தேயிலை களை நாசினியாக மீண்டும் கிளைபோசெட் | தினகரன் வாரமஞ்சரி

தேயிலை களை நாசினியாக மீண்டும் கிளைபோசெட்

அருள் சத்தியநாதன்

ஒரு சமயத்தில் தமிழ் சமூகத்தின் எதிரியாக நம்மால் புரிந்துகொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், பின்னர் தன்பேச்சு மற்றும் செயல்களினால் தான் அப்படிப்பட்டவர் இல்லை என்பதையும் புலிகளையும், நாடு துண்டாடப்படுவதையுமே வன்மையாக எதிர்ப்பவர் என்றும் தாய் நாட்டு பக்தன் என்பதையும் புரிய வைத்தார். இஸ்லாமியர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூக நலன்கள் என்பனவற்றின் மீது அதீத பற்று வைத்திருக்கிறார்கள். அதேசமயம் தமது மொழி, கலாசாரம், பண்பாடு – கூடவே அரசியல் அதிகாரங்களைப் பெறுதல் என்பனவற்றின் மீது தமிழர்கள் அதீதமான பற்றும் வெறியும் கொண்டிருக்கும்போது சிங்களவர்களுக்கும் அப்படி ஒரு பற்று இருப்பதை நாம் இனவாதம் என்ற ரீதியாக புரிந்து கொள்ளக்கூடாது என்பது ஒரு நியாயமான வாதமாகவே படுகிறது.

அத்துரலியே தேரர், தன் அரசியல், சமூக பார்வைகளுக்கு அப்பால், இலங்கையின் சூழலியலிலும் பெரும் பற்று கொண்டவர் என்பதோடு அதன் பேரில் போராட்ட உணர்வுடன் பங்களிப்பு செய்பவராகவும் உள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நம் மூளைசாலிகளுக்கு ஏனோ, அரசியல் வாய் வீச்சுக்கு அப்பால் சூழல், சுகாதாரம், சமூக அநியாயங்கள் பற்றியெல்லாம் பேசுவதேயில்லை என்பது இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் எம்.எஸ்.ஜி. என அழைக்கப்படும் மொனோசோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி உப்பு ஏற்படுத்தக் கூடிய ஆரோக்கிய கேடுகள் பற்றி முதலில் வெளிப்படுத்தியதுடன் அதை பொதுவெளியில் போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல முன்வந்தவரே இத் தேரர். இன்றும், எம்.எஸ்.ஜி இறக்குமதியாகி வந்தாலும் கூட, அதன் பாவனை நம் உடல் நலத்துக்கு பாதகமானது என்ற உண்மையை அத்துரெலியே ரத்தன தேரர் வெற்றிகரமாக இலங்கை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேபோல, கிளைபோசெட் என்ற களைநாசினியின் பாவனைக்கு எதிராகவும் அதன் பயன்பாட்டால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் தொடர்ச்சியாக மக்களிடம் எடுத்துச் சொல்லிவருவதில் முன்நின்று செயல்பட்டு வருகிறார். அத்துரலியே ரத்தன தேரர். அவரது செயற்பாடுகள் காரணமாகத்தான் 2015ம் ஆண்டில் கிளைபோசெட் களை நாசினிக்கு அரசு தடை விதித்தது. வட மத்திய மாகாணத்தில் விவசாய குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் சிறுநீரக நோய்க்கு கிளைபோசெட் களை நாசினியே காரணம் என்கிறார் தேரர். இதற்கான விஞ்ஞான ரீதியான, மருத்துவ ரீதியான சான்றுகளையும் அவர் எடுத்து வைத்துள்ளார்.

ஆனால் கிளைபோசெட் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது இத்தடை சரியானது அல்ல என்பது மற்றொரு சாராரின் பார்வை.

