கனவூக் கிண்ணம் மகுடம் சூடுவது யார் | தினகரன் வாரமஞ்சரி

கனவூக் கிண்ணம் மகுடம் சூடுவது யார்

ரஷ்யாவில் ஆரம்பமான 21வது பிபா உலகக் கிண்ண தொடர் இன்று பிரான்ஸ்- குரோஷியா அணிகளுக்கிடையில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் உதை பந்தாட்டத் திருவிழா நிறைவுக்கு வருகின்றது.இன்று நடைபெறும் இறுதி போட்டில் பிரான்ஸ் அணி 3வது முறையாகவும், குரோஷிய அணி முதல்முறையாகவும் களமிறங்குகின்றன.

கடந்த ஒரு மாத காலமாக 32 நாடுகள் பங்கேற்ற இத்தொடரில் முதற்சுற்று ஆட்டங்களில் எதிர்பாராத முடிவுகளினால் பல பிரபல அணிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டன. இம்முறை முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவான பனாமா, ஐஸ்லாந்து அணிகள் பலம்வாய்ந்த அணிகளுடன் சரிசமமாக மோதி வரலாறு படைத்தன. பலமுறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய நாடுகள் கூட இம்முறை முதற் சற்று மற்றும் காலிறுதியுடன் நடையைக் கட்டின.

இம்முறை கிண்ணம் வெல்லும் நாடுகளின் பட்டியலில் முதன்மையாக இருந்த ஜேர்மனி அணி எதிர்பாராத விதமாக முதற் சுற்றின் இறுதிப் போட்டியில் ஆசியப்பிராந்திய அணியான தென்கொரியாவிடம் தோல்வியுற்று வெளியேறியமை கால்பந்தாட்ட ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத நிகழ்வாகும்.

முதற்சுற்று முடிவில் 16 அணிகள் பங்குகொண்ட வெளியேற்றல் சுற்றில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாய் பல போட்டிகளின் முடிவுகள் அமைந்தன.

இரு முறை கிண்ணம் வென்ற தென்னமெரிக்கப் பிராந்திய பிரபல நாடான ஆர்ஜன்டீனா வெளியேற்றல் சுற்றின் ஆரம்பப் போட்டியிலேயே பிரான்ஸ் அணியிடம் தோல்வியுற்று வெளியேறிது. போர்த்துக்கல், ஸ்பெயின், மெக்ஸிகோ போன்ற பிரபல அணிகள் இச்சுற்று முடிவில் வெளியேற்றப்பட்டன.

அடுத்து காலிறுதி ஆட்டத்துக்கு போட்டியை நடத்திய ரஷ்யா, உருகுவே, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரேசில், குரோஷியா, சுவீடன், பிரான்ஸ் அணிகள் தெரிவாகின. இதில் முன்னாள் உலகக் கிண்ணச் சம்பியன்களான உருகுவேயும், பிரேசிலும் வெளியேற அரையிறுதிக்கு மூன்றாவது முறையாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளும் இரண்டாவது முறையாக குரோஷியா, மற்றும் பெல்ஜியம் அணிகளும் தெரிவாகின.

கடந்தவாரம் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் சம பலம்கொண்ட பெல்ஜியம் -பிரான்ஸ் அணிகள் மோதின. கடுமையான சவாலுக்கு மத்தியில் போட்டியின் இரண்டாவது பாதியில் சாமுவேல் உம்டிடியிடம் வந்த பந்தை தலையால் முட்டி கோல் கம்பத்துக்குள் புகுத்தியதால் பெல்ஜியம் அணியின் இறுதிப் போட்டிக் கனவை தகத்தது பிரான்ஸ் அணி. உலகக் கிண்ண வரலாற்றில் இம்முறையே சிறந்த அணியாக களமிறங்கிய பெல்ஜிய அணி சுமார் முப்பது வருடங்களின் பின் அரையிறுதிக்குள் நுழைந்தது. அவ்வணி 1986ம் ஆண்டு அரையிறுதி ஆட்டம்வரை முன்னேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டிக்குத் தெரிவான பிரான்ஸ் அணி ஏற்கனவே இரு முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 1998ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற 16வது உலகக் கிண்ணத் தொடரில் பிரேசிலுடனான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஸினெடின் ஸிடென் இரு கோல்கள் புகுத்த 3 -2 என் கோல் கணக்கில் வெற்றிபெற்று உலகக் கண்ண வரலாற்றில் முதன்முறையாக பிரான்ஸ் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. அதன் பின் 2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற 18வது உலகக் கிண்ணத் தொடரின் போதும் இறுதிப் போட்டிக்குத் தெரிவான இவ் அணி இத்தாலியிடம் தோல்வியுற்றது. மூன்றாவது முறையாக இம்முறையும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள பிரான்ஸ் அணி இத்தொடரில் தோல்வியுறாமலேயே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வணி முதற் சுற்றில் டென்மார்க்குடனான போட்டி மட்டுமே 0 – 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. ஆரம்பச் சுற்று முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் 2 -1 என் கோல்கணக்கிலும் பேருவுடனான போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இரண்டாவது வெளிறேறல் சுற்றுக்குத் தெரிவானது. அச்சுற்றில் பிரபல ஆர்ஜன்டீன அணியை 4 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுக்குத் தெரிவான பிரான்ஸ் அணி அதுவரை இத் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற உருகுவே அணியை 2 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவானது. அரையிறுப் போட்டியில் கால்பந்தாட்ட உலகில் சிவப்பு பேய்கள் என்றழைக்கப்டும் பெல்ஜிய அணியையும் 1 – 0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது தடவையாகவும் நதளை நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

உலகக் கிண்ண வரலாற்றில் 5வது முறையாக உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான குரோஷிய அணி 1998ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற 16வது உலகக் கிண்ணத் தொடரிலேயே தனி நாடாக முதல்முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கு பற்றியது. அத்தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய குரோஷிய அணி அதன் பின் நடைபெற்ற தொடர்களில் முதற் சுற்றுடன் வெளியேறியது.

ஆனால் இம்முறை ஆரம்ப சுற்றுமுதல் திறமையாக விளையாடி வந்த குரோஷிய அணி இத் தொடரில் தோல்வியுறாத அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

முதல் சுற்று ஆரம்பப் போட்டியில் தென்னாபிரிக்கப் பிராந்திய பிரபல அணியான நைஜீரியாவை 2 -0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரேஷியா தனது இரண்டாது போட்டியில் பிரபல தென்னமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான போட்டியிலும் 3 -0 என்ற கோல்கணக்கில் மகத்தான வெற்றியையீட்டியது.

முதற்சுற்றில் ஐஸ்லாந்துடனான கடைசிப் போட்டியிலும் 2 -1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வெளியேற்றல் சுற்றுக்குத் தெரிவானது.

அச் சுற்றில் டென்மார்க்குடனான போட்டியில் ஆட்டநேரமும், மேலதிக நேரமும் முடிவில் 1 -1 என்ற சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி சூட் மூலம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தெரிவானது.

காலிறுதியில் போட்டியை நடத்தும் ரஷ்யாவை எதிர்த்தாடிய குரோஷியா கடுமையான போட்டிக்கு மத்தியில் இப்போட்டியிலும் கோல் காப்பாளரின் திறமையினால் பெனால்டி உதை மூலம் 4 -3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தெரிவானது.

அரையிறுதியில் பிரபல இங்கிலாந்து அணியை 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 21வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் முதல் முறையாக குரேஷியா அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

 

Comments