112 கோடி பெற்ற விவகாரம் | தினகரன் வாரமஞ்சரி

112 கோடி பெற்ற விவகாரம்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசாரங்களுக்காக சீன அரசாங்கம் 112 கோடி வழங்கியதாக நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த கட்டுரை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்பசுவல் டிரசரியிடம் எம்.பிகள் பணம் பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த விவகாரம் ஒன்றிணைந்த எதிரணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேர்பசுவல் டிரசரியிடம் பணம் பெற்ற விவகாரத்தில் ஐ.தே.க மீதே கூடுதலாக விரல் நீட்டப்படும் நிலையில் ஆளும் தரப்பிற்கு இந்த விடயம் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்த ஐ.தே.க தயாராகி வருவதாக அறியவருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமணாயக்கவால் நிதி மோசடிப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பில் சிலர் அறிந்திருந்ததாகவும் இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நின்றுவிட்டதாகவும் அறிய வருகிறது.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து நிவ்யோர்க் டைம்ஸ் ஊடகவியலாளர்களுடன் பிரதி அமைச்சர் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரியவருகிறது. இது தவிர ஒன்றிணைந்த எதிரணியுடன் நெருக்கமான பிக்கு ஒருவரும் சீனாவிடம் பணம் பெற்றுள்ளாராம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பிலே இந்த நிதி முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாம்.

சீனாவுடன் உள்ள பகை காரணமாகவே நிவ்யோர்க் டைம்ஸ் இந்த கட்டுரையை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியும் இது தொடர்பில் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையை தனது டுவிட்டர் பகுதியில் சாடி கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை சீனாவிடமிருந்து பெற்ற பணம் டுபாய் வங்கியொன்றிலே வைப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாம். இது பற்றி வெளிவிவகார அமைச்சு அந்த நாட்டிடம் தகவல் கோரியுள்ளதாம். இந்த கொடுக்கல் வாங்கலின் உண்மை தன்மையை வெளியிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை ஒரு பிடி பிடிக்க அரசாங்கம் சகல முன்னெடுப்புகளையும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

மதில் மேல் பூனையாக

சு.க 16 பேர் அணி

அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியில் அமர்ந்த சு.க 16 பேர் அணியின் நிலைமை வரவர பரிதாபமாகி வருவதாக அறிய வருகிறது. முழுமையாக மஹிந்த தரப்பிற்கும் செல்ல முடியாமல் ஜனாதிபதியுடன் ஒட்டியிருக்கவும் முடியாமல் திண்டாட்டத்தில் இருப்பதாக தகவல். இதில் சிலர் முழுமையாக மஹிந்த சரணம் கச்சாமி என சரணாகதி அடைய விருப்பமாம். ஆனால் சிலர் மைத்திரியுடன் இருந்தவாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் செயற்படுவதே உசிதம் என கருதுகின்றனராம்.

ஆளும் தரப்பிலுள்ள சு.கவும் ஒன்றிணைந்த எதிரணியும் மாறி மாறி இவர்களை விமர்சித்து வரும் நிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் இருக்கும் இவர்களுக்கு நாளை தலையில் பெரிய இடிவிழப் போவதாக அறியவருகிறது.

ஏனென்றால் நாளை ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற குழுக் கூட்டமும் சு.க அதிகாரிகள் கூட்டமும் நடக்க இருக்கிறது. இதில் எதில் பங்கேற்பது என்பதில் ச.க 16 அணி குழம்பிப் போயுள்ளதாம். சு.க கூட்டம் 4.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற இருப்பதோடு ஒன்றிணைந்த எதிரணி கூட்டம் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் 5.00 மணிக்கு நடக்க இருக்கிறதாம். ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்க சு.க 16 பேர் அணிக்கு இம்முறை தான் அழைப்பு வந்துள்ளது. மறுபக்கம் கட்சி மறுசீரமைப்பின் கீழ் இவர்களுக்கும் சு.க வினுள் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. யாரை விடுவது யாருடன் சேர்வது என குழம்பியுள்ள நிலையில் சு.க 16 பேர் அணியும் இரண்டாக துண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் முன்னாள் அமைச்சர்களான டபிள்யு ​ஜோன் செனவிரத்ன,டி.பி ஏக்கநாயக்க போன்றோர் முழுமையாக மஹிந்த தரப்புடன் கைகோர்க்க வேண்டும் என உறுதியாக உள்ளதோடு மற்றொரு தரப்பு இருவரையும் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

எது எப்படியோ மொட்டு கட்சியில் இணைந்தால் தான் சுக 16 பேர் அணியுடன் செயற்பட முடியும் என முன்னாள் அமைச்சர் பெசில் உட்பட பலர் உறுதியாகக் கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கூறினால் இணையத் தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனராம். நாளை தான் இவர்களுக்கு வாழ்வா சாவா என்று முடிவு செய்ய நேரிடும் என கூறப்படுகிறது.

