கழித்த கல்! | தினகரன் வாரமஞ்சரி

கழித்த கல்!

இந்த உலகத்தில் யாரை நம்புவது? யாரை நம்பாமல் விடுவது?

ஒரு விபஸ்தையுமே தெரியவில்லை.

கால ஓட்டத்தில் எல்லாமே தலைகீழாகப் போய்விட்டது. நடப்பதெல்லாம் நடக்கட்டும். எல்லாம் நன்மைக்கே என்று சகித்துக் கொண்டு வாழவும் முடியவில்லை.

காலையில் எழுந்து, இரவு படுக்கைக்குப் போகும்வரை எனக்கு ஒரே என் பிள்ளைகளின் நினைப்புத்தான்.

மனைவியோடும், பிள்ளைகளோடும் கோவித்துக் கொண்டு, ஊருக்கு வெளியே தூரத்தில் கடற்கரையோரமாக காடு மண்டிக்கிடக்கின்ற ஒரு தென்னந்தோப்பினுள் பாழடைந்த ஒரு வீட்டின் சின்னதான அறையொன்றில் சில மாதங்களாக வாழ்ந்து வருகிறேன்.

இரவுபகலாக வீசும் கடல் காற்றைத் தவிர எனக்கு சுகம் கொடுப்பதற்கு வேறு எவருமே இல்லை.

ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் அரசாங்கத்தில் நான் வேலை பார்த்த காரணத்தால் மாதாமாதம் பென்ஷன் என்று ஏதோ கொஞ்சம் கிடைக்கிறது. அதை எடுத்து வந்து எனது செலவு போக மிகுதியை எனது சேமிப்பில் போட்டு விடுகிறேன்.

நான் இருக்கும் அந்த அறைக்கு வாடகை இல்லை. மின்சார வசதிகளும் கிடையாது. குடிப்பதற்கு, குளிப்பதற்கு என்று தண்ணீர் வசதிகளும் இல்லை, நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் ஐந்தாறு ஓலைக்குடிசைகளும், சில கல்வீடுகளும் இருக்கின்றன. எனக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை அங்குபோய்த்தான் நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையைத் தவிர நான் அந்தப் பக்கம் போவதில்லை. பிளாஸ்ரிக் வாளியில் எடுத்துவரும் தண்ணீரை மருந்துபோல பாவித்துக் கொள்வேன்.

கைவசம் என்னிடம் ஒரு சிறிய சூட்கேஸ், ஒரு அரிக்கன்லாம்பு, டோர்ச் லைற் கூடவே ஒரு பழைய சைக்கிளும் உள்ளது.

இந்த இடத்திலிருந்து மேற்குப் பக்கமாக நீண்டு வளைந்து செல்லும் கிறவல் பாதை முடிவடையும் இடத்தில்தான் நானிருக்கும் அறைக்குச் சொந்தக்காரரின் வீடு இருக்கிறது. அது ஒரு சிறிய மீனவர் கிராமம். அதற்குப் போவதாயிருந்தால் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டும்.

கிறவல் பாதையின் இருபக்கங்களிலும் ஒரேகாடு. இரவு வேளையில் போய்வருது பயமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்குப் போய்வர இந்தப் பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். தேவையான போது நானும் இதனூடாகத்தான் போய் வருவேன்.

தென்னந்தோப்புக்கும், நானிருக்கும் அறைக்கும் சொந்தக்காரர் மாணிக்கம். இவர் என்னோடு ஒன்றாக வேலை பார்த்து, என்னைப் போல றிட்டயர் ஆனவர், இவருக்கு பிள்ளைகள் அதிகம். பெண் பிள்ளைகள் தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

இந்தத் தோப்புக்கு வந்த அன்று மாணிக்கம், மனைவி, பிள்ளைகளும் வந்து வளவைக் கூட்டிப் பெருக்கி, நானிருக்கும் அறையையும் சுத்தம் செய்து, என்னை இருக்கும்படி சொல்லிவிட்டுப் போனவர்கள் மீண்டும் வரவேயில்லை. மாணிக்கத்துக்குச் சுகமில்லை. நடக்கச் சிரமம். கால் நிறைய புண். ‘டயற்றிக்’ கிளினிக் போய்வருகிறார்.

என்னுடைய துன்ப நிலையை உணர்ந்து ஒன்றாக வேலை பார்த்த காரணத்தால் என்னை இங்கே இருக்க வைத்தார். பொதுவாகவே நல்ல மனிதர்.

