எம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை | தினகரன் வாரமஞ்சரி

எம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை

ஷம்ஸ் பாஹிம்...
 

'க லையும் இலக்கியமும் வர்த்தகப் பண்டமாகி விட்ட இன்று மானுடத்தைப் பேசும் துடிப்புள்ள இளம் படைப்பாளிகள் உருவாக ​வேண்டும். வெற்றுப் புகழுக்கும் வெள்ளிப் பணத்திற்கும் பேனாக்கள் விலைபோகும் காலம் இது. வெதும்பும் உள்ளங்களுக்கு தென்றலாய் வீசி ஆறுதல் தர ​வேண்டிய பேனா,போலிகளை மோசடிக்காரர்களை திணரடிக்கும் புயலாகவும் மாற வேண்டும்'

சுமார் இரு தசாப்தங்களுக்கு முன்னர் தினகரன் புதுப்புனல் பகுதியில் எம்.எச்.எம் ஷம்ஸ் எழுதிச் சென்ற வரிகள் இவை. தூர நோக்குடன் அவர் எப்பொழுதோ சொல்லிச் சென்றவை இன்றும் யதார்த்தமாக இருக்கிறது என்றால் அது மிகையாக இருக்காது.

பலரின் இலக்கியத் தந்தையான மர்ஹூம் ஷம்ஸ் மறைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஓடிவிட்டன. ஏதோ அண்மையில் தான் அவர் இறந்தது போன்ற பிரமை அடிக்கடி எழாமலில்லை. அவர் கூடவே அதிகம் கழித்த அந்த நாட்கள் இன்னும் பசுமையாய் மனதின் ஓரங்களில் நிழலாடுகின்றன.

ஆஸ்பத்திரியில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த எனது தந்தை இன்று போல் ஒருநாளில் இரவு உயிரிழந்த அந்த வேதனையான கணங்கள் மனக்கண் முன் மங்கலாக தெரிகிறது.

சுமார் 40 வருட ஆசிரியர் சேவை, ஊடகத்துறை என அவரின் வாழ்க்கையில் பாதி தசாப்தங்கள் பேனாவுடனும் தாளுடனும் தான் கழிந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கும் குறைவான அவரின் இறுதித் தருணங்கள் தான் பேனாவும் தாளும் இன்றி ஆஸ்பத்திரி கட்டிலுடன் நகர்ந்திருக்கிறது. மாரடைப்பு என்று தெரிந்திராத நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் வீட்டில் ஓய்வாக இருந்த போது கூட பாடசாலை மாணவிகள் சிலர் தமிழ் தினப் ​போட்டிக்கு கட்டுரை எழுதிப்பெற வீடு தேடிவந்திருந்தார்கள்.ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வந்து எழுதித் தருகிறேன் என்று கூறிச் சென்றவர் வராமலே சென்று விட்டார்.

என் தந்தை நம்மை விட்டு மறைந்த 2002 ஜூலை 15 ஆம் திகதி குடும்பத்தார்கள், உறவினர்கள் என பலரும் மாத்தறை பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் திரண்டிருந்தோம். அவரின் நிலைமை தொடந்து மோசமாக தான் இருந்தது. ஆனால் மாலை நாம் அங்கிருந்து வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிசயமாக அவரின் இதயத்துடிப்பு சீராகி உடல் நிலை ஓரளவு தேறியிருந்தது.இது அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. ஆனால் அணையப் ​போகும் விளக்குப் போல என்பது ஏனோ எவருக்கும் புலப்படாமலே இருந்து விட்டது. சிறிய கரண்டியில் சொட்டு நீர் தான் பருக்கிவிட டாக்டர்கள் அனுமதித்திருந்தார்கள்.

அவருக்கு கரண்டியில் கொஞ்சம் நீர் பருக்கிய போது கையால் எழுதுவது போல ஏதோ சைகை காட்டினார்.அந்த மர்மம் இன்றும் அவிழ்க்கப்படாத சிக்கலாக தொண்டைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. பேச முடியாமல் இருக்கும் அவர் ஏதோ சொல்லத் தான் பேனையும் தாளும் கேட்டிருப்பார் என்று புரிந்தாலும் அந்த நேரத்தில் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா? பிறகுபார்த்துக் கொள்வோம் என்றிருந்தார்களா என்ற சந்தேகம் இன்றும் மனதை குடைந்து கொண்டிருக்கிறது.

