உலகக்கிண்ண கால்பந்து நொக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சம்பியன்கள் | தினகரன் வாரமஞ்சரி

உலகக்கிண்ண கால்பந்து நொக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சம்பியன்கள்

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரின் நொக்-அவுட் சுற்றுக்கு ஏற்கனவே சம்பியன் பட்டம் வென்ற ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன.

21வது பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டி தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடு த்த நொக்- அவுட் சுற்று க்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14-ம் திகதி தொடங்கி, நேற்றுமுன்தினம் முடிவடைந்தது.

லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்த்துக்கல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, ஆர்ஜண்டினா, ‘ஈ’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘எப்’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘ஜி’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘எச்’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதன்மூலம் முன்னாள் உலக சம்பியன்களான பிரேசில், ஆர்ஜன்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த உலகக்கிண்ணத்தில் ‘எப்’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன், பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. நான்கு முறை உலகக்கிண்ணத்ததை வென்றுள்ள இத்தாலி அணி உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவில்லை.

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 2006-ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி, 2010-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2010-ம் ஆண்டு வென்ற ஸ்பெயின், 2014-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014-ம் ஆண்டு வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. முன்னதாக 1998-ம் ஆண்டு உலகக்கி்ண்ணத்தை வென்ற பிரான்ஸ், 2002-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நொக்-அவுட் சுற்று போட்டிகள் நேற்றுஆரம்பமானது. நேற்று ஆரம்பமான போட்டிகளில் பிரான்ஸ் - ஆர்ஜன்டினா, உருகுவே - போர்த்துக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 

Comments