தென்னைகளில் குலை கட்டிக் காய்த்திருந்த தேங்காய் குரும்பைகளையெல்லாம் திருடர்கள் வந்து பறித்துக் கொண்டுபோய் விடுகிறார்கள். அதனால் என்னை இங்கு குடியிருத்தினால் தென்னந்தோப்புக்கு காவலாக இருக்குமென்று அவர் நினைத்திருக்கலாம்.

உண்மையில் தென்னைகளில் ஒரு குரும்பட்டிகூட இல்லை. இனிமேல் தான் பாளை விரிந்து குலைகட்ட வேண்டும்.

நான் வந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.

அதுநாள் வரை என்னைப் பார்க்க எவரும் வரவில்லை.

ஆனாலும் என் மனம் எனது பிள்ளைகளின் நினைவிலேயே இரவு பகலாகச் சுற்றிச் சுழன்றது.

பெண் பிள்ளைகள் இருவரும் நன்றாகப் படித்து, பட்டமும் பெற்று, அரச உத்தியோகங்களில் இருக்கிறார்கள். இளையவன் தீபன் அரைகுறைப் படிப்புத்தான். ஆனாலும் துடிப்புள்ள காரியமானவன். ஆசுபத்திரியில் வேலை பார்க்கிறான். எல்லாரையும்விட எனக்கு இவன்மேல் தான் அதிகபாசம்.

என்போலவே சாயல் கொண்டவன். ஆண்பிள்ளை என்பதாலோ என்னவோ இவன்மேல்தான் எனக்கு மாத்திரமல்ல அக்கா, தங்கைகளுக்கும் ஏன் தாய்க்கும் கூட அன்பும், பாசமும் இருந்தது.

இவனை ஒரு சராசரி மனிதனாக்க நான் பட்டபாடு சொல்லும் தரமன்று,

ஓ.எல். பரீட்சையில் எல்லோரும் எதிர்பார்த்திருந்ததைப் போல இவன் சித்தியடையவில்லை. இதனால் என்னைத் தவிர மற்ற எல்லோருமே கண்டவிதமாகத் திட்டித்தீர்த்தார்கள். அதனால் இருந்தாற்போல் ஒருநாள் எவரிடமும் சொல்லாமல் இயக்கத்துக்கு ஓடிப்போய்விட்டான்.

ஒருவன் நல்லவனோ அல்லது கெட்டவனோ அவன் இல்லாமல் போனால்தான் அவன் அருமை, பெருமை எல்லோருக்கும் தெரியவரும் என்பதுபோல அவன் இல்லாமஎங்கள் வீடு இழவீடு போலானது.

மனைவி, காளிகோவிலுக்குப் போய்ப் பழிபடுத்துக் கொண்டாள். சகோதரிகள் இருவரும் அவர்களுடன் படித்த சிநேகிதிகளுடன் சேர்ந்து படுவான்கரை தரவைகளில் அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் போய்விட்டார்கள். நான் எங்கும் ஓடவுமில்லை தேடவும் இல்லை. வீட்டிலேயே உசும்பாமல் தியானத்தில் இருந்தேன். மனைவி பழி படுத்ததினாலோ சகோதரிகள் கதறிக்கதறி தேடியலைந்தாலோ, எனது தியானத்தின் வல்லமையினாலோ இளையவன் தீபன் திரும்பி வீடுவந்து சேர்ந்தான் என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் அவன் விதியின் பயனாக வீடுவந்து சேர்ந்தான்.

இதன்பின் சில மாதங்கள் கழித்தபின் மீண்டும் ஒருதடவை பரீட்சை எழுதவைத்து, கல்வியில் ஓரளவு நிமிரவைக்க நான் பட்டபாடுகளும், அலைச்சலும் மிகமிக அதிகம்.

**

இவன் தீபன் கூட என்னை சும்மாவாவது பார்க்க வரவில்லையே” என்ற ஏக்கமும், கவலையும் என் மனதைப்போடடி வதைத்தது.

பெண் பிள்ளைகள் இருவரும் அவரவர் தகுதிக்கேற்ப அவர்கள் விருப்பப்படி ஒருவர் பின் ஒருவராக திருமணத்தைச் செய்து கொண்டார்கள்.

இதன் பிறகு தீபனும் அவனோடு கூட ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த ஒரு கங்காணிப் பெட்டையைத் திருமணம் செய்து கொண்டான்.

