தமிழர் என்பதற்காக விஜயகலாவை நாம் எதிர்க்கவில்லை | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் என்பதற்காக விஜயகலாவை நாம் எதிர்க்கவில்லை

ஷம்ஸ் பாஹிம்  

 

புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என்ற சிறுவர், மகளிர் விவகார ராஜாங்க அமைச்சரின் கருத்து அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் பெரும் அதிர்வையும் ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கட்சிகள் அபிப்பிராயும் கூறிவரும் நிலையில் அவர் தமது அமைச்சு பதவியை கூட ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரத்தினால் கடந்த வார அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு குறித்து ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவுடன் நடத்திய நேர்காணல்.

--கேள்வி: ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புலிகள் தொடர்பான கருத்தினால் கடந்த வார பாராளுமன்ற அமர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிரணி சபை நடுவில் திரண்டு போராட்டம் நடத்தியதோடு செங்கோலை அபகரித்து தமது எதிர்ப்பை கடுமையாக முன்வைத்திருந்தது. ஆனால் ஜே.வி.பி இதில் பங்கேற்கவோ சபையில் கருத்து கூறவோ இல்லை.ஜே.வி.பி எந்த நிலைப்பாட்டை கொண்டிருந்தது?

பதில் : விஜயகலாவின் கருத்தை எமது கட்சி முழுமையாக கண்டிக்கிறது. அன்றைய தினம் நாம் பாராளுமன்ற குழு அறையில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம்.

கட்சியின் கலாசாரம் மற்றும் கட்சியுடைய முடிவுகளுக்கமைய தான் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றபோது நாம் ஊர்வலம் சென்றோம். கண்ணீர் புகை வீசி கலைத்தார்கள். ஆனால் ராஜபக்‌ஷவினர் எதுவும் செய்யவில்லை.

எமது கட்சி நடந்து கொள்ளும் விதமொன்றிருக்கிறது. எதிர்ப்பு காட்டுவதற்காக நாம் சபாநாயகரை கெட்டவார்த்தையினால் திட்டுவது கிடையாது. கட்சி கொள்கை மாற்றும் மற்றைய தரப்பின் செயற்பாடு என்பவற்றுக்கு ஏற்பவே நாம் செயற்படுவோம்.

புலிகளுக்கு எண்ணெய் இழுத்தவர்கள், புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர்கள், அதற்கு உதவியவர்கள் பாராளுமன்றத்தில் விஜயகலாவுக்கு எதிராக அன்று போராட்டம் செய்தார்கள்.

பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். மஹிந்த,தான் ஜனாதிபதியாக வர புலிகளுக்கு பணம் கொடுத்து தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்தார். ரணில் பிரதமராக இருந்த போது புலிகளுக்கு தொலைத் தொடர்பு உபகரணங்கள் வழங்கினார். கடந்த ஆட்சியில் புலி முக்கியஸ்தர்கள் எந்த வழக்கு விசாரணையும் இன்றி அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் செயற்பட்டார்கள்.

இந்த நிலையில் கனவில் திடீரென எழுந்தது போன்று நாம் விஜேகலாவின் உரையை நோக்கவில்லை. அவர் அற்ப அரசியல் லாபம் கருதி இவ்வாறு கருத்து முன்வைத்திருந்தார். அது தவறு என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

விஜயகலாவை விட பல ஆயிரம் மடங்கு புலிகளுக்கு உதவியவர்கள் நாட்டில் இருந்துள்ளனர்.இன்றும் இருக்கவே செய்கின்றனர். நாம் கனவில் எழுந்தவர்கள் ​போன்று செயற்படுவதில்லை.

கேள்வி: சீனாவிடம் இருந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்ற விவகாரத்தை மூடி மறைக்கவே விஜயகலாவின் விவகாரத்தை ஒன்றிணைந்த எதிரணி பூதகரமாக்கியதாக பிரதமர் கூறியிருந்தார். இந்த கருத்தை ஏற்கிறீர்களா?

