யதார்த்தமில்லாததை தூக்கிப்பிடிப்பது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

யதார்த்தமில்லாததை தூக்கிப்பிடிப்பது ஏன்?

இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரனின் உரை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஜனாதிபதி மக்கள் சேவை திட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா, “விடுதலைப்புலிகள் உருவாகினால்தான் நிலைமையை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும்” என்ற தொனியில் பேசினார்.

இந்த உரைதான் உலகமே பேசும் அளவுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வாதப்பிரதி வாதங்கள் ஒருபுறம் கண்டனங்கள் மறுபுறம்... எங்கு பார்த்தாலும் திருமதி விஜயகலாவே பேசப்படுகிறார்.

சாதாரணமாக அரசியல்வாதிகளின் ஆதங்கமும், உணர்ச்சியும், உணர்வுகளும் பொதுமேடைகளிலும் பொது வெளிகளிலும்தான் ஒலிக்கும். உள்ளக் குமுறல்களையெல்லாம் இப்படியான இடங்களிலேயே கொட்டித் தீர்க்கும் மனோபாவம் சாதாரணமாக எல்லா அரசியல் முக்கியஸ்தர்களிடமும் இருக்கிறது.

அராஜகமும் அட்டூழியங்களும் யாழ்ப்பாணத்தில் கோலோச்சி நிற்கும் போது, மக்களை யாராவது பாதுகாக்க முன்வரவேண்டும். சிவில் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இந்தப் பிரதேசத்தில் கொலைகளும், பாலியல் வல்லுறவுகளும், வாள்வெட்டு கலாசாரமும் மக்களை வெகுவாகப்பாதித்திருக்கிறது.

நடக்கின்ற இக்கொடூர சம்பவங்களால் வடபகுதி மக்கள் கடுமையான உளவியல் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனரென்பது உண்மை. இந்த நிலையில்தான் திருமதி விஜயகலாவின் உரையை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிவில் நிர்வாகம் இல்லாதபோது இருந்த பாதுகாப்பு இப்போது (முழுமையான சிவில் நிர்வாகம்) இல்லை என்பதே அவரது உள்ளார்ந்த வெளிப்படுத்தல் என்பது யதார்த்தக் கண்கொண்டு பார்ப்போருக்கு புரியும்; புரிந்துமிருக்கும். ஆனால், தென்னிலங்கையை கொந்தளிக்கச் செய்யுமளவுக்கு நிலைமை புரட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது, அமர்வை ஒத்திவைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. எஸ்.எம். மரிக்கார் தனது கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் கேள்வி எழுப்பினார். மஹிந்த சார்பு அணி வரிந்து கட்டுவதற்கு முன்னரே ஐ.தே.க நிலைமையை தனக்கு சாதகமாக்க முயன்றதோ தெரியவில்லை. என்றாலும், விஜயகலாவின் உரையை முதலில் சபைக்குள் தூக்கிப்பிடித்தது ஐ.தே.க.தான்.

இதனைத் தொடர்ந்து தான் விமல் வீரவன்சவும், மஹிந்த சார்பு சகாக்களும் கூச்சலும் குழப்பமும் எழுப்பியது மட்டுமல்ல. புலிப்புராணங்களையும் பாடத் தொடங்கினர். நாடு பிளவுபடப் போவதாகக் கோஷம் எழுப்பிய அவர்கள், விஜயகலா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபா மண்டபத்தின் நடுவில் அமர்ந்து கோஷங்களை கர்ச்சித்தனர். சபையைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய சபாநாயகர் கருஜயசூரிய, விமல் வீரவன்ச எம்.பிக்கு காட்டமாக ஒரு விடயத்தைச் சொன்னார்.

“விஜயகலா பேசிய பேச்சைத் தூக்கிப்பிடிக்கும் நீர், பாராளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க வேண்டுமென கூறினீர்தானே....” விமலின் அந்த உரையைப் போன்றதுதான் விஜயகலாவின் உரையும் என்ற தொனியில் சபாநாயகர் பதிலடிகொடுத்தார்.

உண்மையும் அதுதான். புலிகள் இருந்திருந்தால் நடக்கின்ற சம்பவங்களையாவது கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்பது திருமதி விஜயகலாவின் ஆதங்கம். இது புலிகளை உருவாக்கும் நோக்கோடு எழுந்த பேச்சாகக் கொள்ள முடியவில்லை. ஆனால், பாராளுமன்றத்தை குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்ற விமல் வீரவன்சவின் பேச்சை எந்தவகையிலும் சாதாரண உரையென்ற வரையறைக்குள் மட்டுப்படுத்த முடியாது.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினால் ஒரு நியாயமும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் பேசினால் இன்னொரு நியாயமும் பார்க்கப்படுவது போலவே அரசியல் நிலையைப் பார்க்க முடிகிறது.

