தமிழ் சமூகம் மீட்கப்படாத வரை எதுவுமே சாத்தியமில்லை | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் சமூகம் மீட்கப்படாத வரை எதுவுமே சாத்தியமில்லை

புலிகள் இயக்கம் இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தில் இன்றைய நிலை ஏற்பட்டிருக்குமா? மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் கேள்வி இது.

யாழ் குடா நாட்டில் தங்கள் பிடிதளர்ந்த நிலையிலும் சமூகக் கட்டமைப்புக்களை மிக இறுக்கமாகப் பேணியவர்கள் புலிகள். அன்பால் அடக்கினார்களா? அல்லது ஆயுதத்தால் பேணினார்களா? என்பது வேறு கேள்வி. ஏதோ ஒருவழியில் சமூகக் கட்டமைப்பையும் தமிழ் கலாசார விழுமியங்களையும் பேணிக்காத்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்பதே நம் கணிப்பீடு.

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது? இங்கு நடக்கும் அதர்மங்களும் அட்டூழியங்களும் இலங்கையை மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் சாமானிய சிவில் சமூகத்தினரும் நீதிகோரி போராடும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

சிவில் சமூகமும். பல்கலைக்கழக கல்விச் சமூகமும் நீதிகோரி நிற்பதென்பது சாதாரண விடயமல்ல.

முழுக்க முழுக்க சிவில் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பிரதேசத்தில் நீதிகோரி இவர்கள் போராடுகிறார்களென்றால், யாரிடம் பலனை எதிர்பார்க்கிறார்கள்? சமூகச் சீரழிவுகளுக்குள் அல்லல்படும் இந்த மக்களுக்கு நீதி வழங்குவது யார்?

மானிப்பாயில் நடந்த கொலையும், அதனைத் தொடர்ந்து சுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலையும் யாழ்குடா நாட்டின் சிவில் நிர்வாகத்தில் பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. தொடரும் வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம், போதைப் பொருள் பாவனையின் உச்சம், இன்னும், கொள்ளை, பாலியல் பலாத்காரம்... இப்படி, சமூகச் சீரழிவுகளை பட்டியலிடும் அளவுக்கு நிலைமை மிக மோசமடைந்திருக்கிறது.

சிவில் யுத்தமொன்று நடந்த இடத்தில், சமூகச் சீரழிவுகளும், கலாசார மீறல்களும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யுமென்பது சமூகவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. சீனப்புரட்சியின் பின்னர் நடந்த சமூகச் சீரழிவுகளை அவர்கள் சமூக ஆய்வுக்கு உதாரணம் காட்டுகிறார்கள்.

சீனாவில் மட்டுமல்ல, சிவில் யுத்தம் நடந்த வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலும், (யுத்தத்தால்) சிதைந்து போன சமூகம் மிகக் குறுகிய காலத்தினுள் கட்டமைக்கப்பட்டன. உலகில் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகள் பட்டியலில் இந்த நாடுகள் முதலிடம் வகிக்கின்றன.

ஆனால், யாழ்ப்பாணத்தில் நிலைமை மிகமோசமாக இருக்கிறதென்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். யாழ் குடா நாடு நேரடி சிவில் யுத்தத்திலிருந்து விடுபட்டு மிக நீண்ட காலமாகின்றது. வன்னிப் பிராந்தியத்திற்கு முன்னரே யாழ் குடாநாட்டில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பார்க்கும் போது சுமார் 23 ஆண்டுகளாகிவிட்டன.

என்றாலும், மக்கள் நிம்மதியுடன் வாழ்கிறார்கள் என்று உளப்பூர்வமாகக் கூறமுடியவில்லை.

இத்தனை காலம் கடந்தும் கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை இன்னும் கட்டுப்படுத்த முடியாமலே இருக்கிறது. வாள்வெட்டு என்பது சர்வசாதாரணமாகி விட்டது.

சுழிபுரத்தில் ஆறுவயது நிரம்பிய பச்சிளம் பாலகி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். காரணம் தெரியவில்லை. மானிப்பாயில் வயோதிபப் பெண் கழுத்துவெட்டி கொல்லப்பட்டார். இதற்கும் காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸாரின் வழமையான பாணியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துப்புத்துலக்குவதாகவும் கூறுகிறார்கள். தெரியாததும் புரியாததுமாகவே இது தொடர்கிறது.

யாழ்ப்பாணம் என்பது கல்விச் சமூகத்தின் பெரும் கோட்டை. தமிழ்ப் பாரம்பரியமும், சமூகக் கட்டுக்கோப்பும் நிறைந்த எடுத்துக்காட்டான ஒரு சமூக வாழ்விடமாகவே யாழ்ப்பாணத்தை உலகம் பார்க்கிறது. உலகில் எங்கு சென்றாலும் இலங்கை என்பதைவிட யாழ்ப்பாணம் என்று சொன்னாலே புரியும் அளவுக்கு தனித்துவ அடையாளம் உள்ள பிரதேசமாகவே யாழ் குடா பிரகாசிக்கிறது.

