சாமர | தினகரன் வாரமஞ்சரி

சாமர

ஊடகத்துறையின் ஒரு தவப்புதல்வன்!   

 

 

 

விசு கருணாநிதி

 

சிறிய வயதில் உயர் பதவிகளுக்குப் போவதென்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. என்னதான் திறமையிருந்தாலும், அந்தத் திறமையைத் திறம்பட வெளிப்படுத்தும் போதுதான் வாய்ப்புகளுக்கான கதவுகளும் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் மற்றவரின் கதவுகளை இறுக மூடி வைப்பதில் திறமை படைத்த பலர் நம் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், திறமைபடைத்தவனை எவ்விதத்திலும் மழுங்கடிக்கவோ; மறக்கடிக்கவோ இயலாது என்பதை நிரூபித்துக்காட்டியவர் சாமர லக்‌ஷான் குமார.

முப்பத்தொன்பதே வயது. இரண்டு தேசிய பத்திரிகைகளுக்கு ஆசிரியர்.

நினைத்தும் பார்க்க முடியாத உயர்வு; துணிவு; அறிவு எனப்பல ஆளுமைகளுடன் மற்றவரையும் இணைத்துப் பயணிக்கும் மானுட பண்பு நிறைந்த ஒருவர், வந்த வேகத்திலேயே மறைந்துபோகிறார் என்றால், அது ஜீரணிக்க முடியாத சோகம்.

தேசிய பத்திரிகைகளுக்குப் பொறுப்பாகப் பதவியேற்ற காலப்பகுதியில் வருகின்ற முதலாவது பொசன் பண்டிகை. (தலைத்தீபாவளி என்பார்களே அப்படி). அனுராதபுரம் புனித பூமியில் பூஜை வழிபாடுகளை நடத்துகிறார் சாமர லக்‌ஷான் குடும்பத்தவர்களுடன். சட்டத்தரணியாகப் பணியாற்றும் மனைவி, நான்கு வயது மகன். இவர்கள்தான் சாமரவின் உலகம். அவர்களைப்போலவே சாமர நேசித்த மற்றோர் உலகம் ஊடகத்துறை! அதன் ​ெநளிவு, சுளிவுகளை மிக இளம் வயதிலேயே கற்றுத்தேர்ந்து உள்வாங்கிக் கொண்டவர். விரல் நுனியில் அரசியல் விஞ்ஞானம். அந்த ஞானத்தைத் தந்தது பல்கலைக்கழகம் என்றாலும், சாமரவின் பல்துறைசார் தேடல், அவரை இந்தத் துறையில் இளவதிலேயே பிரகாசிக்கச்செய்தது.

பொசன் பௌர்ணமி பூஜைகள் நிறைவடைந்து மனைவி, பிள்ளையுடன் வீட்டுக்குச்சென்று மறுநாள் புதுத்தெம்புடன் பணிக்குத் திரும்பவிருந்தவருக்குக் காத்திருந்து அழைத்தது காலம். கணப்பொழுதில் உலகம் இருள, நீச்சல் தடாகத்தின் நிறைவுக்குப் பகுதிக்கு இழுக்கப்படுகிறார் சாமர. இதயம் நிறைந்தவனுக்கு இதயம் மறுக்கிறது துடிப்பதற்கு. விரைந்து கொழும்புக்கு அழைத்து வருகிறார்கள் சகபாடிகள்; நண்பர்கள். ஓரிரு நாள் அவகாசமோ என்னவோ, சனிக்கிழமை இரவு இந்த உலகிற்கு விடைகொடுக்கிறார் சாமர!

இந்த அதிர்ச்சி தாளாமல், அதிர்ந்து நிற்கிறார் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷாந்த குரே. அவரது இதயமும் ஒரு கணம் இயங்க மறுக்கிறது. பொங்கி வரும் சோகம் கண்ணீராகப் பெருக்கெடுக்கிறது. சாமரவை ஓர் ஊழியனாக அல்லாமல், சொந்தச் சகோதரனாகப் பார்த்தவர் கிரிஷாந்த குரே! அவர் வாய்விட்டு அழுதது ஏனையோரையும் நெகிழச்செய்துவிட்டது.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் மரபு ரீதியான பத்திரிகைத் துறையிலிருந்து சற்று வித்தியாசமான ஓர் இதழைக்ெகாண்டு வர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த தலைவருக்குப் பக்கபலமாய் நின்று 'ரெச'என்ற பத்திரிகையைத் தனித்துவத்துடன் ஸ்தாபித்து வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார் சாமர. பத்திரிகை ஆரம்பித்த சில மாதங்களிலேயே, அதன் விற்பனையைப் படிப்படியாக முன்னேற்றினார்.

