எல்லை மீள்நிர்ணய வாய்ப்பை சரிவர பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் | தினகரன் வாரமஞ்சரி

எல்லை மீள்நிர்ணய வாய்ப்பை சரிவர பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்

 எம. ஏ. எம். நிலாம்   

மாகாண சபைத் தேர்தல்களை 2019 ஜனவரி மாதத்தில் நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கும் அதே சமயம், இவ்வருட இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளைப் பணித்திருக்கின்றார். எவ்வாறாயினும் அடுத்த ஆறு மாதங்களுக்கிடையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறுவது உறுதியானது என அறிய முடிகின்றது. இத்தேர்தல்களை நடத்தும் முறை குறித்து இன்னமும் தீர்க்கமான முடிவுவெதுவும் எட்டப்படவில்லை. எல்லை நிர்ணய செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுறாத நிலையில் புதியமுறையில் தேர்தலை நடத்துவது சாத்தியப்பட முடியாத நிலை காணப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க மாகாண சபைத் தேர்தலைப் புதிய முறையிலேயே நடத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் பழைய விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென்பதில் சகல தரப்பினரும் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
மாகாண சபைத் தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுமானால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்கப்படலாமென பரவலாகவே பேசப்பட்டு வருகின்றது. புதிய முறையில் நடந்தால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகும் நிலையே ஏற்படலாமென பிரதியமைச்சர் பைசல் காசிம் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற கோஷம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு புதியமுறையா, பழைய முறையா என்பது குறித்து பலகேள்விகள் எழுந்துள்ளன.
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம்கள் தமது கைகளைக் சுட்டுக்கொண்டது போன்று இதிலும் நடப்பது தவிர்க்க முடியாது போகலாம். சூடுகண்ட பூனைகளான முஸ்லிம்களை மற்றொரு தடவை அடுப்புக்குள் தள்ளிவிடும் முயற்சிக்கு முஸ்லிம் சமூகம் துணைபோய் விடக் கூடாது என்பதை எச்சரித்து வைக்கின்றோம். இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்றி ஒன்றுபட வேண்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை, அரசியல் பிரதி நிதித்துவத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்வதில் முதலில் நாம் ஒன்றுபட வேண்டும். சமூகத்தின் உரிமையை பாதுகாப்பது ஒவ்வொருவரதும் தார்மீகக் கடப்பாடாகும்.
இலங்கை முஸ்லிம்கள் தாங்கள் வாழ்கின்ற மாகாணங்களின் எல்லைகள், தேர்தல் தொகுதிகளின் எல்லைக்கோடுகளைச் சரியாக நிர்ணயித்துக் கொள்வதற்கான தருணமாக இதைக கருத முடியும்.
எற்கனவே காணிப் பற்றாக்குறை, அரசியல், அபிலாஷைகளைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல் உள்ளடங்கலாக ஏகப்பட்ட பிரச்சிளைகளுக்கு முஸ்லிம்கள் முகம்கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் தங்களது எல்லைக் கோடுகளைக் கருத்திற்கொண்டு தமது அரசியல் பிரதிநிதித்துவத்தையும் குறைத்துக் கொள்வதா என்பதைச் சிந்தித்து எல்லை மீள்நிர்ணய அறிக்கையை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
கடந்த பல வருடங்களாக நாட்டில் சட்டமூலங்கள், சட்டத்திருத்தங்கள், முறைமை மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வேளையில் முஸ்லிம் மக்கள் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும் கூட எல்லாம் தெரிந்திருந்தவர்களாகத் தம்மைக் காட்டிகொள்ளும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும், எம். பிக்களும் ஒரேயொரு சட்ட ஏற்பாட்டைத் தவிர, மற்றெல்லாவற்றுக்கும் ஆதரவளித்தனர்.
மேலோட்டமாகப் ‘பிழை’ என விளங்கிய பல விவகாரங்களை, விளங்கியோ விளக்காத காரணத்தாலோ அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தாலோ, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அங்கத்தவர்கள் ஆதரவளித்த வரலாறு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.
அந்த சட்டமூலங்களில் ‘சரி’ காண்பவர்களாக இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள், ஓரிரு மாதங்களுக்குள்ளேயே தமது நிலைப்பாட்டை மாற்றி, அந்தச் சட்டமூலம் அல்லது திருத்தம் முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்பொழுது வகுக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்கும் போது மாகாணங்களுக்குள் உள்ளடங்கும் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை, மீள்வரையறை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்திலான மீள் நிர்ணயமோ அல்லது ஏற்பாடோ இல்லை என்பது, எதிர்கால முஸ்லிம் அரசியலுக்கு மிகவும் ஆபத்தானதும் பாரதூரமானதும் ஆகும்.
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11) பிரிவைத் திருத்தி 2017 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்ட அறிக்கையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தது.
இந்த அறிக்கையில், உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களுக்கும் ​ெபருமளவில் பிரதிநிதித்துவ இழப்பைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திலோ, அதற்குப் பிறகோ புதிய இயல்பு முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக சிறுபான்மை பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும்.
எனவே, இலங்கைச் சமூகங்கள் இன ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள யதார்த்த அரசியல் சூழலில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு தொகுதியிலேயே, முஸ்லிம் பிரதிநிதித்துவம் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும் என்பது வெளிப்படையானது.
