பசுமை கலாசார உருவாக்கம் பரம்பரைக்கு செய்யும் இலவச முதலீடு | தினகரன் வாரமஞ்சரி

பசுமை கலாசார உருவாக்கம் பரம்பரைக்கு செய்யும் இலவச முதலீடு

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் குடிக்கும் தண்ணீருக்கு பாரிய தட்டுப்பாடு உருவாகுமென்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நமக்கு ஏற்படுமென்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழலியலாளர்கள் எச்சரிக்கை விட்டார்கள். அப்போது என்னவோ அந்த ஊகங்கள் எல்லாம் வேற்று கிரகத்தில் வசிக்கும் ஏலியன்கள் பற்றிய கதைகளாகவே எமக்குத் தெரிந்தன.

ஆனால் இன்று அவர்களின் அன்றைய அனுமானத்தை நாம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அனுபவங்களாக சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

பல இடங்களில் நீண்ட காலமாக மழையே இல்லை. கடுமையான வரட்சி நிலவுகிறது. அங்கே தண்ணீர் தங்க பஸ்பத்துக்கு சமம். வசதியுள்ளோர் பணம் கொடுத்து போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். வசதியில்லாதோருக்கு அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமன்றி உடல் நிலை, சுகாதார சீர்கேடுகள் என அனைத்துக்கும் திண்டாட்டம்தான்.

இந்த வரட்சிக்கு ஒ​ரேயொரு பிரதான காரணம் என்றால் அது மழையின்மை. மரங்களை வெட்டுவதும் காடுகளை அழிப்பதுவுமே மழையின்மைக்கு நேரடி பங்களிப்புச் செய்கிறதென்பது பள்ளிச் சிறார்களுக்குகூட தெரிந்த விடயம். ஆனால் நாம் அதைப் பற்றி சிந்திப்பதற்கும் பங்களிப்புச் செய்வதற்கும் எமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றோம். சொல்லப் போனால் எதுவுமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

வெளிநாடுகளைப் பொறுத்தவரை பசுமை கலாசாரம் என்பது அவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றரக் கலந்ததொரு விடயம். எனவே அதுபற்றி தனியாக சிந்திக்கவோ பேசவோ வேண்டிய அவசியம் அவர்களுக்கு அங்கு இல்லை. என்றாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் இந்த பசுமை கலாசாரத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது தான் உண்மை.

இது அவசர உலகம் என்பதிலும் பார்க்க வருமானம் தேடும் உலகம் என்பதே மிகப் பொருத்தமானதாக அமையும். வாழ்க்கைச் செலவு எனும் போர்வையில் சின்னதொரு விடயத்துக்காகவும் இலாபமின்றி செயற்பட துடிக்கும் இந்த கால கட்டத்தில் தன்னுடைய சொந்த நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து பசுமை கலாசாரத்துக்கான சமூகத் தொண்டை ஆரம்பித்திருக்கும் டொக்டர் ஆசிரி முனசிங்கவை பற்றி அறிய கிடைத்தது.

தொழில்ரீதியாக இவர் ஒரு மருத்துவர் என்கின்றபோதிலும் அதற்கும் அப்பால் அவர் சுற்றாடலை அதிகமாக நேசிப்பவர். எமது நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பசுமை கலாசாரத்துடன் இணைத்து வளர்க்கப்பட வேண்டும் எனும் குறிக்கோளுடன் இவர் ஆரம்பித்திருப்பது தான் 1% ஐடியா (one percent idea) எனும் செயற்திட்டம்.

Òசூழலியலாளர்களின் ஆய்வுகளுக்கமைய எமக்கு குளிக்க, சமைக்க, குடிக்க நிச்சயம் ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் போகும். அதை சொன்னால் மக்கள் சிரிக்கிறார்கள். ஜப்பானில் நேரடியாக நுகர்வுக்குப் பயன்படுத்தக்கூடிய 70 சதவீத நீர் நிலைகள் உண்டு. ஆனால் இலங்கையில் அந்த வளம் இல்லை. இருக்கின்ற நீர் வளமும் சிறிது சிறிதாக குறைந்து செல்கின்றது. தண்ணீர் இல்லாத நாட்டை எமது சந்ததியினருக்கு பரிசளிக்கும் பாவிகளாக நாம் ஆகிவிடக்கூடாது.Ó என்கின்றார் டொக்டர் ஆசிரி.

