தூக்குக் கயிற்றில் சிக்குவது | தினகரன் வாரமஞ்சரி

தூக்குக் கயிற்றில் சிக்குவது

கருணாகரன்

 

சில நாட்களுக்கு முன்பு வடக்கில் உள்ள ஒரு நீதிமன்றம் ஒன்றில் “போதைப்பொருளுடன் தொடர்புள்ளவர்” என்ற குற்றச்சாட்டில் படைத்துறையைச்சேர்ந்த ஒருவர் மீதான வழக்கு விசாரணை நடந்தது. பொலிஸ் தரப்பே வழக்கைத் தாக்கல் செய்திருந்தது என்ற படியால், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் ஆதாரங்களை முன்வைத்தது.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜராகியது, ஒரு காலத்தில் விடுதலை இயக்கமொன்றாக இருந்து பின்னாளில் அரசியற் கட்சியாக மாறிய அமைப்பின் பிரமுகரான சட்டத்தரணியாகும்.

நான் வழக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சட்டத்தரணி பாடாய்ப்பட்டுக் கொண்டிருந்தார். பொலிஸ் தரப்பு ஆதாரங்களை முன்வைக்கும் போதெல்லாம், இவர் அவற்றை எதிர்த்து, உடைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கடுப்பாகினர். தாங்கள் மிகச் சிரமப்பட்டுக் குற்றச் செயலைத் தடுப்பதற்காக அதில் ஈடுபட்டவரைக் கைது செய்து கொண்டு வந்து, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்கும்போது, அதையெல்லாம் மறுத்துரைத்துக் குற்றவாளியைக் காப்பாற்றுவற்கு முயற்சிக்கிறாரே என்பதாக அவர்களுடைய கோபம் இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் வெளியே சமூகப் பாதுகாப்பை வலியுறுத்தும் அரசியற் பிரமுகராகவும் இருக்கும் இந்த இரட்டை வேடத்தைக் கண்டு முதலில் சிரிப்பு வந்தது. அப்படியே அந்தச் சிரிப்பு கோபமாக மாறியது. ஆனாலும் என்ன செய்ய முடியும்?

எனக்கு மட்டுமல்ல, அந்தச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்திலிருந்த பலருக்கும் இதைக்குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஏன் நீதிபதிக்கே எழுந்திருக்கலாம். என்னருகில் இருந்த ஒருவர், “இவையெல்லாம் வெளியே என்ன சொல்லுகினம் தெரியுமோ? அரசாங்கமே போதைப்பொருளை ஊக்குவிக்குது. அதைப் படைத்தரப்பைக் கொண்டே செய்யுது. சமூகத்தைத் திட்டமிட்டுச் சீரழிக்குது என்கினம். இங்க பாத்தால், பொலிஸ் பிடிச்சுக் கொண்டு வாற குற்றவாளிகளைக் காப்பற்றுகிறதுக்கு கடுமையாக முயற்சிக்கினம். இதென்ன கொடுமையப்பா...” எனக் காதில் கிசுகிசுத்தார்.

இதிலென்ன தவறிருக்கிறது? அவர் (சம்பந்தப்பட்ட சட்டத்தரணி) தொழிலைத்தானே செய்கிறார்! வழக்கு என்று வந்தால் அப்படித்தான் இருக்கும். தான் யாருக்காக ஆஜராகிறாரோ அவர் சார்பாக வாதிடுவது ஒரு சட்டத்தரணியின் கடமையாகும். அங்கே தொழில்தான், தொழில் தர்மம்தான் முக்கியமே தவிர, இந்த மாதிரிக் குற்றம் சாட்டப்பட்டிருகிறார் என்பதற்காக ஒருதரைப் புறந்தள்ளிவிட்டுப் போக முடியாது. அப்படிப் பார்த்தால் அரசியலில் ஈடுபடும் எந்தச் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் வழக்காட முடியாதே!” என்ற கேள்வியை யாரும் முன்னிறுத்தலாம். ஏன் குறித்த சட்டத்தரணியே இப்படிக் கேட்கலாம்.

