உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய உலக சம்பியன்கள் | தினகரன் வாரமஞ்சரி

உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய உலக சம்பியன்கள்

எம். பஸ்ரிப்  

தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்தகதையாக உலகக் கிண்ண கால்பந்து கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியா வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. உலகின் முதல்நிலை அணியாகவும்,நடப்புச் சம்பியன் அந்தஸ்த்துடனும் இருந்த ஜேர்மனி ஏமாற்றத்துடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

உலகக் கிண்ண கால்பந்து சம்பியன்கள் முதல் சுற்றோடு வெளியேறும் மோசமான வரலாறு கடந்த இருபது வருடங்களாக தொடர்கிறது. இதில் இறுதியாக 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால் பந்தாட்ட இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வென்று சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனி இந்தமுறையாக முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது.

'எப்'பிரிவில் நடைபெற்ற கடைசிலீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஜேர்மனி அணி,உலக கால்பந்து தரவரிசையில் 57ஆவது இடத்தில் உள்ள ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது.

இதில் வெற்றிபெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜேர்மனி அணி களம் கண்டது. நடப்பு சம்பியனும்,உலகின் முதல் நிலை அணியுமான ஜேர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்தப் போட்டிதொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜேர்மனி கருதப்பட்டது.

ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணிதன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.

அந்தஅணியினர் அதிகநேரம் பந்தைதன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரைகோல் அடிக்கமுடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜேர்மனி அணியினர் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்காப்பாளர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜேர்மனி வீரர்களின் 20இற்கும் மேற்பட்ட ஷொட்களை முறியடித்து சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

கோல் எதுவும்பெற்றுக் கொள்ள முடியாது தவித்த ஜேர்மனி அணியினர் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா அணியினர் சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் உபாதையீட்டு நேரத்தில் தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

வெற்றிபெற்றேயாக வேண்டிய நிலையில் இறங்கிய ஜேர்மனி,தென் கொரியாவிடம் கடை சிநிமிட கோல்களில் 2--0 என்று உதை வாங்கி வெளியேறியது.

1938 க்குப் பிறகு அதாவது 80 வருடங்களுக்குப் பிறகு ஜேர்மனி உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

அதேபோல் கடந்த 5 உலகக் கிண்ணப் போட்டித்தொடர்களில் கடந்த முறை உலகக் கிண்ண சம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிய வரலாற்றுப் பட்டியலில் ஜேர்மனியும் இடம்பிடித்தது.

உலகக் கிண்ணத்திலிருந்து முதன் முறையாக முதல் சுற்றோடுவெளியேறிய நடப்புச் சாம்பியன இத்தாலி அணி தான். கடந்த 1934, 1938ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் அந்த அணி உலச் சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இரண்டாவது உலகப் போர் காரணமாக 12 வருடங்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவில்லை. மீண்டும் 1950ஆம் ஆண்டு பிரேசிலில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெற்றது.

1949ஆம் ஆண்டு இத்தாலியில் டொரினா கால் பந்து அணி வீரர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிஅனைத்துவீரர்களும் உயிரிழிந்தனர். விமானப் பயணத்துக்கு பயந்த இத்தாலி அணி கப்பல் மூலம் பிரேசில் வந்து சேர்ந்தது. முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணியிடம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் தோற்றது. அடுத்து பரகுவே அணியிடம் 2-0 என்று வெற்றிபெற்றாலும், ஸ்வீடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற, இத்தாலி சோகத்துடன் நாடு திரும்பியது.

Comments