தனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி

தனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்  இரா.துரைரெட்ணம்
செ.பேரின்பராசா   
துறைநீலாவணை நிருபர் 
 

கிழக்கு மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்பட்டு ஜனநாயக பண்புகளுக்கு மதிப்பளித்து கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய மக்களுக்கு சேவை செய்ய விரைவாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும். இல்லையேல் மக்களினுடைய ஜனநாயக உரிமை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக கருதப்படும்.

இதேவேளை இத்தேர்தல் இடம்பெறுமாயின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு பொது அணியின் கீழ் ஒன்று திரண்டு இத்தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் நாம் தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடியும். இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தினகரன் வார மஞ்சரிக்கு அளித்த விஷேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

 

கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றரை வருடங்கள் உருண்டோடி விட்டன. இன்நிலையில் இவ்வரசாங்கம் பற்றி உங்கள் பார்வை எவ்வாறு உள்ளது.

பதில்: வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு சர்வதேச சமூகத்தின் ஊடாக ஜனநாயக ரீதியான கோட்பாடுகளுக்கு உட்பட்ட நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமான நல்லதொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் மக்கள் இருந்தனர். இன்று அந்த எதிர்பார்ப்பு கானல் நீராகி விட்டதாகவே கருத முடிகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மீண்டும் ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் இனவாத தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது என்ற கருத்தியல் அடிப்படையில் உள்ளனர் எனலாம்.

கேள்வி: இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளதா? அல்லது பலவீனம் அடைந்துள்ளதா?

பதில்: கடந்த காலங்களில் போட்டித் தன்மையற்ற சூழலே தமிழ்ப் பிரதேசங்களில் இருந்தது. மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவதில் இடர்பாடுகள் அற்ற நிலை காணப்பட்டது. யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு மக்கள் பிரதிநிதிகளுக்கான போட்டித் தன்மை அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் மக்கள் வினைத்திறன் உள்ள சேவையை அனுபவிக்கவில்லை. இதனால் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதிகள் மீது ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது காலத்தின் கட்டாயம். இருப்பினும் இதில் பலவீனமும் உள்ளது. பலமும் உள்ளது.

கேள்வி: தமிழ்த் தேசிய அரசியல் இன்று பிளவுபட்டு உள்ளது இஅல்லது முரண்பட்டு உள்ளது என கருதுகின்றீர்களா?

பதில்: ஒரு கட்சி தன்னுடைய வளர்ச்சிக்காக ஏனைய கட்சி பிரதிநிதிகள் மூலமாக தமிழ் மக்களைப் பயன்படுத்துவது அந்தக் கட்சியின் பலவீனத்தைக் காட்டுகின்றது. தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மக்களுக்கு உரிய பிரிக்கப்படாத உரிமை. இவ் உரிமையை அமுல்படுத்துகின்றவர்கள் தமது கட்சி இலாபம் கருதி எடுத்த முடிவுகள் தவறானவை என மக்கள் தமது வாக்குகள் மூலம் நிருபித்துள்ளார்கள். தமிழ்த் தேசியம் பேசும் தலைமைகள் தமிழ்த் தேசியத்திற்கான பொதுவான தலைமையினை உருவாக்கி பொதுச்சின்னம் ஒன்றை அடையாளப்படுத்தி சரியான நிருவாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி பொதுவான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தால் மட்டுமே ஒற்றுமையை அமுல்படுத்த முடியும்.

கேள்வி: ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்த் தேசியத்தின் மீட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று உள்ளதா?

பதில்: எமது கட்சியைப் பொறுத்த வரையில் எமது தலைமை இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்பாக தமிழ்த் தேசியத்தில் இருக்கின்ற அக்கறையின்பால் பல ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக பல ஆரோக்கியமான விமர்சனக் கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் இருந்து வெளிப்பட்டன் காரணமாக தமிழ் மக்கள் பலவீனம் அடையக் கூடிய எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக வெளியில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் எமது அணிக்கு ஏற்பட்டது. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கொள்கை ரீதியாக பொது நோக்கின் அடிப்படையில் பணிக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு பிரிவதனால் எமது எதிரிகள் பலம் பெறுவார்கள். இந்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ் அரசியல் கட்சிகள் கிழக்கில் ஒரு கயிற்று நாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றேன். கிழக்கில் தமிழர்கள் பலவீனமடைகின்ற எந்தவொரு முடிவுகளுக்கும் தலைவணங்க மாட்டேன்.

கேள்வி: வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனின் பேச்சுக்கள், சிந்தனைகள் எதிர்கால அரசியலின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக வந்து விடுமா?