“நீதிமன்ற நடைமுறையில் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும்வரை – அவரை எதிர்த்தரப்பு காப்பாற்ற முடியாது என்ற நிலை உருவாகும்வரை – நடக்கும் விசாரணைகள், விவாதங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றை வெளியே இருந்து பார்ப்போருக்கு அவை மிக எரிச்சலூட்டுவனவே. சலிப்பை ஏற்படுத்துவனவே. நியாயத்துக்குப் புறம்பானதாகக் கூடத் தெரியலாம். என்ன செய்வது, இந்தப் பழங்கால நீதிமுறைமைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன” என்று இன்னும் சிலர் மேலும் சப்பை கட்டலாம்.

“ஒருவரின் மீது பொலிஸ் குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்பதற்காக அந்த அடிப்படையில் தீர்ப்பை எழுதி விடமுடியாது. அப்படியென்றால், நீதிமன்ற நடைமுறை தேவையில்லையே” எனவும் இவர்கள் கேட்கக் கூடும்.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் பொது நடைமுறையும் பொது நியாயமும் உண்டு. அதைக் குறித்துச் சிந்திப்பதே முக்கியமானது. ஏனென்றால், குறித்த இந்தச் சட்டத்தரணி மட்டுமல்ல, “தமிழ்த்தேசியவாத” அரசியலை முன்னிறுத்தும் வேறு பல சட்டவாளர்களும் இந்த மாதிரிச் சமூக விரோதக் குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஆதரவாக வாதிட்டுள்ளனர். இன்னும் வாதிட்டு வருகின்றனர். இது இன்று நேற்று நடக்கும் முரணான சங்கதியல்ல. 1960, 70 களிலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கின்ற மோசமான செயற்பாடாகும்.

அப்பொழுது தமிழ் அரசியல் தலைவர்களாக இருந்த பலரும் இப்படிச் செயற்பட்டிருக்கிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஆதரவாக, சாதி ஒடுக்குமுறையாளருக்கு ஆதரவாக, போதைப்பொருட்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோதக் குற்றச்சாட்டுகள் உள்ளோருக்கு ஆதரவாக என.

சட்டவிரோத மணல் அகழ்வு, காடழிப்பு, மரக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, பாவனை, கசிப்பு உற்பத்தி போன்ற வற்றில் ஈடுபடுவோரைக் கையும் மெய்யுமாகக் காவல்துறையினர் கைது செய்து கொண்டு வந்து முன்னிறுத்தினாலும் இவர்களை முன்னின்று வெளியே எடுப்பது இந்த “தமிழ்த்தேசியவாத” அடையாளத்தைக் கொண்ட சட்டவாளர்களே.

இது ஏன்? பல ரும் கேட்பதைப்போல, இவர்களுடைய சமூக அக்கறை என்ன? வெளியே அரசியலுக்காக “இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் கைகளே உள்ளன” என்று சொல்லிக் கொண்டு, குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படுவது எந்த வகையான அறம்?

இந்த மாதிரிக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக வாதிட முடியாது என்றொரு முடிவை எடுத்தால், அப்படியானதொரு வழக்கத்தை உருவாக்கினால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இலகுவில் தப்ப முடியாமல் தண்டனைக்குள்ளாகுவர். நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னர் தடுப்புக் காவல் தண்டனையே குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் வழியை உண்டாக்கும்.

“அப்படிச் செய்தால், அரசியல் போன்ற வேறு காரணங்களுக்காக பொலிஸ் தரப்பு இல்லாத குற்றச்சாட்டைச் சுமத்திப் பலரை உள்ளே தள்ளிவிடுமே” என்ற கேள்வியை யாரும் கேட்கலாம்.

