நடைமுறைப் பிரச்சினைகளுக்காக | தினகரன் வாரமஞ்சரி

நடைமுறைப் பிரச்சினைகளுக்காக

பன். பாலா

பெருந்தோட்டங்கள் காடுகளாகி வருவதற்கும் உற்பத்தி வீழ்ச்சிக்கும் தோட்ட நிர்வாகங்களின் அசிரத்தையும் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்பதே பொதுவான கருதுகோள். ஆனால் கம்பனி தரப்பு தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையே அடிப்படைக் காரணம் என அடித்துச் சொல்கின்றது. கூடவே சில வருடங்களாகப் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த (தற்போது மூன்று வருங்களுக்குப் பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது) கிளைபோசெட் மீதும் பழிபோடப்பட்டது. கம்பனி தரப்பு சொல்வது சரியா? அல்லது பெருந்தோட்ட மக்கள் சார்பாக பொது வெளியில் பேசப்படுவது சரியா? அல்லது இருசாரார் மீதும் பெறுப்பிருந்தும் அவற்றைத் தட்டிக்கழிக்க ஆளையாள் குறைசொல்கிறார்களா? இன்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. தேயிலை மலைகள் அச்சமின்றி தொழில் செய்ய லாயக்கின்றி காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. தோட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. தொழிலாளர்கள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலைத் தேடி வெளியேறிவருகிறார்கள்.

குத்தகை என்ற பெயரில் விளைச்சல் குறைந்த நிலங்களை தொழிலாளர்களது தலையில் கட்டிவிடும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. மாற்றுப் பயிச்செய்கை என்ற போர்வையில் செம்பனை செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. இவையெல்லாம் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளான தேயிலை, இறப்பர் உற்பத்தி மீதிருந்த நம்பிக்கை அற்றுப் போனதன் அடையாளங்களாகவே தெரிகின்றன. அதேநேரம் இவ்வாறான கைவிடல்கள் பெருந்தோட்ட மக்களின் இருப்புக்கு விடுக்கப்படும் சவால்களாகவே இருக்கப்போகின்றன என்ற புரிதல் எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளதாம்.

இலாபமீட்டல் என்ற இலக்கோடு பெருந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்த கம்பனிகள் கையைச் சுட்டுக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றது. அதே நேரம் தேயிலை, இறப்பர் தொழில் மீது தொழிலாளர்களது ஈடுபாடு குறைந்து போகக்காரணம் எதுவாக இருக்கும் என்ற தேடலும் தேவைப்படுகின்றது.

பெருந்தோட்டத் தொழிற்துறை இன்று பாரிய சரிவு நோக்கி பயணிப்பதற்கான காரணங்கள் சிலவற்றை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருந்தது. முறைகேடுகளும் பழைய முறைமைகள் கைவிடப்பட்டதன் விளைவுகளுமே இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. நிர்வாகங்களும் தொழிலாளர்களும் தங்களுக்கான பொறுப்பினை மறந்து அல்லது மறுதலித்து நடக்கும்போது அந்நிறுவனம் வீழ்ச்சியடைவது தவிர்க்கமுடியாததே. அதே சங்கதி தான் இங்கும் நடந்துகொண்டிருக்கின்றது.

குறிப்பாக தொழிலாளர்கள் தமக்கான வகிபாகத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவது கிடையாது என்பது ஒரு குற்றச்சாட்டு. நாளாந்தம் எடுக்க வேண்டிய கொழுந்துக்கும் அதிகமாகவே எடுக்கும் வாய்ப்பிருந்தும் அதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லையாம். இப்படி எடுக்கும் கொழுந்துக்கு 140 ரூபாய் மேலதிக கொடுப்பனவு கிடைக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதோ என்னவோ. அதேநேரம் இவ்வாறு மேலதிகமாக எடுத்தாலும் கொழுந்து நிறுக்கும்போது 2 முதல் 4 கிலோ வரையில் பிடித்து சேகரித்துக்கொள்வதில் சில நிர்வாகங்கள் அழுத்தமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்பும் இவ்வாறு பிடித்தங்கள் இடம்பெற்றன. சாக்குப் பொடியன், கொழுந்து பிள்ளைகள் என்று நிறுக்கும் கொழுந்தினை சேகரித்து பொதி செய்யவும், வரிசையாக அடுக்கி வைக்கவும் லொறியில் ஏற்றி இறக்கவும் உதவும் பெண் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யும் கொழுந்து கிலோக்களைப் பகிர்ந்து மேலதிக கிலோக்களாக வழங்குவதே இதன் நோக்கம்.