பதில்: தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வடக்கில் போட்டித் தன்மை அதிகரிக்கப்படுகின்றன. இதற்கு வெளிநாட்டுச் சக்திகளும் ஒரு காரணம். இது காலத்திற்குக் காலம் வடக்கில் நிலையான ஆட்சி உருவாகுவதை தடுப்பதற்கு வழிசமைக்கும். இதனடிப்படையில் பார்க்கும் போது வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்ற வகையான பார்வை உள்ளது. ஆனால் சீ. வி. விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். ஆனால் சட்டம், ஒழுங்கு, தேசிய அரசியல் யாப்பு, கொள்கை இரண்டையும் சீ. வி. விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டு அமுல்படுத்திய ஒருவர். ஏனையவர்களின் முழு விபரத்தையும் அவரால் பூர்த்தி செய்ய முடியாது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இரா. சம்பந்தன் அணி சீ. வி. விக்னேஸ்வரன் என இரு பிரிவுகள் உள்ளனவா? அப்படியாயின் உங்கள் அணியின் பார்வை எத்திசையில் செல்லும்?

பதில்: அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தலைமைகளின் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளன. இந்த விடயத்தில் மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் எதுவும் ஆகிவிட முடியாது. வடக்கைப் பொறுத்த வரையில் யாவரும் தமிழர்களே. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதே வேளை தேசிய இனவாத கட்சிகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பிரிப்பதற்காக பல முகவர்களை உருவாக்கி அனுப்பியுள்ளனர். தனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றும் பிழைப்பதற்கும் கிழக்கிலுள்ள தமிழ் தலைமைகள் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விரும்புவது ஒரு அணியையே இதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி விட்டுக் கொடுப்புக்களைச் செய்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோர் தொடர்பாக அனுசரித்து ஒற்றுமையை வலியுறுத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். இது இல்லாமல் போனால் தமிழ் தலைமைகளே பதில் கூற வேண்டும்.

கேள்வி: இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை பற்றி மாகாண சபை உறுப்பினராக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் இருந்தவர் என்ற வகையில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: 1987 ஆம் ஆண்டு இலங்கை−இந்திய ஒப்பந்தம் ஊடாக 13வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இச்சட்டத்தை முழு இலங்கையிலும் மாகாண சபை முறைமையாக முழுமையாக அமுல்படுத்தப்பட்டன. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் உரிமைகளைக் கேட்டு ஆயுதரீதியாகப் போராடியதன் பலனாக முதற்கட்டமாக மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது நிரந்தரதீர்வல்ல.

வடக்கு கிழக்கு மாகாணசபை திருகோணமலையை தலைநகராக உருவாக்கி, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, சில பொலிஸ் அதிகாரம், நிதி, வரிஅறவீடு போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. 1990 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் மத்திய அரசினால் வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சபையாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஏனைய மாகாண சபைகள் 18 வருடங்களாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பல செயற்திறன் உள்ள திட்டங்கள் அம்மாகாண சபையில் அமுல்படுத்தப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணசபை மக்கள்பிரதிநிதிகள் இல்லாத சபையாக நிருவாக அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்டது. முன்னைய கால கட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், சில நிதி அதிகாரங்கள், சில காணி அதிகாரங்கள் மத்திய அரசினால் மாகாணசபையிடம் இருந்து மீண்டும் பறிக்கப்பட்டன. இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணம் 2006 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு ஊடாக பிரிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு 37 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது அவ்வேளையில் மாகாணசபை முறைமைகளை சில சக்திகள் ஏற்றுக் கொள்ள வில்லை இதன் காரணமாக பலர் தேர்தலில் போட்டியிடவில்லை. குறிப்பிட்ட கட்சிகளே தேர்தலில் போட்டியிட்டனர். இதேவேளை 2012ம் ஆண்டு பல கட்சிகளும், சுயட்சைக்குழுக்களும் போட்டியிட்டன. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மத்திய அரசிடமிருந்து மாகாண சபைக்கான அதிகாரத்தை பெறுவதற்காக அல்லது 13வது திருத்தச் சட்டத்தில் மத்தியிலுள்ள சட்டவாக்கம் செய்யப்பட்ட அதிகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல்கூடசெய்யவில்லை. உள்ள அதிகாரத்தையும் கேட்கவும் முயற்சிக்கவில்லை.

இத்தோடு அரசியல் தலைமைகளும் சட்டவாக்கம் செய்யும் அதிகாரத்தை அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. கையில் உள்ளதை விட்டுவிட்டு கையில் இல்லாதவற்றை தேடிக்கண்டு பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன முதற்கட்டமாக பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்ட 13 இல் உள்ள அதிகாரத்தை மாகாண சபைக்கு பெற்று அமுல்படுத்த, மத்திய அரசின் விகிதாசாரத்திற்கு முரணாக மேற்கொள்ளப்படும் அனைத்து விடயங்களுக்கும், பௌத்த, இஸ்லாமிய மாகாணமாக மாற்ற முயற்சிக்கும் இனவாத சக்திகளை தடுத்து நிறுத்தவும், எந்த இனங்களுக்கும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பொதுவான கொள்கைகளை அமுல்படுத்தவும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நல்ல கொள்கைகளை அமுல்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Comments