எல்லை நிர்ணய பிரச்சினை தீர்ந்தால் டிசம்பரில் தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

எல்லை நிர்ணய பிரச்சினை தீர்ந்தால் டிசம்பரில் தேர்தல்

மாகாண எல்லை நிர்ணய பிரச்சினைகளுக்கு தீர்வு பெறப்பட்டால் டிசம்பர் 15ஆம் திகதி மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர், தேர்தல், ஆணைக்குழு உறுப்பினர், எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையையடுத்தே அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிழக்கு, வடமத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதையடுத்து அவற்றுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மாகாண சபைகளின் எல்லை நிர்ணயத்துக்குரிய சட்டரீதியான நடவடிக்கைகள் இன்னும் இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்ய முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,

எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதால் அதனை மீண்டும் ஆராய வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தெரிவித்துள்ளன என்றும் தெரிவித்தார். மாகாண சபை கூட்டத்தின் பிரகாரம் இதனை இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லை நிர்ணய அறிக்கை மீண்டும் ஆய்வுக்காக தொழில்நுட்ப உதவிகளை பாராளுமன்றத்துக்கு பெற்றுக் கொடுக்கதான் ஆயத்தமாக இருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன் போது தெரிவித்தனர்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான வாக்காளர் இடாப்பில் வேலைகள் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஆகும் போது பூர்த்திசெய்ய முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட கட்சிகளின் பெரும்பான்மையாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்ற நோக்கமே உள்ளது என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

Comments