சிறந்த வீரர்களை இனங்காட்டியுள்ள ஒப்சேவர்- மொபிடெல் விருது விழா | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த வீரர்களை இனங்காட்டியுள்ள ஒப்சேவர்- மொபிடெல் விருது விழா

ஒப்சேவர்--மொபிடெல் இணைந்து வழங்கும் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது விழா கடந்த வாரம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

1979ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இவ்விழா இம்முறை 40 வது தடவையாக கோலாகலமாக நடைபெற்றது. இம்முறை கண்டி திருத்துவக் கல்லூரி மாணவன் ஹசித்த போயாகொட இவ்வருடத்திற்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றார்.

இவருக்கான விருதை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல வழங்கினார். விசேட அதிதிகளாக லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன, பொது முகாமையாளர் அபய அமரதாச. டெலிகொம்- - மொபிடெல் தலைவர் பி. ஜீ. குமாரசிங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறந்த கிரிக்கெட் வீரர்களை இனங்காட்டும் இவ்விழாவில் சர்வதேச ரீதியில் உயர்வு பெற்ற பல வீரர்களையும் உருவாக்கியுள்ளது. ரஞ்சன் மடுகல்ல, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மகாநாம, அசங்க குருசிங்க, முத்தையா முரளிதரன், மார்வன் அத்தபத்து, பர்வீஸ் மஹ்ரூப் போன்ற வீரர்களை இலங்கை கிரிக்கெட்டுக்கு இனங்காட்டித் தந்துள்ளது.

1979ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஒப்சேவர் விருதை றோயல் கல்லூரி மாணவராக இருந்த ரஞ்சன் மடுகல்ல பெற்றார். அவர் பின்னாளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவராக கடமையாற்றி சர்வதேச அளவில் இலங்கைக்கு புகழ் சேர்த்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு ஒப்சேவருடன் இணைந்து மொபிடெல் நிறுவனம் வருடாந்தம் நடாத்தும் இப்பாடசாலை சிறந்த வீரருக்கான விருதுவழங்கும் விழாவில் தொடர்ந்து ரஞ்சன் மடுகல்ல சிறப்பதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்..

அவர் இதுவரை சுமார் 200 டெஸ்ட் போட்டிகளுக்கும், 350 ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கும், 100 டி/டுவெண்டி போட்டிகளுக்கும் போட்டி நடுவராகக் கடமையாற்றியுள்ளார். தனது 29வது வயதில் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ரஞ்சன் மடுகல்ல 1988ஆம் ஆண்டு இலங்கை அணியின் 4வது தலைவராகக் கடமையாற்றியுள்ளார். கண்டி திருத்துவக் கல்லூரியில் ஆரம்ப கல்வியைப் பெற்ற இவர் உயர் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் பெற்றார்.

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க 1980ம் 82ம் ஆண்டுகளில் இவ்விருதைப் பெற்ற சிறந்த வீரராவார்.

மேலும் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வெல்லும் போது இவர் அவ்வணிக்கு தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அப்போது அவ்வணியில் இடம்பெற்ற அசங்க குருசிங்க, ரொஷான் மகாநாம, குமார் தர்மசேன, முத்தையா முரளிதரன் ஆகியோரும் விருதுகளைப் பெற்ற வீரர்களாவர்.

ஆனந்தாக் கல்லூரி சார்பில் இவ்விருது பெற்ற அர்ஜுன ரணதுங்க 93 டெஸ்ட் போட்டிகளிலும், 269 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவற்றில் 56 டெஸ்ட் போட்டிகளுக்கும், 189 ஒருநாள் போட்டிகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார். இவர் இதுவரை இலங்கை அணி சார்பாக கூடிய போட்டிகளுக்கு தலைமை தாங்கியவராவார். இவருக்கு 1999ம் ஆண்டு சர்வதேச விஷ்டன் விருதும் கிடைத்தமை குறிப்பித்தக்கது.

ரொஷான் மகாநாம

நாலந்தாக் கல்லூரியில் கல்விபயின்ற இவர் 1983ம் 84 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை இவ்வருதைப் பெற்றார். இவர் 1983ம் ஆண்டு திறமையின் உச்சத்தில் இருந்தபோது அநேகமாக இவர் விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் எதிரணிப் பாடசாலைகளுக்கு எதிராக சதம், அரைச் சதம் எனக் குவித்தார். அதுமட்டுமல்லாமல் களத்தடுப்பிலும் சிறந்து விளங்கியதால் தொடர்ச்சியாக இரு வருடங்களிலும் ஒப்சேவரின் சிறந்த வீரராகத் தெரிவானார்.

பின் இலங்கை டெஸ்ட் அணியின் இணைந்து திறமைகாட்டிய ரொஷான் மகாநாம 1997ம் ஆண்டு ஆர் பிரேமதாச மைதானத்தில் சனத் ஜயசூரியவுடன் இணைந்து 2ம் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட உலக சாதனையையும் படைத்தார். சிறந்த களத்தடுப்பாளராகவும் விளங்கிய இவர் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி நடுவராக சில காலம் கடமையாற்றினார்.

குமார் தர்மசேன

2012ம ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய விருது வழங்கும் விழாவில் விசேட கள நடுவராக விருது பெற்ற குமார் தர்மசேனவும் 1989ஆம் ஆண்டு நாலந்தா கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வருடத்தின் சிறந்த வீரராகத் தெரிவு செய்து ஒப்சேவர் விருது பெற்றவராவார். சகலதுறை ஆட்டக்காரராக இலங்கை அணியுடன் இணைந்த அவர் தற்போது சர்வதேச கள நடுவராகக் கடமையாற்றி நல்ல நடுவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இதுவரை இவர் 60 டெஸ்ட்,100 சர்வதேச ஒருநாள் போட்டி, 35 டி/டுவெண்டு போட்டிகளுக்கு நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.

மார்வன் அத்தபத்து

தொடர்ந்து 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி பூஜ்ஜியத்துக்கு ஆட்டமிழந்த மார்வன் அத்தபத்து 1990ஆம் ஆண்டு ஆனந்தாக் கல்லூரி சார்பாக ஆண்டின் சிறந்த வீரருக்கான ஒப்சேவர் விருதைப் பெற்றவராவார்.

பூஜ்ஜியத்துடன் டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த மார்வன் அத்தபத்து இறுதியில் டெஸ்ட் போட்டிகளில் 5 இரட்டை சதங்களை விலாசியுள்ளார். இவர் 18 டெஸ்ட் போட்டிகளுக்கும், 63 ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கும் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

முத்தையா முரளிதரன்

இலங்கையணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி உலகின் அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ள சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் சிறந்த வீரருக்கான ஒப்சேவர் விருதை 1991ஆம் ஆண்டு பெற்றவராவார்.

இதற்கு முன் கொழும்பிலுள்ள பாடசாலைகளே இவ்விருதைப் பெற்றிருந்தன. ஆனால் கொழும்புக்கு வெளியே முதல்முறையாக 1991ம் ஆண்டு கண்டி கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக இவ்விருதை வெற்றிகொண்டார் முத்தையா முரளிதரன். 1996ம் ஆண்டு உலகக் கிண்ண அணியிலும், 2011ம் ஆண்டு உலகக் கிண்ண இரண்டாம் இடத்தைப் இடம் பெற்ற இலங்கை அணியிலும் இடம்பெற்ற ஒரே வீரர் முத்தைதை முரளிதரன் ஆவார்.

Comments