இந்த வெற்றிப் பயணத்தில் திருப்திகொண்ட கிரிஷாந்த குரே, நூற்றாண்டுகால பழைமைவாய்ந்த சிலுமின பத்திரிகையின் ஆசிரியராகவும் சாமரவை நியமித்தார். அவர் பொறுப்பேற்று சிலுமின பத்திரிகையில் அதிரடியான மாற்றங்களைச் செய்து அதன் தோற்றத்தையும் மாற்றியமைத்தார் சாமர. வாரா வாரம் ஐந்தாயிரத்தால் அதிகரித்தது பத்திரிகை விற்பனை. இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் வளர்ச்சியடைந்திருக்கிறது; அவர்களிடம் வாசிப்புக்கான வேட்கை இருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தினார். இந்த அசுரச்சாதனையை வேறு எவராலும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து வரும் வேளையில் சாமரவைக் காலம் குறுக்கிக்ெகாண்டது ஏனோ தெரியவில்லை.

சிங்களத்தில் 'இக்மங் கொட்டாய்' என்று ஒரு வாக்கியம் சொல்வார்கள். எல்லாச் சாதனைகளையும் இளவயதிலேயே செய்து நிறைவுசெய்துவிடுபவர்களுக்கு ஆயுள் குறைவு என்றும் அர்த்தம் கொள்ளலாம், அதேபோன்று வாகனத்தை எடுத்துக்ெகாண்டு சிட்டாய்ப்பறப்பவர்களுக்கும் இந்த வாக்கியம் பொருந்தும் என்பார்கள் பெரியவர்கள்.

தங்களுடைய காலம் முடியப்போகிறது என்பதைத் தங்களை அறியாமலேயே சிலர் வெளிப்படுத்தி விடுவார்கள். கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது மட்டக்களப்பில் ஒருவர் சொல்லியிருக்கிறார், "மச்சான் கொஞ்சத்திலை நான் போயிடுவன்" என்று. அவர் உண்மையில் போக இருந்தது செங்கலடிக்கு. ஆனால், சுனாமி வருவதற்குச் சற்று முன்னர், அவர் சொன்ன வார்த்தை, 'கொஞ்சத்திலை நான் போயிடுவன்" என்பது.

அப்படி சாமரவும் சில விடயங்களைச் செய்ததாகச் சொல்கிறார் கிரிஷாந்த குரே. சில வாரங்களுக்கு முன்னர் தன்னுடைய புகைப்படமொன்றைச் சாமர அனுப்பியிருந்ததாகவும் அந்தப் படத்தில் அவரது முகத்தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருந்தது என்றும் மனமுருகும் அவர், அவரை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல எண்ணியிருந்ததாகவும் சொல்கிறார். அந்த நேரத்தில் பிரதம ஆசிரியர் குணராசா சொல்கிறார், சாமர தினகரன் ஆசிரியபீடத்திற்கு வரும் ஒவ்வொரு வேளையும் தனக்குத் தலையில் நோ இருக்கிறது.. யாராவது சற்றுப் பிடித்துவிட்டால் (மசாஜ்) செய்துவிட்டால்..? என்று துன்பப்பட்டார் என்று. சாமர மட்டுமல்ல, தன்னை வருத்திப் பிறரை மகிழ்விக்கும் ஒரு பணியென்றால் அஃது ஊடகப்பணியாகத்தான் இருக்க முடியும். அவ்வாறு தனது துன்ப துயரங்களைப் பற்றிச் சிந்திக்காத சாமர, ஊடகத்துறையில் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும் என்ற கனவை வெற்றி கொண்டு வந்தவர். அவரைப்போன்ற ஒருவரின் வெற்றிடத்தை நிரப்புவது எந்தவிதத்திலும் இயலாது என்கிறார், நிறுவனத் தலைவர் கிரிஷாந்த குரே.

