சமூக நலன்: கடும் தண்டனை வழங்குவதில் தவறில்லை | தினகரன் வாரமஞ்சரி

சமூக நலன்: கடும் தண்டனை வழங்குவதில் தவறில்லை

மரண அச்சத்தில் மரண தண்டனை கைதிகள்

 

 

சமூகத்தையும் நாட்டையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, மரண தண்டனையை நிறைவேற்றியேனும் நடவடிக்ைக எடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஆன்மிகத் தலைவர்களும் புத்திஜீவிகளும் வரவேற்றுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களுக்குப் போதைப்பொருள் பயன்பாடே அடிப்படைக் காரணியாக விளங்குகிறது. எனவே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் போதைப்பொருள் பயன்பாட்டையும் அதன் வர்த்தகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரும் தண்டனைக்கு ஆளாகியுள்ளோரும் கூடுதலாகப் போதைப்பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் சிறையிலிருந்தவாறு தமது வர்த்தகத்தைத் தொடரும் அதேவேளை, சிறைச்சாலைகளைப் போதைப்பொருள் பரிமாற்றத்தின் கேந்திர மையமாக மாற்றிக்ெகாண்டுள்ளார்கள். இதனால், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டபோதிலும் அதனை நிறைவேற்ற முடியாது சட்டம் பலவீனமடைந்து காணப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ள அவர்கள், இவ்வாறான நிலைமையின் கீழ் மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கு மேடையைத் தயார்படுத்துவதில் தவறில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டு மக்களின் பொதுநலனுக்காகக் குற்றங்களைத் தடுக்கவும் சமூகத்தை நல்வழிப்படுத்தவும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதில் தவறில்லை என்று மல்வத்தை, அஸ்கிரிய பௌத்த பீடங்கள் தெரிவித்துள்ளன.பௌத்த கொள்கையின் மேலாதிக்கம் இருந்தபோதிலும், சமூக சிந்தனைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, சிறையிலிருந்துகொண்டே பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தலைப்புச் செய்திமீள் பரிசீலனை செய்க

இந்நிலையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீப்பிக்கா உடகம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்ைக விடுத்துள்ளார். சமூகச் சீரழிவிற்குப் போதைப்பொருள்ள வர்த்தகம் முக்கிய காரணியென்பதை ஏற்றுக்ெகாண்டபோதிலும் மரண தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்குவதன் மூலம் அவற்றை நிறுத்த முடியாது என்று கலாநிதி உடகம குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுத் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவார்களாயின், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமென்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களைக் கண்காணித்து, குற்றச்செயல்களுக்குத் துணைபோகும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றும் கலாநிதி தீப்பிக்கா உடகம தமது கடிதத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.

இதேசமயம், நாட்டில் இடம்பெறுகின்ற 90 வீதமான குற்றச்செயல்களுக்குப் போதைப்பொருளே காரணம் என்றும் 2008 முதல் நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் பற்றிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கண்டியில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கடந்த ஆட்சிக்காலத்தைவிடவும் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளதாகக்குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, ஊடகங்கள் தகவல்களைப் பெரிதுபடுத்திக்காண்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுக் குற்றவாளியாகி மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் சிறையிலிருந்தவாறு மீண்டும் அந்தச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றுவதைப்பற்றிய வாதப்பிரதிவாதங்கள் இருக்கலாம். நான் பாவம் செய்ய விரும்பவில்லை. என்றாலும், எதிர்கால சந்ததியினரைக் கருத்தில்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்ற நான் கையெழுத்திடுவேன் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்தே இப்போது எதிரும் புதிருமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்தச் செய்தியைக் கேள்வியுற்றதிலிருந்து சிறையிலுள்ள மரண தண்டனைக் கைதிகளுக்குப் புளியைக் கரைக்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், திடீர்த் திடீரென நோய்வாய்ப்படுவதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments