பரிதாபகரமான நிலையில் மலையக சிறுவர் உரிமைகள்! | தினகரன் வாரமஞ்சரி

பரிதாபகரமான நிலையில் மலையக சிறுவர் உரிமைகள்!

பன். பாலா

'நாட்டில் உள்ள ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடும்போது மலையக சிறுவர்களின் நிலை பரிதாபகரமானதாகவே உள்ளது. நகர்ப்புற செல்வந்தர்கள் வீடுகளில் வேலைக்காரர்களாக அமர்த்தப்படும் நிலை தொடர்கிறது. போஷாக்கின்மை, பள்ளி இடைவிலகல், நோய்கள், கவனிப்பாரின்மை என பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்'

ஒரு பஸ் பயணத்தின்போது பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சிறுவனொருவனை அண்மையில் சந்தித்தோம். கொழும்பில் பணக்கார வீடொன்றில் வேலை செய்வதாகச் சொன்ன அவருக்கு வயது பதினைந்தாம். நல்ல உயரம். மெல்லிய உடம்பு. அடிக்கடி தலைவலி வருவதால் வீட்டுக்குப்போய் சுகம் பார்த்துக் கொண்டு வரச்சொன்னார்களாம்.

துருவித்துருவி விசாரித்ததில் மேலும் சில விபரங்கள் வெளிவந்தன. இச்சிறுவனின் அக்கா (வயது பதினாறு) சித்தப்பாவின் மகள் (வயது பதினாறு) அதே வீட்டில்தான் வேலை செய்கிறார்களாம். சம்பளம் எவ்வளவு என்ற கேள்விக்கு வந்த பதில் தெரியாது என்பதாகும். மாதா மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையோ அப்பா வந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு போவாராம். மூவருமே பாடசாலை செல்ல வேண்டிய பருவம். படிக்க வேண்டிய வயது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்கிற சட்டம்.

இத்தனைக்கும் இந்நாடு சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடு என்கிறது சிறுவர் சாசனம். சிறுவர் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு 1989 இல் ஐ.நா. சிறுவர் உரிமை சாசனத்தை பிரகடனப்படுத்தியது. 1991 இல் இலங்கை அதனை அங்கீகரித்தது. 1999இல் இலங்கையும் ஒரு சிறுவர் சாசனத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுவர் நலனைப் பாதுகாப்பதற்கென நிறுவனமும் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அந்த ஏற்பாடுகள் எதுவுமே மலையக சிறுவர்களுக்கு மறுதலிக்கப்பட்டவையாகவே காணப்படுகின்றன. இதற்கு பெருந்தோட்டக் கட்டமைப்பிலான நிர்வாக நடைமுறைகளே காரணமென்பது பொதுவான குற்றச்சாற்று. தென்கிழக்காசிய நாடுகளில் சிறுவர் நலனில் அக்கறை காட்டும் நாடாக இலங்கை முதன்மைபெறும் நிலையில் மலையகத்தில் மட்டும் இந்தப் புறக்கணிப்பு!

எந்த இனம் என்றாலும் சிறுவர்கள் ஒருநாட்டின் சமூகச் செல்வங்கள். எதிர்கால நிர்மாணிகள். இவர்களுக்கு பாதுகாப்பான சூழல், நல்ல பழக்கங்கள், போஷாக்கான உணவு, சமூகம் சார்ந்த வழிகாட்டல், சமகாலத்துக்கேற்ற கற்கை வசதி என்று கண்காணிப்புடன் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். சிறுவயதிலிருந்தே ஒழுக்கவியல் பண்புகளை பக்குவமாகச் சொல்லி புதிய சமுதாயம் படைக்கும் சமூக சிற்பிகளாக இவர்கள் உருவாக்கப்பட வேண்டியவர்கள்.

சிறுவர்கள் மதிப்புக்குரியவர்கள். தவிர சகல சமூக பிள்ளைகளுக்கும் சமத்துவமான உரிமை இருக்கவே செய்கிறது. ஆனால் மலையக சிறுவர்களைப் பொறுத்தவரை இந்த வாய்ப்பு வருவதாய் இல்லை. ஒதுக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமாக மலையக சமூகம் கணிக்கப்படும் நிலையில் இங்கு சிறுவர்களுக்கான நல உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. அல்லது நாசூக்காக கண்டு கொள்ளப்படாமலே இருக்கின்றன.

இன்று மலையக சிறுவர்களுக்கான கல்வி வசதிகள், சுகாதார நலன்கள் முறையாக பேணப்படுவதில்லை. பல இடங்களில் முன்பள்ளி வசதிகள் இல்லை. முந்தைய கணிப்பின்படி மலையக சிறுவர் எண்ணிக்கை 5 இலட்சமாக காணப்படுகின்றது. இதில் பலர் அடிப்படைக்கல்வி அறிவைக்கூட பெறமுடியாத அவல நிலை இன்னும் அகலவில்லை. இதற்கு குடும்பத்தின் வறுமை மட்டம் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அத்துடன் பாடசாலை இடைவிலகல் என்பது சமூக அபிவிருத்திக்கு தடைபோடும் சக்தியாகக் கொண்டிருக்கின்றது.

