இல்லாத ஒன்றுக்கு ஏனிந்த வம்பு? | தினகரன் வாரமஞ்சரி

இல்லாத ஒன்றுக்கு ஏனிந்த வம்பு?

ஊடகங்கள்லயும் சமூக வலைத்தளங்கள்லயும் இப்ப முக்கிய நபரா வலம் வந்துகொண்டிருப்பவர் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். அவர் என்னவோ யாழ்ப்பாணத்திலை வைச்சு சொல்லிப்போட்டாராம். புலிகள் இயக்கம் இருக்ேகக்கிலை, பாலியல் வன்கொடுமை எல்லாம் நடந்ததா? அவங்கள் திரும்ப வந்தால்த்தான் சரிபோலக்கிடக்கு... என்ற மாதிரி என்னவோ உளறிப்போட்டாராம்.

அதை இந்த மீடியா ஆக்கள் பெரிய செய்தியா போட; தெற்கிலை ஒரே அல்லோலகல்லோலம். மீடியாக்காரங்கள் போட வேண்டியதையெல்லாம் கோட்டை விட்டிடுவாங்க... ஏதாவது பிரயோசனமில்லாத விசயத்தை ஊதிப்பெருப்பிக்கிறதிலை கெட்டிக்காரங்க. அதையும் இந்த பாமரச்சனம் நம்பித் தொலைக்கும்.

பாமரச்சனம்தான் நம்புது எண்டால், பாராளுமன்றத்திலை இருக்கிற ஆக்களும் அப்பிடித்தான் நினைக்கிறாங்கள்.

பொதுவாகப் பெண்களின் மனசு மென்மையானது என்றதை எல்லோரும் ஒத்துக்ெகாள்ளுவியள். ஆனால், அவள் ஏதாவது எசகு பிசகாகச் சொல்லிவிட்டால்கூட ஆண்களுக்குப்பிடிக்காது. இதென்னையா நியாயம்?

ஐயோ, யாழ்ப்பாணத்திலை வைச்சுப் புலியைத் திரும்பக் கொண்டுவர வேண்டுமென்று சொல்லிப்போட்டாவாம் எண்டு, பாராளுமன்றத்திலை பெரும் ரகளை. புலிகள் இயக்கத்தை அழிச்சுப் புதைச்சாச்சு என்று அடிச்சுச் சொல்லிக்ெகாண்டு, பிறகு எதற்குக் கதைகளை நம்புவான்? என்று கேட்கிறார் நண்பர். அவர் மட்டுமில்லை, எல்லோரும் கேட்கின்ற கேள்விதான் இது. விஜயகலாவைப் பொறுத்தவரை சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வெகுளித்தனமாகப் பழகுகின்றவர்; வஞ்சகமில்லாமல் கருத்துகளைச் சொல்கின்றவர்.

அப்பிடித்தான் யாழ்ப்பாணத்திலையும் புலிகள் பற்றிச் சொன்னாவாம் என்று சொல்லுறா அக்கா. சரி, அவ சொன்னால், புலி வந்திடுமா? அதைப் பெருந்தன்மையோடு, அப்பிடியா, விஜயகலா, புலி வரப்போகுதா? எங்களுக்கும் சொல்லுங்கள் என்று திருப்பிச் சொல்லியிருந்தால், அக்கா கூனிக்குறுகிப்போய் இருப்பாள்தானே என்று கேட்கிறார் நண்பர்.

அப்பிடியெல்லாம் பெருந்தன்மை இருந்தால், இந்த நாட்டிலை இவ்வளவு காலமாக இந்தப் பிரச்சினை இழுபறிபடுமா?

அதெப்படி? அவ ஓர் அமைச்சர் இல்லையா? அரசியலமைப்புக்கு முரணாகப் பேசலாமா? என்றும் சிலர் கேட்கிறார்கள். அப்ப, பாராளுமன்றத்தைக் குண்டு வைச்சுத் தகர்ப்போம் என்று சொன்னது அரசியலமைப்புக்குச் சரியாமோ? என்று கேட்போரும் இருக்கிறார்கள். நமக்கு இந்தச் சீரியஸ் பொலிட்டிக்ஸ் தேவையில்லைபாருங்க!