எனக்கு வாய்த்த மருமக்கள் எவருமே வாய்க்கவில்லை. என்னையும், மனைவியையும் ஒரு பொருட்டாகக் கூட கவனிக்கவில்லை. மாமன் மாமி என்ற மட்டுமரியாதை மருந்துக்கும் இல்லை.

காதலிக்கும் போது அவர்கள் கண்களுக்கு எங்கள் பிள்ளைகளின் அழகும், கவர்ச்சியும் மட்டுமே தெரிந்தன. திருமணம் முடித்த பிறகுதான் அவர்களுக்குக் கொடுக்க எங்களிடத்தில் வீடுவளவு, பணம் எதுவுமே இல்லையென்ற சங்கதி தெரியவந்தது.

“தலைக்குமேல் வெள்ளம் வந்த பிறகு சானொன்ன முழமென்ன என்று நினைத்த நான், எனது சீதன வீட்டை மூத்தவளின் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தேன். அடுத்தவளுக்கு நான் வேலை பார்க்கும் போது வாங்கிப் போட்ட வெறும் வளவை இரண்டாகப்பிரித்து, அதில் ஒரு துண்டை எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த துண்டை எனது பெயருக்கு எழுதி வைத்துக் கொண்டேன்.

ஆனாலும் ஒரு பிள்ளைக்குத்தானும் வீடு கட்டிக் கொடுக்க என்னால் முடியாது போயிற்று.

இந்த நிலையில் நானும், மனைவியும் எங்கே இருப்பது? யாரோடு சாப்பாட்டை வைத்துக் கொள்வது? என்ற சிக்கல் உண்டானது.

இதற்கு முன்பாக பெண் பிள்ளைகள் இருவரும் தங்கள் தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து, வங்கியில் லோண் எடுத்து, அவரவர் வீடுகளை திருத்தம் செய்தும், புதிதாகக் கட்டியும் வாழத் தொடங்கி விட்டார்கள்.

மூத்தவளின் வீட்டில் தங்கியிருந்த நானும், மனைவியும் என்னுடைய பென்ஷன் பணத்தில் எங்களுக்குத் தேவையான சாமான் சட்டுகளை வாங்கி எங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டோம்.

இந்தச் சீவியமும் எங்களுக்கு நீண்ட நாட்களுக்கு நின்று நிலைக்கவில்லை.

காலம் சில கடந்தன.

பிள்ளைகள் இருவரும் ஆளுக்கு ஒவ்வொரு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டார்கள்.

பேரப்பிள்ளைகளை பார்க்கவும், பராமரிக்கவும், எல்லோருக்குமாக ஆக்கிக் காய்ச்சவும் என்று எல்லா வேலைகளும் அதிகரிக்கத் தொடங்கியது.

பெண்பிள்ளைகள் இருவரும் கணவர்களின் சொல்லைக் கேட்கும் புருஷதாஸர்களாகவே மாறிக் கொண்டார்கள்.

அக்கம்பக்கமாக வாழ்ந்த பிள்ளைகளின் இரண்டு வீடுகளுக்கும் ஓடியோடிப் போய் உதவி ஒத்தாசை செய்வதில் மனைவி இரவு பகலாகப் பொழுதைக் கழித்தான்.

எனக்கு பெரிதான வேலை எதுவும் இருக்கவில்லை.

கடைக்குப் போய் சாமான் சட்டுக்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பதும், துறையடிக்குச் சென்று மீன் வாங்கி வருவதும் தான் வேலையாக இருந்தது.

சில வேளைகளில் வீறிட்டுக் கத்தும் பிள்ளையின் தொட்டிலையும் ஆட்டிவிட வேண்டிவரும். சமாளித்துக் கொள்வேன். இந்தச் சூழ்நிலையில் வீட்டில் எங்களுக்குள் சின்னச்சின்னப் பிரச்சினைகளும் உருவாகிவிடும்.

உருவாகும் பிரச்சினை பெரிதாகி விஸ்வரூபம் எடுக்கும் போது எல்லோருமே என் மீதுதான் குற்றம் சுமத்துவார்கள். பேகிற போக்கைப் பார்த்தால் வீட்டில்நான் இருப்பது எவருக்குமே விருப்பம் இல்லைப்போல்தான் தெரிந்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு வாழவும் என்னால் முடியவில்லை. ஒருநாள் மூத்தமகள் வெளிப்படையாகவே சொன்னாள்.

“உங்களாலதான் எல்லாப் பிரச்சினையும்! நீங்க தயவுசெஞ்சி இங்க இருக்காத வெளிய போறதுதான் நல்ல” அதற்கு நான் ஒன்றும் பேசவில்லை. மௌனமாக விரைத்துப்போய்நின்றேன்.

“பென்ஷன் எடுக்கிற நீங்கதானே! அதனால அம்மாவ மட்டும் எங்களோட விட்டுத்து, நீங்க வெளிய போய் உங்கட சாப்பாட்டப் பாத்துக் கொள்ளுங்க!” என்று இளைய மகளும் சொன்னாள்.

கிட்டத்தட்ட “போடா வெளியே!” என்று சொல்லாமல் சொன்னது போலவே அவர்கள் பேச்சு எனது நெஞ்சைக் குத்தியது. ஆனால் என் மனைவி இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் ஒன்றுமே பேசாமல், கடைக்கண்ணால் என்னைப் பார்த்தாள்.

“வளவின் உறுதிகளை பிள்ளைகளுக்கு எழுதும் போது பின்னுருத்து வச்சி எழுதிக்கொடுங்க. இல்லையென்றால் பிறகு ஒரு காலத்தில் அழவேண்டிவரும்” என்று அவள் சொன்னது அவளுடைய கடைக்கண் பார்வை நினைவூட்டியது.

பிள்ளைகளின் சொற்படியே நான் வெளியேற ஆயத்தமானேன். எவரும், சாட்டுக்காகவாவது தடுக்க முயலவில்லை. இரவிலேயே என்புலன்பெயர்வு இடம்பெற்றது.

**

காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது.

ஒருநாள் நான் வழக்கம்போல படுக்கையை விட்டெழுந்து, காலைச் சாப்பாட்டுக்கான இடியப்பப் பார்சலை வாங்கி வந்து எனது அறையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது மோட்டார் சைக்கிளொன்று வேகமாக வந்து என் முன்னால் நின்றது.

என்ன ஆச்சரியம்! இளையவன் தீபன் தான் வந்திருந்தான். துக்கம், துயரமெல்லாம் என்னை வந்து ஒன்றாக அழுத்த என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொட்டியது.

வார்த்தைகள் வெளிவரச் சங்கடப்பட்டது.

நிலமையைச் சமாளிக்க தீபன், மோட்டார் சைக்கிளை வேலியின் ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

நான் அவன் பின்னால் நடந்தேன்.

நான் இருக்கும் அறையை, தென்னந்தோப்பை யெல்லாம் சுற்றிப் பார்த்தான்.

“என்னெண்டு நீங்க இங்க இருக்கிறீங்க? அக்கம் பக்கத்தில உதவிக்கு ஒரு மனிசரையும் காணல்ல! எனக்கே பயமாயிருக்கு இந்த இடம் உங்களுக்குச் சரிப்பட்டுவராது. அங்க நம்மட வீட்டில எல்லாரும் எந்தக் கவலையுமில்லாமல் சந்தோசமா இருக்கிறாங்க! எல்லாத்தையும் அவங்கட பேருக்கு எழுதிக் குடுத்துப் போட்டு, நீங்க இஞ்ச வந்து பாழ்வீட்டில கிடக்கிறீங்க!” என்று கவலையோடு எரிந்து விழுந்தான்.

“என்ன செய்ய? எல்லாம் என்ட தலைவிதி! அதுக்கா நீங்க ஒருத்தரும் கவலப்படத்தேவல்ல. நான் வாழ்ந்து முடிச்சித்தன். வாழப் போறது நீங்கதான் சண்டையக் கிண்டயப் பிடிக்காம, ஒண்டுசேந்து வாழப் பாருங்க. அது போதும் எனக்கு” என்றேன்.

மிகுந்த கவலையோடு அறையின் மூலையில் கிடந்த பழைய உரலுக்குமேல் குந்திக் கொண்டான்.

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் அக்கறையோடு என்னைப் பார்த்து “சாப்பிட்டுத்தீங்களா?” என்று கேட்டான்.

“இனிமேத்தான் சாப்பிட வேணும்.”

“என்ன சாப்பாடு?”

இடியப்பப் பார்சல் வாங்கி வைத்திருக்கும் விசயத்தைச் சொன்னேன். அவன்வரும் போது வாங்கி வந்த கொத்துறட்டிப் பார்சலை அடுத்துத் தந்து “இதுக்குள்ள கொத்து ரொட்டியும், குழம்பும் இருக்கு நேரத்தோட சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு, “இத உங்கட கைச்செலவுக்கு வச்சிருங்க” என்று 500/= ரூபா? நோட்டையும் எடுத்து நீட்டினான். வாங்கிக் கொண்டேன்.

