தோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

தோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்!

பன். பாலா

புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளது. உள்ளும்புறமும் நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் அதற்கொரு காரணம். உத்தேச அரசியல் யாப்பு சம்பந்தமாக மலையக சமூகமும் தமது அபிலாஷைகளையும் அவசிய தேவைகளையும் முன்மொழிவுகளாக சமர்ப்பித்திருந்தன. புதிய அரசியல் யாப்பு என்பது இந்த அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழி. சிறுபான்மை கட்சிகளுக்கு இடையிலான உடன்பாடு. எது எப்படி இருந்தபோதும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு விமோசனம் தரும் அம்சங்கள் புதிய அரசியல் அமைப்பில் இடம்பெறும் என எதிர்வுகூறல்களும் வெளியாகியிருந்தன.

குறிப்பாக பெருந்தோட்டச் சமூகம் இன்று எதிர்கொள்ள நேர்ந்துள்ள பல்வேறு சவால்களுக்கும் காரணம் அரசியல் ரீதியிலான அவர்களது உரிமை மறுப்பாகும். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிதானமான காய் நகர்த்தலால் மலையகத்துக்கென தனியாக ஓர் அதிகாரசபை இன்று கிடைத்திருக்கின்றது. ஆனால் அது செயற்பட ஆரம்பித்து விட்டதற்கான அடையாளங்கள் தான் எதுவுமே தெரியவில்லை. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு கடந்த வருடம் மலையக மக்களின் தற்போதைய வாழ்வியல் சம்பந்தமாக சில புள்ளிவிபரங்களை தெரிவித்திருக்கிறது.

இதன்படி 45ஆயிரம் மலையக பெருந்தோட்டப் புறங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சுகாதார வசதிகள் இல்லை. 17சத வீதமானோருக்கு மின்சார வசதி இல்லை. குடியிருப்பு விடயத்தில் பாரிய அசெளகரியம் நிலவுகிறது. 2 இலட்சத்து 18 ஆயிரம் வீடுகளில் 2 இலட்சத்து 40ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. பாடசாலை செல்லும் மாணவர்களின் தொகை 2 இலட்சத்து 33 ஆயிரம். பாடசாலை செல்லாதோர் தொகை 4 ஆயிரம். சுகாதாரம், மின்சாரம், குடியிருப்பு, கல்வி போன்ற துறைகளில் மலையக சமூகம் அடைந்துள்ள பின்னடைவுகளையே இந்த புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நீண்ட காலமாக தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு ஸ்தாபனம் இ.தொ.கா. அதேநேரம் இ.தொ.காவே இம்மக்களுக்குத் தலைமைதாங்கிய ஒரேயொரு வலுவான அமைப்பாகவும் இருந்தது. இன்று மலையக மக்கள் எதிர்நோக்கியிருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் இனவாத ரீதியிலான சிந்தனைகளே. பிரித்தானியர் நிர்வாகத்தின் கீழ் இம்மக்களுக்கு பிரஜாவுரிமை இருந்தது. வாக்களிக்கும் வசதியும் வழங்கப்பட்டிருந்தது. 1931ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசின்படி நாட்டிலுள்ள சகலருக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்நாட்டில் வாழ்ந்த அனைத்து இந்திய வம்சாவளியினரும் இலங்கை பிரஜையாகவே கருதப்பட்டனர். எனினும் தொழில் ரீதியில் பிரித்தானியர் இம்மக்களை நடத்திய முறையில் மக்களுக்கு வெறுப்பு இருந்தது. நிர்வாக கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இது அந்நியர் ஆட்சி என்ற உணர்வை மேலோங்கச் செய்தது. பிற சமூகங்களைப் போலவே இவர்களும் விடுதலை வேட்கையை உள்வாங்கி இருந்தார்கள். இதேநேரம் இவர்களின் உழைப்பும் உயிர்த்தியாகங்களும் பிரித்தானிய நிர்வாகத்துக்கு மட்டுமே விசுவாசமானவையாக அமையவில்லை. முழு நாட்டுக்குமான அர்ப்பணிப்பாகவே காணப்பட்டது. அந்நியச் செலாவணியை அள்ளித்தந்தது. இதை அன்றைய தலைவர்களும் அறிந்தே இருந்தார்கள். ஆனால் சாதாரண மக்களிடம் அதை எடுத்துச்செல்ல அவர்கள் தயாராக இருக்கவில்லை. அவர்களின் நோக்கம் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைப்பதாகவே காணப்பட்டது. தோட்ட மக்கள்பால் கிராம சிங்களவர் கொண்டிருந்த காழ்ப்புணர்வைச் சாதகமாக்கிக் கொள்ளவே முனைந்தனர், நாடு விடுதலையடைந்தது. 1948இல் பிராஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை ஐ.தே. கட்சி அமைத்தது. அதன் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் ஆட்சியே இக்கைங்கரியத்தைச் செய்தது. 1949இல் தேர்தல் சட்டம் அமுலுக்கு வந்தது. பிரித்தானியர் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கியிருந்த குடியுரிமை பறிக்கப்பட்டது. வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இது பெருந்தோட்டத்துறை சார் மக்களுக்குப் பெரிய இழப்பாக அமைந்தது. இதற்கு பிரித்தானியரும் ஒரு காரணம். 1944இல் சோல்பரி விசாரணைக் குழு விதந்துரைத்த சீர்திருத்தங்களில் இந்திய வம்சாவளி மக்கள் மீது அக்கறை காட்டப்பட்டிருக்கவில்லை. இது ஐ.தே.க அரசாங்கத்துக்கு வாய்ப்பாகியது.