அதைவிடுவம். பொம்பிளையள் அரசியலுக்கு வாறதில்லை என்று குறை சொல்லிக்ெகாண்டு, அவங்கள் வந்தாலும் கேவலப்படுத்துறது சரியா? பேரினவாதிகள்தான் அக்கா சொன்னதைத் தூக்கிப்பிடிக்கிறாங்கள் என்றால், முகநூல் போன்ற வலைத்தளங்கள்ல எங்கடை புத்திசாலிகள் எழுதிற எழுத்து இருக்ேக! அப்பப்பா... ஒரு பொம்பிளை என்றும் பாராமல், படுமோசமாகத் திட்டி எழுதுறாங்கள். இதுக்காகத்தான் தமிழ்ப் பொம்பிளைகள் அரசியலுக்கு வரப்பயப்படுறாங்கள் என்பது பலருடைய கருத்து. நான் நேற்று ஓர் இணையத்திலை பார்த்தன், அக்காக்குச் சொல்லிக்குடுத்துப் பேச வைச்சது ஓர் அன்பராம்... என்று ,அஃது இஃதென்று கனக்கக் கதை சொல்லியிருக்கிறாங்கள். புலியைப் பற்றி அக்கா சொன்னது சரி, பிழை என்று நான் சொல்ல வரேல்ல. அது அவசியமில்லாத விசயம். ஒரு பெண் என்ற வகையிலை அவ நடத்தப்பட்டது சரியா, தவறா? இந்தச் சமூக வலைத்தளக் கிறுக்கர்கள் நாகரிகமில்லாமல் இப்படி எழுதலாமா? என்பதுதான் பிரச்சினை!

இன்னொண்டு பாருங்க, செய்தியாளர் மாநாட்டுக்குப் போனால், எங்கடை மொபைல் போன் எல்லாத்தையும் ஓப் பண்ணச் சொல்லுவாங்க. ஒருக்கா ஒருவரோட போன் றிங் ஆனநேரம், செய்தியாளர் மாநாட்டை நடத்திய பேராசிரியர் பீரிஸ் சொன்னார்,

"பிளீஸ் சுவீற்ச் ஓப் யுவ மொபைல் போன்" என்று. ஆனால், பிரதியைமச்சர் ஒருவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலை இருந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை அழைக்கிறார். போன்ல கதைக்கிறத்துக்கு முந்தி சொல்லியிருக்க வேண்டும்.

"நான் இந்த இடத்திலை இருந்து பேசுறன், செய்தியாளர்கள் எல்லாரும் இருக்கிறார்கள்" என்று சொல்லியிருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட தொலைபேசி உரையாடலைப் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் நிலையை உருவாக்கியது எந்தளவிற்குச் சரியென்று தெரியவில்லை. அதைப் பதிவேற்றலாமா, இல்லையா? என்றுஅங்கிருந்த செய்தியாளர்களுக்கும் மண்டையில் உறைக்கவில்லை.

இப்ப அந்தத் தொலைபேசி உரையாடலை வைத்துத்தான் எல்லோரும் வியாக்கியானம் பேசிக்ெகாண்டிருக்கிறார்கள்.

ஓர் இடத்திலை சிசிரிவி கமரா வைத்திருந்தால்கூட, "இந்த இடத்தில் கமரா பயன்பாட்டில் உள்ளது" என்று ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டம். எவருக்கும் தெரியாமல், ஔிப்பதிவு செய்ய முடியாது.

அப்படியிருக்கும்போது ஒருவருடனான தொலைபேசி உரையாடலை எவ்வாறு பொதுவெளியில் பரப்புவது என்ற கேள்வி வலுவாக எழுப்பப்படுகிறது.

பெருந்தன்மையாக நடந்துகொண்டிருக்க வேண்டிய அரசியல்வாதிகளும் புத்திசாதுரியமாகப் பணியாற்றியிருக்க வேண்டிய செய்தியாளர்களும்தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

Comments