தவிர, குழந்தைகளிடையே பாலின வேறுபாடுகள் காட்டப்படுகிறன. சமத்துவமற்ற நோக்கினால் இங்கு பாரிய சமூக அவலங்கள் அரங்கேறுகின்றன. பெண்குழந்தைகள் பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இதனால் உளவியல் ரீதியிலான உபாதைகளுக்குட்பட்டு சீர்மையான சிந்தனைகளுக்கு இடமில்லாமல் ஆக்கப்படுகின்றார்கள். பாதுகாப்பற்ற வாழ்விடச் சூழல் சிறுவர் சமூகத்தை நம்பிக்கையற்ற சமூகமாக வளர்க்கிறது.

கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பெற்றோராலேயே பறிக்கப்படுகின்றன. லயத்து முறையிலான வாழ்விடச் சூழல் படிப்பதற்கு குந்தகம் விளைவிக்கின்றது. வீட்டிலும் பொதுவெளியிலும் பாடசாலை வளவுக்குள்ளும் சுரண்டலுக்குள்ளாகும் பரிதாப நிலை இவர்களுக்கு. ஏனைய சமூக சிறுவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான நலம் சார்ந்த உரிமைகளை அனுபவிக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த உரிமை மலையக சிறுவர்களுக்கு இல்லை.

2012 இலான ஒரு கணிப்பீட்டின் படி சுமார் 4 மில்லியன் சிறுவர் இலவசக் கல்வித்திட்டத்தினை அனுபவிக்கிறார்கள். ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையிலும் 25,0000க்கு மேற்பட்ட சிறுவர் பாடசாலைக்குச் செல்லாதிருப்பது ஓர் அதிர்ச்சித் தகவல். இதே வேளை பாடசாலை இடைவிலகல் (2011) தொகை 1,26,000 ஆக காணப்படுகின்றது. பாடசாலை செல்லாதோர் தொகையிலும் இடை விலகுவோர் தொகையிலும் 60 சதவீதமானோர் வட கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த சிறுவர்களாவர். பெருந்தோட்டப் பகுதியிலுள்ள பிள்ளைகளில் 8 வீதமானோர் வலது குறைந்த சிறுவர்கள் என ஆய்வொன்று கூறுகின்றது. மலையகத்தைப் பொறுத்தவரை வலது குறைந்த சிறுவர்களில் 20 வீதமானோர் மட்டுமே கல்வியைப் பெறுகின்றனர். 80 வீதமானோர் அந்த வாய்ப்பை இழந்துள்ளார்கள். சிறுவர் உரிமை மீறல்களுக்கான அடிப்படை காரணங்கள் பொருளாதார அமைப்பு முறையிலிருந்தே தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மலையகத்தைப் பொறுத்தவரை இந்நிலைமை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது. வறுமையிலிருந்து விடுபட வேண்டி மலையக தாய்மார் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். கணிசமானோர் பணக்கார வீடுகளில் பணிப்பெண்களாக இருக்கிறார்கள். இதனால் பல குடும்பங்களில் சிறுவர்கள் பெற்றோரின் பாசம், பராமரிப்பு, பாராட்டின்றி தனிமைபட்டுப் போகின்றனர். இத்தனிமைச் சூழல் பிள்ளைகளை உளவியல் ரீதியாக பாதிக்கச் செய்கிறது. அவர்களின் அறிவு வளர்ச்சி, ஆற்றல் வெளிப்பாடு அமுக்கப்பட்டு விடுகிறது. தன்னம்பிக்கை தளர்வடைகின்றது. இதனால் சில சிறுவர்கள் மனவிரக்தியடைந்து மரணத்தை நோக்கி பயணிக்கவும் செய்கின்றார்கள்.

தவிர போஷாக்கின்மை, முறையான உணவு பழக்கவழக்கங்கள் பின்பற்றபடாமை சிறுவர் சமூகத்தை இலகுவில் நோய்ப்பிடிக்கும் சமூகமாக மாற்றுகின்றன. இன்று மலையகத்தைப் பெரிதும் மருட்சி கொள்ள வைத்திருக்கும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை, புகையிலைப் பாவனை குடும்ப அங்கத்தினரிடையே குறிப்பாக சிறுவர்களிடையே போஷாக்குக் குறைபாட்டை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மந்தபோஷண குறைபாடு ஏற்படுகின்றது.

பெற்றோர் தமது வருமானத்தில் பெருந்தொகைப் பணத்தை போதைதரும் பொருட்களுக்காக செலவிடுவதால் குடும்ப வறுமை கூடவே செய்கின்றது.

இத்துடன் சிறுவர்களின் உயிருக்கு உலைவைக்கும் நோய்களும் இங்கு தாராளமாக ஊடுருவுகின்றன. இளம்பிள்ளை வாதம், வயிற்றோட்டம், தொண்டைக்கரப்பான், டெங்குக் காய்ச்சல், மூளை வளர்ச்சியற்ற பிள்ளைகள் பிறப்பு என்று பல்வேறு அச்சுறுத்தல்கள் அலைமோதுகின்றன. நோய்வாய்ப்படும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் வைத்தியம் செய்யாமல் உதாசீனமாக இருந்து விடுவதால் அதிகமான உயிரிழப்புகள் இடம்பெறுகின்றன. கைவைத்தியம், மந்திர நம்பிக்கை என்று

(தொடர் 20ஆம் பக்கம்)

 

Comments