கலப்புத் தேர்தல் முறையால் | தினகரன் வாரமஞ்சரி

கலப்புத் தேர்தல் முறையால்

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் பைஸர் முஸ்தபா
நேர்காணல் 

 

எம். ஏ. எம். நிலாம் 

 

விருப்பு வாக்கு அல்லது விகிதாசார தேர்தலுக்குச் சென்று மோசடி தேர்தலுக்கு நாடு முகம் கொடுக்க முடியாதெனத் தெரிவித்த உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான பைஸர் முஸ்தபா புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழேயே இனிவரக் கூடிய அனைத்துத் தேர்தல்களும் நடைபெறுமெனவும் அந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டார். நாட்டிலிருந்து மோசடி அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே புதிய தேர்தல்முறை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் இதில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சில கட்சிகள் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதன் காரணமாக மீண்டும் பழைய விகிதாசாரமுறைத் தேரதல் முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற கோஷம் எழுந்துள்ள நிலையில் பொறுப்புக்குரிய அமைச்சரான பைஸர் முஸ்தபாவுடன் தினகரன் வரமஞ்சரிக்காகக் காணப்பட்ட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணல் விபரம் வருமாறு:

 

கேள்வி: புதிய கலப்புத் தேர்தல் முறையால் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம், அவர்களது அரசியல் இருப்பு பெருமளவில் குறையுமெனவும், சிறுபான்மை சமூகத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும் என்ற கோஷம் வலுத்து வருகின்றதே?

பதில்: சிறுபான்மை சமூகத்தின் தலைவர்கள் குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் கூறுவது போன்று பேய் ஒன்றும் அவ்வளவு கறுப்பானதல்ல. இது முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியாகும். கலப்புத் தேர்தல் முறையால் சிறுபான்மை சமூகத்துக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான அநீதியும் ஏற்படப் போவதில்லை. எல்லை நிர்ணயம் காரணமாக குறைந்தளவு முஸ்லிம்கள் வாழும் சில பிரதேசங்களில் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய நிலையொன்று காணப்படுகிறது. இது உண்மைதான். ஆனால் அதற்குரிய தீர்வு விகிதாசாரத்தின் மூலம் காணப்பட முடியும். இந்தச் சிறிய காரணத்தைக் காட்டி புதிய முறையை முடக்கும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது.

இங்கு சிறுபான்மையினருக்கல்ல பிரச்சினை. முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் தலைமைகளுக்கே பிரச்சினை. இனியும் அவர்களால் மோசடி அரசியல் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாவே உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் இதனை எதிர்க்க முற்பட்டுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு தலைமைகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதன் காரணமாக மாகாண சபை தேர்தலுக்கான (புதிய) கலப்புத் தேர்தல் முறைக்கு முஸ்லிம் தலைமைகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தொகுதி அல்லது வட்டாரத் தேர்தல் முறையால் சில இடங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்ற அச்சம் நியாயமானதே ஆகும். அதனை நிவர்த்தி செய்துகொள்ள கட்சித்தலைவர்கள் கூடிப்பேசி தீர்வு கண்டு கொள்ள முனைய வேண்டும். அதைவிடுத்து மோசமான பழைய முறையை கோருவது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். எக்காரணம் கொண்டும் விகிதாசார விருப்பு வாக்கு தேர்தலை நடத்த இடமளிக்கப்பட மாட்டாது.

கேள்வி: மாகாண சபைகளுக்குரிய எல்லை நிர்ணயம் முழுமையாக முடிவடையாத நிலையில் புதிய முறையில் தேர்தலை நடத்துவது நியாயமானதாக முடியுமா?

பதில்: உண்மையில் தொகுதிவாரித் தேர்தல் முறை நடைமுறைக்கு வரும் போது முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் நன்குணர்ந்துள்ளோம். ஆனால் கலப்புத் தேர்தல் முறையில் இன்னொரு விடயம் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தொகுதிவாரியாக தெரிவுக்குப் பின்னர் சிறுபபான்மைச் சமூகத்தினர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்டுத்தும் பொருட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொடுக்கப்படும். இதனை மக்கள் உணர வேண்டும். தேசியக்கட்சிகளின் மிதிபலகையில் பயணிப்போருக்கு இது பாதகமாக அமையும் என்பதனாலேயே எதிர்க்கின்றனர்.

