புறக்கோட்டையில் தீ | தினகரன் வாரமஞ்சரி

புறக்கோட்டையில் தீ

படம்: கே. அசோக்குமார்

கொழும்பு, புறக்கோட்டை மெயின் வீதியில் முதலாம் குறுக்குத்தெருவுக்கருகே காலணிகள் வர்த்தக நிலையத்துக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்று நேற்றுத் திடீரெனத் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.

நேற்றுக் காலை சுமார் 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த போதும் கீழ் தளத்திலிருந்து தீ மிக வேகமாகப் பரவியது. காற்றின் வேகம் நேற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியதாக இருந்ததால் காலணி விற்பனை நிலையத்திற்கு தீ பரவாமல் அதற்கு அடுத்த படியாக இருந்த திரைச் சீலைகள் விற்பனை நிலையத்திலும் தீ பரவியது.

பயணப் பொதிகள், கைப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையம் என்பதால், முற்றாகத் தீ பரவி வர்த்தக நிலையம் எரிந்து சாம்பரானது. முதலாவது தீயணைப்பு வாகனம் வந்திருந்த போதும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. சற்று நேரத்தில் இரண்டாவது தீயணைப்பு வாகனம் வந்த பின்னரே பக்கத்து வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் திரைச் சீலைகள் விற்பனை நிலையத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

திடீரெனத் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றுக் காலை 10 மணியளவில் கொழும்பு மெயின் வீதியிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்பதால் அனைத்து கடை ஊழியர்களும் தத்தமது கடை உரிமையாளர்கள் கடைகளைத் திறக்க வரும் வரை ஊழியர்கள் காத்திருந்தனர். சில கடைகள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்ைககளுக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தனர். இந் நிலையில் திடீரெனத் தீப்பற்றிய சம்பவம் இடம்பெற்றவுடன் மெயின் வீதி பெரும் அல்லோல கல்லோலப்பட்டது. கடை ஊழியர்கள் தங்களது கடைகளிலிருந்து வெளியே ஓடினர். அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவிவிடும் என அஞ்சினர்.

மெயின் வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து மெயின் வீதினூடான போக்குவரத்தைப் பொலிஸார் தடை செய்தனர்.

சம்பவம் தொடர்பாகப் புறக் ேகாட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments