றெஜினா யாரிடம் நீதி கோருவது? | தினகரன் வாரமஞ்சரி

றெஜினா யாரிடம் நீதி கோருவது?

மத்திய அரசின் நிர்வாக பொறிமுறை  வாளாவிருக்கின்றதா?

விசு கருணாநிதி

 

யாழ்ப்பாணத்தில் தற்போது நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்தால், 'அவர்கள்'இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்ற பாமரத்தனமாக கேள்வி இயல்பாக எழுப்பப்படுகிறது. எல்லாவற்றுக்கும் 'இவர்கள்'தான் காரணம் என்றும் யாழில் போதைப்பொருள்களைப் பரப்பியதால் ஏற்பட்ட துன்பியல் விளைவு என்றும் ஒரு சாரார் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அவர்கள் இருந்திருந்தால்! என்ற ஆதங்கக் கேள்வியின் உள்ளார்த்தம், தமிழ்ச் சமூகத்தை எப்போதும் ஓர் ஆயுதக்குழு, கலாசாரச் சீரழிவுகள், சமூக விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி; வழி நடத்திக்ெகாண்டிருக்க வேண்டும் என்பதா? என்ற கேள்வியும் எழவே செய்கிறது. அதாவது, எந்தத் தரப்பாக இருந்தாலும் மிரட்டி, அடக்கி வைத்திருப்பதன் மூலம்தான் ஓர் ஒழுங்கைப் பேண முடியுமா?

கட்டுக்ேகாப்புக்கும் கலாசார விழுமியத்திற்கும் பேர்போன ஒரு சமூகம், இன்று நீதிகோரி வீதிக்கு இறங்கியிருக்கிறது. அதுவும் கற்றறிந்த கல்விச் சமூகம், சாமானிய சிவில் சமூகத்துடன் இணைந்து இன்று நீதியைத் தேடிக்ெகாண்டிருக்கிறது!

போர் முடிவடைந்தவுடன் இராணுவத்திற்கு வடக்கில் இனிப்பணியில்லை, வெளியேற்றிவிட்டுச் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துங்கள் என்று பல தரப்பினரும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால், என்ன நடந்தது? இராணுவம் இல்லாமல், யாழ்ப்பாணத்தில் அமைதியையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாது எனும் அளவிற்கு அடாவடித்தனங்கள் அதிகரித்தன. ஆவாயன் குழுவினர் தமது கைங்கரியங்களைச் சாதாரண மக்கள் மீது காண்பிக்கத் தொடங்கினர். அனலைத்தீவு, புங்குடுதீவு முதலான இடங்களில் அக்கிரமங்கள் உச்சத்தைத் தொட்டன. இவற்றுக்ெகல்லாம் காரணம் வெளிநாட்டுப் பணமும் தமிழ்ச் சினிமாவும் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆவாயன் குழுவினர் சினிமாப்பாணியில் கலகத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று பொலிஸ் தரப்பினரும் கண்டுபிடித்துக்கூறினர்.

இந்நிலையில் வடபகுதியிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து இயங்கும் இணையத்தளங்களில் செய்திகளுக்கு அடுத்ததாக 'சமூகப் பிறழ்வு' என்ற தனிப்பிரிவை வைக்கும் அளவிற்குக் காலாசாரச் சீரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பிரிவிற்கு நாளாந்தம் செய்திகளை நிரப்பும் அளவிற்குச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எங்கே போய்க்ெகாண்டிருக்கிறது கல்விச் சமூகம்?

பொதுவாக, நிர்வாகப் பொறிமுறையிலும் சரி அன்றாட வாழ்க்ைகயிலும் சரி சட்டத்தைத் திறம்பட மதித்து ஒழுகுபவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் என்று வரலாற்று ரீதியாக இருந்து வரும் மதிப்பும் மரியாதையும் எவ்வாறு அந்நியப்பட்டுப்போனது? தமிழகச் சினிமாவைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவிற்குத் தமிழ் இளைஞர்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது எது?

இளைஞர், யுவதிகள் போகின்ற போக்கில் விடப்பட்டால், அவர்களுக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான மாற்றுச் சிந்தனையும் தோன்றவே தோன்றாது, தாயகம், தனியரசு, மண்ணுரிமை என்று எந்தவித தனித்துவ உணர்வும் ஏற்படாது; மொத்தத்தில் உணர்வு மழுங்கிப்போய்விடுவார்கள். காமமும், களியாட்டமும் அவர்களைப் போராட்ட உணர்விலிருந்து விலக்கிவைத்துவிடும். எனவே, எது நடந்தாலும் கண்டுகொள்ளாத ஒரு பொடுபோக்குத்தனம் யாழ்ப்பாணத்தின் நிர்வாக இயந்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று சித்தசுவாதீனத்துடன் சிந்திக்கின்ற இளைஞர், யுவதிகள் கருத்து கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, யாழ்ப்பாணத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற எந்தவொரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பும் (நீதிமன்றத்தைத் தவிர) முறையாகச் செயற்படுத்தப்படுவதில்லை என்று இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மானிப்பாய் சம்பவம் பற்றிப் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் தாமதித்தே வந்ததாகக் கூறப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், "அடிபட்டுச் சாகுங்களடா" என்ற ஓர் அலட்சியப்போக்கு சட்டத்தை நிலைநாட்டுவோரிடம் அழுத்தமாகக் காணப்படுவதாக இளைஞர், யுவதிகள் குறைபடுகிறார்கள்.