 

 

கிளைபோசெட் வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாக, முன்வைத்து வருவது பெருந்தோட்ட கம்பனிகளே. இவர்களுக்கு ஆதரவாக இருப்பவரே, பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க. கம்பனிகளின் பங்குதாரர்களாகவும், தேயிலை இறப்பர் தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் இருக்கக் கூடிய எம்.பிமார், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களும் கிளைபோ செட் பாவனையை ஆதரிக்கக் கூடியவர்களாக இருக்க முடியும் என்றாலும், பொது அபிப்பிராயம் கருதி மௌனம் காக்கிறார்களோ என்று நம்பவும் இடமுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இக்களை நாசினி இலங்கையில் பிரயோகிக்கப்படுவது தடை செய்யப்பட்டிருப்பதால், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பற்றைக் காடுகளாகி வருவதாகவும், தேயிலைத் தோட்டங்களில் குளவிகள் சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், விஷ ஜந்துகள் என்பன அதிகளவில் நடமாடுவதாகவும் சமீபகாலமாக செய்திகள் வெளிவருகின்றன என்றால் அதற்குக் காரணம். தோட்டங்கள் காடு மண்டி வருவதுதான்.

மலைகளில் வேலை செய்வதற்கு ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையால் தோட்டங்கள் திண்டாடிவரும் நிலையில் சில்லறை வேலைகளுக்கு ஆள்தேடி மனித சக்தியின் மூலம் களை அகற்றுவது சாத்தியமானதும் அல்ல என்பதோடு மிகுந்த செலவு படித்த காரியமும் கூட. கொழுந்து பறிப்பதற்கும் இயந்திரங்களை நம்ப வேண்டிய ஒரு காலத்தில் சில்லறை வேலைகளுக்கு எங்கே நாம் ஆள் தேடுவது? எனவே இதற்கான மாற்று ஏற்பாடு, கிளைபோசெட் களைநாசினிமீதான தடையை நீக்கி அதை இறக்குமதி செய்து. தோட்டங்களில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றுவதேயாகும் என்பது கம்பனி தரப்பு முன்வைத்து வந்துள்ள வாதமாகும். நவீன் திசாநாயக்கவும் இது தொடர்பாக அரசுக்கு கம்பனிகள் சார்பாக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததன் பேரில்,

தற்போது, மூன்று வருட காலத்துக்கு இத் தடை நீக்கப்பட்டு, இறப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உபயோகிப்பதற்காக மட்டும் இறக்குமதி செய்யலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கிளைபோசெட் மீதான தடை தொடர வேண்டும் என்ற வாதமும், தடை விதிக்கப்படக் கூடாது என்ற தரப்பின் வாதமும் மீண்டும் உக்கிரம் பெறத் தொடங்கியிருக்கிறது.

