வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

நமது நிருபர்

 

அரசியல் தீர்வும் இல்லாமல், அபிவிருத்தியும் இல்லாமல் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் தமிழ் உடன்பிற ப்புகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் சீனாவில் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கிருந்து இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய உரிமை சார்ந்த அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் தனது அக்கறையும், ஆர்வமும், ஆவேசமும் எவருக்கும் சளைத்தது அல்லவென்றும் உண்மையில், நவீனமும், ஒழுக்கமும் ஒருங்கே கொண்ட தமிழனான தன்னைக் கண்டு சக தமிழர்கள் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர்,

"நான் ஓர் அரசியல் கற்றுக்குட்டி பள்ளி மாணவன் அல்ல என்பதையும், 1985ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக அரசியல் பரப்பில் இருக்கும் நான், இன்று தமிழ் தேசிய அரசியல் பரப்பில் திருவாளர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகிய இரு பெரியவர்களைத் தவிர, எவருக்கும் "ஜூனியர்" இல்லை என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

"வீட்டுரிமை, நாட்டுரிமை இல்லாமல் வெறும் ஓட்டுரிமையை மட்டும் வைத்து அரசியல் செய்யும் உங்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் உரிமை அரசியல் விளங்காது அமைச்சரே.." என்று "தியாகநிதி என்ற ஒருவர் அமைச்சருக்கு "டுவீட்டர்" பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதற்கு இந்த நொடியில், சீனத்தின் சிசுவான் மாநிலத்து அதிவேக நெடுஞ்சாலையில், மழை பொழியும் வேளையில் வாகனத்தில் பயணிக்கும் நிலையில் அமைச்சரின் மனத்தில், தியாகநிதியின் கருத்து தொடர்பில் தோன்றிய பதிலை அவர் தனது தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உண்மையில் "அரசியல் தீர்வும் இல்லாமல், அபிவிருத்தியும் இல்லாமல் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் தமிழ் உடன்பிறப்புகள் ஏமாற்றப்படுகிறார்கள்" என்ற உண்மை உங்களுக்குத்தான் விளங்கவில்லை.

"யுத்தம் முடிவுக்கு வந்தே பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இனியும் எத்தனை வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும்? என்ற புதிய தலைமுறை தமிழனின் கேள்விக்கு பதில் உங்களிடம் இல்லை" என்பதுகூட உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments