வர்த்தகப் போராக உருவெடுக்குமா | தினகரன் வாரமஞ்சரி

வர்த்தகப் போராக உருவெடுக்குமா

அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு உலக நாடுகளை புதிய நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சம் தற்போது அதிகரித்து வருகிறது.

புதிய அமெரிக்க நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக எடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள், குறிப்பாக சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பானவை, உலகளாவிய ரீதியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. தாராள வர்த்தகம், சுதந்திரமான முதலீட்டுக் கொள்கைகள் என்பன அமெரிக்காவுக்கு நன்மையேதும் தரவில்லை என்ற கடும்போக்கு சிந்தனையில் அமெரிக்க அதிபர் உள்ளார். அமெரிக்காவின் செல்வத்தை சர்வதேச வர்த்தகத்தின் ஊடாகவும் அமெரிக்க முதலீடுகள் ஊடாகவும் ஏனைய நாடுகள் குறிப்பாக சீனா திருடிக்கொள்கின்றன. எனவே அத்தகைய நாடுகளை தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்க நிர்வாகம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் பலரும் இக்கொள்கைகளைக் கண்டித்து கருத்துக்களை வெளியிடுவதையும் காணமுடிகிறது.

2008ல் ஏற்பட்ட அமெரிக்க நிதி நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து அந்நாட்டுப் பொருளாதாரம் இன்னும் மீட்சிபெறவில்லை. அத்துடன் வேலைவாய்ப்புப் பிரச்சினையில் முக்கிய வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே வழங்க வேண்டும். அதை மலிவாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திருடிக்கொள்வதை அனுமதிக்க முடியாது என்ற கடும்போக்கு நிலைப்பாட்டினால் அதன் ஆட்சியாளர்கள் உள்ளதுபோல் தெரிகிறது. இறக்குமதி செய்யப்படும் மலிவான வெளிநாட்டுப் பொருட்கள் காரணமாக உள்நாட்டுத் தொழில்வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என்ற நியாயப்பாட்டை பல நாடுகளும் அடிக்கடி பயன்படுத்துகின்றன.

அண்மையில் அமெரிக்கா தான் இறக்குமதி செய்யும் இரும்புருக்கு மற்றும் அலுமினியம் என்பவற்றின் மீது முறையே 25%, 10% இறக்குமதித் தீர்வைகளை விதித்தது. இதன் காரணமாக உள்ளூரில் இவற்றின் விலை அதிகரிப்பு ஏற்பட்டு இவற்றை மூலப்பொருளாக பயன்படுத்தும் கைத்தொழில்கள் உற்பத்திச் செலவு அதிகரிப்பை எதிர்நோக்குகின்றன. இவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் இதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

தற்போது சீன இறக்குமதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் ஒரு வர்த்தகப் போராக உருவெடுத்து விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. ஜுலை 6ஆம் திகதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 34 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது புதிய தீர்வைகள் விதிக்கப்பட்டன. பதிலடியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா அவரை, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் மோட்டார் வாகனங்கள் மீது தீர்வைகளை விதித்தது.

அதற்கு மேலதிகமாக அமெரிக்க நிர்வாகம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 200 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் மீது 10% தீர்வை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தளபாட வகைகள், மீன் போன்ற 10,000 வகையான பொருட்களை இது உள்ளடக்குகிறது. இது சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் 90வீதமான பொருட்களை உள்ளடக்குகிறது. சீனாவும் எரிச்சலுடன் தனது பதில் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு உலகின் இரு பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவும் சீனாவும் இத்தகைய வர்த்தகப் போட்டா போட்டியில் ஈடுபட்டு ஒரு 'வர்த்தகப்போரை' ஏற்படுத்தும் பட்சத்தில் அது உலகின் சகல நாடுகளையும் பாதிக்கும் ஒன்றாக நிச்சயம் அமையும். உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்தில் அது கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகத்தில் சீனாவுக்கே வர்த்தக சூழல் சாதகமாகவுள்ளது. அமெரிக்கா அதிகளவில் பொருட்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இப்பாதக நிலையை ஈடுசெய்ய ஒரு பட்டியல் கோரிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் முன்வைத்து சீனா அவற்றை முன்னெடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்தது.

-– வர்த்தக நிலுவையை (ஏற்றுமதி _ இறக்குமதி வித்தியாசம்) குறைத்தல்.

– அமெரிக்காவின் புலமைச் சொத்துகளைத் திருடி சீனக் கம்பனிகள் மேற்கொள்ளும் உற்பத்திகளை தடுத்தல்.

– அமெரிக்க வர்த்தகர்களுக்கு சீனாவின் சந்தையை திறந்து விடுதல்

போன்ற கோரிக்கைகள் சீனாவால் நிராகரிக்கப்பட்டன. மாறாக அமெரிக்கா நியாயமற்ற விதத்திலும் உண்மைக்குப் புறம்பான விதத்திலும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது. இதனையடுத்து சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி கலன்கள் மற்றும் சலவை இயந்திர இறக்குமதிகள் மீது தீர்வைகளை விதித்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய முறுகல் நிலை தோன்றியுள்ளது.

சீனா மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் நடவடிக்கைளால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவரும் பொருட்கள் மீது தீர்வைகளை விதிக்க ஆலோசித்து வருகிறது. அத்துடன் அமெரிக்காவுடன் வட அத்திலாந்து தாராளவாதத்தில் பங்காளி நாடுகளான கனடாவும் மெக்ஸிக்கோவும் கூட இரும்புருக்கு தீர்வை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நாடுகளின் எதிர்விளைவுகளும் கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பதாக அமைவதற்கான சாத்தியங்கள் அதிகம். இதன் காரணமாக பல ஆயிரம் மில்லியன் பெறுமதியான வர்த்தகப் பாய்ச்சல்கள் இழக்கப்படவேண்டிய நிலை உருவாகலாம்.

சுறாக்களுக்கிடையிலான சண்டையில் நெத்தலி மீன்கள் செத்துமடிவது போல இப் போட்டா போட்டி காரணமாக இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் ஏற்றுமதிகள் பிரதானமாக அமெரிக்க சந்தைகளும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் செல்கின்றன. இத்தீர்வை அதிகரிப்புகள் இலங்கையின் ஏற்றுமதிகள் மீதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த இடமுண்டு. GSP+ போன்ற சலுகைகள் இவ்விரு நாடுகளாலும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் மூலப்பொருள் விலை அதிகரிப்பு காரணமாக இச்சந்தைகளை எதிர்காலத்தில் தக்கவைத்துக்கொள்ள இயலுமா என்பது ஒரு கேள்விக்குறியாகும்.

வர்த்தகப் போட்டா போட்டி காரணமாக விதிக்கப்படுகின்ற தீர்வை வீதங்கள் சில நாடுகளை இலக்காகக் கொண்டு விதிக்கப்பட்டாலும் அவை எல்லா நாடுகளுக்கும் பொதுவாகவே அமுல்படுத்தப்படும். இதனால் எல்லா நாடுகளும் தமது ஏற்றுமதிகள் மீது தீர்வைகளை சந்திக்க நேரிடும்.

உலகில் ஏற்படும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளை கையாளவல்ல உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization) WTO இவ்விடயம் தொடர்பில் இதுவரையில் எதையும் செய்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்நிறுவனத்தின் செயற்பாடுகளும் உலகின் வல்லரசு நாடுகளின் செல்வாக்குகளுக்கு உட்பட்டிருப்பதால் காத்திரமான எதையும் அந்நிறுவனத்தினால் செய்ய முடியும் என எதிர்பார்க்கமுடியாது.

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம், சீனா என்பவற்றுக்கிடையிலான இந்த மும்முனைப் போட்டியும் முறுகல் நிலையும் ஒரு வர்த்தகப் போராக உருவெடுக்கும் பட்சத்தில் உலக வர்த்தகம் சுருங்கி நாடுகளின் பொருளாதாரங்கள் தேக்க நிலையை அடையக்கூடும். 1929இல் ஏற்பட்டது போன்ற உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. துரதிருஷ்டவசமாக அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அமெரிக்க அதிபரே ஏற்க வேண்டும்.

Comments