எல்லை நிர்ணயத்தில் காணப்படும் குறைபாடுகளையும் புதிய தேர்தல்முறையில் காணப்படும் குறைபாடுகளையும் பாராளுமன்றில் கட்சித் தலைவர்களுடன் பேசி இணக்கப்பாடுகளை எட்டிக் கொள்வதன் மூலம் தீர்வு காண முடியும். அதைவிடுத்து மீண்டும் மிதிபலகையில் பயணிக்க முற்படுவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கடந்த காலத்தில் விருப்பு வாக்கு தேர்தல் முறைமையின் காரணமாக ஏற்படுத்திய தாக்கங்களை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சிகளையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறைபாடுகளை பாராளுமன்ற உபகுழுக்கூட்டத்தில் முன்வைத்து தீர்வு தேடுவதைவிடுத்து மீண்டும் மோசடித் தேர்தல்தான் வேண்டும் எனக் கூச்சலிடுவது ஜனநாயக அரசியலை கேள்விக்குறியாக்குவதாகவே அமையும். இவர்களின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ஒருபோதும் முனாபிக் (நயவஞ்சகன்) அரசியல் செய்யத் தயாரில்லை.

கேள்வி: சில தேசியக் கட்சிகள் கூட பழைய முறையில்தான் மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனவே?

பதில்: யாராக இருந்தாலும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும். சுயநல அரசியல் செய்ய முற்படுவது அசிங்கமானதொன்றாகும். அரசியல் அதிகாரத்தை தீர்மானிப்பது மக்களாகும். மக்களுக்குரிய அந்த அதிகார உரிமையை யாரும் தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது.

கலப்புத் தேர்தல் முறைக்கு ஒன்றாக நின்று கை உயர்த்திவிட்டு வெளியே வந்து எதிர்ப்பதானது வெட்கக்கேடானதாகும். இந்தப் புதியமுறை மோசமானது. இதில் மாற்றம் ஏற்படுத்திய பின்னரே நிறைவேற்றப்பட வேண்டுமென அன்றே கூறி இருக்கலாமே. சில சந்தர்ப்ப செயற்பாடுகளுக்காகவே அன்று கைதூக்கினார்கள். பின்னர் வெளியே வந்து தடைகளைப் போடுவதில் முனைப்புக்காட்டி வருகின்றனர். மாகாணசபைத் தேர்தலை காலம் கடத்துவதற்கு இதனை பயன்படுத்த முனைகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பித்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த உறுதிபூண்டிருக்கின்றோம். அந்தத் தேர்தல் நிச்சயமாக புதிய முறையிலேயே நடக்கும். இதில் எவ்விதமான மாற்றமும் கிடையாது. எக்காரணம் கொண்டும் மோசடிமிக்க பழைய முறைக்குச் செல்ல இடமளியோம்.

கேள்வி: முஸ்லிம் சமூகத்தின அரசியல் இருப்பையும், பிரதிநிதித்துவங்களையும் பாதுகாப்பதற்காக அதே சமூகத்தின் தலைவர்கள் குரல் எழுப்புவதை தவறாக எடை போடமுடியுமா?.

