டைனமைட் மீன்பிடி | தினகரன் வாரமஞ்சரி

டைனமைட் மீன்பிடி

போல் வில்சன்
 

வடக்கு கடலில் அடிக்கடி நிகழும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மூலம் இலங்கையின் கடல்பகுதியில் அதிகளவான மீன் வளங்கள் சுரண்டப்படுகிறது. இதனை தடுப்பதற்கு கடல் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவ படகுகள் துரத்தப்படுவதோடு, அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. வடபகுதியில் நாளாந்தம் நடைபெறும் நிகழ்வுகளாக இருக்கின்றது. கடற்படையினரின் இத்தொடர் நடவடிக்ைகயினால் இலங்கை கடல் வலயத்துக்குள் மீன்வளத்தை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது.

கடற்படையினரின் இத்தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளினால் கடலில் நடைபெறக் கூடிய அத்துமீறல்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், இலங்கையின் கடலையும் கடல் வளத்தையும் அதன் சூழலையும், கடல் மாசடைதலையும் தடுத்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இலங்கை கடற்படைக்கு உண்டு.

கடல் வளங்கள் அழிக்கப்பட்டு மாசடைவதற்கு மற்றுமொரு காரணமாக சட்டவிரோதமான வலைகளும் வெடிப்பொருட்களும் காரணமாகுகின்றன. சில உள்ளூர் மீனவர்கள் அபாயகரமான C4 வெடிமருந்துகள், டைனமைட் மற்றும் டி.என்.டி ஆகிய வெடி பொருட்களை மீன்பிடித்தலுக்கு பயன்படுத்தப்படுகிறனர். இத்தகைய மீன்பிடி முறைகளினால் மீன் வளங்கள் அழிக்கப்படுவதுடன், கடலுக்கு கீழுள்ள பவளப் பாறைகள், பாறைகள் மற்றும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யுமிடங்களும் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் கடற்படையினரின் நீர்மூழ்கி பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடலில் நடத்தப்படுகின்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. கடற்கண்காணிப்பு நடவடிக்ைகக்கு இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் படகுகள் பகல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ரோந்து நடவடிக்கையுடன் சிறப்பு சோதனைகளையும் கடற்படை நடத்தியுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் சட்டவிரோதமாக வெடிப் பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிடிக்கப்பட்ட மீன்கள் சட்டநடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இத்தகைய சட்டவிரோதமான வெடிபொருட்கள் இக்காலப் பகுதியில் கிழக்கு கடற்கரை மற்றும் மன்னார் கடற்கரைப் பிரதேசங்களில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் சில மீனவர்கள் இதை மேற்கொள்வதாகவும் அறிய முடிகிறது. இவ்வருடத்தின் முதல் ஆறுமாத காலத்திற்குள் சட்டவிரோதமான வெடிபொருட்கள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 2442 கிலோ மீன்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன என்கிறார் கொமாண்டர் தினேஷ் பண்டார.

இதுதொடர்பாக கடற்றொழில் நீரியல்வள அமைச்சியின் உதவி இயக்குநர் ஆர். ஜே. பி. கே. இரத்நாயக்க இவ்வாறு கூறுகிறார்,

வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிலர் சட்டவிரோதமான வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனைத் தடுக்காவிட்டால் கடல் வளங்களை அழிவிலிருந்து தடுக்க முடியாது. அத்துடன் சட்டவிரோதமான வலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவை முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்கிறார் இவர்.


அதேநேரத்தில் டைனமைட் பயன்படுத்தும்போது, கடலடியில் ஏற்படும் வெடிப்பின் அதிர்வுகளினால் மீன்கள் காயமடைகின்றன. அவற்றின் கண்களிலும் தொண்டைப்பூவிலும் இரத்தக் கசிவு இருந்தால் அப்படியான மீன்களை வாடிக்கையாளர்கள் வாங்குவது நல்லதல்ல. அத்துடன் அப்படியான மீன்களை விற்பதும் வைத்திருப்பதும் சட்டவிரோதமாது. டைனமைட் வைத்து பிடிக்கப்பட்ட மீன்களை வியாபாரம் செய்வது முற்றும் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதேநேரத்தில் கொழும்பு மீன் சந்தை, நீர்கொழும்பு மீன் சந்தை உட்பட பிரதான மீன் சந்தைகளில் டைனமைட் பயன்படுத்தி மீன்பிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதனை கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், டைனமைட் பயன்படுத்தப்பட்டு பிடிக்கப்படும் மீன்களைவிட டைனமைட் பயன்படுத்துபவர்களையும், அவைகளை உற்பத்தி செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்யும்படி பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக கூறுகிறார் இயக்குநர் இரத்நாயக்க.

மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடி சில காலத்துக்கு நிறுத்தப்படுவது தமிழ் நாட்டில் வழக்கம். இலங்கையில் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதில்லை. எனினும் லொப்ஸடர் என அடைக்கப்படும் சிங்கி இறால்களின் இனப்பெருக்கக் காலமான பெப்ரவரி, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சிங்கி இறால் பிடிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி பிடிக்கப்பட்ட சிங்கி இறாலில் முட்டை அல்லது குஞ்சு இருந்தால் நீரியல் வளத்தறை பிரிவின் கீழ் சட்டநடவடிக்க எடுக்கப்பட முடியும் என்கிறார் இரத்நாயக்க.

“யார் மீன்பிடித்தாலும் சட்டவிரோதமான முறையில் மீன்களை பிடித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். கடல் வளத்தை சேதப்படுத்துபவர்களே முதலில் கைது செய்யப்பட வேண்டும். அத்துடன் இலங்கை கடற்படை, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளாந்தம் கடற் கண்காணிப்பில் ஈடுப்பட்டாலும் எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கும் உண்டு. கடல் வளங்கள் அழிக்கப்பட்டால் மீனினத்தின் இனப்பெருக்கம் முற்றுமுழுதாக அருகிவிடும்.

சட்ட விரோத மீன்பிடி முறைகளால் பாதிக்கப்படுவது மீனவர்களே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நைலோன் வலை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நைலோன் வலை, மற்றும் தடை செய்யப்பட்டுள்ள வலைகளுக்கு மாற்றீடாக புதிய வலைகளை வழங்கினாலும் சில மீனவர்கள் அத்துமீறி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகின்றனர். பவளப் பாறை பகுதிகளில் மீன்பிடிப்பதும் கடற்றொழில் சட்டத்தை மீறும் செயலாகும். அத்துடன் மீனினபெருக்கமும் பாதிக்கப்படும். சட்ட விரோத மீன்பிடித்தலைத் தொடர்வது தனக்குத் தானே உலை வைத்துக் கொள்வது போன்றது என்பதை சம்பந்தப்பட்ட மீனவர்கள் உணர்ந்து கொள்வது முக்கியம்.

Comments