பதில் : இல்லை. விஜயகலாவின் உரைக்கு மறுநாள் ஐ.தே.க செயற்குழு கூட்டம் நடந்தது. இங்கு இந்த விடயம் குறித்து பேசி தேவையான நடவடிக்கை எடுத்திருக்கலாம். பாராளுமன்றத்தில் சிலர் குழப்பம் ஏற்படுத்துவதற்கு முன்னதாகவே அரசாங்கம் இதற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை சபையில் அறிவித்திருக்கலாம். அவ்வாறு நடக்க அரசாங்கம் தவறியதால் தான் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்கான பின்னணி உருவானது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியின் நிவ்யோர்க் டைம்ஸ் செய்தியை திசை திருப்பும் உள்நோக்கம் இருந்திருக்கலாம். அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாததால் தான் எதிரணிக்கு இதனை குழப்ப வாய்ப்பு உருவானது.

கேள்வி: யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்பட்டது. ஆனால் புலிகள் இருந்த காலத்தை விட இன்று அதிகளவில் துஷ்பிரயோகங்கள், கொலைகள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதனால் தான் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று கருத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து..?

பதில் : இதனை ஏற்க முடியாது. வித்யாவின் கொலை தொடர்பில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நானும் விஜயகலா மகேஸ்வரனும் ஒரு தடவை கலந்து கொண்டிருந்தோம். புலிகள் இருந்திருந்தால் இவ்வாறான கொலைகள் நடந்திருக்காது என இதற்கு முன்னரும் அவர் கூறியிருந்தார். வித்யா கொலை செய்யப்பட்டு 5 நாட்களின் பின்னர் நானும் முன்னாள் எம்பி சந்ரசேகரனும் புங்குடுதீவிற்கு சென்றிருந்தோம். வித்யாவின் தாயாருடன் பேசிய போது அவர் பல விடயங்களை எம்மிடம் கூறினார். 2008/2009 காலப்பகுதியில் தாம் கிளிநொச்சி பகுதியில் இருந்ததாக கூறிய அவர் அக்காலப் பகுதியில் வித்யாவின் மூத்த சகோதரி பல்கலைக் கழகம் சென்று வந்ததாக தெரிவித்தார். பல்கலைக்கழகம் செல்ல எடுத்துச் செல்லும் அந்த உடைப்பெட்டி காரணமாகத்தான் அவர் புலிகளிடம் இருந்தும் இராணுவத்திடம் இருந்தும் தப்பியதாக அவர் எம்மிடம் கூறியிருந்தார்.

புலிகள் சிறுவர்களை கடத்தி படையில் சேர்த்ததற்கு எதிராக பெற்றோர் புலிகளுக்கு முன்பாக நஞ்சருந்தி தமது எதிர்ப்பை வெ ளியிட்ட வரலாற்றை மறக்க முடியாது. எமது அமைப்பாளராக கணேசபிள்ளை வடக்கில் பல சிவில் அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர். அவரின் மகனை புலிகளுக்கு வழங்காததற்காக அவர் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிள்ளையான் கூட சிறுவனாகத்தான் புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்டார்.

விஜயகலா தூக்கத்தில் எழுந்தது போன்று பேசுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தமிழினியின் புத்தகத்தை வாசித்தால் புலிகள் செய்த அநியாயங்களை அறியலாம்.

வித்யா வழக்கு தீர்ப்பில் பிரதான சந்தேக நபருக்கு விஜயகலா உதவியது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவியவர் சிறுவர் பற்றி ​பேசுகிறார்.

கேள்வி : இந்தப் பிரச்சினையையடுத்து அவர் தனது அமைச்சுப் பத வியை ராஜினாமா செய்துள்ளார் இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்.

பதில்: சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட போதே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது நீக்கப்பட்டிருக்கவேண்டும். இது பற்றி வித்யா வழக்கு தீர்ப்பின்போது நான் இந்த கருத்தை கூறியிருந்தேன்.