விமல் மீதான சபாநாயகரின் பாய்ச்சல் வரவேற்கக் கூடியது மட்டுமல்ல, சபாநாயகரின் நேர்மை, நடுநிலைத் தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.

விஜயகலாவின் உரை தூக்கிப்பிடிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் அரசியல் மீண்டும் இரு துருவங்களாக்கப்பட்டிருக்கின்றன.

சர்ச்சை உச்சத்தைத் தொட்டதும் விஜயகலா இராஜினாமாச் செய்திருக்கிறார். ஒழுக்காற்று விசாரணைக்கென ஐ.தே.க குழுவொன்றையும் நியமித்திருக்கிறது.

விஜயகலா மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது அவருக்கு பாதிப்பாக அமையாதென்பதே உண்மை. இதனை ஒரு தனிப்பட்ட நடவடிக்கையாக வடக்கு, கிழக்கு மக்கள் பார்க்கவில்லை. தமிழர் ஒருவர்மீது தென்பகுதி காட்டும் இனக்குரோதமாகவே அவர்கள் இதனை பார்க்கிறார்களென்பதே யதார்த்தம்.

சுருங்கச் சொன்னால், தெற்கில் அவருக்கு எதிராக எழுப்பப்படும் ஒவ்வொரு கோஷமும், வடக்கில் அவரது வாக்கு வங்கியை அதிகரிக்க களம் அமைக்குமே தவிர வேறொன்றையும் ஏற்படுத்திவிடாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிடம் பணம்பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் திண்டாடிப்போய் நிற்கும் போது எதிரணி விஜயகலாவை தூக்கிப்பிடித்து திசை திருப்பலாம் என முயற்சிக்கிறது. அதன் பிரதிபலிப்புத்தான் பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச உட்பட மஹிந்த அணியினர் நடத்திய குழப்பமாகும்.

எதுவாக இருந்தாலும், இராஜாங்க அமைச்சர் என்ற பதவியில் இருந்து கொண்டு திருமதி விஜயகலா கூறிய கருத்து வாதப்பிரதி வாதங்களோடு வலம் வந்து கொண்டிருக்கிறது.

தூய சிந்தனையில் இருப்போரும் யதார்த்தமாகச் சிந்திக்கும் அரசியல் வாதிகளும் இதனைப் பெரிதுபடுத்தவும் இல்லை; கணக்கெடுக்கவுமில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்தச் சர்ச்சையை அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தலாகவே பார்க்க முடிகிறது.

என்றாலும், ஒரு விடயத்தையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். பொறுப்பில் இருக்கும் ஒருவர் மனதில் உள்ளவைகளையெல்லாம் அப்பட்டமாக பேசிக்கொள்வதென்பது நல்ல சூழ்நிலைகளை குழப்பிவிடும்.

நல்லிணக்கம் என்பது தெற்குக்கு மட்டுமல்ல, வடக்கு−கிழக்குக்கும் அவசியம். வடக்கும் தெற்கும் கைகோர்க்கும் போதுதான் இணக்க சூழ்நிலை உருவாகும்.

ஆகவே, விஜயகலாவின் உரையை தூக்கிப்பிடிப்போர், நல்லிணக்க மனச்சாட்சியுடன் சிந்தித்துச் செயற்படுவது வக்கிர உணர்வு வளர்வதை தடுக்கும்.

தேர்தல்களை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகுவது உண்மை. வாக்கு வங்கியை பலப்படுத்த இனவாதமும் குரோதங்களும் வளர்ப்பதில் கூட்டு எதிரணி செயற்படுவதாகவே தெரிகிறது.

ஹிட்லர் ஆட்சி வேண்டுமென்போரையும், பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்றவரையும் தூக்கிப்பிடிக்காதோர் விஜயகலா பேசியதை சர்ச்சையாக்குவது இனவாத அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.

பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விஜயகலா பேசியதில் சில தவறுகள் இருக்கலாம். அதனைத் தட்டிக் கேட்கும் தார்மீக உரிமை விமலுக்கும் இல்லை; மஹிந்த சார்பு அணியினருக்கும் இல்லை.

Comments