அமைச்சர் சம்பிக- ஐ.தே.க மோதல்

ஹெல உருமய கட்சித் தலைவர் சம்பிக ரணவக்க ஐ.தே.கவுடன் கைகோர்க்க தயாராவதாக அரசியல் அரங்கில் பேசப்படும் நிலையில் கொழும்பு மாநகர சபை ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் அமைச்சர் சம்பிகவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அறியவருகிறது. கொழும்பு மாநகர சபை எல்லை பிரதேசத்திலுள்ள காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சுவீகரிப்பது தொடர்பிலே இந்த முறுகல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சருக்கும் கொழும்பு மாநகர சபை ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அமைச்சுக்கு தேவையாயின் எந்த ஒரு காணியையும் சுவீகரிப்பதாகவும் தேவையானால் அதிகாரிகளுடன் பேசிக் கொள்ளுமாறும் அமைச்சர் இங்கு சூடாக கூறினாராம். இதனையடுத்து மாநகர சபை உறுப்பினர்களும் அமைச்சருடன் வாக்குவாதப்பட்டதாக அறிய வருகிறது. இதற்கு முன்னர் கோத்தபய ராஜபக்‌ஷ இருந்த ​போது கூட இவ்வாறு நடக்கவில்லை எனவும் அவர் ஐ.தேக உறுப்பினர்களுடன் பேசியே செயற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

சு.க -ஐதேக அமைச்சரவையில்

காரசாரம்

அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது சு.க முன்னாள் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கும் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இடையில் காரசாரமான வாதம் இடம் பெற்றதாக அறியவருகிறது. புதிய அமைச்சரவையில் இடர் முகாமைத்துவ அமைச்சராக துமிந்த நியமிக்கப்பட்டிருந்தார். காலி பிரதேசத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் வஜிரவின் தலைமையில் நிவாரணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக காலி பிரதேச சு.க முக்கியஸ்தர்கள் அமைச்சரின் காதில் போட்டிருந்தனராம். இதனால் சற்று கோபமடைந்திருந்த அமைச்சர் துமிந்த தான் இடர் முகாமைத்துவ அமைச்சராக இருந்தாலும் அமைச்சர் வஜிர தனது அமைச்சுடன் தொடர்புள்ள விடயங்களில் தலையிடுவதாக அவர் குற்றஞ்சாட்டினாராம். இதனால் இருவருக்குமிடையில் சூடான வாதம் ஏற்பட்டதாக தகவல். தான் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் நடந்த அனர்த்த நிவாரண செயற்பாட்டிலே தொடர்பு பட்டதாகவும் அமைச்சின் செயற்பாடுகளில் தலையிடவில்லை எனவும் அமைச்சர் வஜிர பதிலளித்தாராம். இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டவே ஜனாதிபதி தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்தாராம். ஒரு அமைச்சின் செயற்பாடுகளில் வேறு அமைச்சர் தலையிடுவது உகந்ததல்ல என்று கூறியுள்ள அவர் ஆனால் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இணைந்து செயற்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினாராம்.

முன்னாள் சு.க செயலாளராக துமிந்த திசாநாயக்க, ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டப்படும் நிலையில் இந்த மோதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சையினால் ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் வலுவடைந்துள்ளதாக அறிய வருகிறது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் இடையில் அண்மையில் முக்கிய சந்திப்பொன்று நடந்துள்ளது. பெசில் ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் கோத்தபய ராஜபக்‌ஷ ஆகியோர் இதில் கலந்து கொண்டதாக அறிய வருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை பற்றி ராஜபக்‌ஷ சகோதரர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளதோடு இந்த விவகாரத்தினால் குடும்பத்திற்குள்ளோ ஒன்றிணைந்த எதிரணியிலோ விரிசல் எழக்கூடாது என அவர்கள் தெரிவித்ததாக அறிய வருகிறது. இதில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வழங்க இங்கு முடிவு செய்யப்பட்டதாம். இதே வேளை இந்த முன்னாள் ஜனாதிபதியின் 3 சகோதரர்களையும் நிறுத்த ஒவ்வொரு தரப்பு யோசனை முன்வைத்துள்ள நிலையில் இதற்கு தீர்வாக முன்னாள் ஜனாதிபதியை நிறுத்த முடியுமா என்பது தொடர்பிலும் ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஆராயப்படுகிறதாம். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இதற்கு இடையூறாக உள்ள நிலையில் இதற்கு மாற்று வழிகள் உள்ளதா என்பது பற்றியும் ஆராய ஆரம்பித்துள்ளனராம். தங்களது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த தான் என ஒன்றிணைந்த எதிரணி தேசிய அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க வெளிப்படையாக கூறி வருகிறாராம். இதே வேளை இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஒன்றிணைந்த எதிரணி தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாகவும் அறியவருகிறது.

Comments