தமிழர்களோ, சிங்களவர்களோ பெரும்பான்மையாகவும் முஸ்லிம்கள் சிறு அளவிலும் வாழ்கின்ற தொகுதிகளில் அவ்வாறான சாத்தியங்கள் இல்லை.
இதேவேளை, வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக அதிகமாக வாழும் ஒரு தொகுதியில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக விகிதாசாரப் பட்டியலில் இடம்கிடைப்பது முடவனுக்கு கொம்புத்தேன் ஆசைப்படுவது போலவே வந்து முடியும்.
எனவேதான் இன்றுள்ள முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்படாத விதத்தில், தேர்தல் முடிவுகள் அமைய வேண்டுமென்றால், எல்லை நிர்ணயம் அதற்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும்.
அந்தவகையில் தொகுதி மற்றும் மாகாண எல்லை மீள்நிர்ணயத்தில் இரண்டு முன்மொழிவுகளைச் செய்வதன் மூலம், அதைச் சாத்தியமாக்க முடியும் என்று துறைசார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
1. முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளை நாட்டில் பரவலாக (குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியே) உருவாக்குதல்
2. பல இனங்களைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக பல்லங்கத்தவர் தொகுதிகளை பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வரவேற்கத்தக்கதாகும். தற்போதைய எல்லை நிர்ணய அறிக்கை மேற்சொன்ன அடிப்படையில் அமையப்பெறவில்லை என்பதை முஸ்லிம்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
எனவே, பிரதானமாக வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள (சிங்கள, தமிழ் பெரும்பான்மை) தொகுதிகளில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் அழுத்தமாகச் சொல்லி வருகின்றனர்.
மாகாணங்களில் எல்லை மீள் நிர்ணயக் குழுவில், ஐந்து பேர் உள்ளடங்கியிருந்தனர். சமூகச் செயற்பாட்டாளரும், புவியியல் பேராசிரியருமான எஸ். எச். ஹஸ்புல்லாஹ் மட்டுமே முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கப்பட்டார்.
இது ஓரளவுக்கு ஆறுதலான செய்திதான் என்ற போதிலும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் கணக்கிலெடுக்கப்படவில்லை என்ற செய்தி கிடைத்ததும், அந்த ஆறுதல் கவலையாக மாறிவிட்டது.
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகள், பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தட்டிக்கழிக்கப்பட்டன. இதனால் அவர் பல தடவைகள் இக்குழுவில் இருந்து விலக்கிக்கொள்ள முயன்றது பகிரங்க நாடறிந்த இரகசியமாகும்.
அது மட்டுமல்லாமல், கடைசி அறிக்கையில், தமது பரிந்துரைகள் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் தெரியவந்ததும், உடனடியாகத் தன் பங்குக்குத் தனியாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்து, முஸ்லிம் சமூகம், அவர் மீது சுமத்திய பொறுப்பை ஹஸ்புல்லாஹ் நிறைவேற்றியிருக்கிறார்.
தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்ற இழுபறி ஒருபுற மிருக்க எல்லை நிர்ணயக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாகவும் பல தரப்பிலும் அதிருப்தி நிலவுகின்றது.
இப்பின்னணியில், நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
ஆனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளோ, பல்லங்கத்தவர் தொகுதிகளோ முன் மொழியப்படாத நிலையில் வேறு எத்தகைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதும் முஸ்லிம் சமூகம் திருப்பதியடையப் போவதில்லை.
கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின் பிரகாரம் எல்லை நிர்ணய அறிக்கையில் மொத்தமாக 222 தொகுதிகளை உருவாக்க முன்மொழியப்படடுள்ளது. இதில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 13 தொகுதிகளே பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் 9.7 சதவீதமாக வாழும் இரண்டாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு 6 சதவீதமான உறுப்புரிமை கூட முன்மொழியப்படவில்லை என்பது சாதாரண தவறல்ல.
இந்தத் தவறு திருத்தியமைக்கப்படாமல் மேற்படி அறிக்கையில் பெரிய மாற்றங்கள் இன்றி சட்டவலுப்பெறுமாக இருந்தால், விகிதாசார முறைப்படி அல்லாமல், தொகுதிவாரி முறையில் அல்லது கலப்பு முறையில் தேர்தல் ஒன்று நடைபெறக்கூடியதாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலிலும் இதன் பாதிப்பு நிச்சயமாக இருக்குமெனக் கூறலாம்.
எனவே முன்னைய காலங்களில் சட்ட மூலங்களை ‘ஏதோ’ காரணங்களுக்காக ஆதரித்தது போல அல்லது எதுவும் பேசாமல் வாய்மூடி இருந்தது போல, எல்லை மீள் நிர்ணய விடயங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பொடுபோக்காக இருக்கக் கூடாது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவின் ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்படலாம் என்பதை முன்னுணர்ந்து முஸ்லிம் எம்.பிக்கள் மூலோபாய ரீதியாகத் தமது ‘பிடியை’ இறுக்க வேண்டும்.
‘ஒன்றுக்கும் பயனற்றவர்கள்’ என்ற விமர்சனங்கள் காணப்பட்டாலும் இன்று நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்களும், காலம் முடிந்த மற்றும் காலாவதியாகவுள்ள மாகாண சபைகளில் முஸ்லிம் உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
இவ்வளவு பேர் இருந்தும் முஸ்லிம்களுக்கு இத்தனை அநியாயங்கள் நடக்கின்றன என்றால் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதனூடாக அரசியல் அதிகாரமும் குறையும் என்றால்.... முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்துச் செயற்படுவது நல்லது.
 

Comments