வலியைச் சுமக்கும் சமூகமொன்றின் மனங்களை வெல்லாததன் கோபாவேசம் | தினகரன் வாரமஞ்சரி

வலியைச் சுமக்கும் சமூகமொன்றின் மனங்களை வெல்லாததன் கோபாவேசம்

இலங்கையில் தமிழர்களின் அரசியல் சர்ச்சைகளும் பரபரப்புகளும் நிறைந்ததாய் அண்மைக் காலங்களில் மாறிவிட்டது. அவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன், மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வரிசையில் இப்போது இணைந்துகொண்டுள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

அண்மையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நாடெங்கும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளன. வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் வாள்வெட்டுச் சம்பவங்கள், கொலை கொள்ளைச் சம்பவங்கள் புலிகளின் மீள் வருகையின் அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் பேசியதே எல்லோர் விமர்சனத்துக்கும் ஆளாகியிருப்பது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் பற்றி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி தோற்றுவித்திருந்த அதிருப்தி அலைகளையும் தூக்கியெறிந்துள்ளது.

அவ்வாறு முழு நாடுமே கொந்தளிக்கும் அளவுக்கு என்னதான் சொல்லி விட்டார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எவ்வாறு வாழ்ந்தோம்? நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வருவதெல்லாம் தற்போது உள்ள சூழலில் விடுதலைப் புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என்று கூறியள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதனை மேற்கோள் காட்டி பேசிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா, ‘“ஆறு வயதுச் சிறுமி பாலியல் வன்புணரப் பட்டுக் கொல்லப்படுகின்றாள். எங்கள் பெண்களுக்கு எவரது ஆதரவும் இல்லை, தற்கொலை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வடக்கில் சுமார் 30000 விதவைகள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த அரசு என்ன செய்தது?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எந்தவித அபிவிருத்தியும் இன்றி புறக்கணிக்கப்பட ஏனைய மாகாணங்கள் விசேட திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாண பகுதியில் எந்த அபிவிருத்தித் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காகவா நாங்கள் வாக்களித்தோம்? எங்களது பொறுமை எல்லை கடந்து விட்டதென்று கோபத் தொனியில் அவர் பேசியிருக்கின்றார்.

நாட்டுக்கெதிராக எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைக்காகவும் துணைபோக மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் எடுக்கும் பொ றுப்பு வாய்ந்த அமைச்சர் அவ்வாறு கூறலாமா என்பதே விஜயகலாவை எதிர்க்கும் அனைவரும் முன்வைக்கும் வாதம். அமைச்சர் என்ற வகையில் அவர் கூறியது தவறாக இருக்கலாம். ஆனால், வடக்கு மக்களுக்கான பிரதிநிதியாக அங்குள்ள மக்களின் கருத்துக்களின் பிரதிபலிப்பாக அவரது பேச்சைக் காணும் எவருக்கும் அதில் கோபமோ ஆத்திரமோ கொள்ள ஏதுமிருக்காது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் புலிகளின் பாசிசப் போராட்டமும், அதனாலேற்பட்ட அழிவுகளையும் பற்றிய விமர்சனங்கள் வடக்கு, கிழக்கின் அனேக மக்களிடத்தில் இருந்தே வந்திருக்கின்றன. ஆனாலும் கூட யுத்தத்தின் பின்னர் வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாலியல் வன்முறைச் சம்பவங்கள், போதைப்பொருட் கடத்தல், வாள்வெட்டுக்கள், படுகொலைகள் என்பன “அவங்கள் இருந்தால் இப்பிடியெல்லாம் நடக்காது' என்ற வடக்கின் மக்களை முணுமுணுக்க வைத்ததை அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாள். இதன்போது அனேக யாழ்ப்பாண மக்களின் கருத்து 'அவங்கள் இருக்கேக்க நாங்கள் நிம்மதியா பயமின்றி இருந்த நாங்களே' என்பதாக இருந்தது.