சிலருக்குப் பதவி கிடைத்தால், ஆளையும் தெரியாது; பேசவும் தெரியாது. தொழில்வாண்மை இடைவெளி (Professional Distance)அவசியம் என்றாலும், அநேகர் இந்தச் சித்தாந்தம் தெரியாதவர்களாகவே எவருக்கும் தெரியாமல் இருப்பார்கள். சிலர் தங்களது இருக்ைக யைவிட்டு நகரவேமாட்டார்கள். இப்படித்தான் முன்னாள் ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன் நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார். அவரும் இருக்ைகயைவிட்டு நகரமாட்டார்.

அதற்கு அவர் சொல்கின்ற விளக்கம்,"டேய்... நான் எழும்பிச் சென்றால், வந்து குந்துவதற்குத் தயாராக இருக்கிறான்களடா... அதுதான் நான் கதிரையைவிட்டு எழும்புவதில்லை" என்பார்.

சிலுமின ஆசிரியராகப் பதவியேற்ற சாமர லக்‌ஷான் குமார, அதிகமாகப் பொழுதைக் கழித்தது; இருந்தது; பணியாற்றியது எல்லாம், தினகரனிலும் கணனிப்பிரிவிலும். "ஐயோ, அங்கே இருக்க முடியாது மச்சான், எரிச்சல் பிடிச்சவங்கள்" என்று கூறுவார் சாமர பிரதம ஆசிரியர் குணராசாவிடம். காணும் எல்லோரிடமும், மிக எளிமையாக"மச்சான்" போட்டுக் கதைப்பவர் சாமர. அப்படி எந்தவோர் பெரும்பான்மை ஆசிரியரும் செயற்பட்டதில்லை. அவர்களைச் சந்திப்பதென்றால், அறைக்கு வெளியே தவமிருக்க வேண்டும். அந்த வகையில் சாமர ஒரு தனித்துவமான மனிதர். சாமானியர்களைப்போல் ரயிலிலேயே பயணம். " எனக்குக் கார் கொடுத்தாலே கொடு! என்று அது கிடைக்கும் வரை மற்றவர்களுக்கு எதிராகப் பெட்டிசன்களைப்போடும் உத்தியோகத்தர்கள் புளங்குகின்ற லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு தவப்புதல்வன் சாமர என்றால்கூடத் தவறில்லை. அவ்வாறான ஒருவர் மிகக் குறுகிய வயதில் வாழ்க்ைகயை முடித்துக்ெகாண்டது லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு மாத்திரமன்றி நல்ல மனிதநேயமிக்க மானுடர்களை எதிர்பார்க்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பே.

ஏனெனில், சாமர பதவி வகித்த அந்த இரண்டு பத்திரிகைகளுக்கும் அவர் குறைந்த மாதங்களே ஆசிரியராக இருந்தாலும், இந்த மாதங்கள் அவற்றுக்குப் புரட்சிகரமான மாதங்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

ரச மற்றும் சிலுமின பத்திரிகைகளில் இளமையான தலை சிறந்த குழுவொன்றுக்குத் தலைமையேற்றுப் பணியாற்றியவர்.

சாமர திறமையான மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊடகவியலாளர். விளையாட்டுத்துறை மற்றும் அரசியல் தொடர்பில் வரலாறுகளுடன் கூடிய பரந்த ஆய்வு ரீதியான தகவல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். விளையாட்டுத்துறை பற்றியோ அல்லது அரசியல் வரலாறுகள் பற்றியோ கண்ணிமைக்கும் நேரத்தில் விடயங்களை நினைவுபடுத்திக் கூறும் அசாத்திய திறமையைக் கொண்டிருந்தார்.

மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரா வித்தியாலயத்தில் கல்வி கற்ற சாமர, 'லக்பிம' பத்திரிகையில் தனது பத்திரிகைத் துறையை ஆரம்பித்தார். 'ரிவிர' மற்றும் 'இறுதின' பத்திரிகைகளிலும் பங்களிப்புச் செலுத்தினார்.

அரசறிவியல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்ற அவர், தான் கற்ற கல்விக்குப் பெருமை சேர்க்கும் அளவிற்கு அவர் பத்திரிகைத்துறையை வழிநடத்திப் பெயர் பெற்றவர்.

அவர் போன்றோரின் வெற்றிடத்தை நிரப்புவதற்குச் சாமர என்றென்றும் பக்க துணையாய், ஆசானாய் வழிகாட்ட வேண்டும் என்பதுதான் அவரது இறுதிக்கிரியையின்போது இளம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்ைகயும் அஞ்சலியும்.

 

Comments