்மானின் கீழ் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டார். தனது ஒப்பந்தத்தை நீடிப்பதில்லை என்று கிளிஸ்மான் தீர்மானித்ததை அடுத்து ஜெர்மனி தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட லோவின் இதுவரையான காலம் அந்த பொறுப்புடனேயே நீடிக்கிறது.

அவரின் வழிநடத்தலின் கீழ் 2008 ஐரோப்பிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தை பிடித்த ஜெர்மனி, 2014இல் உலகக் கிண்ணத்தை வென்றதோடு 2017இல் கொன்படரேசன் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ஆண்டின் பிஃபா சிறந்த பயிற்சியாளர் விருதை வென்றிருக்கும் அவர் 2014இல் ஜெர்மனியின் சிறந்த கால்பந்து முகாமையாளராகவும் கௌரவம் பெற்றார்.

அவரது போட்டி உத்திகள் கிட்டத்தட்ட மறைமுகமானதாக இருப்பதோடு இதில் அவரது 4-2-3-1 என்ற ஆட்ட பாணியும் அடங்கும். இந்த முறையில் பின் கள வீரர்கள் ஆபத்தான தாக்குதல் ஆட்டத்தை நடத்த கோல்காப்பாளர் ஒரு ஸ்வீப்பர் (Sweeper) வீரராகவும் செயற்படுத்தப்படுகிறார். இந்த தாக்குதல் ஆட்ட மனோபாவம் ரஷ்யாவில் ஜெர்மனியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்.

Comments