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட புலிகள் போன்ற பாசிச அமைப்பொன்று மீண்டும் வரவேண்டும் என ஒரு சமூகம் வேண்டுவதும், அதற்காக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் குரல் கொடுப்பதன் ஜனநாயகத் தன்மை பற்றியும் பலவாறாக விமர்சனங்களைச் செய்யலாம். ஆனால், முழு உலகாலும் விமர்சிக்கப்பட்ட பாசிச ஆட்சியை வழங்கிய ஒர் அமைப்பு ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணுவதில் காட்டிய உறுதி பலராலும் சிலாகிக்கப்பட்டிருக்கின்றது. அதனைத்தான் வடக்கின் மக்கள் இப்போதும் நினைவு கூர்கின்றார்கள். தற்போது வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுக்குள் கொண்டுவர படைகளினது பிரசன்னம் அரசினால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்க, அங்கு சட்டமும் ஒழுங்கும் நாளுக்குநாள் சீர்குலைந்து வருவதன் ஆதங்கமே மக்கள் மத்தியில் புலிகள் திரும்பவும் வந்தாலேனும் நாங்கள் மீண்டும் பழையபடி நிம்மதியாக வாழ மாட்டோமா என எண்ணத்தை தலைதூக்க வைத்துள்ளது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் அவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, வடக்கின் மூலை முடுக்கெல்லாம் போதைப்பாவனை, மதுபானச் சாலைகள், என்பன கட்டற்றுப் பெருகின. அதனையும் கடந்த 2 ஆம் திகதியன்றைய தனதுரையில் முன்னாள் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல்வாதிகளாலேயே வடக்கில் போதைப்பொருள் கடத்தல் பெருமளவில் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டுவரை வடக்கு, புலிகளின் இறுக்கமான கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் நிறைந்த ஆட்சியின் கீழ் இருந்தது. 2009 இன் பின்னர் அப்போதிருந்த மஹிந்தவின் அரசோ பின்னர் வந்த நல்லாட்சி அரசோ மக்களின் உண்மையான பிரச்சினைகள் தேவைகளை தீர்த்து வைக்கவில்லை என்பதன் வெளிப்பாடாகவே புலிகளின் ஆட்சிக்காலத்துடனான அவர்களது ஒப்பீட்டைப் பார்க்கலாம்.

அதனையே முன்னாள் பிரதியமைச்சரும் தனதுரையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். புலிகளின் மீள் உருவாக்கமோ அல்லது இன்னொரு ஆயுதப்போராட்டமோ இனிமேல் சாத்தியமில்லை என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிதர்சனமானது.

விஜயகலா புலிகளின் மீளுருவாக்கம் பற்றி கூறிய கருத்தை தூக்கிப் பிடிக்கும் அனைவரும், அவர் அவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன வென்பதையே ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயப் புகுந்தால் அக் கருத்தின் ஆழ அகலங்களைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.

மீண்டும் ஆயுதப் போராட்டமொன்று வடக்கு, கிழக்கில் வெடித்து விடக்கூடாதென்பதற்காக மெத்தப் பிரயத்தனம் எடுக்கும் அரசு, ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகமொன்றின் வலிகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் மனங்களை வெல்வதற்கும் என்ன செய்தது என்ற வேதனையின், கோபத்தின் வெளிப்பாடாகவே விஜயகலாவின் கூற்று பார்க்கப்பட வேண்டும்.

வடக்கின் அரசியல்வாதிகள் பலரின் கருத்துக்கள் தேர்தல்கால வார்த்தை ஜாலங்களாக தெற்கினால் விமர்சிக்கப்பட்டு நிராகிக்கப்படுவதும், அவற்றுக்கு இனவாத சாயம் பூசுவதும், வடக்கு மக்களின் உண்மையான மன உணர்வுகளை நிராகரிப்பதும்தான் அவற்றை, தெற்கில் உள்ள மக்கள் அறியாமலேயே இருப்பதும் தான் இன்றுவரை இனப்பிரச்சினைக்கான தீர்வினை சாத்தியமற்றதாக்குகின்றது.

Comments