கேள்வி : ராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறிய கருத்தை ஒத்த கருத்துக்களை வடமாகாண முதலமைச்சரும் வடக்கிலுள்ள சில தமிழ் தலைவர்களும் முன்னர் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் கூறியவுடன் இதனை பூதகரமாக்குவதன் பின்னணியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் நோக்கமே மேலோங்கி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து...?

பதில் : இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்றரை வருடங்கள் கடந்தும் அராசாங்கம் வட பகுதி மக்களுக்கு காத்திரமான எந்த சேவையும் செய்யவில்லை. தொழில் வாய்ப்புகள் அளிக்கவில்லை. மூடியுள்ள பூநகரி, பரந்தன் தொழிற்சாலைகளை மீள திறக்கவும் இல்லை. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்கவில்லை. இறந்த புலி உறுப்பினர்களின் பிரேதங்களை விற்றுப் பிழைக்கும் அரசியல்வாதிகள் சிலர் வடக்கில் செயற்படுகிறார்கள். யுத்தகாலத்தில் விக்னேஷ்வரன் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் பற்றி பேசவோ குரல் கொடுக்கவோ இல்லை.

புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதி மக்களின் வாக்குகளை இலக்கு வைத்துத்த தான் இவ்வாறான புலிக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் மாற்று அரசியல் எதுவும் வடக்கில் உருவாகவில்லை. அதனால் யுத்தம் நடந்த போது புலிகளுக்கு எதிராக பேசியவர்கள் இறந்த புலிகளின் உடலை விற்று அரசியல் லாபம் பெற முயல்கிறார்கள்.

வடக்கில் மீண்டும் புலிகள் உருவாக மாட்டார்கள் என்பதை உறுதியாக கூற முடியும். மீள தூக்கி நிறுத்த முடியும். 95 வீதமான வடக்கு மக்கள் யுத்தம் மீண்டும் வருவதை விரும்பவில்லை. புலிகளுக்கு தமது பிள்ளைகளை வழங்க அவர்கள் தயாராக இல்லை.

கேர்ணல் ரத்னப்பிரிய போன்ற அரசியல் சமூக தலையீடு தான் வடக்கிற்கு அவசியம். இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால் தான் வடக்கில் சிலர் இதனை பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர். மக்கள் யாராவது புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அதனை தடுக்க முடியாது. ஆனால் ராஜாங்க அமைச்சர் ஒருவர் புலிகள் பற்றி கூறியிருப்பதை அங்கீகரிக்க முடியாது.

அந்த கருத்து முன்வைக்கப்பட்டவுடன் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சிலர் இதனை பயன்படுத்தி அரசியல் லாபம் பெறவும் இனவாதமாக செயற்படவும் எடுத்த முயற்சியை தடுத்திருக்கலாம்.

வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து நாம் விஜயகலா மகேஸ்வரனின் உரையை நிராகரிக்கவில்லை. முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உதவி வழங்க வேண்டும். அவர்கள் பிறப்பால் அன்றி சமூக நிலைமைகள் காரணமாக தான் புலிகளாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தொழில் வழங்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

ஆனால் கடும் போக்குள்ள இனவாத குழுக்கள் விஜயகலாவின் விவகாரத்தை பயன்படுத்தி லாபம் பெற முயன்றார்கள்.

கேள்வி : வட பகுதியில் இவ்வாறான கருத்துகளை தடுக்கவும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் வடபகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பது உசிதமானது என கருதவில்லையா?

பதில் : தெற்கில் தேசிய கொடியையும் இராணுவத்தையும் காண்பித்து அரசியல் லாபம் பெறுகின்றனர். வடக்கில் செய்வதை தான் தெற்கிலும் செய்கிறார்கள். புலிகளை காட்டி வடக்கில் அரசியல் செய்வதை போன்றே தெற்கில் படையினரை காட்டி அரசியல் செய்வதையும் தோற்கடிக்க வேண்டும். அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளங்காண்டு தீர்க்க முன்வரவேண்டும்.

Comments