இலங்கையைப் பொறுத்தவரை 29 சதவீதமே கானகம் உண்டு. சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடாந்தம் இதில் 1.5 சதவீத கானகத்தை நாம் இழக்கின்றோம். இன்னும் 10 வருடங்களில் மொத்த கானகத்தின் 15 சதவீதத்தை நாம் இழந்துவிடுவோம். அப்படியானால் எஞ்சியிருக்கும் 14 சதவீத கானகத்தை நாம் பாதுகாக்கும் அதேநேரம் இழக்கும் கானகத்துக்கு பதிலாக ஆகக்கூடியது ஒரு சதவீதமெனும் மர நடுகையை நடைமுறைப்படுத்த வேண்டும்.மொத்த கானக பரப்பின் ஒரு சதவீதத்தை மீள உருவாக்குவது என்பது 16.3 மில்லியன் மரங்களை நடுவதாகும். 20 மில்லியனிலும் அதிகமான சனத்தொகை கொண்ட இந்நாட்டில் இத்திட்டம் சாத்தியமாகும் என்ற அடிப்படையிலேயே 1% பேர்சன்ட் செயற்திட்டத்தை தனி முயற்சியின் பயனாக அவர் ஆரம்பித்துள்ளார்.

இதன்கீழ் அவர் பத்து வகையான மர நடுகை செயற்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். அதில் மிகவும் சுவாரஸ்யமானது தான் இரட்டைச் சகோதரரான மரம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வைத்தியசாலையில் மரக் கன்று ஒன்று வழங்கப்படும். இதனை அவர்கள் நட்டு வளர்க்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியை பார்க்க வரும் மருத்துவிச்சி அதே பதிவுப் புத்தகத்தில் மரத்தின் வளர்ச்சிப் பற்றியும் குறித்துக் கொள்வார்.

Òநான் குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்கமுவ வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரியாக இருந்த கால கட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் எனது சொந்த செலவில் இத்திட்டத்தை செய்து வருகின்றேன். இதற்காக நான் 48 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக விநியோகித்துள்ளேன். குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலை மற்றும் நிக்கவரெட்டிய வைத்தியசாலைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் நான் எனது செலவில் மரக் கன்றுகளை வழங்கினேன். தம்பதெனிய வைத்தியசாலையில் விரைவில் இதனை ஆரம்பிக்கவுள்ளோம். மாகாண சபைக்கு எனது திட்டத்தை சமர்ப்பித்தேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டதுடன் அதனை அவர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கான 'ஹரித அருணளுகே' வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதாக கூறினார்கள்.Ó என்றும் அவர் தனிநபர் முயற்சி குறித்து விளக்கமளித்தார்.

அதுமட்டுமன்றி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான மர நடுகைத் திட்டம், ஓய்வு பெறும்பொது, திருமண பந்தம், பண்டிகை, பிறந்த நாள், ஞாபகார்த்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு என பல வழிகளில் இவர் மரநடுகையை மக்கள் மத்தியில் உக்குவித்துள்ளார். இது பற்றிய மேலதிக தகவல்களை www.onepercentidea.org எனும் வலைத்தளத்திற்கூடாக அறிந்து கொள்ளலாம்.

டொக்டர் ஆசிரி தனது வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதனை வரவேற்ற ஜனாதிபதி முதலில் இத்திட்டத்தை குருநாகலை மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்குமாறும் பின்னர் தேசிய மட்டத்தில் இதனைக் கொண்டு செல்வதற்கு உதவுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி இதற்கு அவசியமான நிதியை குருநாகலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பெற்றுக் கொடுத்தபோதும் கடந்த ஆறு மாதங்கள் கடந்தும் மாவட்ட செயலகம் இதனை நடைமுறைப்படுத்த முன்வராமை பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

'எனது இந்த முயற்சி என்னோடு முடிந்துவிடக்கூடாது. இது தேசிய மட்டத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும். பசுமை கலாசாரம் எமது நாட்டின் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மரம் வளர்ப்பவர்களுக்கு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக புள்ளி வழங்கப்படும் போன்ற யோசனைகளை அறிமுகம் செய்தால் பெற்றோரும் பிள்ளைகளும் இத்திட்டம் மீது அக்கறை காட்டுவார்கள். இயற்கையை நேசிக்க பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும். இது ஒவ்வொருவரும் தனக்காகவும் தன் பரம்பரைக்காகவும் செய்யும் இலவச முதலீடு.' என அவர் தனது கனவுகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றார்.

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இதுபற்றிய 'ஹரித' எனும் நூலையும் அவர் வெளியிட்டிருந்தார். டொக்டரின் இந்த முயற்சி விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது என்பது தான் எமது அவாவும் கூட.

லக்ஷ்மி பரசுராமன்

 

Comments