கிளைபோசெட் களைகள் மீது தெளிக்கப்படும்போது அது இலைகளில்பட்டு இலைகளில் உறைந்து நிற்கிறது. ஆனால் இந்த இரசாயனம் தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது. இதன் இரசாயன பெயர் கிளைசின் என்பதாகும். இது ஒரு புரதப் பொருள். நம் உடலிலும் உள்ளது. இது ஒரு அமினோ அசிட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கிளைசின்னுடன் வேறு சில இரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் உதவியுடனேயே கிளைபோசெட் இலைகளில் படிந்து படிப்படியாக தண்டு வழியாக களைகளின் வேர்களை அடைந்து, முழு களைச் செடியையும் பட்டுப்போகச் செய்கிறது. ஏனைய களை நாசினிகள் பிரயோகம் செய்யப்படும்போது செடி பட்டுப்போனாலும், நிலத்தின் கீழ் வேர்கள் அப்படியே இருந்து ஒரு காலத்தின் பின்னர் மீண்டும் தளிர்க்கும். ஆனால் கிளைபோசெட் களைகளை முற்றிலுமாக அழித்து விடுகிறது. கிளைசினுடன் சேரும் ஏனைய இரசாயனங்களும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. மேலும், கிளைபோசெட்டின் குணம், கெட்மியம், ஆர்சனிக் போன்ற உடலுக்கு பாதகமான இரசாயனங்களை ஈர்த்துக் கொள்வதாகும். இரசாயன உரங்களை பயிர்களுக்கு உபயோகிப்பதுடன் களை நாசினிக்கு கிளைபோசெட்டையும் பிரயோகிக்கும் போது அந்த மண் விஷமாகி விடுகிறது என்று இயற்கை உர ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தேயிலை ஏற்றுமதியில் நாம் சில பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். வண்டுகள் இருந்ததாக ரஷ்யா ஒரு முறை நம் தேயிலையை நிராகரித்தது. இரசாயனம் கலந்திருந்ததாக ஜப்பான் நம் தேயிலையை சமீபத்தில் நிராகரித்தது. தற்போது, மீண்டும் களைக் கொல்லியாக கிளைபோசெட் உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் கிளைபோசெட்டைத் தடை செய்திருக்கும் நாடுகள் நம் தேயிலையை வாங்குவதைத் தவிர்க்கலாம். ஏற்கனவே ஜெர்மனியும் சுவிட்சர்லாந்தும் கிளைபோசெட் மீது தடைவிதித்துள்ளன. மேலும் இலங்கை தேயிலை பாவனையாளர்களுக்கு இந்தத் தேயிலை உற்பத்தியானது கிளைபோசெட் பாவனையுடன் தானா? என்ற செய்தி தெரிந்தாக வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகிறார் அத்துரலியே ரத்தன தேரர். எனவே, பைக்கட்டுகளில் தேயிலை விற்பனைக்கு விடப்படும் போது ‘இது கிளைபோசெட் பாவனையுடன் தயாரான தேயிலை’ என்ற அறிவித்தல் லேபலாக அப் பைக்கட்டுகளில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை நாம் அரசுக்கு முன்வைக்க வேண்டும். இதன் மூலம் பாவனையாளர்களுக்கு எதைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு குளிர்பானத்தில் எவ்வளவு சீனி அடங்கியிருக்கிறது என்பதை லேபிள் மூலம் அறிவிப்பதைப் போலத்தான் இதுவும் என்று விளக்கமாக பேசுகிறார் தேரர்.

மேலும் அவர் சில தகவல்களைத் தருகிறார். தற்போது 32 கொள்கலன்களில் கிளைபோசெட் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கிளைபோசெட்டின் வீரியம் நாட்டுக்கு நாடு வேறுபடும். எனவே நம் நாட்டு பாவனைக்கு உகந்ததுதானா என்பதை, மாதிரிகளை எடுத்து பரிசோதித்துப் பார்க்க வேண்டும். நமக்கு பொருத்தமற்றவை எனில் அக்கொள்கலன்களை அரசு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் எல்லா வகையான பொருத்தமற்ற, நச்சுப் பொருட்கள் பல்வேறு பெயர்களில் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கே ஒரு இறக்குமதிக் கொள்கையோ, தெளிவான பார்வையோ இல்லை. எம்.எஸ்.ஜி. உப்பைத் தடை செய்ய முடியவில்லை. உலகெங்கும் நிலக்கரியால் இயங்கும் அனல் மின்நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கே ஒரு அனல் மின் நிலையத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது மற்றொரு அனல்மின் நிலையத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கிளைபோ செட்டையும் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

நான் கிளைபோசெட் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக களைநாசினிகள் அடங்கிய 32 போத்தல்களைச் சேகரித்து அவற்றை விஞ்ஞான பூர்வமாக பரிசோதித்துப் பார்க்க ஒரு பரிசோதனை நிலையத்தைத் தேடிப்பார்த்தபோது, அத்தகைய ஆய்வு நிலையம் இலங்கையில் கிடையாது என்ற உண்மை தெரியவந்தது. பின்னர் நான் அவற்றையும் எடுத்துக் கொண்டு மலேசியா சென்றேன். அங்கே, விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து நம்பகமான முறையில் முடிவுகளை சொல்லக் கூடிய ஆய்வகத்தைக் கண்டுபிடித்து பரிசோதனை செய்தேன். இதற்கு இலட்சக்கணக்கில் செலவானது. இப்போது இலங்கையில் கிளைபோசெட் பாவனைக்கு வந்துள்ளதால், இரசாயனங்களை ஆய்வு செய்யக்கூடிய ஒரு முதல்தர ஆய்வகமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. இது வீண் செலவல்ல, மக்களின் உடல், உள பாதுகாப்புடன் தொடர்புடையது.