ஆனால் தற்போது அதிகளவில் கிலோக்களை பிடித்தம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட மேலதிக கொடுப்பனவான 140 ரூபாவை இல்லாமல் ஆக்குவதனையே நிர்வாகங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவருகிறது. எனவே பெயருக்கு எடுக்கவேண்டிய கொழுந்துக்கும் மேலதிகமாக எடுப்பதற்கு எப்படி மனசு வரும்.! தேயிலைக்கு இடவேண்டிய பசளைகளை தமது விவசாய நிலத்துக்கு இடுவது, விற்றுவிடுவது என்பது பல இடங்களில் இடம்பெறும் சம்பவங்கள்தான் களைநாசினிகளுக்கும் இதுவே நடக்கிறது.

விற்கும் விவகாரத்தில் சில தோட்ட உத்தியோகத்தர்கள், காவலாளிகளுக்கும் கூட பங்கிருப்பதாகவே தகவல் தெரிவிக்கின்றன. விறகுக்காக தேயிலைச் செடிகளை வெட்டுவது, தோட்டம் செய்வதற்கு தேயிலைச் செடிகளை அழித்தொழித்து நிலத்தைப் பெருப்பிப்பது என்றும் நடப்பதுண்டு. தவிர தோட்டம் செய்வதற்கென கையகப்படுத்திய காணியை சிலர் காசுக்கு விற்றுவிடுகிறார்கள். சிலர் குத்தகைக்கு விடுகிறார்கள்.

தேயிலை மீதோ தேயிலைக் காணிகள் மீதோ அக்கறை இல்லாதவர்களாக ஏனோதானோவென தொழில் செய்யும் மனப்பாங்கு வளர்ந்து வருகின்றது. தொழிலாளர்கள் இப்படி என்றால் நிர்வாகங்கள் என்ன செய்கின்றதாம்!. தோட்டக்காணிகளைத் துண்டாடுவதிலேயே குறியாய் இயங்குகின்றன.

சிறிதளவு தோட்டக்காணியை தொழிலாளியொருவர் அனுமதியின்றிப் பயன்படுத்தினால் சட்டத்தின் உதவியை நாடும் நிர்வாகங்கள் தன்னிச்சைப்படி தோட்டக் காணிகளைக் கையாள்கின்றன. இதனால் இருசாராரிடையே போட்டி மனப்பான்மை எழுகிறது. ஓரிரு தேயிலைச் செடிகளை அழிப்பது பாவம் என்ற ரீதியில் சிந்திப்பவர்கள் அரசியல் நிகழ்வுகளுக்காக ஆயிரமாயிரம் தேயிலைச் செடிகளைப் பெயர்த்தெறிந்தமையைப் பார்த்தார்கள். பெறுமதி வாய்ந்த மரங்களை வெட்டி விற்று காசாக்கி கொண்டமையைக் கண்டு வேதனையடைந்தார்கள்.

இன்று தோட்ட வளங்கள் தொழிலாளர்களால் சிறிதளவு சுரண்டப்படும் பட்சத்தில் கம்பனிகள் பெரியளவில் சூறையாடப்படுகின்றன என்று கொதிப்படைவோரும் இல்லாமல் இல்லை. இதனால் தோட்டங்கள் மீதான பழைய அபிமானம் மறைந்து கொண்டிருக்கின்றது. தவிர குழந்தைகள் கூட தோட்ட அதிகாரிகளை எதிரிகளாகவே எண்ணும் பின்னூட்டல்கள் தானாகவே இடம்பெறுகின்றன. இதனால் அவர்கள் வளர்ந்ததும் தோட்டத் தொழிலை வெறுக்க தலைப்படுகின்றனர். தோட்டங்களை விட்டு வெளியேற முற்படுகின்றனர்.