வெளிப்படையான முறையில் பலருக்கும் தெரிந்த, கையும் மெய்யுமாகவே பிடிபடுகின்ற சமூக விரோதக் குற்றவாளிகளுக்கு ஆஜராகுவதையே தவிர்க்கலாம் என்பதே இந்தப் பத்தியாளரின் வாதமாகும்.

என்னதான் சாட்டுப்போக்கான நியாயங்களைச் சொன்னாலும் காசுக்காக – பிழைப்புக்காக - சமூக அறத்தை மீறுவது, அரசியல் போன்ற பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு அறமே இல்லை. தமிழ்த்தரப்பில் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் சட்டவாளர்களும் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் காப்பாற்றும் சட்ட முயற்சிகளில் ஈடுபடலாம். யாராயினும் இதைத் தவிர்க்க வேண்டும் என்பதே பொதுக்கோரிக்கை.

இந்தப் பின்னணியில்தான் தற்போது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள “போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை” வழங்குவதற்கான தீர்மானத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் கடுமையானது. ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பலரும் அபிப்பிராயம் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச மன்னிப்புச் சபை தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலும் மனித நேய அமைப்பைச் சேர்ந்த பலரும் இதே கருத்தையே கொண்டுள்ளனர். இந்தப் பத்தியாளருக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பில் உடன்பாடில்லை.

ஆனால், அரசாங்கம் தன்னைச் சுற்றியுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வேறு வழியில்லாமல் தவிப்பதால் அதற்கு வேறு தெரிவுகளில்லாமல் உள்ளது. அதனாலேயே இந்த இறுக்கமான தீர்மானம்.

ஏனெனில் போதைப்பொருள் வணிகம் இன்று இலங்கையில் வலுடைந்திருக்கின்ற ஒன்று. இதில் அரசியல் அதிகாரத்தில் உள்ள பெருங்கைகள் பலவும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது நாடறிந்த விசயம். துமிந்த சில்வா, பரத லஷ்மன் பிரேமச்சந்திரா போன்ற பெயர்கள் இப்பொழுது உங்கள் நினைவில் எழலாம். இப்படி அரசியற் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சட்டமும் ஒழுங்கும் தாராளமாக மீறப்படுகின்றன. போதைப்பொருட்பாவனையோடு தென்பகுதியில் பாதாள உலகக்குழுக்கள் சம்மந்தப்பட்டிருப்பது பழைய சேதி. இதனால் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.

எந்த நாளும் “கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது”. “பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டு பிடிப்பு” என்ற செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் கடத்தலும் பாவனையும் நடந்து கொண்டேயிருக்கிறது. பொலிஸ் மற்றும் அதிரடிப்படைத் தரப்பினால் கண்டு பிடிக்கப்படும் இவற்றை விட அவற்றின் கண்களுக்குச் சிக்காமல் தப்பி விடுவன ஏராளம். இது எப்படி நடக்கிறது?

இலங்கைக்கு போதைப்பொருட்கள் வெளியிலிருந்தே வருகின்றன. ஒன்று விமானவழியாக வருவது. இதை விமான நிலையத்தில் கண்காணித்துக் கொள்கிறார்கள்.

 

ஆனால், இது குறைவு. இரண்டாவது கடல்வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றவை. இதுதான் அதிகம். மிக அதிகம். இது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து எடுத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியென்றால், இதற்குக் கடற்படையினரே முதற் பொறுப்பை ஏற்க வேணும்.