மேலும், நாம் பாவனைக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்கள் தொடர்பாக ஒரு கொள்ளை வகுக்கவும், நெறிமுறைகளை உருவாக்கவும், கண்காணிக்கவும் ஒரு அதிகார சபையின் அவசியம் தற்போது வெகுவாக உணரப்படுகிறது. ஏனெனில் விஷமாக இருக்கக்கூடிய பொருட்கள் விடயத்தில் எவ்வாறான கொள்கைகளை உருவாக்கி கண்காணிப்பு செய்வதன் அவசியத்தை அரசுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறு மிகவும் முக்கியமான விடயங்களை எடுத்து விரிவாக பேசுகிறார் தேரர். ஆனால் அவருக்கு ஊடகங்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போதிய ஆதரவு தருவதாகத் தெரியவில்லை. கிளைபோசெட் பற்றிய அவரது அவதானமும் முக்கியமானது.

“ஒரு முறை அனுராதபுரத்தில் தங்கியிருந்தபோது, அதிகாலையிலேயே எழுந்து ருவன்வெலிசாய தாது கோபுரத்தை தரிசிப்பதற்காக வயல் வரப்புகள் வழியாக நடந்து சென்றேன். அப்போது இடையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கிளைபோசெட் களைநாசினியை வயலில் விசிறிக் கொண்டிருந்தார் ஒரு விவசாயி. கிளைபோசெட் இரசாயனத்தை மனித சருமம் உறிஞ்சிக் கொள்ளும், இதை அறியாத அந்த விவசாயி தன்பாட்டில் விசிறிக் கொண்டிருந்தார். அது பற்றி அவரிடம் சொன்னபோது, அவர் அதை பொருட்டாகக் கொள்ளவில்லை. நேரடியாக களைநாசினியில் குளித்திருந்த தவளைகள், காணாங் கோழி என்பன உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

கிளைபோசெட் வீரியம் கொண்ட நாசினி. சிலர் அது இன்னும் வீரியம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக மேலதிகமாக தண்ணீரில் கலந்து உபயோகிக்கிறார்கள். இன்னும் சில விவசாயிகள், இரண்டு மூன்று களை நாசினிகளையும் சேர்த்தே தெளிக்கிறார்கள். சிலர், கிளைபோசெட்டுடன் மண்ணெண்ணை, எம்.எஸ்.ஜி.உப்பு என்பனவற்றையும் கலந்து உபயோகிக்கிறார்கள். களைகள் என்பது தமது நிலத்தில் எட்டியே பார்க்கக்கூடாது என்பது அவர்கள் எண்ணம். நிலம் பாழ்பட்டு பயிர்கள் நச்சுத்தன்மை அடைகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை.

மரவள்ளி விவசாயிகள் இன்னொன்றையும் செய்கிறார்கள். முன்னர் மரவள்ளிக் கிழக்கு அளவானவையாகக் காணப்படும். இப்போது மரக்கட்டை அளவுக்கு பெரிய கிழங்குகள், இரசாயன உரங்களைத் தின்றுவிட்டு காட்சியளிக்கின்றன. மரவள்ளி, சர்க்கரை வள்ளி, பலாக்காய், வாழைப்பூ என்பன எமது பாரம்பரிய உணவுகள். ஊட்டமளிக்கக்கூடிய எளிமையான உணவுகள். இவற்றை இலாப நோக்கங்களுக்காக பெரிய அளவு கொண்டவையாக மாற்றக் கூடாது. இம் மரவள்ளிக் கிழங்கை பிடுங்கி எடுக்கும்போது கிழங்குகள் முறிந்துவிடும். இதைத் தடுப்பதற்காக முதலில் கிளைபோசெட்டை வேரில் தெளிக்கிறார்கள். மண் இறுக்கம் தளர்கிறது. பின்னர் செடியை இழுத்தால் சேதாரமின்றி கிழங்குகள் வெளிவந்து விடுகின்றன!