படைத்தவன் எழுதி வைத்துள்ள நாளில் அந்த செக்கனில் அவனிடம் சென்று தான் ஆக வேண்டும். ஆனால் சொல்லும் படியாக எந்த நோயும் இன்றி தேகாரோக்கியத்துடன் இருந்தவர் திடீரென நோயில் விழுந்து மரணித்ததை எவராலும் ஜீரணிக்க முடியாது.

எழுத்தையும் இலக்கியத்தையும் தன் குடும்பத்தையும் விட நேசித்தவருக்கு திடீரென இரு கைகளையும் கட்டிப் போட்டால்.... தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்குமா? இறுதிக்காலத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாதது மிகவும் பாதித்தது. அது போக அவர் மிகவும் நேசித்த கிராமத்து கனவுகள் நாவலுக்கு எதிராக சிலர் வெளியிட்ட மறுப்பு நூலும் அதனை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிந்த அவர் தூக்கி விட்ட சில எழுத்தாளர்களும் அவரின் இரத்த ஓட்டம் நின்று விட காரணியாக இருந்தார்கள். இறுதிக் காலங்களில் இவற்றின் தாக்கம் அவரை மனதளவில் நொறுக்கியது அவருக்கு நெருக்கமானவர்களுக்கொன்றும் ரகசியமல்ல.

அவரின் மரணத்திற்கு பின்னரும் கூட இவர்கள் செயற்பட்டு ஷம்ஸ் எனும் நாமத்தை மறக்கடிக்க பிரயத்தனம் செய்தாலும் அவை தோற்றுப் ​போயின.

'சின்ன வயதில் எனக்கு எழுத்தார்வம் என்ற ஒன்று இருந்ததா என்பது பற்றி இன்று நினைத்துப் பார்த்தால்.. அந்தப்பதிவுகள் மிக மங்கலாய்தான் தெரிகிறது' என ஞானம் சஞ்சிகையில் எழுதிய தனது கடைசி கட்டுரையில் அவர் கூறியிருந்தார். அதனாலோ என்னவோ அவர் தனது வாழ்நாள் முழுவதும் எழுத்தார்வம் உள்ளவர்களை தூக்கிவிடவும் அவர்களுக்கு களமமைத்துக் கொடுக்கவும் உழைத்தார். 40 வருட ஆசிரியர் சேவையில் பல ஆயிரம் மாணவர்களை உருவாக்கிய அவர் எழுத்தாளராக, கவிஞராக பல நூறு எழுத்தாளர்களை புடம்போட்டிருக்கிறார்.

ஒருபோதும் பிரதியுபகாரம் எதிர்பார்த்து அவர் இந்தப் பணிகளை செய்ததில்லை என்பது அவரின் இலக்கிய நண்பர்களுக்கும் அவரின் சிஷ்யர்களுக்கும் தெரியாமலில்லை.பெயருக்கும் புகழுக்கும் இதனை செய்யவில்லை என்பதும் பலருக்கும் தெரிந்த நிதர்சனம்.

அவர் கற்பதற்கு வெட்கப்படவோ வயதை தடையாக கொள்ளவோ இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. மூன்று பிள்ளைகளின் தந்தையாக இருந்து கொண்டு தான் அவர் பல்கலைக்கழக மாணவராக கற்றுக் கொண்டிருந்தார். நான் உயர்தரம் கற்று வெளியேறிய 1994 ஆம் ஆண்டில் தந்தை திறந்த பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்கச் சென்று வந்தார்.

அதனால் தான் அவருக்கு தடைகள் அழுத்தங்கள் குழிபறிப்புகள் என்பவற்றுக் மத்தியில் உச்சத்திற்கே செல்ல முடிந்தது.