1949 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை இம்மக்கள் சம்பந்தமான ஆறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் கூட அவர்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படக் கூடியதான எவ்வித ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. நாட்டுக்கு பொதுவான அரச வேலைத்திட்டங்களில் இவர்கள் கண்டு கொள்ளப்படாமலேயே விடப்படுகிறார்கள். காணி உரிமை, வீட்டுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கூட மறுதலிக்கப்படுகின்றது. 1972ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ அரசாங்கத்தினால் காணிச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. 1975ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காணிச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இனவாத சிந்தனை கொண்ட அப்போதைய அமைச்சர் கொப்பேகடுவ அதன் மூலகர்த்தா.

இதன்மூலம் தோட்டங்கள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டன. அந்நியர் வசமிருந்த தோட்டங்களும் இந்நாட்டவர்களுக்குச் சொந்தமாயிருந்த தோட்டங்களும் இதற்குள் அடங்கின. இதனை அப்போது தோட்ட மக்கள் வரவேற்கவே செய்தனர். தனியார்துறை நிர்வாகத்தில் அவர்கள் சலிப்படைந்து போயிருந்தார்கள். அரசுடைமையாக்கப்பட்டதால் களிப்படைந்து காணப்பட்டார்கள்.

இது நீடிக்கவில்லை. ஆட்சியாளாரின் உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படலானது. தோட்டக் காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அரசு நிர்வாக கட்டுமானங்களுக்கென பயன்படுத்தப்பட்டன. உண்மையில் 1956இல் ஆரம்பிக்கப்பட்ட தோட்டக்காணிகளைத் துண்டாடும் நடவடிக்கைகளுக்கு தேசிய மயமாக்கல் கொள்கை பெரிதும் உதவியது. 50 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் வைத்திருந்தோரிடமிருந்து அவை சுவீகரிக்கப்பட்டதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தோற்றம் பெற்றனர்.

அரசு கைப்பற்றிய 63 சதவீதமான காணிகள் நான்கு அரசு துறை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசு கூட்டுத்தாபனம், உச வசம, ஜனவசம அவற்றுள் சில. 1976இல் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை உருவாக்கம் பெற்றது.

பொறுப்புகள் பகிரப்பட்ட நிலையில் நிர்வாக குளறுபடிகள் எழுந்தன. இதனால் அரசப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்விரண்டு நிறுவனங்களே தோட்டங்களைப் பகிர்ந்து கொண்டன. பெருந் தோட்டத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலவளவு 750000 ஹெக்டயர்களாகும். இதில் 213920 ஹெக்டயர்களிலேயே தேயிலை உற்பத்தி நடைபெறுகிறது. இன்று 32000 ஹெக்டயர் காணி தரிசு நிலங்களாகவும் காடுகளாகவும் காணப்படுகின்றன. 1992ஆம் ஆண்டு தேயிலை, இறப்பர் தோட்டக் காணிகள் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டன. அனைத்துப் பங்குகளும் 10 தனியார் கம்பனிகளால் வாங்கப்பட்டு 23 பிராந்திய நிர்வாகங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. இந்தவகையில் 236240 ஹெக்டயர் காணியளவு கொண்ட 402 தோட்டங்கள் அடங்குகின்றன. ஆரம்பத்தில் இக்காணி உரிமத்தில் அரசின் பங்கு கணிசமாக இருக்குமென கூறப்பட்டது. எனினும் ஒரு தரவுப்படி தனியார் கம்பனிகள் 30 சதவீதத்தையும் அரசாங்கம் 6 சதவீதத்தையுமே கொண்டிருக்கின்றன. பெருமளவிலான தோட்டங்களை சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இக்கம்பனிகள் தோட்ட மக்களை வறுமையான சமூகமாகவே வைத்திருக்க விரும்புவதாக ஆய்வாளர்கள் கடுமையான தொனியில் விமர்சிக்கின்றார்கள். இதன் மூலம் அதிக இலாபமீட்டலே கம்பனிகளின் நோக்கம். கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டதும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவும் நிறுத்தப்பட்டது. நலன்புரித் தேவைகளுக்கான செலவுத் தொகை 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தவிர பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்கான திட்டங்களுக்குப் பங்களிப்பு வழங்குவதிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றன கம்பனிகள். கூட்டு ஓப்பந்தம் மூலம் இம்மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பு, நலன்புரி சேவைகள் கூட முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலிருந்து மீள வேண்டுமானால் தோட்டங்கள் மீண்டும் அரசு பொறுப்பில் வரவேண்டும். இவர்களுக்கான உரிமைகள் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படுவதே உகந்தது. சம்பளப் பிரச்சினை மட்டுமே இவர்களுக்கிருப்பதாக கருதுவது தவறு. இம்மக்களின் யதார்த்த வாழ்வியல் இந்நாட்டுத் தலைவர்களுக்குச் சரியாகப் புரிந்தபாடில்லை.

இவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கக்கூடிய கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்கள், மொழி மரபு, வாழும் பிரதேச மரபு, 200 வருட கால பரம்பரை வதிவிட பாரம்பரியம் கொண்டு விளங்குகிறார்கள்.

தோட்டக் கட்டமைப்பிலான முகாமைத்துவத்திலிருந்து இவர்கள் வெளியே கொண்டுவரப்படவேண்டியது முக்கியம். இவர்களை பிற சமூகங்களுக்குச் சமதையாக நடத்தும் மனித உரிமை அம்சங்கள் நடமுறைக்கு வரவேண்டும். இதற்கான உணர்வுகள் மலையக இளைய தலைமுறையினரிடமிருந்து பீறிட்டுக் கிளம்ப வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது.

Comments