 

இவ்வாறு விவசாயிகள் தமது வேலை சுலமாக வேண்டும் என்பதற்காக இத்தகைய ஆபத்தான காரியங்களை செய்கிறார்கள். காய்களை பறிக்கும்போது அவை புத்தம் புதியதாக இருக்க வேண்டும் என்பதற்காக பறிப்பதற்கு ஒரு வாரம் இருக்கையிலேயே கிருமி நாசினியை விசிறவும் செய்கிறார்கள். எனவே விவசாயிகள் தமது உடல் நலத்தையும், அவர்களது பொருட்களை வாங்கி உண்ணும் அப்பாவி மக்களின் உடல் நலத்தையும் கவனத்தில் கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்பது அத்துரலியே ரத்தன தேரரின் அவதானிப்பாக இருக்கிறது.

அடுத்தது தேயிலை

இறப்பர் பெரிய மரங்களாகையால் கிளைபோசெட்டின் பாதகத் தன்மைகளை தாக்குப் பிடிக்கும் என்பதோடு அதன் பாலை நான் உண்பதற்கு எடுத்துக் கொள்வதில்லை. எனவே பிரச்சினை கிடையாது. ஆனால் தேயிலைத் தோட்டங்களில் கிளைபோசெட் விசிறப்படும் போது, தேயிலை தளிர்களிலும் அது படத்தான் செய்யும். அந்தத் தளிர்களைத்தான் கொய்து தேயிலைத் துளாக மாற்றப் போகிறார்கள். மேலும் தொழிலாளர்கள் வெறுங் கைகளினாலேயே அந்தத் தளிர்களை கொய்துவிட்டு பின்னர் ரொட்டியை பிய்த்து சாப்பிடுகிறார்கள். உள்ளங்களையில் சீனியை எடுத்து சாயத்தை அருந்துகிறார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொன்னால், மலையக பெருந்தோட்டங்களில் சுவாச, சரும, புற்று நோய்கள் குறைவாகவே காணப்படுவதாக பதில் வருகிறது.

இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. மூக்குக் கவசங்களின்றி பாறாங்கற்களை உடைக்கிறார்கள். புழுதியில் வேலை செய்கிறார்கள். தேயிலைத் தொழிற்சாலைகளில் டஸ்ட் தேயிலையை கையாள்கிறார்கள். கிருமி நாசினிகளை போதிய பாதுகாப்பின்றி விசிறவும் செய்கிறார்கள். கிருமி, களைநாசினிகளை கலக்கும் போது வெளிவரும் இரசாயனங்களை சுவாசிக்கிறார்கள். தெளிக்கப்பட்ட இரசாயனங்கள் கால்களிலும் கைகளிலும் நேரடியாகவே படவும் செய்கிறது.

எல்லாத் தோட்டங்களிலும் போதிய அறிவுறுத்தல்களும், பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படுவதில்லை. இவை எல்லாம் தோட்டங்களில் நிகழ்வதை, நிகழ்ந்து கொண்டுமிருப்பதை அனைவருமே அறிவார்கள். ஆனாலும், பெருந்தோட்டங்களில் காணப்படும் இந்த அலட்சியங்களினால் பாதிப்பு கிடையாது என்று சொல்லப்படுவதை எப்படி நம்புவது? பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ன எஃகு கலந்த உடலமைப்பு கொண்டவர்களா? அல்லது இயற்கையாகவே அபாய இரசாயன எதிர்ப்பு குணத்தை அவர்களது உடல் கொண்டிருக்கிறதா, என்ன?

(மிகுதி அடுத்த வாரம்)

Comments