'சமூகம் சார்ந்தவற்றையும் சமூகப் பிரச்சினைகளையும் இலக்கியமாகவும் எழுத்தாகவும் பரிமாற்றம் செய்து அதைப் பேசுவதற்கும் பதில் அளிப்பதற்கும் நியாயம் கூறுவதற்கும் அவர் தயார் நிலையில் இருந்தார். அதனால் ஷம்ஸ் எப்போதுமே ஒரு வேறுபட்ட தனித்துவமான எழுத்தாளராக மிளிர்ந்தார். பயமோ தயக்கமோ அவரது எழுத்துக்களில் என்றுமே இருந்ததில்லை. பேனாவுக்கான உண்மையான மரியாதையை உணர்ந்து எழுத்துலகில் ஜீவிதம் நடத்திய உன்னத உலக எழுத்தாளர்கள் பலரை நாம் நினைவு கொள்ளும்போது அந்த வரிசையில் ஷம்சுக்கான இடமும் நிச்சயம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அவரது எழுத்துக்கள் அந்தளவு சமூக உணர்வும் தீட்சண்யமான பார்வையும் எதிரிகளின் சலசலப்புக்கு அஞ்சாத மனநிலையும் கொண்டவையாக இருந்தன' என நாச்சியாதீவு பர்வீனின் நூல் வெளியீட்டு விழாவில் ஒருமுறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் கூறியிருந்தது இந்த இடத்தில் நினைவுபடுத்துவது சாலப் பொருத்தம் எனலாம்.

தந்தை மறைந்து 16 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவருக்காக 3,4 நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அவரின் எழுத்துக்கள் நூலுருப் பெற வரிசையாக காத்திருக்கின்றன. ஒரு படைப்பாளி எவ்வளவு தான் எழுதித் தள்ளினாலும் அவரின் படைப்புகள் நூலாக பிரசவிக்கும் போது தான் அவரின் எழுத்தை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். இந்தக் கனவு என்னைப்போல அவரை நேசிக்கும் பலருக்கும் இருக்கும்.

காலம் செல்லச் செல்ல அவரை இலக்கிய உலகம் மறந்து விடுமா என்ற சிறுபிள்ளைத்தனமான பயம் எனக்குள் அவ்வப்போது எழும். ஆனால் அவர் அவ்வளவு எளிதில் மறந்துவிடும் நபரல்ல என்பதை காலம் அவ்வப் போது நினைவூட்டிச் செல்லும்.

நாட்டில் சிங்கள இனவாதம் தலைதூக்கும் போது ஷம்ஸ் இருந்தால் சூடாக பதில் கொடுத்திப்பார் என எழுத்து வட்டாரத்தில் பேசிக்கொள்வார்கள். இலக்கியக் கூட்டங்கள், மாநாடுகள் நடந்தால் அவரைப் பற்றி கொஞ்சமாவது பேசப்படாமல் இருக்காது.பாடசாலை,பாலர் பாடசாலை நிகழ்வுகள் நடந்தால் அவரின் சிறுவர் பாடல்கள் நிச்சயம் அரங்கேறும். இந்தனைக்கும் மேலாக அவரின் இலக்கிய நண்பர்கள் ஷம்ஸின் படைப்புகள் அச்சில் வர வேண்டும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தத் தவறுவதில்லை. அவரின் சிஷ்யர்கள் சிலரும் அவ்வப் போது அவரை ஞாபகப்படுத்தாமலில்லை.

அவர் உயிருடன் இருந்தபோது கிராமத்து கனவு நாவலை மாத்திரம் தான் வெளியிட முடிந்தது. அவரின் மறைவிற்குப் பின்னர் அதன் இரண்டாம் பதிப்பை வெளியிடவும் சிறுகதைத் தொகுப்பான வளவையின் மடியில் நுலையும் மானுட கீதம் பாடல் நூலையும் வெ ளியிட முடிந்திருக்கிறது. அவர் எழுதிய கவிதைகளை நூலுருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அவரின் விமர்சனங்கள்,மொழிபெயர்ப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் என அவரின் பல்வேறுபட்ட எழுத்துக்கள் அச்சில் வர காத்திருக்கின்றன.

இது இவ்வாறிருக்க அவர் பற்றிய முழுமையான வரலாற்று நூலொன்றை வெளியிடும் கனவு நீண்ட நாளாக மனதில் தேங்கிக்கிடக்கிறது.

அவர் ஜந்து பிள்ளைகளின் தந்தையாக இருந்து மறைந்தாலும் பல ஆயிரம் பிள்ளைகளை இலக்கியத்தினூடாகவும் கல்வியின் ஊடாகவும் உலகுக்கு தந்திருக்கிறார். அவரின் கனவுகளை நனவாக்கும் வகையில் நிச்சயம் அவரின் அனைத்து படைப்புகளும் நூல் வடிவம் பெற்று அவரின் பெயரை திக்கெங்கும் பரப்பும் என்பதில் ஐயமில்லை. இறைவன் அதற்கு அருள்புரியட்டும்..

Comments