கலாசார விழுமியங்களுக்குள் தன்னை உட்படுத்தி கட்டமைப்பாக வாழும் இந்தச் சமூகத்தை சீரழிப்பதற்கான இலக்கோடு பின்னணிச் செயற்பாடு ஏதும் இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

புலிகள் இருக்கும் போது இருந்த சிவில் கட்டமைப்பு இப்போது ஏன் இல்லாமல் போய்விட்டது? என்ற கேள்வி எழுப்பப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. சமூகச் சீரழிவுகள் தலைவிரிகோலமாக வரும் போது, அரச நிர்வாகம் பொடுபோக்குத் தனமாக இருந்து விடமுடியாது.

பொலிஸார் தங்கள் கடமையில் இறங்கவில்லையென நாம் கூற வரவில்லை. ஆனால், அடிப்படைகள் கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளியெறியப்படவில்லை என்பது உண்மை.

சமூகச் சீரழிவுகளை சகிக்க முடியாது கல்விச் சமூகமும் சிவில் சமூகமும் கொதித்தெழுந்திருப்பதை அரச நிர்வாகம் அலட்சியம் செய்ய முடியாது. தீர்வை யாரிடம் கேட்பது என்று தெரியாத நிலையில் தான் மக்கள் தடுமாறிப்போய் நிற்கிறார்கள்.

இறுக்கமான சமூகக் கட்டமைப்புடன் இருக்கும் சமூகத்தினுள் திணிக்கப்பட்டிருக்கும் கொடூர சமூகப் பிறழ்வை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். பொலிஸும் இராணுவமும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினாலும், சமூகம் தன்னை சுயாய்வு செய்து கொள்ளாதவரை எதுவும் சாத்தியப்படாமலே போய்விடும்.

எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுப் போன சீரழிவுக்குள்ளும் தமிழிச்சமூகம் இன்று சிக்கிச் சின்னாப்பின்னமாகிறது. எந்தவொரு விடயத்திலும் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் மற்றவர் மீது பழியைப் போட்டுவிட்டு நாம் ஒதுங்கிக் கொள்வது இனியும் நல்லதல்ல.

தமிழ் இனம், தமிழ் இனம் என்று மூச்சுக்கு மூச்சு பேசும் தமிழ்த் தலைமைகளும் சமூகச் சீரழிவுகளை கண்டும் காணாமல் இருப்பது தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ் இனத்திற்கும் செய்யும் பாதக செயலாகவே இருக்கும். அக்கிரமங்கள் உச்சமடைந்திருக்கும் போது ஆர்ப்பாட்டம் நடத்துவதால் மட்டும் இதற்குத் தீர்வு கண்டுவிட முடியாது. இது தமிழ்த் தலைவர்களுக்கும் தெரியாததல்ல.

ஆனால், ஒன்றை இங்கு அழுத்தமாகச் சொல்கிறோம். ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் எனக் கூறும் தமிழ்த் தலைமைகள், மக்களை விழிப்பேற்றும் வேலைத்திட்டங்களை முதன்மைப்படுத்திச் செயற்பட வேண்டும்.

சமூகக் கட்டமைப்பை சிதைத்து தனித்துவ உணர்வை மழுங்கடிக்க சில சக்திகள் முனைவது போல் தெரிகிறது.

தமிழ் மக்களின் போராட்டக் குணத்தையும் உணர்வையும் சிதைக்கும் நோக்காகக் கூட, இப்படியான சமூகச் சீரழிவுத் தூண்டல்கள் இருக்கலாம்.

எது? எப்படி? யார்? எந்த வடிவில் செயற்பட்டாலும் சமூகம் தன்னை சரிசெய்து கொண்டால், அனைத்துமே புஷ்வாணமாகிவிடும்.

ஆகவே, முன்னரே கூறியது போல, குற்றம் சொல்லிச் சொல்லியே காலத்தை போக்காதீர்கள். சமூகப் பிறழ்வுகளிலிருந்து மக்களை மீட்டெடுத்து புது வாழ்வழிக்க வேண்டும். தமிழ்ச் சமூகம் சரியாக வழிநடத்தப்பட்டாலே சமூகச் சீரழிவுகளுக்கு விடைகொடுக்க முடியும்.

தமிழர்களுக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தலாம் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கிச் செயற்படும் தமிழ்த் தலைவர்களே! உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். அரசியல் உரிமைக்காகப் போராடுங்கள். நாம் அதனைத் தவறெனக் கூறவில்லை.

ஆனால், சமூகப் பிறழ்வுகளிலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்காதவரை அரசியல் இலக்கு என்பது சாத்தியமே இல்லை. ஆகவே, குரோத அரசியலை தூக்கி எறிந்து விட்டு சமூகச் சீரழிவுகளுக்குள் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்டெடுக்க புதுப்பாதை வகுத்துச் செயற்படுங்கள்.

Comments