பதில்: தனது சமூக அரசியல் இருப்புக்காக போராடுவதை நான் ஒருபோதும் குற்றம்காண முற்படவில்லை. ஆனால் அச்சமூகத்தை விற்றுப்பிழைப்பு நடத்த முற்படுவதைத்தான் கண்டிக்கின்றேன். இதுபோன்ற முனாபிக் தனமான அரசியலை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். அது வெட்கம்கெட்ட செயலாகும். தனித்துவ அரசியல் செய்ய முற்பட்டு முஸ்லிம் சமூகத்தை தேசிய அரசியல் கட்சிகளிடமிருந்து பிரித்தெடுத்து தனியான கட்சிகளை ஆரம்பித்தவர்கள் அதே சமூகத்தை தேசியக் கட்சிகளிடம் அடகு வைத்து தேசிய கட்சிகளின் மிதிபலகையில் பயணித்து ஆதாயம் தேடுவது நியாயமாகுமா? எனக் கேட்கிறேன்

தனித்துப்போனால் இறுதிவரை தனித்தே போகலாமே. அந்தவகையில் தமிழ்க் கட்சிகளை குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் பாராட்டுகின்றேன். மதிக்கின்றேன். அவர்கள் ஒருபோதும் தேசியக் கட்சிகளிடம் சோரம் போகவில்லை. தனித்தே பயணிக்கின்றனர். அந்த தைரியம் முஸ்லிம் தலைவர்களிடமோ, கட்சிகளிடமோ காணப்படவில்லை. தேசியக் கட்சிகள் மீது நம்பிக்கையில்லை என்று சமூகத்தை வெளியே எடுத்தவர்கள் எதற்காக மீண்டும் அந்த மக்களை தேசியக் கட்சிகளின் காலடியில் மண்டியிட வைக்க முற்பட வேண்டும். இது தமது சுயநல அரசியலுக்கன்றி மக்களுக்காக அல்ல என்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது.

கேள்வி: முஸ்லிம் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை தக்க வைப்பதற்கு மாற்று வழிகள் கிடையாதா?

பதில்: முஸ்லிம் சமூகமும், அவர்களின் தலைவர்களும் ஏன் வீண் பீதியடைய வேண்டும்.

 

புதிய தேர்தல் முறையில் விகிதாசாரம் என்ற ஒரு அம்சம் இருக்கத்தானே செய்கின்றது. அதனடிப்படையில் எமக்குரிய பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியுமே. தேசியக்கட்சிகளின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி பின் கதவால் நுழைய முனைவது நேர்மையற்ற செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். தனித்துப் போட்டியிட்டு உரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?

புதிய முறை தவறாக இருந்தால் ஆரம்பம் முதலே எதிர்த்திருக்க முடியும். ஆரம்பத்தில் 50/50 எனக் கூறி இரு கைகளையும் உயர்த்தி அங்கீகரித்ததன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலில் சூடுகண்ட பூனையாகியதன் பின்னர்தான் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். எல்லை நிர்ணயம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் ஆரம்பம் முதலே கவனயீனமாக இருந்துவிட்டு இப்போது கூச்சல் போடுகின்றனர்.

இப்போதும் கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. பாராளுமன்ற உபகுழுவின் மூலம் இதனைச் சரி செய்து கொள்ள முடியும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேச முடியும். அதன்மூலம் ஆரோக்கியமான தீர்வைப்பெற்றுக் கொள்ள முடியம் இதைவிடுத்து பழையமுறைதான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது நடக்கப் போவதுமில்லை.

கேள்வி: சிறிய கட்சிகள், பெரும்பான்மை தேசியக் கட்சிகள் என எல்லோரும் புதிய முறையில் குறைகாணும் போது, நீங்கள் மட்டும் தனித்து பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு அடம்பிடிக்கலாமா?

பதில்: இது தவறான கேள்வியாகும். நான் மடடும் தனித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. எல்லோரும் கூடி கைஉயர்த்தி எடுத்த முடிவைத்தான் நானும் வலியுறுத்துகின்றேன். நான் அங்கம் வகிக்கும் கட்சியும் இந்த முடிவைத்தான் எடுத்திருக்கின்றது. நான் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முற்படவில்லை.

சிலர் என்னை துரோகியாக மக்கள் முன் காட்ட முற்படுகின்றனர். நான் எந்தத் துரோகத்தையும் செய்யவில்லை. உண்மையான துரோகி யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியலை, சமூகத்தை விலைபேசும் அரசியலை நான் ஒருபோதும் செய்யப் போவதில்லை.

Comments