தோட்டங்களில் நிலவும் சாதாரண உத்தியோகத்தர் நிலைக்கான தொழில் வாய்ப்புகளைக் கூட தோட்டத்தில் வாழும் கற்ற இளைஞர்களுக்கு வழங்க தோட்ட நிர்வாகங்கள் விரும்புவதில்லை.

ஒரு சில இடங்களில் இவ்வாறு வழங்கப்பட்டாலும் கூட அவர்கள் நாளடைவில் நிர்வாகத்துக்குச் சாதகமாக தம்மை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

இன்று அநேகமான தோட்டங்களில் தோட்டத் தலைவர்மார்களாக இருக்கும் சிலர் நிர்வாகங்களின் கைகூலியாகவே செயல்படுவதைக் காணலாம். இதற்கு தொழிற்சங்கங்களும் கூட பின்புலமாக அமைகின்றன. சில தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகங்களோடு இரகசிய நட்பினைப் பேணி வருகின்றன.

இன்றும் தோட்டக் கட்டமைப்பு தொழிலாளர்கள் மீதான துரைத்தனங்களை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றன. வயதில் பெரியவர்கள் என பொருட்படுத்தாமல் ஆண், பெண் தொழிலாளர்களைப் பெயர் சொல்லி அழைப்பதையே தோட்ட உத்தியோகத்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். தவிர ஒருமையில் விளிப்பதும் பெண் தொழிலாளர்களை அவள் இவள் என்று அழைப்பதும் சர்வசாதாரணம். தமது பெற்றோர், உடன்பிறப்புகள் இப்படி அழைக்கப்படுவதை இளைஞர் சமூகம் விரும்புவதில்லை. இதனாலேயே இனி தோட்ட தொழிலுக்குப் போக வேண்டாம் என்று தடுக்கும் இளைஞர்கள் இருக்கின்றார்கள்.

எந்தவொரு தொழிற்துறையும் முதலாளி, தொழிலாளர் இருசாராருமே புரிதல் அடிப்படையில் சேர்ந்து இயங்கினால் மட்டும் உயரும், வளரும். பரஸ்பர நம்பிக்கையும் பொறுப்புணர்வும் தொழிற்துறையைப் பாதுகாக்கும் பக்குவமும் வேண்டும்.

தேயிலைத் துறையைப் பொறுத்தவரை கம்பனிக்கு இலாபத்தின் மீது இலக்கு. உத்தியோகத்தர்களுக்கு வேதனம் ஒன்றே நோக்கு. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கோ அதுவே நிகழ்கால இருப்பு. எதிர்கால எச்சம். அதை அவ்வளவு எளிதில் துச்சமாக தள்ளிவிட முடியாது. இது எத்தனை பேருக்குப் புரிகின்றது என்பதுதான் கேள்வி.

தோட்டங்கள் கிராமங்களாக மாறப்பட்டாலும் தோட்ட மக்களின் தொழில் தேட்டமாக தேயிலைத் துறையே இருக்கப்போகிறது.

இதற்கு மாற்றீடாக புதிய தொழில் பேட்டைகள் எப்பொழுது உருவாக போகிறது என்பதை யாரறிவார்? எனவே நிர்வாகங்களுக்கு இருப்பதை விட தேயிலைப் பயிர்ச்செய்கையைக் காப்பதற்கான பொறுப்பு, தோட்ட மக்களுக்கே அதிகமாக இருக்கின்றது. தொழிற்சங்கங்கள் எல்லாம் அரசியல் அமைப்புகளாக தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே அவர்களுக்கு வண்டியோட்ட மாற்று வழி இருக் கிறது.

எனவே தான் பெருந்தோடடத்துறை பறிபோவதற்கு மக்களே உடந்தையாகிவிடக்கூடாது. அதே நேரம் அதன் அழிவுக்கு இவர்களும் ஒரு காரணமாகிவிடக்கூடாது. அதுமட்டுமின்றி அதனை அதலபாதாளத்தில் தள்ள நினைப்போருக்கு வாய்ப்பு அளிப்பதும் தவறு. 200 வருடகால வாழ்விட வரலாறு சில நடைமுறை தவறுகளால் நாசமாகி போவது நல்லதல்ல.

Comments