அதேநேரம், கலாசாரச் சீரழிவையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்துமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் பாதுகாப்புத் தரப்பினருக்குக் கடும் உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வீதிச் சோதனை உள்ளிட்ட செயற்பாடுகளைப் பொலிஸாரும் படையினரும் தீவிரப்படுத்தினார்கள். அப்போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சில வெறுக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்தன. மீண்டும் படையினருக்கும் பொலிஸாருக்கும் எதிரான குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கின.

ஒருபுறம், சட்டமும் நீதியும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு. மறுபுறம், இராணுவம் வேண்டாம், எங்கள் விவகாரத்தில் படையினரோ பொலிஸாரோ சம்பந்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டனம். பிறகு அவர்கள் தமது போக்கில் சென்று சாதாரண பொதுமக்களை வென்றெடுக்கும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வெற்றியும் காண்கிறார்கள். முல்லைத்தீவில் ஓர் இராணுவ வீரர் பொதுமக்களை வெற்றிகொண்டிருந்த அளவிற்கு, தமிழ் மக்களின் மாநில அரசாங்கம் வெற்றிகொண்டிருக்கிறதா?

மத்திய அரசுதான் கைவிட்டுவிட்டது என்றால், மாகாண அரசு அந்த வெற்றிடத்தை நிரப்பி வருகிறதா? இரண்டுமே நடந்ததாக இல்லையே! அப்படி நடந்திருக்குமாயின் யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற சீரழிவை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தியிருக்க முடியாதா? கல்விச் சமூகம் நீதிகோரி வீதிக்கு இறங்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?

யுத்தம் நடைபெற்றபோது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தவறுகளைப் படையினர் இழைத்ததாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. அஃது இசைப்பிரியாவாக இருக்கட்டும் அல்லது வேறு பெண்களாக இருக்கட்டும், அவை யுத்தகாலத்தில் நடந்த சம்பவங்கள். ஆனால், கிரிஷாந்தி குமாரசாமி போன்ற பெயர்களுக்குப் பின்னர், பரபரப்பாகப் பேசப்படுகின்ற பெயர்களை உருவாக்கியவர்கள் யார்?

புங்குடுதீவு வித்தியாவிற்குப் பின்னர் வடக்கில் இன்னும் எத்தனை வித்தியாக்கள்? இப்போது றெஜினா! இதற்கெல்லாம் காரணம் இராணுவமும் பொலிஸும் என்று சொல்லித் தேற்றிக்ெகாள்ள முடியுமா? சட்டமும் தண்டனையும் இறுக்கமாகப் பேணப்படாவிட்டால், தமிழ்ச் சமூகத்தில் இப்படித்தான் நிகழுமா; நிகழவேண்டுமா? என்ற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது?

ஒன்று, நாட்டின் சட்டத்தையும் நீதியையும் மதித்து, அதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க ​வேண்டும். இல்லையேல், தாமாகச் சிந்தித்துத் திருந்திக்ெகாள்ள வேண்டும். நம்மை நாமே ஆள வேண்டும் என்றும் நம்மை நாமே நிர்வகிக்க வேண்டும் என்றும் கோரிக்ைக விடுத்துக்ெகாண்டு, ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, நீதியை யாரிடம் போய் பெற்றுக்ெகாள்ளப்போகிறோம் என்பது ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

யாழில் இடம்பெற்ற ஓர் ஈனச் செயலுக்குப் பலியான இறுதிப்பெயராக றெஜினா இருக்கட்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரோ படையினரோ அல்லாமல், அது சொந்தச் சமூகமாக இருக்க வேண்டும்.

மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக அடிபட்டு; மிதிபட்டு; நொந்து நூலாகிப்போய் மீண்டெழுந்துகொண்டிருக்கும் மக்களைச் சொந்தச் சமூகத்தவர்களே மிதித்து நசுக்கும் செயலை முற்றாக நிறுத்தியாக வேண்டும். இதற்கு இளைஞர், யுவதிகள் சிந்தித்துச் செயலாற்றுவதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கு முன்வரவேண்டும்.

Comments