“இந்த வளவுக்குச் சொந்தக்கார மாணிக்கண்ணன பெரியாஸ்பத்திரி வாட்ல வச்சிருக்கிறாங்க. போய்ப் பாத்தன். அப்பதான் நீங்க இஞ்ச இருக்கிறதச் சொன்னவங்க?

“பாவம் அவன் மாணிக்கம். புள்ளகுட்டிக்காரன். அவன வாட்டில வச்சிருக்கிற விசயம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியும். நானும் ஒருங்கா அவனப் போய்ப் பார்க்கவேணும், நேரம் கிடைக்கிறப்போ நீயும் அடிக்கடி போய்ப் பார்மனே! அம்மா, அக்காமார்ட பாடெல்லாம் எப்படி?”

“அக்காமார் ரெண்டுபேருக்குமிடையில ஒரே சண்டையும், சச்சரவும் தான். அத்தான்மாரும் சரியில்ல. நீட்டுக்கும் ஏட்டிக்குப் போட்டியாத்தான் சீவிக்கிறாங்க. அம்மாதான் என்ன செய்வா? இருதலைக் கொள்ளி எறும்புப்போல அவட சீவியம் எல்லாமே உங்கள ஊட்டவிட்டுக் கலச்ச வினதான் அவங்க இன்னும் அனுபவிப்பாங்க.”

“நாம என்னவோ நினைக்க, ஆண்டவன் வேறென்னவோ நினைக்கிறான். இதுக்க ஆரும் என்ன செய்யேலும்! நடக்க வேண்டியதெல்லாம் நடந்துதான் தீரும். அதுசரி, உன்ட பாடெல்லாம் எப்படி? முதலொருக்கா ஊட்டுக்குப் பெயின்றடிக்கவேணும் மெண்டு சொன்னியே. முடிச்சிப் போட்டாயோ?”

“அதெல்லாம் முடிச்சிப் போட்டம். இப்ப அங்கயும் நம்மட ஊட்டிப் போலதான் பிரச்சினையாயிருக்கு. எங்கட ஊடுவளவு உறுதி எங்கட சீவனுக்குப் புறகு என்ட பொஞ்சாதிட அண்ணன்ட மூத்த மகளுக்கு என்ட பொஞ்சாதி எழுதி வஞ்சிருக்காள். எங்களுக்கு பிள்ள குட்டியெண்டு வந்தா அதுகளுக்கு வீடுவளவுக்கு எங்கபோற? இதன் கேட்டப்பதான் எங்களுக்குள் பிரச்சின வந்த.”

“பிரச்சினையப் பெரிசிப்படுத்தாம நீ பேசாம உடு, என்ட பேரில இருக்கிற வளவுட உறுதிய நான் உன்ட பேருக்கு மாத்தி எழுதித்தாறன்.”

“அந்த உறுதிய எங்கப்பா வச்சிருக்கிறயள்?”

“அது பத்திரமா இஞ்ச எனக்கிட்டத்தானிருக்கு.”

“அப்ப சரி, நீங்க அங்க வந்து இருக்கிறதுக்கு முதல்ல நான் ஒரு சின்ன அறையக் கட்டித்தாறன். புறகு மெல்ல மெல்ல எல்லாத்தையும் ஒப்பேத்திப் போடலாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு பல்லக்கடிச்சித்து நீங்க இங்கேயே இருங்க, தை புறந்ததும் நீங்க பழையபடி அங்கேயே வந்து சீவிக்கலாம்.”

இப்படி பெரிய அனுபவஸ்தன் போல இளையவன் தீபன் சொல்லிவிட்டு மெதுவாக எழுந்தான்.

நானும் எழுந்து அவன் பின்னால் போனேன்.

மோட்டார் சைக்கிள் தள்ளியெடுத்து ஏறிக்கொண்டான்.

“என்ன புதுச்சைக்கிளாக் கிடக்கு! புதிசா வாங்கியிருக்கிறயா?”

“போன மாதம் தான் ‘லீசிங்’கில எடுத்தனான். சரியப்பா, அரைநாள் லீவப் போட்டுத்து வந்தனான். நேரம் போகுது நான் வரப்போறன். நீங்க பாதுகாப்பாக இருந்துக் கொள்ளுங்க.”

தீபன், மோட்டார் சைக்கிளை ஸ்ராட் பண்ணியபடி வேகமாகப் போனான். நான் அவனையே பார்த்தபடி நின்றேன்.

Comments