யுத்த காலத்தில் கடல் வழிக் கண்காணிப்பை உச்சமாகக் கொண்டிருந்த கடற்படைக்கு இப்போது மட்டும் ஏன் அதைச் செய்ய முடியாமல் போகிறது? கடற்கரைகளிலும் கடலிலும் உச்ச வலுவுடைய கண்காணிப்புப் பொறிமுறையோடிருக்கும் கடற்படையினால் ஏன் இதில் இயல முடியவில்லை? அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவு என்ற மக்கள் வாழ்ந்த இடத்தைவிட்டுக் கடற்படையினர் விலகவேண்டும் என மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டபோது கடற்படையினர் சொன்ன பதில், அந்தப் பகுதி தமக்கு முக்கியமான கேந்திர நிலையமாகும். நாட்டுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் போதைப்பொருட்கள் போன்றவற்றின் ஊடுருவலைத் தடுப்பதற்கும் இந்தப் பகுதி அவசியமானது என்பது.

இப்படிச் சொல்லிக் கொண்டு மக்களுடைய இடங்களில் அத்துமீறி நிலைகொண்டிருக்கும் கடற்படை இதில் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இதையெல்லாம் கடந்தும் போதைப்பொருட் பாவனை நாட்டுக்குள் வலுப்பெறுகிறது என்றால் நிச்சயமாக அதற்கான அகப் புறக் காரணிகளைப் பற்றி நாம் கண்டறிய வேண்டும். இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் போதைப் பொருட்கள் எடுத்து வரப்படுகின்ற என்றால் அதற்குப் பின்னால் இயங்குகின்ற தரப்புகள் எவை? அவற்றின் நோக்கமென்ன? அவை எப்படித் தொடர்ச்சியாக இதில் ஈடுபடுகின்றன? கடல் வழிப்பயணத்தை எப்படி இலகுவாகச் செய்கின்றன? இதைத் தடுப்பதற்கான பொறிமுறை எத்தகையது?

இதில் ஈடுபடுகின்ற அரசியல் புள்ளிகளையும் (சிங்களத்தரப்பில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் இதனோடு சம்பந்தப்படுகிறார்கள் – தமிழ்த்தரப்பில் இதனோடு சம்பந்தப்படுகின்றவர்களைக் காப்பாற்றுகிறார்கள்) பிற சக்திகளையும் எப்படிக் கட்டுப்படுத்துவது? இதைக் குறித்த பகிரங்கப்படுத்தல்கள், பொதுசன எதிர்ப்பு, ஊடகக் கவனத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?

போதைப்பொருட்பாவனையினால் இளைய தலைமுறை மோசமான சீரழிவு நிலைக்குள்ளாகி வருகிறது. இதைக்குறித்த கவலையளிக்கும் மருத்துவ அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. பாடசாலை மாணவர் மட்டத்திலேயே இந்தப் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக அபாயச் சுட்டிகள் சொல்கின்றன.

இந்த நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருட் கடத்தலையும் அது பெரு வணிகமாக வளர்ச்சியடைந்திருப்பதையும் அதன் பாவனையாளர் வகை, அவற்றின் வீதம் போன்றவற்றையும் அரசாங்கம் நன்றாக அறியும்.

அப்படி அறிந்திருக்கும் அரசாங்கம் எழுந்தமானமாகவே இதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை என்று அறிவித்திருப்பதாகப் படுகிறது. ஏனென்றால் இதில் உண்மையில் பெருங்கைகள் தப்பிக் கொள்ளும். பிடிபடுவதும் மாட்டுப்படுவதும் கீழ்நிலையில் உள்ளோராகவே இருப்பர்.

சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் வெட்டுதல், கசிப்பு உற்பத்தி போன்றவற்றில் கைது செய்யப்படுவோரும் இப்படித்தான் உள்ளனர். இதன் பின்னால் இயங்கும் “மாஃபியாக்கள்” இலகுவாகத் தப்பித்துக் கொள்ளும்.

இங்கும் தூக்குக் கயிற்றில் சிக்குவது அம்புகளே தவிர, எய்தவர்களல்ல. இப்படியான சூழலில் போதைப்பொருட் கடத்தலை அரசாங்கம் முறியடிக்கவே முடியாது. அதற்கான வழிமுறைகள் வேறாகவே இருக்க வேணும்.

 

Comments